ஆலயக்கலை வகுப்பு, கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு. வணக்கம்.

இந்தியா மற்றும் நேபாளத்தில் ஓரளவுக்கு கணிசமான கோயில்கள் பார்த்துவிட்டருந்தாலும் , இன்னும் சரியாக பார்கவில்லையோ என்றே ஒவ்வோரு முறையும் தோன்றும் எனக்கு. இந்த மனநிலையோடுதான் வந்தேன்ஆலயக் கலை அறியஎன்ற கூடுகைக்கு. உங்களை காண இயலாது என்பது வேறு கூடுதல் கவலையாக இருந்தது.

கோயில் என்பது ஒரு கட்டிடமோ அல்லது நிலையான ஜடப்பொருளோ அல்ல என ஆரம்பித்தார் ஆசிரியர் திரு. ஜெயக்குமார். காலம், அரசியல், வரலாறு, பூகோள அமைப்பு, கட்டிடக்கலை,நாடகம் மற்றும் நடனக் கலை, இலக்கியம், இசை, ஓவியம்,கலாச்சாரம், பண்பாடு, சமூகப், பொருளாதாரம், பல தரப்பட்ட தத்துவங்கள், அதனுள் கிளைத்த மரபுகள் வழிபாட்டு முறைகள், பூஜைகள், ஆன்மீக விளக்கங்கள், சிற்பக்கலை, தொன்மங்கள் மற்றும் இதிகாசங்கள் என் இத்தனையும்  ஊடுபாவுகளாக கொண்டு நெய்யப்பட்ட ஒருமஹாபுருச அமைப்புஎன்று சொன்ன போது , என்னுள் அத்தனை செல்களும்  விழித்துக் கொண்டது, நாம் இருப்பது ஜெயமோகனின் குருகுலத்தில் என்று.

கோபுரம் என்ற சொல்லின் பரிணாமத்திலிருந்து ஆரம்பித்து குடைவரை கோயில்கள், மோனோலித்கள், பிற்கால கற்றளிகள் வரை விளக்கினார்.

வஸ்துவையும் வாஸ்துவையும் ஒப்பிட்டு, காலத்தை தாளத்தால் உருவகப்படுத்தியதுதான் வாஸ்து என்றார்.

நடராஜர் புத்தர் இரண்டுமே தியானநிலைகள் தான் என்ற போது துணுக்கென்றது. இந்த கூற்று எங்கள் முன் போடப்பட்ட பந்து, அவர் சொல்லிக் கொடுத்த விதிகளின்படி விளையாடும் போது தான் புரியும் எனக்கு. Static and dynamic both are ending in one result as ” Meditation” .

உருவ வகைகள், உருவ வழிபாடு, ஆகமங்கள், தந்த்ரம், மந்த்ரம், எந்த்ரம் என விரிவாகி கொண்டே சென்றது. ஆசிரியரின் தமிழ் புலமை, இசை ஞானம், நடன மற்றும் நாட்டிய புலமை, தொல்லியல் மற்றும் கல்வெட்டுகள் செப்பேடுகள் பற்றிய விளக்கங்கள்  என அவர் வகுத்த வியூகம் இதுவரை நான் கண்ட அத்தனை இந்திய கோயில்களையும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிட்டது. ஒரு ஆலயத்தை  எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்பதைவிட , ஏன் இப்படியெல்லாம் பார்க்க வேண்டும் எனத் தெளிவாக்கினார்.

முதல் நாளிலேயே இவ்வளவு நடந்தது. ஒட்டு மொத்தத்தில்ஜெயமோகன்என்ற ஒரு மைய விசை என்னைப் போன்ற எத்தனையோ பேருக்குள் சுழல ஆரம்பிதுள்ளது . உங்கள் கதைகள், உரைகள் என்பதை தாண்டி நீங்கள் அனுப்பும் அத்தனை அஸ்திரங்களும் தாங்கள் இட்ட பணியை செவ்வனே நிகழ்த்துகின்றன என்பதற்கு வந்திருந்த நண்பர்கள் ஆசிரியர் இரண்டாம் நாள் பிற்பாதியில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விதமே சாட்சி.

நித்யவனத்தில் ஒரு *அறச்சக்கரம் * சுழலுவதாகவே உணர்கிறேன்.

எல்லையில்லா நன்றியுடன்

சு. செல்வக்குமார்

மதுரை.

முந்தைய கட்டுரைஇனி நான் உறங்கட்டும், வெங்கி
அடுத்த கட்டுரைமீள்கை, கடிதம்