காமம், உணவு, யோகம்- விளக்கம்

காமம், உணவு, யோகம்-3

காமம், உணவு, யோகம்-2

காமம், உணவு, யோகம் 1

அன்புள்ள ஜெ.

நண்பர் பாலசுப்ரமணியன் அவர்கள் கேட்ட கேள்வியும் அதையொட்டிய உங்களுடைய விரிவான பதிலும் முழுமையாக இருந்தது

யோகமரபில் இது சார்ந்து மேலும் சில புரிதல்கள் இருப்பதால் அவற்றையும் இணைத்து சொல்லிவிடலாம் என தோன்றியது

இந்த பதிலுக்காக மற்றுமொரு காரணம், நமது யோக முகாம்களில் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று இது  என்பதும் தான்.

உலகம் முழுவதும் இன்று எட்டு லட்சம் யோக ஆசிரியர்களும், இரண்டு லட்சம் யோக பள்ளிகள், நிறுவனங்களும் உள்ளனஆகவே இயல்பாக இரண்டு முக்கியமான கிளைகளாக யோகம் இன்று பிரிந்து பரவியிருக்கிறது.

முதலில் NON TRADITIONAL YOGA எனப்படும் ஒரு குறிப்பிட்ட உடல் அல்லது மன அவஸ்தையை போக்க கற்றுக்கொள்ளப்படும் பாடத்திட்டம்.   முதுகுவலி இருக்கும் ஒருவர் அல்லது மனக்கொந்தளிப்பு கொண்ட ஒருவர் முதலில் தனக்கு அப்படி ஒரு அவஸ்தை உள்ளது என்பதை கண்டறிவதும், பின்னர் அருகிலுள்ள ஒரு யோக மையத்தில் சென்று அதற்கான பயிற்சிகளை கற்று கொண்டு சிறிது நாட்கள் செய்து பார்ப்பதும். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதும், தான் இதன் முதன்மை நோக்கம்.

இன்று உலக அளவில் யோக பயிற்சி செய்பவர்களில் எண்பது விழுக்காடு இந்த முறையை சார்ந்தவர்கள் தான்இதன் இலகுவான அணுகுமுறையாலும் எங்கும் எளிதில் கிடைப்பதாலும், இது வெகுஜனத்திற்கான ஒன்றாக மாறியிருக்கிறது

இதிலிருக்கும் சவாலேஇதன் முழுமையற்ற தன்மை தான். உதாரணமாக முதுகுவலி உள்ள ஒருவர் இணையத்தில் கூட ஒரு யோக ஆசிரியரிடம் அதற்கான பயிற்சியை கற்றுக்கொள்ள முடியும். அவருடைய முதுகுவலிக்கு உண்மையில் காரணம் அவரது அழுத்தப்பட்ட உணர்ச்சிகளாக இருக்கலாம், அதை சரியாக நிர்வகிக்காமல் வெறுமனே ஆசன பயிற்சிகள் செய்வது தலைவலியை நீக்க மருந்து கடையில் வாங்கி போட்டுக்கொள்ளும் மாத்திரைக்கு சமம்.

ஆக, ஒரு நோய்க்கூற்றை அல்லது அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளாமல் செய்து பார்க்கப்படும் பயிற்சிகளாக இவை எஞ்சுகின்றன. அதிர்ஷ்டவசமாக இவ்வகை பயிற்சிகள் பலனளித்து விடுவதால். மேலும் மேலுமென இதற்கு வரவேற்பு அதிகரிக்கிறது

அடுத்ததாக வருகிறது மரபார்ந்த யோகம். TRADITINAL YOGA. இது மரபானது என்கிற காரணத்தாலேயே தனித்து இயங்காது, மேலும் சில மரபுகளை உள்ளிழுத்தும், மாற்று அறிவியலின் நிருபிக்கப்பட்ட நற்பண்புகளை தன் பாடதிட்டத்துடன் இணைத்தும், ஒரு மாபெரும் பயிற்சி திட்டத்தை உருவாக்கி வைத்துள்ளது

இதன் அடிப்படை என்பது ஆயுர்வேதத்தின் உடலியலும், தாந்த்ரீக மரபின் விஞ்ஞானமும், பக்தி மரபின் நம்பிக்கையும், ஸாங்கியத்தின் தத்துவமும் கொண்ட ஒரு முழுமையான பார்வையுடையது

உதாரணமாக தூக்கமின்மை எனும் பிரச்னையுடன் ஒருவர் மரபார்ந்த ஆயுர்வேத வைத்தியரை காணச்சென்றால், அந்த வைத்தியர், வந்தவரின் குல, நலன்கள், அன்றாடங்கள்மன அமைப்புகள் என சிலவற்றை விசாரித்துவிட்டு, வயிற்றை சுத்திகரிக்கக்கூடிய ஒரு அரிஷ்டத்தையோ, சூரணத்தையோ கொடுப்பார். நமக்கு இதில் மருத்துவத்தின் மேல் சற்று சந்தேகம் வரலாம். ஆனால் ஆயுர்வேதம் ஒரு மனிதனின் நோய் உருவாகும் காரணிகளில் முதன்மையானது என வயிற்றை தான் சுட்டுகிறதுஆகவே வயிற்றை முதலில் சுத்திகரித்து விட்டு பின்னர் மருத்துவம் தொடங்கும்.

மரபார்ந்த யோகமும் இவ்வகை நோக்கு கொண்டதே. அது மனிதனை மூன்று தோஷங்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து கோஷங்கள், இருபத்தைந்து குணங்கள் என ஒருமுழுமையான பார்வையை கொண்டு ஒரு பயிற்சியை அந்த முதுகுவலி நபருக்கு வழங்குகிறது

அந்த பயிற்சியில் குறைந்தது உடல், உடலியங்கியல், மனம் என்கிற மூன்று அடுக்குகளுக்காவது பயிற்சிகள் இருக்கும். ஒரு நாளில் அரைமணி நேரம் மட்டுமே பயிற்சிக்காக ஒதுக்கமுடியும் என்பவருக்கு கூட அந்த அரைமணி நேர பாட திட்டத்தில் இவை மூன்றும் இருக்கும்

மேலே சொல்லப்பட்ட இருநூறு வகையான யோக அமைப்புகள் இருந்தாலும், உலகளவில் நான்கு யோக கல்வி நிலைகள் மட்டுமேமுழுமையான கல்வியை மையமாக கொண்டு இயங்குகிறது.  

யோக பயிற்சிகளை தேர்ந்தெடுக்கக்கூடியவர்கள் முதலில் இந்த இரண்டு வகை பாடத்திட்டத்தில் தான் எதில் இருக்கிறார்? என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.அதன் பின்னர் தான் உணவு சார்ந்த தீவிர முடிவுகளுக்கு வரவே கூடும்

இருபத்தியோரு யோக உபநிஷத்துகளும், முக்கியமான யோக நூல்களும் சாதகனுடயை பயிற்சிகள், செல்லவேண்டிய தூரங்கள், வரும் இடையூறுகள், அடையவேண்டிய சிறு சிறு இலக்குகள் என தெளிவாக கூறுகின்றன, அவற்றில் உணவு சார்ந்த கட்டுப்பாடு என்பது பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்

பதினாறாம் நூற்றாண்டிற்கு பின்னர் தொகுக்கப்பட்ட நூல்களே இன்று யோகா குருமார்கள் அதிகமும் பயன்படுத்தும், சுட்டிக்காட்டும், நூல்களாக உள்ளது. அவற்றில் ஹட யோக பிரதீபிகை, சிவ சம்ஹிதை, கெஹரண்ட சம்ஹிதை, போன்ற நூல்கள் அதன் நூற்றுக்கணக்கான சூத்திரங்கள், சுலோகங்கள் வழியாக சாதகனை நோக்கி பேசுகிறதே தவிர, ஆச்சாரங்களில் சுருங்கி விடவில்லை

ஹடயோக பிரதீபிகையில்  சாதகன் தனிமையில் சென்று சாதகம் செய்யவேண்டும், அவன் அமைத்துக்கொள்ள வேண்டிய குடில் எப்படி இருக்க வேண்டும், மனிதர்களோடு கலக்கக்கூடாது, போன்ற சில கட்டுப்பாடுகளை முன்வைக்கிறது, அதே நூல்மித ஆஹாரம்எனும் பகுதியில் உணவு பற்றிய கட்டுப்பாடுகளை அதிகம் விதிக்காமல், முக்கியமாக அசைவம் தவிர்க்கப்பட வேண்டும் போன்ற நேரடி கூறுகள் எதையும் முன்வைக்கவில்லை. இது போன்ற நூல்களிலேயே கூட, சாதகனை நோக்கி ஒரு குரல் தீவிரமாக, பேசுவதும், சாமானியனை நோக்கிபடிப்படியாக வந்து சேர்என மென்மையாக பேசுவதும் காணக்கிடைக்கிறது

ஆகவே நாம் அசைவம், காபி, போன்ற உணவு சார்ந்த சந்தேகங்களுக்கு, பழமையான நூல்களை சார்ந்திருக்கையில், தீவிர  சாதகனா? சாமானியனா? என்பதில் ஒரு தெளிவுக்கு வந்தபின் அவற்றின் துணையுடன் உணவு கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதித்துக்கொள்ளலாம். நூல்களை அடுத்து நாம் குருமரபும், அதன் ஆசிரியர்களும் சொல்லும் சொல்லை செவிகொள்ளலாம்

சுவாமி சிவானந்தர் {ரிஷிகேஷ்} கடந்த நூற்றாண்டில் உலக யோக மரபுக்கு அளித்த கொடை சாதாரணமானதல்ல. இன்று உலகின் எந்த மூலையில் மரபார்ந்த யோக கல்வி நிறுவனம் இருந்தாலும் அதன் ஆசிரியர் அல்லது அவரின் ஆசிரியர் சிவானந்த மரபில் வந்தவராகவே இருப்பார். சுவாமி சிவானந்தர் அவரது காலத்தில் எட்டு முக்கியமான சீடர்களை உருவாக்கி உலகம் முழுவதும் அனுப்புகிறார்இன்று நாம் கேள்விப்படும் சாதனை படைத்த குருமார்கள், சுவாமி  சித்தானந்தர், சின்மயானந்தா அமைப்பு, பீகார் யோக பள்ளியின் சத்யானந்தர், ப்ரம்மானந்தர், கிருஷ்ணானந்தர், கோவை integral yoga சுவாமி சச்சிதானந்தர்   எனசரஸ்வதிமரபில் வந்தவர்கள் அனைவரும் சிவனந்தரின் சீடர்களே. நான் என்னை சிவானந்த மரபின் மாணவன் என்றே எங்கும் முன்வைப்பேன்.

சுவாமி சிவானந்தர் தஞ்சை மருத்துவ கல்லூரியில் நவீன மருத்துவம் படித்த, மருத்துவரும் ஆவார், அன்றைய மலேயாவில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்து, அதை விடுத்து முழுநேர துறவியாக மாறியவர். உணவு சார்ந்தும், ஆரோக்கியம் சார்ந்தும் நிறைய நூல்கள் எழுதியவர். எனினும் நாம் உணவு கட்டுப்பாட்டின் மூலம் சுய குற்றவுணர்வு கொள்ளுமளவுக்கு எங்கும் எழுதவில்லை. பண்ணிரண்டு வருடங்களாக இந்த குருநிலையில் கற்றவன் என்கிற அனுபவத்தில், உணவு சார்ந்த தீவிர நிலையை அங்கே வலியுறுத்துவதில்லை

ஒரு சுவாரசியமான சம்பவத்தை சுவாமி சச்சிதானந்தர் பதிவு செய்கிறார்.

சிவானந்தர் புகழின் உச்சியிலிருக்கிறார், அவரை கண்டு துறவறம் பூணவேண்டுமென  இளம் வயதில் ரிஷிகேசம் சென்று சந்திக்கிறார் சச்சிதானந்தர், இவருடைய வேட்டி சட்டை கோலத்தை பார்த்த சிவானந்தர்வாங்கோ வாங்கோமதராஸா?” என கேட்க இவருக்கு ஒரே உற்சாகம். அடிபணிகிறார். ”வாங்கோ காபி சாப்பிடலாம்” என சிவானந்தர் அழைக்க, வந்தவருக்கோ ஒரே அதிர்ச்சி, அதை சிவனந்தரிடம் வெளிப்படுத்துகிறார். ”நீங்கள் ஒரு மாபெரும் துறவி என நினைத்து உங்களிடம் துறவு பூண வந்தேன், நீங்கள் இவ்வளவு எளிமையாகவும், காபி அருந்திக்கொண்டும் இருக்கிறீர்களே?உங்களுடைய உணவு சார்ந்த நூல்களில் காபியை தவிர்ப்பது பற்றி எழுதியிருந்தீர்களே? என சிறு அதிர்ச்சியுடன் வினவ.

சிவானந்தர் வெடித்துச்சிரித்துஅதெல்லாம் அங்கே வாழக்கூடிய குடும்பஸ்தர்களுக்கு, நாம் துறவிகள் ஆனந்தமாக கொண்டாட்டமாக இருக்க பிறந்தவர்கள், ஆகவே  வாங்க காபி சாப்பிடலாம்என முடிக்கிறார்.

அதன்பின் சச்சிதானந்தர் உலகம் முழுவதும் யோக கலையை அறிமுகம் செய்த முதல் தலைமுறை துறவிகள் பட்டியலில் வருகிறார்.

இப்படி நமது முன் உள்ள குருமார்கள், அசைவம், காபி, தேநீர் சார்ந்து அதிபயங்கர சித்திரங்களை ஏற்படுத்தவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் இன்று நமக்கிருக்கும் சவால், ஆசிரியருடனான தொடர்பின்மை தான், கூட்டமாக சென்று தியானமோ, யோகமோ கற்கிறோம். அதன் பின் நமக்கு ஏற்படும் அனுபவங்களை சொல்ல, மேம்படுத்த, வழிகாட்ட, தடுத்து நிறுத்த, முதற்கட்ட ஆசிரியர் குழுமம் என ஒன்று நமக்கு அமைவதில்லை. ஆகவே கட்டணம் கட்டி பயின்றபின் நமது அனுபவங்களை அதிகபட்சம்கால்செண்டர்கள்தான் கேட்கின்றன. அவற்றால் நம்மை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது

ஆகவே நமக்கு கற்றுத்தரும் ஆசிரியரோடு குறைந்தபட்ச தொடர்பிலேனும் இல்லாத பட்சத்தில், உணவு, காமம், கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் மேலும் மேலும் குழப்பமே நிகழ்கிறது.

இறுதியாக, ஆரோக்கியம், நலம் சார்ந்த விஷயங்களில் ஆச்சாரத்தை போட்டுக்குழப்பிக்கொள்ள வேண்டாம், நல்ல ஆசிரியர்கள், வைத்தியர்கள் இதை திறம்பட கையாள்வதை கவனித்திருக்கிறேன். எனது உறவினர் தீவிர வைணவர், அவருடைய மகளுக்கு உடல்சோர்வு, மற்றும் தொடர்ந்து மெலிதல்  சார்ந்து அனைத்துவகை மருத்துவமும் பார்த்துவிட்டு இறுதியில்  ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அதுவும் பலனளிக்காத நிலையில், வைத்தியர் மிகத்துல்லியமாகசற்று மாமிசத்தால்” சரி செய்யவேண்டிய குறைபாடு இது என சொல்ல. என் உறவினர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லைவைத்தியர் பெரிதாக வற்புறுத்தாமல், அதே வேளையில் மாற்று மருந்து எனஅஜ மாம்ச ரசாயனம்’ எனும் ஒரு லேகியத்தை கொடுக்கிறார். மூன்று மாதத்தில் அந்த பெண் உடல் தேறுகிறார். வனப்பு கூடுகிறது. சோர்வு நீங்குகிறது

அந்த லேகியம் ஆட்டு இறைச்சியில் தயாரிக்கப்பட்டது என்பது அந்த பெண்ணின் அப்பாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது நன்றாகவே தெரிந்திருக்கலாம்

ஆகவே அசைவம் உண்ணுங்கள் என்று சொல்லவில்லை, ஆனால் அதற்காக சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டாம்.

உங்கள் ஆசிரியரிடம் தொடர்பிலிருங்கள். ஒரு தொலைபேசி, ஒரு சொல் , ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப முடியாத ஆசிரியரிடம், எந்த நம்பிக்கையில் நாம் மேற்கொண்டு பயணிக்க முடியும்

ஆரம்ப கட்ட சாதகனுக்கு எல்லா வகையிலும் ஆசிரியரின் தொடர்பும், ஸ்பரிசமும் தேவையாக உள்ளது, அதன் பின் அவன் ஆசிரியரை மானசீகமாக ஸ்பரிசித்துக்கொண்டே வாழ்நாள் முழுவதும் நடந்து கடந்து சென்றுவிட முடியும்

அன்புடன் 

சௌந்தர்.G

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு ஏன்?
அடுத்த கட்டுரைஆத்மாநாம்