ஊட்டி காவிய முகாம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஊட்டி காவிய முகாம் இலக்கிய  வாசிப்பின் புதிய வாசல்களைக் காட்டுவதாக அமைந்தது இப்போது காளிதாசன் மிக நெருங்கியவனாகக் காட்சி அளிக்கிறான்.இலியட்டை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.இலக்கியம் தவிர்த்து என்னை வியப்பில் ஆழ்த்திய விசயங்களும் உள்ளன.அவை ஜெயமோகன் மற்றும் தேவ தேவனின் ஆளுமைகள்.

நீங்கள் உங்களுடைய பழைய கட்டுரைகளில் நான் இனி மேல் சோர்வுற்று இருக்கவோ கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ போவதில்லை என்று எழுதியிருந்தீர்கள் .எழுதுவதன் மன எழுச்சியில் நீங்கள் வெளிப்படுத்திய  வாசகங்கள் அவை என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் உங்களுடன் இருந்த மூன்று நாட்களிலும் நான் எண்ணியது தவறு என்றும் நீங்கள் கூறியதே உங்களின் ஆளுமை என்பது போலும் தோன்றுகிறது.எப்படிக் குழந்தை போல உங்களால் உற்சாகத்துடன் இருக்க முடிகிறது ? உங்களிடமே  இதைப்பற்றிக் கேட்டேன் .நீங்கள் “இனி மேல் கவலைப்படக்கூடாது என்று ஒரு நாள் முடிவெடுத்தேன் அன்றிலிருந்து நான் கவலைப்படுவதில்லை  ” என்று கூறினீர்கள் .

அதெப்படி,நாம் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் நம் கவலைகள் பறந்து போய் விடுமா?.இழப்புகள், தோல்விகள்,ஏமாற்றங்கள் ,புறக்கணிப்புகள் போன்ற சக்திகள் நம்மைச் சூழும் போது நாம் எப்படிக் கவலை கொள்ளாமல் இருப்பது ? நானும் கவலைப்படாமல் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்.ஆனால் இந்த சக்திகள் அப்படி இருக்க விடுவதில்லை.  கவலைகளிலிருந்து விடுபடுவது ஆன்மீகத் தெளிவிலா ? இல்லை வாழ்க்கையைப் பற்றிய புரிதலிலா?  இல்லை வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா? இல்லை இது எளிதில் கடந்து செல்லக்கூடிய அற்ப விசயமா?   உங்களை விடப் பல மடங்கு நான் வியந்த ஆளுமையும் உண்டு . அது பாரதி! தனி வாழ்க்கையில் எவ்வளவு தான் துன்பத்தில் இருந்தாலும் அவருடைய சொற்களில் என்றுமே சோர்வோ விரக்தியோ நான் கண்டதில்லை . ஒளிமிக்க நம்பிக்கை கொண்ட படைப்புகளையே அவர் உருவாக்கியுள்ளார் .அவர் இந்த நிலையை எப்படிச் சென்றடைந்தார் ?

நான் ஆச்சர்யப்பட்ட இன்னொரு ஆளுமை தேவ தேவன். தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அவரால் எப்படிப் படைப்பாளிக்குரிய அகங்காரமோ கர்வமோ இல்லாமல் அவ்வளவு எளிமையாக இருக்க முடிகிறது ? அவர் அவற்றைக் கடந்து வந்து விட்டாரா? இல்லை வெளிப்படுதுவதில்லையா? அவருடன் பழகுவது ஒரு மென்மையான தந்தையுடன் பிள்ளை பழகுவது போலவே தோன்றுகிறது .

நான் நிச்சயமாக உங்களையோ தேவதேவனையோ பாராட்டுவதற்காக இதைக் கேட்கவில்லை . உங்களைச் சந்தித்த போது எனக்குள் எழுந்த வினாக்களுக்கான விடைகளை நாடியே இதனைக் கேட்கிறேன்.

அன்புடன்
தர்மராஜன்.

[email protected]

அன்புள்ள ஜெ,

மாணவர்கள் என்னை நாடித் தடையின்றி வரவேண்டும்!

மாணவர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வரவேண்டும்!
புலன்களை வெல்லும் திண்மை உடைய மாணவர்கள் வரவேண்டும்!
சாந்தமான மனதுடைய மாணவர்கள் வரவேண்டும்!
எவ்வாறு ஆழமான இடத்தை நோக்கி ஓடைகள் ஓடுகின்றனவோ,
எவ்வாறு மாதங்கள் சேர்ந்து வருடத்தை நிரப்புகின்றனவோ
அவ்வாறே திசையெங்கும் இருந்து தேடல் உள்ள மாணவர்கள் வரவேண்டும்!
அவர்களால் என் வாழ்வு முழுமையடைய வேண்டும்!
என்னை ஒளிபொருந்தியவனாக்கி உன்மயமாக்கிக் கொள்வாய்!

(-தைத்திரீய உபநிஷத், சீக்ஷாவல்லீ)

நமது ரிஷிகள் மேற்கண்ட மந்திரம் சொல்லி ‘ஆவஹந்தீ’ ஹோமம் செய்து தேடலும், தீராத அறிவுத்தாகமும், ஒழுக்கமும் உடைய மாணவர்களை வேண்டிக் காத்திருந்தனர்.
உங்கள் ஆசிரியர்களும் அப்படி விரும்பியிருப்பார்கள், உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலமும், உங்களோடு விவாதிப்பதன் மூலமும் உள்ளூர நிறைவடைந்திருப்பார்கள். நீங்களும் அப்படித் தான் விரும்புகிறீர்கள் என்றே எண்ணிக்கொள்கிறேன்.

சமீபத்தில் ஊட்டி காவிய முகாமில் கலந்து கொண்ட நண்பர்களின் பரவசமான பகிர்வுகளைப் படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. கடந்த சில வருடங்களாக உங்களை நேரில் சந்திப்பவர்களும், நீங்கள் நடத்தும் இலக்கியக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்பவர்களும், உங்கள் ஆக்கங்களைப் படித்து மடலில் உரையாடியும், விவாதித்தும் வளரும் ஒரு இளந்தலைமுறை மெல்ல பரவிக்கொண்டிருக்கிறது. புதிது புதிதாக அறிமுகமாகிப் பழைய கேள்விகளையே கேட்கும் ஆரம்பநிலையில் உள்ளவர்களிடமும் இத்தனை பொறுமையாகவும், பொறுப்பாகவும், உண்மையான ஆர்வத்துடனும் பதில் சொல்லி ஊக்குவிக்கும் இன்னொரு எழுத்தாளர், சிந்தனையாளர், உரையாடல்காரர் நமது சூழலில் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அப்படி உரையாடுவது ‘குரு மனப்பான்மை’ என்றால் தயவுசெய்து நீங்கள் குருவாகவே தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன். ஞானத்தாலும், அனுபவத்தாலும் உயர்ந்தவர்களைப் புகழ்ந்து பாராட்டக் கூட ஒரு தகுதி வேண்டும் என்பதே மரபு. எனவே, உங்களோடு விவாதிக்கவும், பேசவும் தகுதியுள்ளவனாக மேம்படுத்திக்கொள்ள முயற்சிமட்டுமே இப்போதைக்கு செய்துவருகிறேன்.

நன்றி,
பிரகாஷ்.

அன்பின் ஜெ.எம்.,

இலியட் கட்டுரைகள் எல்லாவற்றையுமே விரும்பிப் படித்தாலும் குறிப்பாக- அதன் 4ஆம் பகுதி என்னை மிகவும் அசைத்து விட்டது.

இப்படிக்கூட இருக்க முடியுமா?

மகன்களைக் கொன்றவனோடு அமர்ந்து உணவருந்தும் தந்தை..அந்தத் தந்தைக்குப் பரிந்து போர்வை தரும் கொலைகாரன்…!எப்படிப்பட்ட உச்சமான நாடகத் தருணம் இது?

//கொன்றவனும் இழந்தவனும் சேர்ந்து அருந்தும் இந்த விருந்துதான் இலியட்டின் உச்சம். உலகின் மிகச்சிறந்த நாடகத்தருணங்களில் ஒன்று. ஒரு எளிய வீரகதையைப் பெருங்காப்பியமாக்கும் இடம் இதுவே.//

தஸ்தயெவ்ஸ்கியின் அசடனை மொழியாக்கம் செய்தபோதும் இதே போல அதன் கடைசிக் காட்சியின் முரண் என்னை நெகிழ்த்தியதுண்டு.
நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவைக் கொன்ற ரோகோஸின் ஒரு புறம்! (அவளின் சாவுத் துயரம் ஒருபுறமிருக்க)அவன் அப்படி ஒரு கொலை செய்து விட்டானே என்ற ஆதங்கத்துடன், அவன் மீதான பரிவுடன் அவனை அணைத்து ஆறுதலளிக்கும் இடியட் மிஷ்கின் மறுபுறம்! இவர்கள் இருவருமாகச் சேர்ந்து -சற்றும் மிகையின்றி-ஒருவரை ஒருவர் சைகைகளால் தேற்றியபடி மரித்துப் போய்க் கிடக்கும் அந்தப் பெண்ணின் இரு பக்கங்களிலும் உறங்கும் அந்தக் கட்டம்…

எப்படிப்பட்ட ஒரு மகத்தான காட்சி அது?

உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான நல்ல பக்கங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள்.
அன்புடன்,
எம்.ஏ.சுசீலா,
புது தில்லி
www.masusila.com

முந்தைய கட்டுரைமுடிவின்மையின் விளிம்பில்-மொழியாக்கம்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1