திருப்பூந்துருத்தி -வெங்கி

பாலகுமாரன் தமிழ் விக்கி

அன்பின் ஜெ,

வணக்கங்களும் அன்பும்.

அண்மையில் ஊரிலிருந்து கல்லூரி நண்பன் ஒருவன் அழைத்திருந்தான் (கல்லூரிக் காலத்தில் எங்களின்பாலாவாசகர் குழுவில் இருந்தவன்). பேசி பல வருடங்களாகியிருந்தது. நெடுநேரம் பேசினோம். பேச்சு 90-களின் கல்லுரி வாழ்க்கையைத்தான் தொட்டுத் தொட்டு சுழன்று கொண்டிருந்தது. அவன் பேசி முடித்து வைத்துவிட்டான். என் மனம் முப்பது வருடங்கள் பின்னோக்கிய நினைவுகளில் மூழ்கிக் கிடந்தது. பாலாவின் நாவல்கள் ஒன்று மாற்றி ஒன்று நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. திருமங்கலம் நூலகத்தில்திருப்பூந்துருத்திபடித்த நினைவு மேலெழுந்து வந்தது

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை இளமறிவியல் படித்துக்கொண்டிருந்தபோது, ஒருமுறை மேட்டூர் அணைப்பகுதியில் இருக்கும் நண்பன் குருநாதனின் வீட்டிற்குசீதா கல்யாணஉற்சவத்திற்காக சென்று சில நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு குருநாதனுக்கு, உற்சாகமான, கர்நாடக இசை பயிலும் நெருங்கிய நண்பர்கள் வட்டம் ஒன்றிருந்தது. இரண்டு நாட்களில் அனைவரும் எனக்கும் நெருக்கமானார்கள். தோழி ஒருவருக்கு அப்போதுதான் திருமணமாகி அவர் கணவரும் எங்கள் குழாமில் ஐக்கியமாகியிருந்தார். அக்காலகட்டத்தில் எங்கள் அனைவரையும் ஒரே சரடில் இணைக்கும் மந்திரப் பெயர் ஒன்றிருந்தது – “பாலா“. பாலாவின் எழுத்தையும், அச்சமயத்தில் வெளியான அவரின் நாவல்களையும், தொடர்களையும் பற்றிப் பேசாமல் எங்கள் பின்னிரவு உரையாடல்கள் முடிந்ததில்லை (கல்லூரியிலும் நண்பர்களுடன் அதுபோல்தான்). 

கல்லூரி முடித்து வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்பி காத்திருந்த காலம். அப்போது மதுரை திருமங்கலத்தில் குடியிருந்தோம். காலை உணவு முடித்து, உசிலம்பட்டி சாலையிலிருந்த நூலகத்திற்கு சென்று, வாசிப்பின் பின், மதியத்திற்கு மேல் வீட்டிற்குத் திரும்புவதுதான் என் தினசரி வழக்கமாகி விட்டிருந்தது. நூலகத்தில் பெரிய டேபிளின் மீது கிடக்கும் வார, மாதப் பத்திரிகைகளையும், நாளிதழ்களையும் (ஒன்றிரண்டு கையெழுத்துப் பத்திரிகைகளும் கிடைக்கும்) ஒன்று விடாமல் புரட்டிக் கொண்டிருப்பேன். என் ஞாபகம் சரியென்றால், அப்போதுதான், . நடராஜன் ஆசிரியப் பொறுப்பில் மாதம் இருமுறை இடைநிலை இதழாக வெளிவந்து கொண்டிருந்தபுதிய பார்வைசஞ்சிகையில் பாலாவின்திருப்பூந்துருத்திதொடர் ஆரம்பித்திருந்தது. என்ன காரணத்தினாலோ, தொடர் மனதுக்கு மிக அண்மையாய் ஒட்டிக்கொண்டது. திருப்பூந்துருத்தியின் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

95 – ஓசூரில் முதல் வேலை கிடைத்து அங்கிருந்தபோது, நண்பன் செல்வம் என்னைப் பார்க்க, மேட்டூரிலிருந்து வந்திருந்தான். அப்போது காரப்பள்ளி அருகே செந்தில் நகரில், மஞ்சுஸ்ரீ மலர்ப் பண்ணையில் வேலை செய்த நான்கைந்து பேச்சிலர்கள் சேர்ந்து ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். மாலை தேநீர் நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது செல்வம்என்ன பாலா இப்படி மாறிட்டாரு?” என்றான் மிகுந்த வருத்தத்துடன். அப்போது பாலாவின் எழுத்து ஆன்மீகம் நோக்கி திரும்பியிருந்தது. “ஏன் மாறக்கூடாது?” என்றேன் நான் புன்னகையுடன். “எப்பவுமே காதலும், ஆண்பெண் உறவுச் சிக்கலும்தான் எழுதணுமா செல்வம்? மெர்க்குரிப் பூக்கள் பாலாவேதான் வேணுமா நமக்கு? அது ஒரு பயணம் இல்லையா?. அவர் மாற்றம் எனக்கொண்ணும் ஆச்சரியமா தெரியல. அது அவர் கண்டடைந்த வழி. அவரோட எழுத்து எல்லாமேபாதையிலஅவருக்குள்ள நடந்த தேடல்தானே? அந்த “Thought Process”-த்தானே அவர் நாவல்களா எழுதினார்? தேடித் தேடி இங்க வந்து சேர்ந்திருக்கார். அவர் எழுத்து எப்படி மாறிடுச்சுன்றது முக்கியமில்லை. நமக்கு அதுலருந்து என்ன கிடைச்சதுன்றதுதான் முக்கியம். இல்லையா செல்வம்?” என்றேன். திருமங்கலத்தில் வசித்தபோது, நானும் பள்ளி நண்பன் மூர்த்தியும், மார்கழி வைகறைகளில் திருப்பாவையும், திருவெம்பாவையும் படிக்க சாமிப் பாட்டி வீட்டிற்குச் செல்வோம். விடுமுறை நாட்களின் மதிய வேளைகளில், தேவி பாகவதமோ, பாரதமோ பாட்டிக்கு உரக்க வாசிப்போம். பாலாவின் பிந்தைய புத்தகங்கள் சிலவற்றையும் (கிருஷ்ணார்ஜுனன், பதினெண் நாயன்மார்களின் கதை உட்பட) பாட்டிக்கு உரக்க வாசித்தது பற்றி செல்வாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

திருப்பூந்துருத்தியின் கதை இப்படி ஆரம்பிக்கிறது… – 26 வயது மணியின் அப்பா வரதராஜனின் “ஸ்டியரிங் ராட்தயாரிக்கும் தொழிற்சாலையில் 840 பேர் வேலை செய்கிறார்கள். மணிக்கு மூன்று அண்ணன்கள். மணி உட்பட நான்கு மகன்களும் தொழிற்சாலையின் வெவ்வேறு பிரிவுகளை நிர்வகிக்கிறார்கள். மணி, விற்பனைப் பிரிவை பார்த்துக் கொள்கிறான்தினமும் வீட்டிலிருந்து தொழிற்சாலை செல்லும் நேரத்தில், காரில், 53 வயது டெஸ்பாட்ச் கிளெர்க் வாசுதேவனிடம் திவ்யப் பிரபந்தம் கற்றுக்கொள்கிறான்.

ஒருநாள் தொழிற்சாலை செல்லும் வழியில் கார் கவிழ்ந்து மோசமான விபத்துக்குள்ளாகிறது. மணி படுகாயமடைகிறான். விபத்து நடந்தபோது அச்சாலையில் காரில் வந்துகொண்டிருந்த வனிதா, மற்றவர்களுடன் சேர்ந்து விபத்துக்குள்ளான காரை நிமிர்த்தி மயங்கியிருந்த மணியை தன் காரில் கிடத்தி, வாசுதேவனையும் ஏற்றிக்கொண்டு விரைந்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கிறாள்.

வனிதாவிற்கு 36 வயது. கணவன் சரியில்லை. கணவனைப் பிரிந்து குழந்தையுடன் தனியே வசிக்கிறாள். பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை. வனிதாவிற்கு வாழ்க்கையில் எப்படியாவது கஷ்டப்பட்டு முன்னேறி நல்ல நிலைமையை அடைந்து விடவேண்டுமென்று ஆசை.

மருத்துவமனையில் மணிக்கும், மணியைப் பார்க்க வரும் அப்பா வரதராஜனுக்கும் ஒரே நேரத்தில் கடுமையான மாரடைப்பு வருகிறது. இருவரின் உயிரும் உடல் விட்டுப்பிரிகிறது.

இது நாவலின் துவக்கம் மட்டுமே. நாவல் பேச வந்த விஷயமே வேறு. நாவலில் பல கிளைக்கதைகள் இருக்கின்றன. அப்பாவின் மேல் கோபம் கொண்ட ஜெயவேலுவின் கதை, உணவின் மேல் பிரியம் கொண்ட 25 வயது கிருஷ்ணனின் கதை, உடைகளின் மேல் ஆசை கொண்ட இளைஞன் உத்ராபதியின் கதை, நல்ல மேம்பட்ட வசிப்பிடத்தின் மேல் பற்று கொண்ட 17 வயது ரங்கம்மாவின் கதை, எந்நேரமும் காமமே சிந்தையிலிருக்கும் 20 வயது பொப்பிலியின் கதை, கல் குவாரியில் வேலை செய்யும் கந்தசாமியின் கதை, காண்ட்ராக்டரின் மகன் திருஞான சம்பந்தம், அவன் மனைவி வசந்தாவின் கதைஎன பல கதைகள்நாவலில் எனக்குப் பிடித்திருந்தது இடையில் வரும் எண்ணத் தொடர்கள்

சலனமில்லாதது எப்படியெல்லாம் சலனப்பட்டிருக்கிறது, பார். இப்பொழுது உன் வேதனைகளெல்லாம் மிகப் பெரிய விளையாட்டு என்று தோன்றுகிறதல்லவா? நீ சந்தோஷம் என்று கொண்டவைகளெல்லாம் பெரிய அற்புதம் இல்லை என்று புரிகிறதல்லவா? சலனப்பட்டதுதான் நடந்திருக்கிறதே ஒழிய, இது சந்தோஷ சலனம்இது துக்க சலனம் என்றில்லை என்பது புரிகிறதா? இரண்டும் ஒன்றே என்று அறிய, சலனப்படாது இருப்பதே சிறப்பு என்பதை அறிகிறாயா? நீ சலனப்படாது இருப்பது தெரிந்துவிட்டால், சலனப்பட்டதன் அபத்தமும் புரியும். நீயே இந்த பிரபஞ்சம். நீயே இந்த பூமி. நீயே இங்குள்ள எல்லா உயிர்களும். உனக்கும்/எனக்கும், எறும்பிற்கும், கழுதைக்கும், புழுவிற்கும், மரத்திற்கும், மீனுக்கும், பறவைக்கும், பாம்பிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நீயே ஆண். நீயே பெண். நீயே எல்லாம். மண், நீர், காற்று, வெளி, நெருப்பு எல்லாம் நீயே.

தேடலின் பாதையில் எனைத் திருப்பிய அந்த விகசிப்பின் கண்ணீர்க் கணங்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். கிராமத்து வீட்டின் பூஜையறையில், ஒரு புரட்டாசி சனிக்கிழமையின் முன்னிரவில்பல்லாண்டுபாடும்போது விம்மிய பெரியப்பாவின் கண்ணீர், ஒரு மார்கழியின் வைகறையில் பூஜை முடித்தபின் டேப்ரிகார்டரில் ஒலிக்கவிட்டிருந்த கிஷோரி அமோன்கரின் குரல் கேட்டு அழ ஆரம்பித்த அம்முவின் கண்ணீர், ஓசூர் தளி ரோட்டில் உப்பனூர் ஏரிக்கருகில் அதீத ஆஸ்ரமத்தில், “மா ராஜிமொழிபெயர்த்த ஓஷோவின்பகவத் கீதைஒரு தரிசனம்மூன்றாம் பாகம் நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தபோது, மாலை தியானத்தில் கண்மூடி அமர்ந்திருந்த சாரதா அக்காவின் கன்னங்களில் வழிந்த கண்ணீர்

அன்பின் ஜெஇத்தேடல் தூய ஆனந்தத்தின்/பரவசத்தின் கண்ணீரைப் பின் தொடரும் தேடல்தானோ?

வெங்கி

திருப்பூந்துருத்தி” – பாலகுமாரன்

திருமகள் நிலையம்/விசா பப்ளிகேஷன்ஸ்

முந்தைய கட்டுரைபொலிவன, கலைவன – கடிதம்
அடுத்த கட்டுரைகுடந்தை சுந்தரேசனார்