பலிகளும் பயணிகளும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

இரண்டு நாட்கள் முன்பு (பிப்ரவரி 10) கூகுள் டூடுலில் பி கே ரோஸி என்னும் மலையாள சினிமா நடிகையின் புகைப்படத்தை வைத்து அவரது 120 ஆவது பிறந்த நாளை  கூகுள் கெளரவப்படுத்தி இருந்தது. ஒரு தென்னிந்திய நடிகைக்கான கூகுளின் இந்த அங்கீகாரம் எனக்கு ஆச்சரயமளித்தது. பி கே ரோஸியை  குறித்து தேடித்தேடி படித்தேன். புனைவுகளை மிஞ்சும் வாழ்க்கை அவருடையது. தலித் சமூகத்தை சேர்ந்த பெண், முதல் படத்தில் நாயர் பெண்ணாக நடித்தற்கே உயர் சாதியினரின் எதிர்ப்பில் அவரது வீடு கொளுத்தப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பி லாரியில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். பின்னர் அந்த லாரி டிரைவரையே திருமணமும் செய்து தமிழ்நட்டில் கடைசிக்காலம் வரை இருந்திருக்கிறார்.

எனக்கு ரோஸியின் வாழ்க்கை உங்களின் பழைய முகம் கதையை நினைவு படுத்தியது, அதில் வரும் விஜயா என்கிற  கல்பனாஸ்ரீ. அதுபோலவே  அழகிகள் மர்மங்கள் பதிவில் விஜயாஸ்ரீ,  அந்த அருவிக்குளியல் படப்பிடிப்பு, கொலையா தற்கொலையா என்று தெரியாமல் போன அவரது  மரணம்.  முதற்காதலின் பொன்மணிக்கிளையில் சாந்திகிருஷ்ணா என்று  ஒன்றின் பின்னால் ஒன்றாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். (முதற்காதலின் பொன்மணிக்கிளை )

விஜயஸ்ரீ பதிவில் சொல்லி இருப்பீர்கள்

‘’சினிமா உலகம் என்பது மூன்று விசைகளால் உருவாக்கப்படும் ஒரு பெரும்புனைவு. சினிமா என்னும் புனைவு, சினிமாக்காரர்களின் வாழ்க்கை என்னும் புனைவு, பார்வையாளர்களின் கற்பனை என்னும் புனைவு. அது வானம்போல முடிவில்லாதது. அதில் விண்மீன்கள் தோன்றி மறைகின்றன’’  (அழகிகள், மர்மங்கள், கற்பனைகள்) என்று. அப்படி பி கே ரோஸி என்னும்  ஒரு விண்மீனின் வாழ்க்கையில் தெரிந்தவைகளே இத்தனை என்றால் உண்மை இன்னும் எவ்வளவு இருந்திருக்கும்?

பி கே ரோஸியினால் நான் இன்றைக்கும் இந்த மூன்று நடிகைகளின் உலகிற்குள்லேயே சுற்றிசுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.

பன்னீர் புஷ்பங்களில் ’’பூந்தளிர் ஆட’’ பாடலை மீண்டும் கேட்டேன். அந்நாட்களில்  அடிக்கடி லவ்டேலுக்கு  போவோம். ஒவ்வொரு முறையும் எனக்கு ரயில் நிலையத்தில இறங்குகையில் இந்தப் பாடல் நினவுக்கு வந்துகொண்டே இருக்கும்.  இந்தப்பாடல் என்னை என் இளமைக்காலத்துடன் இணைக்கும் கண்ணி என இப்போது கேட்கையில் தோன்றுகிறது.

’’பழைய முகத்தில்’’ ஒரு பாடலை கேட்கையில் கதை நாயகன் நினைத்துக்கொள்ளுவான் ’’யாருமே சாகிறதில்லை, சாகவும் முடியாது என்று’’. ஓயாமல் பலரின் மனதுக்குள் இதுபோன்ற நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கையில் இவர்களுக்கெல்லாம் சாவு இல்லைதானே! ( பழையமுகம் (சிறுகதை)

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள லோகமாதேவி

பி.கே.ரோஸி பற்றி செல்லுலோய்ட்- முன்னோடியின் கதை என்னும் கட்டுரையில் எழுதியிருந்தேன். பி.கே.ரோஸி நாகர்கோயிலில் வாழ்ந்தார். பி.கே.ரோஸி பற்றி வினு ஆப்ரகாம் எழுதிய நஷ்டநாயிகா என்னும் நாவல் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் அந்நாவல் The Lost Heroine என்ற பேரில் ஆங்கிலத்தில் வெளியாகியது. 

பி.கே.ரோஸி என ஒருவர் இருந்தார் என்பதையே சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன்தான் கண்டுபிடித்தார். அவரை நாகர்கோயிலுக்கு வந்து சந்தித்திருக்கிறார். அவரைப் பேட்டிகண்டு எழுதியுமிருக்கிறார். அப்போது ரோஸி வறுமையில் இருந்தார். சிறிய நிதி வசூலித்து அளிக்கவும் கோபாலகிருஷ்ணனால் முடிந்தது.

இந்தக்கதைகளில் எல்லாம் உள்ள பொது அம்சம் என்பது இவர்களெல்லாமே பலியாடுகள்தான் என்பதே. ஆனால் அன்றைய வாழ்க்கையில் அப்படி எத்தனை பலியாடுகள்! குடும்பங்களில், அலுவலகங்களில். ரோஸியின் வாழ்க்கையில் அவர் அன்றைய வரலாற்றுக்கணம் ஒன்றுடன் தற்செயலாகச் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதே வேறுபாடு.

ரோஸியை இன்று ‘மலையாள சினிமாவின் அன்னை’ என்றெல்லாம் எழுதுகிறார்கள். அது இன்னொரு எல்லை. அவர் சினிமாவில் வேண்டாவெறுப்பாக நடித்தார், அதனால் அவமானப்பட்டார். ஆனால் எதிர்க்கவோ போராடவோ இல்லை. வரலாற்றின் களப்பலி அவர். வரலாற்றில் நினைவுகூரப்படவேண்டியவர், நம் கீழ்மையின் ஓர் அடையாளமாக. நாம் கடக்கவேண்டியவற்றின் அறிவுறுத்தலாக. ஆனால் அவர் வரலாற்றுநாயகி அல்ல. வரலாற்றில் நின்று பொருதி எவ்வகையிலேனும் அதை வென்றவர்களே வரலாற்றின் தலைவர்கள்.

வரலாறு ஒரு சிம்மம். அதன் பலிகள் பல்லாயிரம்பேர். சிம்மவாஹினியாக அதில் ஏறியமர்ந்தவர்களே முதன்மையான ஆளுமைகள். அவர்கள் பலர் உள்ளனர். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போல.

ஜெ

PK Rosy: The mother of Malayalam cinema

PK Rosy’s story: How Malayalam cinema’s first woman actor was forced to leave the state

முந்தைய கட்டுரைதி.சதாசிவ ஐயர்
அடுத்த கட்டுரைமுதற்கனல், மாணவியின் கடிதம்