அன்புள்ள ஜெ,
நான் கூந்தல் தொகுப்பை இதுவரை வாசிக்கவில்லை. அந்த தொகுதி நீண்டகாலமாக எங்கேயும் கிடைக்காமலிருந்தது என நினைக்கிறேன். அந்தக்கதைகளும் பரவலாக கிடைப்பதில்லை. அக்கதைகளில் கூந்தல் குமுதம் இதழில் வெளிவந்திருக்கிறது. ஆச்சரியம்தான். மிக வித்தியாசமான வடிவமும் நுட்பமான பேசுபொருளும்கொண்ட கதை இது. இதை குமுதம் வெளியிட்டது ஓர் ஆச்சரியம்தான்.
எனக்கு கூந்த்தல் மிகவும் ஆழமாக பாதித்த கதை. 1999ல் நான் என் கூந்தலை வெட்டிக்கொண்டேன். அன்றைக்கு பாப் வெட்டிக்கொள்வது எங்களூரில் ஒரு பெரிய புரட்சி. அமங்கலமான விஷயம். என்னை பல கல்யாணங்களில் பின்னால் போய் நில் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் டெல்லியில் எனக்கு அது ஒரு தன்னம்பிக்கையையும் அடையாளத்தையும் அளித்தது.
அண்மையில் கல்யாணராமன் என்ற ஆள் இந்திராகாந்தி பாப் வைத்திருந்ததனால் அவரை மொட்டைப்பிராமணப்பெண் என்று சொல்லி காஞ்சி சங்கராச்சாரி பார்க்க மறுத்தார் என்று சொல்லியிருந்தார். இந்த மாதிரி ஆசாமிகளெல்லாம் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும். இந்த கல்யாணராமன் என்ற பிரகிருதி ஏதோ வாய்தவறி தப்பாய்ச் சொல்லிவிட்டார் என்று பொங்கும் பிராமணர்கள் ஒன்று நினைக்கவேண்டும். அவர் ஒன்றும் அப்படி வாய்தவறிச் சொல்லவில்லை. இந்த பிராமணர்கள் கொண்டாடும் காஞ்சி சங்கராச்சாரியும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். இவர் சொல்வதெல்லாம் அவர் சொன்னதைத்தான். அவர் கடவுள் இவர் உளறுவாயர் என்பதெல்லாம் பிராமணர்களின் இரட்டைவாக்கு ஜாலம்.
சரி, கதைக்கு வருகிறேன். நான் பிராமணக்குடும்பத்தில் பிறந்தவள். பிராமணரை கல்யாணம் செய்துகொண்டவள். ஆனால் என்னை பிராமணர்கள் ஒதுக்கிவைத்தார்கள். அன்றைக்கு அதைச்செய்த அத்தனைபேருடைய மகள்களும் இன்றைக்கு கூந்தலைவெட்டிக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறார்கள். எனக்கு முன் பாட்டிகளின் கூந்தலை வெட்டி இருட்டறைக்குள் தள்ளியவர்களின் பேரக்குழந்தைகள் அவர்களெல்லாம். ஆனால் கூடவே காஞ்சி சங்கராச்சாரி மனித தெய்வம் என்று பசப்புவார்கள். மிகக்கூர்மையான கதை அது. எனக்கு அந்தக்கதையை கடந்துபோக இன்னும் ரொம்பநாள் ஆகும்
மைதிலி ராகவன்