சுக்கிரி குழுமம் 2020 ஆம் ஆண்டு உங்களின் உலக வாசகர்களால் தொடக்கப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு கதைகள் என விவாதித்தோம்.மாலை ஆறு மணிக்கு துவங்கிய விவாதம் எட்டு மணிக்கு பின்பும் தொடர்ந்ததால்.வாரம் ஒரு கதையை விவாதிப்பது என மாற்றியமைத்தோம்.
இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஜூம் சந்திப்பு துவங்குவதால் ஆஸ்திரேலியாவிலிருந்து கலந்து கொள்ளும் சகோதரி கலாதேவிக்கு மீட்டிங் முடிந்து படுக்கைக்கு செல்ல நள்ளிரவு ஆனது. அதனால் மாலை ஆறு மணிக்கு பதிலாக ஐந்து மணிக்கு என மாற்றியபோது அமெரிக்காவில் வாழும் நண்பர்கள் அழைப்பான் வைத்து எழுந்து அதிகாலை ஆறரை அல்லது அதற்கு முன்பே மீட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஐரோப்பிய நண்பர்களுக்கு மீட்டிங்குக்கு வர உகந்த நேரமாக இருந்தது. லண்டன் ராஜேசுக்கும் ஜெனீவாவில் வாழும் கணேஷ் பெரியசாமிக்கும் நண்பகல் வேளை கத்தார் பழனிவேல் ராஜாவுக்கும் உகந்த நேரம்தான் பணி இல்லாத நாளாக இருந்தால்.இப்படி பத்துக்கும் மேலான டைம் ஸோன்களிருந்து நண்பர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள். கப்பல் காரானுக்கு விடுறையில் வீட்டில் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
சுக்கிரி கதை விவாதம் மட்டுமல்லாமல் ஒரு நல்ல நட்பு வட்டத்தையும் உருவாக்கியுள்ளது.கடந்த மாதம் மெல்போர்னிலிருந்து இந்தியா வந்த கலாதேவியை சென்னையில் மது சம்பத், விஜயலட்சுமி, டாக்டர் முத்துகிருஷ்ணன், கமலநாதன், வைஜெயந்தி மாலா என சுக்கிரியன்ஸ் நேரில் சந்தித்தனர். கொரியாவின் சதீஷை மதுரையில் திருச்சி சரவணகுமார் மற்றும் மதுபாலா சந்தித்து சிறப்பித்தனர்.
மூன்றாண்டுகள் முடிந்து சுக்கிரி விவாத குழுமம் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்க போகிறது. கோவிட் காலத்தில் நிகழ்ந்த நன்மைகளில் சுக்கிரியும் ஒன்று. தமிழ் சூழலில் இலக்கிய ஆர்வம் இருந்து கதை ஒன்றை வாசிப்பவர் வெளியில் எங்கும் அது பற்றி ஒரு வார்த்தை பேசவோ, விவாதிக்கவோ ஒருவரை கண்டுபிடிப்பது அரிது.
அன்னிய தேசத்தில் ஏதோவொரு மூலையில் இலக்கியம் வாசித்த ஒருவருக்கு இணை மனங்களுடன் வாரத்தில் ஒருநாள் கூடி இரண்டு மணிநேரம் விவாதிக்க சுக்கிரி களம் அமைத்து கொடுத்தது. வாசித்ததில் தவறவிட்டதையும், ஒரே கதையை வேறொருவர் இன்னொரு கோணத்தில் வாசித்ததையும் இங்கே கண்டு கொண்டனர் இந்த கூட்டு விவாதத்திற்கு பின் வாசிப்பின் குறைகள் நீங்கி, எதை வாசிக்கவேண்டும் என தெளிவானதோடு மட்டுமில்லாமல் மிக நேர்த்தியாக குடும்பத்தை நிர்வகிக்க முடிகிறது என நடுவயதை நெருங்கும் பெண்கள் சொல்வது கண்டு வியப்புற்றேன்.
சுக்கிரியில் உள்ள சகோதரிகள் துவக்கத்தில் இயல்பான கூச்சம் காரணமாகவும், அன்னிய ஆண்கள் இருக்கும் கூட்டங்களில் பேசி பழக்கமில்லாததாலும் அமைதியாக கவனித்துகொண்டு இருந்ததார்கள். இக்குழுவின் கட்டுகோப்பு, பிறரை மதிக்கும் உயர்பண்புகளால் இப்போது தங்கள் வாசிப்பு அனுபவத்தை உரக்க பதிவு செய்கிறார்கள்.
கடந்த டிசம்பர் விஷ்ணுபுரம் விழாவில் லண்டன் ராஜேஷ் தலைமையில் தனிக்குழுவாக அமர்ந்திருந்த சுக்கிரியன்ஸ் சுக்கிரிக்காக மார்கெட்டிங் செய்ததில் திருநெல்வேலி, பெங்களூர் என வாசகர்கள் இணைந்தார்கள். அதில் நியுசிலாந்து நாட்டில் பணிபுரியும் தங்கவேலும் ஒருவர்.விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியவர் கடந்த வாரம் உங்களின் வெண்கடல் தொகுப்பின் விருது கதை விவாதத்தில் இணைந்தபோது அவருக்கு நேரம் நள்ளிரவு பன்னிரெண்டரை மணி அதிகாலை மூன்றரை மணி வரை நடந்த சந்திப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தனது வாசிப்பை பதிவு செய்தார். கேப்ரியல் எனும் புயல் தாக்கிய அவ்வூரில் சிறிதாய் நிலநடுக்கம் ஒன்றும் ஏற்பட்டிருந்தது சில தினங்களுக்கு முன்.
முதலில் உங்களது புனைவு களியாட்டு கதைகளை விவாத்தித்தோம் இரண்டாண்டுகளுக்கு மேலாகியது நூறு கதைகள் முடிய. பின்னர் அ முத்துலிங்கம் ஐயாவின் மகராஜாவின் ரயில் வண்டி சிறுகதை தொகுப்புக்குப்பின்,உங்கள் வெண்கடல் தொகுப்பை கடந்த சனிக்கிழமை விவாதித்து முடித்தோம்.
வரும் சனிக்கிழமை (18-02-2023) முதல் தமிழின் முதன்மை படைப்பாளியான புதுமைபித்தனின் கதைகளை விவாதிக்க துவங்குகிறோம்.தான் வாசித்ததை யாரிடம் பேசுவது என தெரியாமல் திக்கற்று நிற்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தங்களது வாசிப்பின் குறைபாட்டை களையவும், இணை மனங்களுடன் கூடி விவாதிக்கவும் சுக்கிரி களம் அமைத்து தருகிறது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம்.
தொடர்புக்கு,
கணேஷ் பெரியசாமி
+41 77 943 00 54
சந்தோஷ் +91 996 531 5137
சுக்கிரிக்காக,
ஷாகுல் ஹமீது .