(டைகர் மடாலயம். பாடல்)
பிப்ரவரி 16 ஆம் தேதி காலையிலேயே எழுந்து வெந்நீர்ல் குளித்து எதிரில் இருந்த உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றோம். சென்ற சீசனில் வாங்கி வைத்த உணவுப்பொருட்கள். பாக்கெட்டில் அடைத்த பொருட்கள் கெட்டுப்போகுமென்ற எண்ணமே பழங்குடிகளிடம் அனேகமாக இல்லை. நூடில்ஸ், அதாவது மாகி, ஒரு மாதிரி காரமாக இருந்தது. வழக்கம்போல அந்த கஞ்சியை குடித்துவிட்டு வயிறு நிறைந்துவிட்டது என கற்பனைசெய்துகொண்டு கிளம்பிச்சென்றேன்.
நாங்கள் அங்கு வந்ததே பாம்பூ டிராக் எனப்படும் மூங்கில்பாதை வழியாக ஒரு நடை செல்வதற்காகத்தான். வாக்கென் கிராமத்தின் காசி பழங்குடிகளின் கட்டுப்பாட்டிலுள்ள Mawryngkhang Trek எனப்படும் இந்த மூங்கில்பாதை முக்கியமான ஒரு சுற்றுலாக் கவற்சி. இன்று சுற்றுலாப்பருவத்தில் ஏராளமான பயணிகள் இங்கு வருகிறார்கள். நாங்கள் சென்றபோது அக்கிராமத்தில் தங்கி காலையில் நடைசென்றவர்கள் நாங்கள் மட்டுமே. பத்துமணிக்குமேல் ஷில்லாங்கில் இருந்து இளைஞர்குழுக்கள் வரத்தொடங்கின.

இப்பாதை சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. மேகாலயா பழங்குடிகளின் ஊர்கள் மிக மிக விலகி செங்குத்தான மலைகளின் மடிப்புகளுக்குள் உள்ளன. அங்கிருந்து அவர்கள் சந்தைகள், பொது இடங்களுக்கு வருவதற்கான தொடர்புக்காக இப்பாதைகளை அமைக்கிறார்கள். அதிலொன்றை சுற்றுலாப்பயணிகளுக்குரிய நடைபாதையாக மாற்றியிருக்கிறார்கள். மேகாலயா முழுக்க உருவாகி வரும் சுற்றுலா மலர்ச்சியின் ஒரு பகுதியாக இவை இப்படி உருமாற்றம் பெறுகின்றன.
செல்லும் வழியில் மலைச்சரிவில் துடைப்பப்புல்லை வெட்டி சேகரித்துக்கொண்டிருந்தனர். அந்த மூங்கில்புல்லின் பூ செங்குத்தாக எழுந்து நின்று காற்றிலாடி கடலலைபோல விழிமாயம் காட்டியது. அதை சீராக அறுத்து கத்தைகளாக படுக்கவைத்தனர். மூங்கில் ஆண்டுதோறும் பூக்கவேண்டும் என்றால் அதை ஆண்டுதோறும் வெட்டிவிடவேண்டும். அப்போது செங்குத்தாக எழாமல் பல கிளைகளாக பக்கவாட்டில் விரிந்து பல பூக்கள் எழுந்து வரும்.
கிராமசபையின் பெண்மணி ஒருத்தி டிக்கெட் கொடுத்தாள். தலைக்கு நூறு நூபாய். மலையிறங்கிச் சென்று வாரூ (Wahrew) ஆற்றை அடைந்தோம். அதன் கரையில் ஒரு சிறிய பெட்டிக்கடை. அங்கே அப்போது எவருமில்லை. அருணாச்சலப்பிரதேசத்தில் பனிமலைகள் உருகி வரும் நீர் மிகமிகமிகமிக தெளிந்தது. அதன் ஒளியலையால் மட்டுமே அந்த நீரை நாம் பார்க்க முடியும். அசைவற்ற இடத்தில் நீர் பார்வையில் இருந்தே மறைந்துவிடும்.
வாரூ ஒழுகி வரும் வழி முழுக்கவே செங்குத்தான மலயிறக்கம். ஆகவே மண்ணை நீரின் விசை அரித்து வெறும் பாறைத்தடமாக ஆக்கிவிட்டிருக்கிறது. வரும் வழி முழுக்க காடு. ஊர்களும் இல்லை. ஆகவே கழிவுகலப்பதில்லை. ஆகவேதான் அந்த தெளிவு.
வாரூ ஆற்றில்தான் இந்தியாவிலேயே பெரிய ரயில்வே இரும்புப்பாலம் இருக்கிறது. 22 ஜனவரி 2021 ல் முதல்வர் கான்ராட் சங்மா சோபார் என்னுமிடத்திலுள்ள அந்தப்பாலத்தை திறந்து வைத்தார். ஏறத்தாழ ஐம்பது கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் 169 மீட்டர் நீளம் கொண்டது.
நாங்கள் மலையிறங்கி ஆற்றை நோக்கி வரும் வழியிலேயே ஒரு சிவப்பான பெண் நாய் எங்களை அணுகி நட்பை தெரிவித்தது. கனத்த முலைகள் அது குட்டி போட்டிருப்பதைக் காட்டின. பெட்டிக்கடையில் ஏதாவது வாங்கலாமென எண்ணினால் அங்கே ஒன்றுமில்லை.
ஆற்றில் இருந்து மூங்கில்பாதை ஆரம்பிக்கிறது. ஆற்றுக்குள் மூங்கில்களை x வடிவில் நாட்டி அதன்மேல் இருவர் நடந்துபோகுமளவுக்கு அகலத்தில் பாலம் போல பாதையை அமைத்திருந்தனர். ஆற்றிலுள்ள பெரிய பாறைகளையும், ஆற்றோர மரங்களையும் அதனுடன் இணைத்து பாலத்தை நீட்டிச் சென்றிருந்தார்கள். ஏறி இறங்க வேண்டிய இடங்களில் மூங்கில் வரிசைகளுக்கு குறுக்கே மரத்தண்டுகள் வைத்து கட்டி படிகள்.
இந்த மூங்கில் பாதை வாக்கென் கிராமத்திலுள்ள 200 வீடுகளில் வாழும் 1000 காசி இன மக்களால் அரசு அல்லத்து அயல் உதவி ஏதுமில்லாமல் முழுக்க முழுக்க உள்ளூர் தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டது. மூங்கில்களை கயிறுகளால் சுற்றிக் கட்டியிருக்கிறார்கள். ஆணி மிக குறைவு. கயிற்றுக் கட்டுகள் இறுக்கமானவை அல்ல, சற்று நெகிழ்வானவை. ஆகவே பாலங்கள் சற்று அசையும், ஆனால் அந்த அசைவு பாலத்தில் உருவாகும் அதிர்வுகளை வாங்கிக்கொள்ளும். பாலத்தின் அதிர்வு தூண்களுக்குச் செல்லாமல் தடுக்கும்.
ஆற்றின் மறுபக்கம், பாதையோரமாக ஒரு சிமிண்ட் கட்டுமானம். நாய் ஓடிச்சென்று தன் குட்டிகளை காட்டியது. மூன்று குட்டிகள். மூன்றுமே கொழுகொழுவென இருந்தன. ஒன்று மனிதர்களை கண்டதுமே ஓடி ஒளிந்துகொண்டது. அரங்கசாமி குட்டிநாய்களை கையில் எடுக்க முயல அன்னை அவர் கையை தன் கையால் தட்டி தட்டி விட்டது – கையில் எடுக்காமல் கொஞ்சு என்று சொல்கிறது. ஆனால் உறுமவோ, எச்சரிக்கவோ இல்லை. குட்டிகளைப் பற்றி அம்மாவுக்குப் பெருமைதான்.
ஆற்றுக்கு மறுகரையில் இருந்து மீண்டும் மூங்கில்பாதை செல்லத்தொடங்கியது. அது சில இடங்களில் உயரமான மூங்கில்கள்மேல் கட்டப்பட்ட பாலம். சில இடங்களில் காட்டு மரங்களின் கிளைகளை இணைத்துக் கட்டப்பட்ட அந்தரப்பாதை. கால்கீழே பார்த்தால் உடல் உதறிக்கொள்ளும். பல இடங்களில் எண்பது தொண்ணூறு அடி ஆழத்தில் மலைப்பள்ளங்கள் தெரிந்தன. சில இடங்களில் செங்குத்தான பாறைகளின் விலாவில், பாறைவிரிசல்களில் ஆணி அறைந்து தொட்டில்போல பாதை தொங்கவிடப்பட்டிருந்தது.
காடுகளுக்குமேல், மலைகளுக்கு மேல் ஊர்ந்து செல்லும் உணர்வு. பல இடங்களில் வானில் செல்லும் பதற்றமே உருவாகியது. மலைப்பாறைகளின் பக்கவாட்டில் நகர்கையில் பாலம் மெல்ல அசைவது அடிவயிற்றை கலங்கச் செய்யும் அனுபவம். ஏறி இறங்கி, குடையப்பட்ட பொந்தினூடாக மறுபுறம் சென்று, மீண்டும் மரப்பாலத்தில் ஏறி, மீண்டும் மூங்கில் தொட்டிலில் ஆடியாடி….
அத்தனை நீண்ட பாதை என அறிந்திருக்கவில்லை. அத்தனை வெயில் இருக்குமென்ற கணிப்பும் இருக்கவில்லை. பாதை சென்று சென்று பாறைகளை இணைத்து நீண்டுகொண்டே இருந்தது. இறுதியாக செங்குத்தாக நின்ற பிரமிட் வடிவ பெரும்பாறை ஒன்றின் முனைவரை ஏற படியமைத்திருந்தனர். அதில் நின்று கீழே ஆழத்தில் ஒளிர்ந்து ஓடிய ஆற்றைப் பார்த்தோம். அதற்கப்பாலும் அந்தப்பாதை சென்றது. மலையின் மறுபக்கம் உள்ள ஒரு காசி கிராமம்தான் அதன் இறுதி புள்ளி. சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த மலையுச்சியே இறுதி.

மாரிங்காங் (Mawryngkhang) என்றால் கற்களின் அரசன் என்று பொருள். இந்த மலையுச்சிப்பாறைதான் அந்த அரசன். காசி தொன்மங்களின்படி ஒருமுறை கற்கள், பாறைகள் நடுவே ஒரு பெரிய போர் நடைபெற்றது. அதில் வென்றது இந்த மாரிங்காங் பாறைதான். இப்பகுதியின் அரசன் அதுதான்.
மாரிங்காங் அருகே உள்ள கிதியாங் (Kthiang) என்னும் பாறையுடன் காதல்கொண்டது. மப்படார் (Mawpator) என்னும் இன்னொரு பாறை அதை எதிர்த்து கிதியாங்கை அடைய முயன்றது. அப்போது நடைபெற்ற போரி மாரிங்காங் மப்படாரை அறைந்து இரண்டாக உடைத்தது. வெற்றி பெற்று கிதியாங்கை மணந்தது. அங்கே மாரிங்காங் பாறைக்கு அருகே அதன் துணைவியான கிதியாங்கும், உடைந்த மப்படார் பாறையும் உள்ளன.
அங்கிருந்து திரும்பி வரும்வழியில் மூச்சிரைக்க பயணிகள் வருவதை கண்டோம். “தயங்கவேண்டாம், கொஞ்சம் முயன்றால் போய்விடலாம்” என அவர்களுக்கு ஊக்கமூட்டினோம். அனைவருமே இளைஞர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே சிறுகுழந்தைகளுக்குரிய ‘செல்லக்கொழுப்பு’ கொண்ட உடல். வியர்வையால் முகங்கள் நனைந்து, வெயிலில் சுண்டிப்போயிருந்தன.
கீழே ஓர் அருவி. அங்கே இறங்கிச் சென்று நீராட மூங்கிலில் பாதை அமைத்திருந்தனர். செங்குத்தான பாதை. அதன் வழியாக இறங்க மூட்டுவலி, மிகுஎடை இருக்கலாகாது. மேகாலயாவின் மஞ்சளின மக்களுக்கு எடை இருப்பதில்லை. சிறிய உருவம் கொண்டவர்கள். அவர்களின் மூட்டுவலிமையும் நுரையீரல் வலிமையும் நம்மைவிட மிகுதி. அவர்கள் மலையில் பிறந்து வாழ்ந்து அங்கேயே பரிணாமம் அடைந்தவர்கள்.
கீழே அருவி ஒரு கண்ணாடித்திரைபோல விழுந்துகொண்டிருந்தது. நீலப்படிகம் போன்ற நீர். அந்த தெளிவே ஒரு கனவுத்தன்மையை அளித்தது. மதியவெயில் நீருக்குள் புகுந்து அருவிவிழுந்த குளத்தை ஒரு மாபெரும் நீலவைரமென காட்டியது. அதில் இறங்கி அதை தீண்டுவதே பாவமோ என்னும் தயக்கம் ஏற்பட்டது.
நீரின் அழகு அதன் தெளிவில் ஓர் அசாதாரணத் தன்மை கொள்கிறது. நமக்கு தென்னிந்தியாவில் அத்தகைய அசாதாரணத்தன்மை பழக்கமில்லை. நம் மண்ணில் உப்புகள் மிகுதி. சேறும் உண்டு. ஆகவே முழுத்தெளிவு நிகழ்வதில்லை. நாம் நன்கறிந்த உலோகம் தீட்டப்பட்டு கூர் கொள்கையில் அச்சமூட்டுவதாக ஆகிவிடுவதுபோலிருந்தது அந்தத் தெளிவு. தெளிந்த உள்ளங்களும் அத்தகைய விலக்கத்தை உருவாக்குகின்றனவா?
குற்றாலம் அருவியில் விடியற்காலைக் குளியலில்தான் அந்தத் தயக்கம் உருவாகும். நீர் ஒரு பனிக்கட்டியாக தோன்றியது. ஆனால் முழங்காலளவு நீரில் இறங்கும்போதுதான் குளிர் உலுக்கியது. பின்னர் உடல் குளிரை ஏற்றுக்கொண்டது. சற்று கடந்தபின் உடல்வெம்மை வெளிவந்து நீரின் தண்மையை எதிர்கொண்டது. உடல்வெம்மையும் குறைய தொடங்கும்போதுதான் வெடவெடக்கத் தொடங்கும். அதுவே நீராட்டின் எல்லை.
பாறைகளில் ஏறி உச்சிமுனை வழியாக நகர்ந்து நகர்ந்து சென்று அருவிக்குளத்தில் குதித்தோம். நீந்தியும் பாறைகளில் இருந்து தாவியும் அந்த நீரில் அளைந்தோம். குளிக்கக்குளிக்க காலம் மறந்து, உள்ளம் அழிந்து, உடல் மட்டுமே ஆன பெருந்திளைப்பு.
மீண்டும் மேலேறும்போது நான்கு மணிநேர நடை, ஒன்றரை மணிநேர நீச்சல், செங்குத்தான மலையேற்றமும் இறக்கமும் சேர்ந்து கெண்டைக்கால் தசையை இறுக்கமாக்கிவிட்டன. நல்ல வலி. இரண்டு இடங்களில் அமரவேண்டியிருந்தது. ஆனால் பெரிய ஓய்வை அளிக்காமல் நீவி நீவி விட்டபடி மெதுவாக ஏறினேன். பழகி இயல்பாகிவிட்டன.
(வழக்கம்போல கிருஷ்ணன் நீராடவில்லை. ஆனால் அருவி வரை வந்து மீண்டார். அவருடைய கால்களும் அரங்கசாமி கால்களும் பலநாட்களுக்கு உளைச்சல் கொண்டிருந்தன என்றார்கள். ஒப்புநோக்க நான் கூடுதலாக நடந்துகொண்டிருக்கிறேன் என்பதே காரணம்)
மேலே வந்து சேர்ந்தபோது மீண்டும் வியர்வை வழியத் தொடங்கிவிட்டது. காரில் ஏறி அமர்ந்ததுமே தூக்கம் வந்து அழுத்தியது. பத்துநிமிடம் தூங்கினேன். அந்த வகையான குறுந்துயில்கள் இனியவை. சிறிய மிட்டாய் போல தித்திப்பவை. ஆழ்துயில் அல்ல. சூழல் தெரியும். ஆனால் ஒரு வண்ண ஓவியப் புத்தகத்தை எவரோ பிரித்துக் காட்டியதுபோல சம்பந்தமில்லாத பல சிறுகனவுகள் வந்து வந்து செல்லும்.
அங்கிருந்து இன்னொரு மலைமுடிக்குச் சென்றுவிட்டு ஷில்லாங் திரும்ப கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். ஆனால் சாலை மிகமிக கொடிதாக இருந்தது. மிக அகலமாக வெட்டி ஓர் ஆறுவழிச்சாலை போட்டுக்கொண்டிருந்தனர். அலைகளில் படகுபோல செல்லவேண்டும். கொஞ்ச தூரம் சென்றபின் திரும்பிவிடலாம் என முடிவெடுத்தோம். அந்திக்குள் ஷில்லாங் திரும்ப முடியாமலாகும் என தோன்றியது.
விஷ்ணுபுரம் அமைப்பின் பொறுப்பாளரும் எழுத்தாளருமான நண்பர் ராம்குமார் ஷில்லாங்கில் இந்திய ஆட்சிப்பணியில் சுகாதாரத்துறை செயலராக இருக்கிறார். (முன்பு மலைப்பகுதிகளில் சூரிய ஒளி மின்சாரம் கொண்டுசென்றமைக்காக தேசியா அளவில் கவனிக்கப்பட்டவர். அண்மையில் டிரோன்கள் வழியாக மலைப்பகுதிச் சிற்றூர்களுக்கு மருந்துகளை கொண்டுசெல்லும் ஒரு முறையை ராணுவ உதவியுடன் உருவாக்கி அமல்படுத்தி மிகுந்த பாராட்டு பெற்றிருக்கிறார். கான்ராட் சங்மா அரசின் சாதனைகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது)
ஷில்லாங் வந்து ராம்குமாரின் இல்லத்தில் ஒரு விருந்துண்டோம். அவர் மட்டுமே இல்லத்தில் இருந்தார். அசைவ, சைவ உணவுகள். அரங்கசாமியின் கீட்டோ முறைக்கு வேட்டையாக அமைந்த பலவகை இறைச்சிகள். மேகாலயாவில் எங்கும் எவ்விதத்திலும் பழைய இறைச்சிதான் கிடைக்கும். இதைப்போல முதன்மையான விருந்துகளில் நல்ல இறைச்சி கிடைத்தால்தான் உண்டு.
அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மேகாலயாவில் நான் கண்ட ஒன்று காடழிவு. மக்கள் தொகை அதிகரிக்கிறது. மக்களின் வாழ்க்கை வசதிகளும் கூடிக்கூடி வருகின்றன. அது நேரடியாக எரிபொருள் செலவை அதிகரிக்கிறது. பழையபாணி வடகிழக்கு இல்லங்கள் மூங்கில்தட்டிகளாலானவை. மிகச்சிறியவை. இன்று பெரிய வீடுகளை கட்டுகிறார்கள். அவர்களின் எரிபொருள்தேவையில் பெரும்பகுதி மழைக்கால, குளிர்கால கணப்புகளுக்கே. அதற்கு விறகுகளையே பயன்படுத்துகிறார்கள்.
வடகிழக்கே ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டின் பாதியளவுக்கே பெரிய விறகு அடுப்புகளைக் கண்டோம். எல்லாமே மலைமரங்களை பிளந்து எடுக்கப்பட்ட கனமான விறகுகள். நம்மூர் போல தென்னை, பருத்தி போன்று விறகு அளிக்கும் பயிர்கள் அங்கில்லை. வரட்டி தட்டப்படுவதுமில்லை. இப்படியே சென்றால் வடகிழக்கின் காடுகள் தாங்காது.
தமிழகத்திலும் கேரளத்திலும் மலைப்பகுதிகளில் விறகு எரிப்பது அனேகமாக நின்றுவிட்டது. தென்னைமட்டை போன்றவற்றுக்கு விலையே இல்லை. மலைவிறகு எடுப்பது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. மானியவிலையில் எரிவாயு அளிக்கப்படுவதனால் முழுக்க முழுக்க அதுவே பயன்பாட்டில் உள்ளது. தடையற்ற மின்சாரம், எரிவாயு அளித்து வடகிழக்கின் காடுகளை அரசு காப்பாற்றியாகவேண்டும்.
ஆனால் அருணாச்சல் மக்கள், மேகாலயா மக்கள் ஒப்புநோக்க நம்மைவிட தூய்மையுணர்வு கொண்டவர்கள். குப்பைகளை வீசுவது மிக அரிது. எங்கும் குப்பைக்கூடைகள் உள்ளன. அவற்றை முறையாக அழித்தும் விடுகிறார்கள். ஆகவே சுற்றுலாமையங்கள் தூய்மையாகவே உள்ளன. வடக்கு மையநில இந்தியாவின் பான்பூரி -பீடா சிறுவணிகர்கள் இங்கே வந்து குவிய எல்லா வாய்ப்பும் உள்ளது. அவர்கள் மிகநெரிசலான சந்துபொந்துகளில் எலிகள்போல வாழ்ந்து பழகிய மக்கள். தூய்மை என்பதையே வாழ்க்கையில் அறிந்திராதவர்கள். வடகிழக்கை அவர்கள் மாபெரும்குப்பைக்குவியலாக ஆக்கிவிடக்கூடும். சிம்லா சென்றால் தெரியும், அது ஒரு குப்பைமேடு.
அன்று மாலை கிளம்பி லைட்லம் (laitlum Canyon) என்னும் மலைப்பள்ளத்தின் கரையில் அமைந்த லைட்லம் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். நல்ல குளிர் இருந்தாலும் போர்வைகள் சிறப்பாக இருந்தமையால் தூங்க முடிந்தது. இந்தப்பகுதி புகழ்பெற்று வரும் ஒரு சுற்றுலாமையம். இங்கே மலைவிளிம்புக்குக் கீழே ஒரு மாபெரும் மலைப்பள்ளம் உள்ளது. The Grand Canyon Of India என இது அழைக்கப்படுகிறது. அமெரிக்க கிராண்ட் கான்யன் போலவே தியானத்திலாழ்ந்த மலைமுடிகளின் கீழே அடுக்கடுக்காக மலைக்குவைகள், மலவிளிம்புகள், மலைமுகங்கள், மலைமாளிகைகள்.
கீழே வெள்ளி ஓடையாக லைட்லம் ஆறு ஓடிச்செல்கிறது. மழைக்காலத்தில் அது ஒரு பெரும்கொந்தளிப்பாக ஓடும். அது அறுத்து உருவாக்கிய பள்ளம் இது. மேலிருந்து மானசீகமாக பறந்திறங்கி அதன்மேல் ஒழுகிச்செல்லலாம்.
அப்பகுதி ஜூனுக்குப் பின் பசும்புல்வெளியாக இருக்கும். நாங்கள் சென்றபோது பொன்னிறமாக புல் காய்ந்திருந்தது. விளிம்பில் நின்று சூரிய உதயத்தைப் பார்த்தோம். மலைப்பள்ளத்தின் கீழே ஆற்றங்கரையில் சிற்றூர்கள் உள்ளன. மேலிருந்து இயந்திரத்தால் இயக்கப்படும் கம்பிப்பாதை வழியாக பொருட்களை கீழே அனுப்புகிறார்கள்.
லைட்லம் மலையடுக்குகளில் எங்கள் பயணத்தை நிறைவுசெய்தோம். அங்கிருந்து நேரடியாக கௌஹாத்தி. நாங்கள் இரண்டு அணியாக கௌஹாத்தி செல்வதாக இருந்தோம். ராம்குமார் உட்பட ஐந்துபேர் ஷில்லாங்கில் இருந்து ஹெலிகாப்டரில் செல்வது. நானும் அரங்கசாமியும் காரில் செல்வது. காலை பத்துமணிக்கு கிளம்பவேண்டும். ஆனால் கார்கள் வந்தது 11 மணிக்கு. ஹெலிகாப்டரில் கிளம்பிவிட்டனர். நாங்கள் சாலை வழியாகச் சென்றோம்.
ஷில்லாங் கௌஹாத்தி சாலையில் மாபெரும் சாலைப்பணி நிகழ்கிறது. டாக்காவுடன் வடகிழக்கை இணைக்கும் வணிகச்சாலை. ஆகவே நூறு கிமீ தொலைவுதான் என்றாலும் சென்றடைய நான்குமணிநேரமாகும் (சாலை முழுமையானபின் ஒருமணிநேரம் போதும் என்கிறார்கள்)
வழியில் எங்கள் கார் நின்றுவிட்டது. எங்கள் விமானம் நான்குமணிக்கு. மூன்றுமணிக்கு விமானநிலையத்தில் இருக்கவேண்டும். ராம்குமாருக்கு போன் செய்தோம். அவர் மாற்று கார் ஏற்பாடு செய்தார். ஒரு வழியாக கடைசிக்கணத்தில் விமானநிலையம் வந்து சேர்ந்தோம். கடைசிநேர பரபரப்பு.
“இந்த பயணத்தில் மூன்று முறை கார் நின்னிடணும்னு பிராப்தம் இருக்கு சார்…அதான் இப்டி ஆயிருக்கு” என அண்மையில் அதிதீவிர வைணவராக ஆகிவிட்ட அரங்கசாமி சொன்னார்.
பெங்களூர் வந்து இறங்கியபோது மீண்டுமொரு கனவுப்பயணம் முடிந்த உணர்வு. உண்மையில் இந்த ஊர்களுக்குச் சென்று ஒருவாரம் அங்கேயே வாழ்ந்து மீண்டால்மொழிய அவற்றை ஓரளவேனும் அறியமுடியாதென்று தோன்றியது. நாங்கள் பார்த்துவந்தோம். உண்மையில் அங்கே வாழ்ந்து மீளவேண்டும்.
எவ்வளவு பெரிது இந்நிலம். இங்கே எவரேனும் வாழ்ந்து நிறைய முடியுமா என்ன?
(நிறைவு)
சிங்கநடை போட்டு சிங்கிள் டீ குடிக்க…
அருணச்சலபிரதேசம் கட்டுரைகள்