ஒரு தெலுங்கு கவிதை

ஜெ.,

நல்ல கவிதை  என்றால் என்ன? குறிப்புணர்த்தி நிறுத்தி விடுதல், தேய் வழக்குகள் இல்லாமல் இருத்தல், மிகை உணர்ச்சிகளுக்கு செல்லாமல் இருத்தல்இதெல்லாம் கூடி வருதல் என்று நினைப்பேன். ஆனால், இந்த கவிதை அந்த வரைமுறைகளையெல்லாம் இல்லாமல்  செயகிறது. வெறும் நேரடி பேச்சு வழக்குகள் கொண்ட கவிதை இது. இதில் இருக்கும் உவமைகள் எதுவும் புதியவை அல்ல. மிக  பழையவை. அங்கங்கே மிகை உணர்ச்சிகளும்  உண்டு. இத்தனை இருந்தும் இது ஒரு நல்ல கவிதை ஆகி இருக்கிறது என்றே தோன்றுகிறது.  நேரடி பேச்சுபோல் இருக்கும் அந்த வெள்ளந்தி தனம்தான் இதன் பலம் என்று  படுகிறது. தெலுங்கில் எழுதப்பட்ட கவிதை இது. இரண்டு நாட்களாக  இங்கு இது வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. அதற்க்கு காரணம், இதை எழுதிய கவிஞர் பைரி இந்திராவின் இறப்பு. மூன்று ஆண்டுகள் கேன்சர் உடன் போராடி உயிர் துறந்தார். இந்த இரங்கல் செயதியை அறிவித்த தெலுங்கு பத்திரிகைகள் இந்த கவிதையையும் கொஞ்சமாக பிரசுரித்து இருந்தார்கள். எங்கள் பத்திரிக்கை கவிதையை பிச்சி போட்டு…  திரித்து வெளியிட்டாலும் எல்லோருக்கும் இந்த கவிதை பிடித்து இருந்தது.

இந்திரா கஜல் பாடலாசிரியர்.  ‘தக்காணி உருதுதெலுங்கு மொழிக்கு கொடுத்த கொடை இந்த கஜல். எத்தனையோ கவிஞர்கள் வெற்றிகாரமாக இதை நிகழ்த்தி இருக்கிறார்கள். பிரபல திரைப்பட பாடலாசிரியர், ஞான பீடம் பெற்றவரும்(விஸ்வம்பர என்ற நீள் கவிதைக்கு… 1988ல்) ஆன சி.நாராயணரெட்டி இதில் மிகவும் புகழ்பெற்றவர். அவரின் பாதிப்பினால் எத்தனையோ கஜல் கவிஞர்கள் வந்தார்கள். இந்திரா அவர்களில் ஒருவர். கம்மம் மாவட்டத்தில் உள்ள இல்லென்து இவருடைய சொந்த ஊர். ஹைதராபாதில் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். நான்கு கஜல் கவிதை தொகுதிகளை வெளியிட்டு உள்ளார்அவ்வாறு வெளியிட்ட முதல் பெண் கவிஞராகவும் அறியப்பட்டார். கஜல் என்பது இசை சார்ந்தது என்பதால்அதற்க்கென்று தனி சந்தம் உண்டு. அந்த கட்டுப்பாடுகள் உள்ளதால்அங்கு கவிதைக்கு சிறகுகள் கம்மி. அதனாலோ என்னவோஇந்திராவின் கஜலில் மெல்லுணர்ச்சிகள் மட்டுமே உள்ளன. இந்த கவிதையில் உள்ள துடுக்குத்தனம் இல்லை. ஆயிரம் ஆண்டு தெலுங்கு கவிதைகளில் இப்படி ஒன்றை நான் வாசித்ததே இல்லை…’ என்கிறார் தெலுங்கு கவிஞர், விமர்சகர் வாடரேவு சின வீர பத்ருடு. நான் முடிந்த வரையில் அந்த பேச்சு மொழி தன்மையை தமிழில் கொண்டுவர முயன்று இருக்கின்றேன். கவிதை தரை தட்டிவிடுமோ என்கிற பயம் கடைசிவரையில் இருந்துக்கொண்டே தான் இருந்தது

நான் செத்தால்
துணிக்கு பதிலாக
காகிதத்தை போர்த்திடுங்கள்
கவிதை எழுதிக்கொள்கிறேன்
ஒரு பேனாவும், மை பாட்டிலும்
பையில் வைய்யுங்கள்
மனதில் முள் தைத்தால் பாடலோ
காயப்பட்டால் கஜலோ
இதய பள்ளத்தாக்கிலிருந்து வழிந்தோடலாம்
செல்பேசியை மறக்கவேண்டாம்
போர் அடித்து செத்துவிடுவேன்
மஞ்சளும் குங்குமமும் அப்பிவிட்டு
பார்ப்பவர்களை அச்சமூட்டாதீர்கள்
எல்லோருக்கும் என்னை அடையாளம் தெரியட்டும்
மாலைகள் போட்டு மூடிவிடாதீர்கள்
எனக்கு அலர்ஜீ !
அந்த மலரிதழ்களை ஏதேனும்
நடைபாதைக்கு போடுங்கள்
புண்ணியவதீ, பாவவதீ என்றெல்லாம்
சொல்லவேண்டாம்
பிடிக்காது
பொருட்கள் எதுவும் தூக்கி எறியவேண்டாம்
கேட்பவர்களுக்கு கொடுங்கள்
பாண்டு வாசிக்கிறவர்களுக்கு
பழைய மெலோடிஸ் இசைக்க சொல்லுங்கள்
டான்ஸெல்லாம் போட்டு லேட் பண்ணவேண்டாம்
எல்லாம் நேரத்துக்கு  நடக்கட்டும்
செவ்வாயோ! சனியோ!
பாடைக்கு  கோழியை கட்டி இம்சிக்கவேண்டாம்
பள்ளிக்கூடத்துக்கு சொல்லி அனுப்புங்கள்
நான் வாழ்ந்த கணங்களை நினைத்து
அவர்கள் விடுமுறை அளித்துக்கொள்ளட்டும்
சுமைதாங்கி கல்மேல் இறக்கிவிட்டு
காது கிழியும்படி கூப்பிடாதீர்கள்
என்னை நினைப்பவர் யாரோ நன்றாக தெரியும்
காசுக்கு பிரச்சனை இல்லை
பக்கத்துக்கு கடையில் கணக்குண்டு
காரியம் வரைக்கும் இருங்கள்
திரும்ப திரும்ப சாகமாட்டேன் இல்லையா!
மண்போட்டு மூடாதீர்கள்
புள்  பூச்சென்றால் பயம்
எரியூட்டும்போது கவனம் தேவை
சுற்றியுள்ள செடிகொடிகள் கருகிவிடலாம்
சந்தன கட்டைகளுடன் எரிந்தணைவதைவிட
நினைவுகளில் வாசமாய் மலர்வது பெரிது எனக்கு
எல்லாம் முடித்த கையோடு
என் சிரிப்பும் கண்ணீரும் அவிந்துபோகும்
சிதைக்கு அருகில்
கவிதை அரங்கொன்று நிகழட்டும்
நானும் அருகில் இருந்தாற்போல் இருக்கும்
ஆசைதீர கவிதையை கேட்டதாகவும் இருக்கும்

அன்புடன்,

ராஜு 

முந்தைய கட்டுரைஇசைத்தமிழ் ஆவணம்
அடுத்த கட்டுரைசொ.முருகப்பா