இந்திய நுண்கலைகளின் தரிசனம்- கடிதம்

இனிய ஜெ,

வணக்கம். நன்கு வளர்ச்சியடைந்த சமூகம் என்பதன் அளவுகோல் அந்தச் சமூகம் அதன் தொன்மங்களை, நுண்கலைகளை எப்படி வளர்த்தெடுத்தார்கள் மற்றும் அதனை எவ்வாறு போற்றிப்பாதுகாக்கிறார்கள் என்பதில் விளங்கும். அந்த வகையில், நம் தமிழ்ச்சூழலில் நாம் அனைவரும் ஏறத்தாழ மறந்து விட்ட, மெதுவாக மறைந்துகொண்டிருக்கும் நுண்கலைகளில் ஒன்றான ஆலயக்கலை மற்றும் அதன் வரலாறு பற்றி வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது அனைவரும் அறிந்து கொள்வதன் தேவை புலனாகிறது. ஆலயக்கலை பயிற்சி முகாமில் சிற்பங்களை அறிதல் படிநிலைகளில் சிற்பங்களின் வகைகள், முப்பரிமாண சிலைகள், புடைப்புச்சிற்பங்கள், கோஷ்ட அமைப்புகள், ஒற்றைக்கை மற்றும் இரட்டைக்கை முத்திரைகள்

(ஹஸ்தம்), நிற்கின்ற நிலை (ஸ்தானகம்), அமர்ந்த நிலை (ஆசனம்), கிடந்த நிலை (சயனம்) மற்றும் ஆலய விமானம், அதிஸ்டானம், குமுதம் மற்றும் பல்லவர்கள் காலத்து குடைவரை கோவில்கள், மாமல்லபுர சிற்பங்கள், சோழர்களின் தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம், சாளுக்கியர், விஜயநகர மற்றும் நாயக்கர் சிற்ப வேலைப்பாடுகள் என்று மிகுந்த கவனத்துடன் செறிவாக தொகுக்கப்பட்ட அறிதல் முறை.

சிற்பக்கலையில் புடைப்புச்சிற்பங்கள் மற்றும் முழு வடிவ சிலைகளில் காணப்படும் முத்திரைகள் எவ்வாறு நாடக்கலையின் அபிநயங்களுடன் இயைந்து உருவாகி வந்தன என்று ஆசிரியர் ஜெயக்குமார் விளக்கிய விதம் மிகவும் அற்புதமான தருணம்.

உதாரணத்தி்ற்கு அவர் எடுத்தாண்ட விளக்கங்கள். நாட்டியத்தில் சிவனை குறிக்க முக்கண்ணன், திரிசடையன் போன்ற அபிநயங்களும், விஷ்ணுவைக் குறிக்க சங்கு சக்கர அபிநயங்களும், கிருஷ்ணரைக்குறிக்க புல்லாங்குழல், மயில் பீலி போன்ற அபிநயங்களும் மேலும் சில நடன முத்திரைகளோடு முக பாவனைகளுடன் நடித்தும் காட்டினார். முத்தாய்ப்பாக மறைந்த புகழ்பெற்ற கதக் நடனக்கலைஞர் பிஜூ மகாராஜ் அவர்களின் நடன அசைவுகள் மற்றும் முத்திரைகளோடு தொடர்புபடுத்தி விளக்கியது பரவச அனுபவம்.

சித்திரம் வரையும்பொழுது எப்படி ஒரு ஓவியரின் தூரிகை நுட்பத்துடனும், நுணுக்கங்களுடன், நெளிவு சுழிவுகளுடனும் வண்ணங்கள் தீட்டுகிறதோ அதே நுட்பத்துடன் சிற்பங்களிலும் கீறல்கள், புள்ளிகள், வளைவுகள், புடைப்புகள் எவ்வாறு செதுக்கப்படுகின்றன என்று அற்புதமாக விளக்கினார்.

திருஞான சம்பந்தர் எழுதிய திருக்கயிலாய பதிகத்தில் வரும் “பரிய களிற்றை அரவு விழுங்கி” என்ற உவமையை மறைபொருளாக விளக்கும் பாடலின் காட்சி வடிவம் தஞ்சைப்பெரிய கோவிலில் சிற்பமாக உள்ளது.

தஞ்சைப்பெரிய கோவில் இராஜகோபுரத்தின் வாயிலில் அமைந்திருக்கும் துவாரபாலகர் சிலையின் காலடியில், பாம்பு யானையை விழுங்கும் புடைப்புச்சிற்பத்தில் யானையை விழுங்கும் பாம்பு யானையை விடப் பெரியதாகவும், துவாரபாலகர் பாம்பை விட பெரிய உருவத்திலும், அவரது இடதுகை முத்திரை தலைக்கு மேல் உயர்த்தி காட்டியபடி “இறைவன் என்னை விடவும் மிகப்பெரியவன்” என்பதை மறைபொருளாக உணர்த்துவதையும் ஆசிரியர் எளிமையாக விளக்கினார்.

இந்த மறைபொருள் விளக்கம், எங்களை எல்லாம் விட ஆசிரியர் ஜெயக்குமாரும், ஆசிரியரும் ஆசானுமாகிய தாங்களும் எவ்வளவு பெரியவர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்திய தருணம் அது.

சிற்பம், ஓவியம், நாட்டியம், நாடகம் இவற்றுடன் ஓதுவார்களின் தேவாரப்பாடல் இசையையும் ஆலயக்கலை தன்னுடன் இணைத்துக்கொண்டதின் மகத்துவம் உள்ளுணர்வில் பரவி நிற்கிறது.

ஆசிரியர் ஜெயக்குமாரின் செறிவான இசை ஞானம், பரந்து பட்ட ஆலயக்கலை நுண்ணுணர்வு, நடன அபிநயங்கள், முக பாவனைகள், கற்றல் விழைவு, கற்றுக்கொடுப்பதில் பேரானந்தம், தேர்ந்த நகைச்சுவை ரசனை என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன.

இந்த நல் வாய்ப்பினை உருவாக்கித்தந்த உங்களுக்கும் இதனை சீராக ஒருங்கிணைத்த அந்தியூர்மணி அண்ணாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மிக்க நன்றியுடன்.

அரசு, ஈரோடு.

முந்தைய கட்டுரைஇரு முகில்களின் கதை -கடிதம்
அடுத்த கட்டுரைஎழுத்தாளன், புனிதன், மனிதன் -கடிதங்கள்