உச்சத்தில் ஒரு வழு – கடிதம்

உச்சவழு வாங்க

அன்புள்ள ஜெ

உச்சவழு என்னும் கதை என்னுடைய வாழ்க்கையின் ஒரு முக்கியமான வாசிப்பனுபவம். நான் அதிகம் உங்கள் கதைகளை வாசித்ததில்லை. இந்தக் கதையை எப்படி வாசித்தேன் என்று ஞாபகமில்லை. சும்மா ராண்டமாக ஒரு புக் எடுத்து வாசித்தபோது கிடைத்த கதை இது. இந்தக்கதைபோலவே நானும் இதே டாப் ஸ்லிப்புக்கு போனேன். இதேபோல டாப் ஸ்லிப் ஆகியது. நான் அங்கிருந்து ஏன் வந்தேன் என்று இன்றைக்கும் தெரியவில்லை. ஏனோ போனேன். ஏதோ ஒன்று நடந்தது. நடக்காமல் இருந்தால் இன்றைக்கு இருந்திருக்க மாட்டேன்.

டாப் மொமெண்ட் என்று எதையெதையோ சொல்கிறார்கள். ஆனால் உண்மையான டாப் மொமெண்ட் என்பது அடுத்தக்கணம் நாம் இருக்காமலிருக்க வாய்ப்புள்ளது என்றநிலைதான் என நினைக்கிறேன். அடுத்த மொமெண்ட் இல்லை. அப்படியென்றால் இந்த மொமெண்ட் எப்படி இருக்கும். அந்த கனம் அப்படிப்பட்டது. ஒரு சின்ன புள்ளிமேல் ஆயிரம் டன் வெயிட் வந்ததுமாதிரி. அப்படி ஒரு கணம். அது தற்கொலையோ விபத்தோ எப்படியோ சாவு பக்கத்தில் இருக்கவேண்டும்.

அப்படி நாம் அடைவது என்ன என்பது எப்போதுமே ஒரு கேள்விதான். நமக்கு என்னவோ ஒன்று கிடைக்கிறது. பெரிய கொந்தளிப்பு அமையும் ஒன்று கிடைக்கிறது. அல்லது கொந்தளிப்பெல்லாம் இல்லாமலாகிவிடுகிறது. டாப் ஸ்லிப் என்றால் என்ன என்று தெரியவில்லை. ஸ்லிப் ஆகி இந்தப்பக்கம் வருவதும் அந்தப்பக்கம் விழுவதும் ஒன்றுதான்.

கடைசியில் நடக்கும் அந்த மாயம் ஒரு பெரிய விஷயம். அதை கதையில் சொல்லாமல் நிப்பாட்டியிருப்பதுதான் கதையை அழகாக ஆக்கிவிட்டது.

எம்.ஆர்

முந்தைய கட்டுரைசு.வேணுகோபால் காணொளி, கடிதம்
அடுத்த கட்டுரைசு.தியடோர் பாஸ்கரன்