எழுகதிர் நிலம்- 4

பனியில் எங்கள் பயணம் தொடங்கியது. செல்லச்செல்ல குளிர் கூடிக்கூடி வந்தது. சாலையோரப் புற்கள் எல்லாம் பருத்திப்பூ போல பனி ஏந்தியிருந்தன. என்னைப்போன்ற பழைய ஆட்களுக்கு ‘நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது ஹொஹொஹொ’ பாட்டுதான் நினைவுக்கு வருமென நினைக்கிறேன். சாலையோரங்களில் முதலில் துளிகளாக, பின்னர் மணிகளாக, பின்னர் நுரையாக பனி தெரிந்தபடியே வந்து இறுதியில் மொத்த காட்சியே பனியாலானதாக ஆகியது. கரியபாறைகள் கலந்த பனிப்பரப்பு எனக்கு டென்மார்க் பசுக்களின் உடல்போல தோன்றியது.

யாக்குகள் ஆங்காங்கே நிச்சிந்தையாக படுத்துக் கிடந்தன. அவற்றின் அடிப்பகுதியில் ரோமம் மிகுதி. கடினமான முள்போன்ற முடி அது. அதைக்கொண்டு கம்பிளி ஏதும் செய்வதில்லை. அந்த முடிமேல் அவை படுத்திருப்பதனால் உடலில் பனிவெப்பம் ஏறுவதில்லை. அவை எங்களைப்போலவே பனிச்சட்டையும், குல்லாவும் அணிந்தவைதான் என்று தோன்றியது. அவற்றின் துரதிருஷ்டம் ஆடைகளை அவற்றால் கழற்ற முடியாதென்பது. என்ன தின்கின்றன என்று பார்த்தேன். பனியை மூக்கால் கிழித்து அடியில் உறைந்த புல்லை தின்கின்றன. அந்த புல்லில் விதைகள் மிகுதி. பனி உருகியதும் முளைக்கவேண்டும். ஆகவே யாக்குகள் பெரும்பகுதி புல்விதைகளை, அதாவது தானியங்களையே தின்கின்றன.

பனியை நம்மைப்போன்ற வெப்பநில மனிதர்கள் கொண்டாடுவதை அங்குள்ளோர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என நான் எண்ணிப்பார்த்ததுண்டு.  அதை ஒருமுறை திருவண்ணாமலையில் கண்டேன். பவா செல்லத்துரையின் வாடகையில்லத்தில் ஃபின்லாந்தைச் சேர்ந்த ஒரு வெள்ளை இளைஞர் தங்கியிருந்தார். வெயில்பிரியர். திருவண்ணாமலை மொட்டை வெயிலில் மே மாதம் சைக்கிளில்  சுற்றிவருவார்.  ஆகா இன்ப நிலாவினிலே ஓகோ ஜெகமே ஆடிடுதேஎன பாடுவாரோ என்னமோ.

பனியில் நாங்கள் சினிமாக்களில் பலரும் செய்யும் ஒன்றை மட்டும் செய்யவில்லை. அதாவது பனியை உருட்டி ஒருவரோடொருவர் எறிந்து விளையாடவில்லை. ஏனென்றால் எங்கள் கற்பனாவாதக் கொண்டாட்டத்திற்கு அடியில் உடல் யதார்த்தவாதக் குளிரில் நடுநடுங்கிக்கொண்டுதான் இருந்தது. கையுறைகளுக்குள் விரல்களின் பூட்டுகளில் வலி. மூச்சு இழுப்பது குளிர்ந்த நீரை இழுத்து நெஞ்சுக்குள் நிறைப்பது போலிருந்தது. நுரையீரல் ஒரு குளிர்நீர் தோல்பை.

சாலையில் கிடந்த ஒரு பாறாங்கல்லை அணுகி என்ன வென்று பார்த்தேன். அது பனிப்பாளம். டைட்டானிக்கை கவிழ்த்த பனிப்பாளம் போல ஒரு சராசரி மாருதி காரை கவிழ்க்க வல்லது. அதை தூக்கமுடியுமா என பார்த்தேன், அசைக்க முடிந்தது. பனிப்பாறைகள் நீரில் மிதக்கின்றன. அவற்றுக்கு இவ்வளவு எடையும் கடினமும் உண்டு என இப்போதுதான் தெரிந்தது.

பனிமலைகளில் பனியாலான மரங்கள். அவற்றில் பனியாலான இலைகள். பனியாலான காற்று. பனியாலான ஒளி என்றும் தோன்றியது. மங்கலான திரவப்பரப்பினூடாக அனைத்தையும் பார்ப்பதுபோல் இருந்தது. காருக்கு வெளியே அவை வேறேதோ கிரகத்தின் விபரீத நிலக்காட்சி போல் மெல்ல ஒழுகி திரும்பி சென்றுகொண்டிருந்தன. உயரத்தால் காதும் அடைத்திருப்பதனால் ஓசைகளும் இல்லை. பனி என்பது ஒருவகை கொண்டாட்டம் என்னும் நிலையில் இருந்து மெல்ல மெல்ல அச்சமூட்டும் ஒன்றாக மாறிக்கொண்டிருந்தது.

சேலா பாஸ் என அழைக்கப்படும் மலைக்கணவாய் (திபெத்திய மொழியில் லா என்றால் கணவாய்) மேற்கு கமேனா மாவட்டங்களை தவாங் சமவெளியுடன் இணைக்கும் இந்த மலைக்கணவாய் ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக கழுதைப்பாதையாக இருந்து பிரிட்டிஷ்காரர்களால் சாலையாக்கப்பட்டது. இன்று மிக விரிந்த தேசியநெடும்பாதையாக உள்ளது.

இப்பகுதியின் சாலைகள் மற்ற இமையமலைச் சாலைகள் போல ஆண்டுமுழுக்க செப்பனிட்டப்படியே இருக்கவேண்டியவை. வழி நெடுக சாலைப்பணியாளர்கள் பனித்திரையில் மைக்கறையால் வரையப்பட்ட ஓவியங்கள் போல தெரிந்தனர். சாலையோரமாகவே குடிலமைத்து தங்கி சாலையில் விழும் மண்ணையும் கற்களையும் அள்ளி அகற்றினர். பனியை ஒவ்வொரு நாளும் அகற்றவேண்டும். அதற்கு பெரிய இயந்திரங்கள் உள்ளன. 

அரிதாகச் சில இடங்களில் சாலை பிய்ந்து விழுந்து மலையில் புண் போல தெரிந்தது. ஒன்றை கவனித்தேன். மலையைச் சுற்றி வரும் சாலையில் சன்னல் வழியாக தொலைதூர மலைச்சரிவுகளை பார்க்கையில் தெளிவாகத் தெரிந்தது. இமையமலையின் மலைச்சரிவுகளுக்கு முதன்மையான காரணமே சாலைகள் அமைப்பதுதான். சாலை மலையின் பல்லாயிரமாண்டு அமைவமைதியை அழித்துவிடுகிறது. ஒரு புண் அது. மலை அதை குணப்படுத்த முயல்கிறது. தன்னை மலை மறு அமைப்பு செய்துகொள்கிறது.

ஆனால் இந்த சாலையமைப்புப் பணியும் தவிர்க்கக்கூடுவது அல்ல. மலை தன்னைத்தானேன் சீரமைத்துக்கொள்ள இடமளித்தபடி அதைச் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். இச்சாலைகளே அருணாச்சலப்பிரதேசத்தின் குருதிநாளங்கள். இவையே அதை உயிருடன் வைத்திருக்கின்றன மற்றபகுதிகள் நம்மூர் மழைக்காடுகள் போல உயிர் ஓங்கிய பரப்புகள் அல்ல. ஆழ்தியானத்தில் ஆழ்ந்த பனிமலைகளின் அடுக்குவெளி அது

சேலாபாஸ் வரவேற்பு வளைவை வந்தடைந்தோம்.  13700 அடி உயரத்தில் அமைந்த இந்த கணவாய் நாங்கள் இமாச்சலப்பிரதேசத்திலும் ஸ்பிடியிலும் சென்ற பல மலைக்கணவாய்களை நினைவுபடுத்தியது. அதே பனிமலைச் சூழ்வு. அதே தனிமை. அத்தனிமையை கலைக்க பயணிகளின் கார்களால் இயல்வதில்லை.

சேலாபாஸ் உச்சியில் ஒரு காட்சிமேடை கட்டப்பட்டுள்ளது. துணைராணுவப் படையினர் நடத்தும் ஒரு சிறு தேநீரகமும் உள்ளது. முன்பு இதே போன்ற ரோட்டோங் லா கணவாயில் துணைராணுவப்படையினரின் தேநீரகத்தில் கணக்கில்லாமல் தேநீரும் மோமோவும் சுடச்சுட அளித்தனர். இங்கே சூடாக தேநீரும் சூப்பும் மட்டும்தான். விடுதி வாசலில் தெளிந்த நீர் தேங்கியிருந்தது. நீர் அல்ல, பனி என கால் வழுக்கியபின்னரே தெரிந்தது

சேலா பாஸ் உச்சியில் இருந்து பார்த்தால் ஆங்காங்கே கண்கூசும் ஒளியுடன் பனித் தகடுகளாகத் தெரிபவை ஏரிகள். இந்த பகுதியில் 101 ஏரிகள் உள்ளன. அவை பௌத்த மதத்தினருக்கு முக்கியமான புனிதநீர்நிலைகள். 101 ஏரிகளையும் சென்று வணங்கும் ஒரு தீர்த்தாடன முறையும் இங்குள்ளது. 

சேலா ஏரி அண்மையில் இருக்கிறது. சேலா கணவாய் மலையுச்சியில் உள்ளது. அதற்கப்பால் சரிந்திறங்கும் பாதையில் இருந்து பக்கவாட்டில் இறங்கிச் செல்லவேண்டும். உறைந்து கண்ணாடியாலான ஒரு மைதானமாக தெரிந்தது ஏரி. அதைச்சுற்றிய பாதையும், அதன் கைப்பிடிகளும் எல்லாமே பனி. 

நூற்றியொரு ஏரிகளில் நான்கை சாலையில் சென்றபடியே பார்த்தோம். எல்லாமே உறைந்து வெள்ளித்தாலங்களாக மாறியிருந்தன. அப்பரப்பை மலைமேல் இறங்கியபடி பார்த்தால் அது சற்று நீலமாக மாறியிருப்பதை காணலாம். அதனுள் நீரின் வண்ணவேறுபாடுகள். வானின் பிரதிபலிப்பு உருவாக்கும் நிழலாட்டங்கள். எதையோ எண்ணி தன்னுள் ஆழ்ந்திருக்கும் உள்ளம் ஒன்றின் பருவடிவம் போல. நீண்ட வளைந்த கோடென ஒன்று ஏரிப்பரப்பின்மேல் ஓடிச் சென்றது. அது அந்த ஏரி முதலில் உறைந்த வடிவத்தின் எல்லை. பின்னர் தீர்மானித்துக்கொண்டு மேலும் உறைந்துவிட்டிருக்கிறது.

உறைந்த ஏரியின்மேல் நடமாடும் பறவைகளும் உண்டு. ஆங்காங்கே அவை பனி மெலிதாக இருக்குமிடத்தை கண்டு அங்கே உடைத்து மீன்களை பிடித்தன. ஓயாமல் தங்களுக்குள் பேசிக்கொண்டன. ‘இந்த ஆண்டு பனி கொஞ்சம் கூடுதல்’ என்ற வழக்கமான பேச்சைத்தான் பேசிக்கொண்டிருக்கும் போலும்.

மதியம் கடந்ததும் ஜங் அருவியை  சென்றடைந்தோம்.  நியூராங் அருவி என்றும் இது அழைக்கப்படுகிறது. சேலாபாஸ் மலைச்சரிவில் பனியுருகி வரும் நீர் நீயூராங் ஆறாக மாறி வந்து இங்கே செங்குத்தான பாறை விளிம்பில் இருந்து கீழே கொட்டி ஓடிச் சென்று  தவாங் ஆற்றில் கலக்கிறது.

இந்த ஆறு, அருவி பற்றி ஒரு கதை உள்ளூரில் புழக்கத்திலுள்ளது. 1962ல் இந்திய சீன போரில் சீனர்களால் கொல்லப்பட்டவர் ஜஸ்வந்த் சிங் ராவத் என்னும் ராஜஸ்தானிய வீரர். நான்காவது கர்வாலி ரைஃபிள் படையைச் சேர்ந்தவர். 1962 நவம்பரில் சீன ராணுவம் அருணாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைந்தபோது ஜஸ்வந்த் சிங் தன் தோழர்களான திரிலோக் சிங் நெகி, கோபால் சிங் குசேன் ஆகியோருடன் சீன படைக்குள் ஊடுருவிச் சென்று இந்தியர்களை சுட்டுக்கொண்டிருந்த ஓர் இயந்திரத் துப்பாக்கியை அணுகி, ஐந்து சீனர்களை தாக்கிக் கொன்று அதை செயலிழக்கச் செய்தார். திரும்பும் வழியில் தோழர்கள் உயிரிழந்தனர். ராவத் கடுமையான காயங்களுடன் திரும்பி வந்தார்.

அந்தப்போரில் இந்தியப் படையினர் 300 சீன வீரர்களை கொன்றனர், இந்தியப்படையில் இரண்டு இழப்புகளே இருந்தன என்றும்; அருணாசலப்பிரதேசத்தில் சீனர்களின் ஊடுருவல் நின்றுவிட அந்த போரே காரணமாகியது என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியான தாக்குதல்கள் பல மாதங்கள் நீடித்தன. எண்ணிக்கை குறைவாக இருந்த இந்திய படை சேலா பாஸ் நோக்கி பின் வாங்கியபோது ராவத் மட்டும் அங்கே பனிமலைமேல் தனியாக தங்கியிருந்தார். 72 மணி நேரம் அவர் சீனப்படைகளை தாக்கி முன்னேற விடாமல் நிறுத்தினார்.

மீண்டும் உணவு, ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட கர்வாலி படை சேலா பாஸில் இருந்து திரும்பி வந்து சீனப்படைகளை தாக்கியது. சீனர்கள் பும்லா பாஸுக்கு பின்னால் துரத்தப்பட்டனர். தவாங் மீட்கப்பட்டு இன்றும் இந்தியாவுடன் நீடிக்கிறது– சீனா அப்பகுதிக்கு இன்றும் உரிமை கொண்டாடுகிறது.

ராவத் அங்கே 72 மணிநேரம் தனியாகப் போரிட்டபோது அவருக்கு சேலா, நூரா என்னும் இரண்டு அருணாச்சல் பிரதேசத்து மோன்பா இனப்பெண்கள் உதவியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு உள்ளூர் கடைக்காரர் அளித்த உளவுச்செய்தியால் சீனர்கள் மலைமேல் ஒரே ஒருவர் மட்டுமே இருப்பதை அறிந்து திரளாக மலை ஏறி வந்தனர். ராவத் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். போருக்குப்பின் அவருடைய துண்டுபட்ட தலையை சீன படைத்தலைவர் இந்திய படையினரிடம் அளித்தார்.

ராவத் போரிட்ட அம்மலையுச்சியில் அவருக்காக ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. சே லா பாஸ், நூரா அருவி இரண்டும் அந்த அருணாச்சல பிரதேசப்பெண்களின் பெயரால் பின்னர் ராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டன.

ராவத்துக்கு பின்னர் இந்திய அரசு அளிக்கும் மிக உயர்ந்த ராணுவ விருதான பரம்வீர் சக்ரா அளிக்கப்பட்டது. அவர் சாகவில்லை, ஓய்வுபெறவுமில்லை என உருவகம் செய்யப்பட்டு அவருக்கு இன்று வரை பதவி உயர்வும், அவர் குடும்பத்திற்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. அவருடைய வாழ்க்கையை பற்றி 72 Hours: Martyr Who Never Died என்ற திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

ஜங் அருவியின் கரையில் ஒரு சிறிய நீர்மின்சார நிலையம் உள்ளது. அதிலிருந்து வெளியாகும் நீர் பெரும் இரைச்சலுடன் கொட்டிக்கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் முடிந்தபின் மழைக்காலத்தில் அருவியில் நிறைய நீர் கொட்டும். நாங்கள் செல்லும்போது பனியுருகிய நீர் மட்டுமே கொட்டிக்கொண்டிருந்தது.

மிக அமைதியான இடம். நாங்கள் அங்கே செல்லும்போது எங்களைத் தவிர எவருமில்லை. மது குடிக்க வந்த நான்கு இளைஞர்கள் வந்து அமர்ந்து அவசரமாகக் குடித்து அப்படியே எழுந்து சென்றனர். அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் அருவியை பார்த்திருக்கவேண்டியதில்லை. குடித்த குடிக்கு கொஞ்சம் சலம்பியிருக்கலாம்.

அந்தியாகிக் கொண்டிருந்தது. அருவி ஒரு நீர்க்கடிகாரம் போல விழுந்துகொண்டிருந்தது. கடிகாரத்தின் முட்கள் காலம் காட்டவில்லை. வெள்ளிச்சிதறல். அருகே உடைந்து விழுந்து கிடந்த பாறை ஒன்று வெள்ளிப்பரப்புபோல ஜிப்சத்தை காட்டியது. பார்க்கவேபடாத அருவியில் காலம் உண்டா என்ன?

மலையின்மேல் ஓரிடத்தில் ஒரு சிற்றருவியைப் பார்த்தோம். உறைந்து கண்ணாடிப்படிகமென நின்றிருந்தது. அதனடியில் நிற்கையில் ஓரு படிமரத்தின் நிழலில் நின்றிருக்கும் உணர்வை அடைந்தேன். என் உளச்சித்திரம் ஓடும் நீரில் காலம் உள்ளது, உறைந்த பனி காலமற்றது என்பது. நீர் என்பது நினைவு. பனி என்பது கனவு. ஆனால் அவ்வாறல்ல என்று ஜாங் அருவி சொன்னது. அதுவும் காலமற்றதே என்று அங்கே தோன்றியது

பழைய நீர்க்கடிகாரங்கள் மேலிருக்கும் குடுவையில் இருந்து கீழிருக்கும் குடுவைக்கு நீரை சொட்டிக்கொண்டிருக்கும். நீர்விழும் அந்த கணமே க்ஷணம் எனக்கப்பட்டது. அக்குடுவையே நாழி அல்லது நாழிகை. ஒரு நாழிகை நேரமென்பது ஏறத்தாழ நாற்பது நிமிடம். அந்த நீர் உறைந்துவிட்டால் காலம் என்ன ஆவது? அந்த நீர் இந்த அருவிபோல முடிவிலாதது எனில் அதுவும் காலமின்மை அல்லவா?

இப்படி ஊர் பேர் தெரியாத இடத்தில் நின்றுகொண்டு, முன்பு கண்டிராத, ஒருவேளை இனியொருபோதும் காண வாய்ப்பில்லாத ஓர் அருவியை பார்த்துக்கொண்டு, பித்துக்குளித்தனமாக யோசித்துக் கொண்டிருப்பது ஓர் உயர்ந்த நிலைதான். இந்த சுதந்திரத்தை நான் அறிந்திருக்கிறேன். பெரிதாக அர்த்த ஒழுங்கு அமையாத சொற்பெருக்குகள் நம் அகத்தை களிப்புறச் செய்கின்றன. கடிவாளம் கழற்றப்பட்ட குதிரைக்குட்டி என துள்ளிக்குதிக்கச் செய்கின்றன.

நம் எண்ணங்களின் ஒழுங்கு என்பது புறவுலகின் ஒழுங்கேதான். பழகிய புறவுலகம் பழகிய தடத்தை சிந்தனைக்கும் அளிக்கிறது. நதிநீருக்கு கரைகள் அளிக்கும் பாதை போல. புதியநிலம் சிந்தனையை தன்னிச்சையாக நடைகொள்ள விடுகிறது. அமைதியான அசட்டையான நடை அது. எப்போதெல்லாம் நாம் சற்றுச் சலித்தவர்களாக, எதையும் குறிப்பிட்டு சிந்திக்காதவர்களாக, அசமஞ்சத்தனமாக இருக்கிறோமோ அப்போதுதான் நம் அகம் விடுதலை கொண்டிருக்கிறது.  

பின்னர் எண்ணிப்பார்க்கையில் அந்தப் பொழுதுகளில்தான் ஆழ்ந்து எங்கோ சென்றிருக்கிறோமென உணர்கிறோம். அந்நிலங்களைத்தான் நினைவில்கொண்டிருக்கிறோம் என அறிகிறோம். பயணம் அதன்பொருட்டே.

மாலை மங்கிக்கொண்டிருந்த நான்கரை மணிப்பொழுதில் தவாங் சமவெளியை வந்தடைந்தோம். தவாங்குக்கு வரவேற்கும் வளைவை கண்டதும்தான் அதுவரை ஒரு பிரம்மாண்டமான சுழல்பாதையில் சுற்றிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். 

(மேலும்)

முந்தைய கட்டுரைசரோஜா ராமமூர்த்தி
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம் – வெண்முரசு கூடுகை