ஆழி – ஓர் உரை

அன்புள்ள ஜெயமோகன் ,

நலம்தானே. பயணத்திற்கு பிறகான ஓய்வில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் (சந்தேகம்தான்). சென்ற ஞாயிறன்று நிகழ்ந்த வாசகசாலையின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் கமலதேவியின் ஆழி சிறுகதைத் தொகுப்பிற்கான அறிமுக உரையாற்றினேன். என் முதல் இலக்கிய மேடை உரை. எழுத்தாளர் காளிப்ரசாத் அண்ணாவிற்கு பதிலாக substitute playerஆக (முழு புத்தகத்தையும் வாசித்துவிட்டு) களமிறங்க வேண்டிய சூழலில் நிகழ்த்திய உரை.  உரையை இன்று காணொளியில் பார்த்தபொழுது இரண்டு விஷயங்கள் தோன்றியது. முதலில் முழுக்க முழுக்க உங்களை பிரதியெடுக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் மை தீரப்போகும் பழைய ஜெராக்ஸ் மெஷின் அளவுக்கே பிரதியெடுத்திருக்கிறேன். அபத்தமான முயற்சியாக இருந்தாலும் தன் ஆதர்சமான ஆளுமையை பின்பற்ற நினைக்கும் எந்தவொரு மாணவனுக்கும் அது நிகழ்வதுதான் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் இத்தகைய முயற்சிகளின் வழியே எனக்கான தனி ஆளுமையை நான் கட்டமைத்துக்கொண்டால் அதுவே உங்களுடைய சரியான பிரதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

இரண்டாவதாக தோன்றிய எண்ணம் ஒழுங்காக மேடையுரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டபொழுதே பங்குபெற்றிருக்கலாம் என்பதுதான். அலுவலக பனிச்சுமையோடு சேர்த்து நம்மை யார் மேடையுரையாற்ற அழைக்கப்போகிறார்கள்? நமக்கு எதற்கு அந்த பயிற்சியெல்லாம்? என்று அபத்தமான சாக்கு போக்குகளை எனக்கு நானே சொல்லிக்கொண்டு மேடையுரை பயிற்சிக்கு வராமல் இருந்துவிட்டேன். ஆனால் விதி யாரை விட்டது. அங்கே சென்று மேடையில் தடுமாறிக்கொண்டிருக்கையில்தான் ஒழுங்காக பயிற்சிக்கு போயிருக்கலாம் என்று தோன்றியது. அடுத்த முறை வகுப்பு நடத்தப்பட்டால் முதல் ஆளாக வந்துவிடுகிறேன் . மற்றபடி முதல் இலக்கிய மேடைக்கான பாவனைகள், சமாளிப்புகள் என அனைத்தும் கொண்ட ஒரு சராசரி உரை இது. ஆனால் எதுவாக இருந்தாலும் உங்களோடு பகிராத என் எந்த செயலுக்கும் பொருளில்லை. எனவே காணொளியின் சுட்டியை இணைத்திருக்கிறேன்.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

***

அன்புள்ள விக்னேஷ்

தொடக்கவுரை என்னுமளவில் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஓர் எளிய பயிற்சிவகுப்பில் அளிக்கப்படும் திருத்தல்கள், வழிகாட்டுதல்கள் இதைவிட பலமடங்குச் சிறந்த உரையை ஆற்றவைக்கும். உரையின் கட்டுமானம், அதற்கான தயாரிப்புகளைச் செய்யும் முறை, அதில் செய்யக்கூடாதவை என பல உண்டு. அவற்றை அறியாமலேயே நம் இலக்கியவாதிகளில் பெரும்பாலானவர்கள் உரையாற்றுகிறார்கள். ஆகவே அவர்களின் உரைகள் தாங்கமுடியாத பொறுமைச்சோதனைகளாக உள்ளன. இலக்கியக்கூட்டங்களில் ஐந்துபேர் ஆறுபேர் என அரங்கினர் வந்து அமர்ந்திருப்பதும் இதனாலேயே.

அண்மையில் திருப்பூரில் ஓர் இலக்கியவிழாவுக்குச் சென்றுவந்த நண்பர் எழுதியிருந்தார். ‘இலக்கியவிழாக்களுக்கு வாசகர்கள் செல்வதில்லை, இலக்கியவிழாக்கள் முக்கியமானவை என்று நீங்கள் எழுதிக்கொண்டே இருந்தீர்கள். அதை நம்பி இந்த விழாவுக்குச் சென்றேன். ஓரிருவர் தவிர எவருக்குமே பேச்சு வசப்படவில்லை. எந்த பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்னொருவரின் நேரத்தையும் எடுத்துக்கொண்டு பேசித்தள்ளினார்கள். என் வாழ்க்கையின் மிகமிக சலிப்பூட்டும் நாளாக ஒன்றை ஆக்கிவிட்டார்கள்’

ஆனால் அந்த எளிமையான பயிற்சியை எடுக்க இலக்கியவாதிகளின் தன்முனைப்பு அனுமதிப்பதில்லை, அதற்கு தன்னடக்கமோ தன்முனைப்போ ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் – உங்களையும் சேர்த்தே சொல்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஎழுகதிர் நிலம்- 9
அடுத்த கட்டுரைஅய்யனார்குளம்