எழுகதிர் நிலம்- 3

அருணாச்சலபிரதேசத்தை நாங்கள் பார்த்ததெல்லாம் தவாங் சமவெளி வரையிலான சாலையில்தான். உண்மையில் அச்சாலையில்தான் அந்த மாநிலமே உள்ளது. கீழே சமவெளியில் இதாநகரில் அதன் தலைநகர். ஆனால் அது புவியியல்ரீதியாக அருணாசலப்பிரதேசம் அல்ல. இதற்கப்பால் அருணாசலப்பிரதேசத்தைப் பார்க்கவேண்டும் என்றால் மலைச்சிற்றூர்களில் ஒருசில நாட்கள் தொடர்ச்சியாகத் தங்கும்படிச் செல்லவேண்டும்.

முந்தையநாள் எங்கள் ஸைலோ காரில் ஏதோ பழுது. இயந்திரம் சூடாவதை வெப்பமானி காட்டிக்கொண்டிருந்தது. அதை இரவோடு எங்கேயோ கொண்டுசென்று சீரமைத்து வந்தார் ஓட்டுநர். ஆனாலும் முழுக்கச் சரியாகவில்லை. அதே சிவப்பு எச்சரிக்கை வந்துகொண்டேதான் இருந்தது.

டிராங் என்னும் ஊரை வந்தடைந்தோம். மேலேறுந்தோறும் குளிர் ஏறி ஏறி வந்தது. கிருஷ்ணன் வழக்கம்போல குளிராடைகள் போதுமான அளவு கொண்டுவரவில்லை. யாரோ கொடுத்த குளிர் உள்ளாடை ஒன்றும் ஒரு மழைக்கோட்டும் கொண்டுவந்திருந்தார். கேட்டதற்கு தன் ஆரோக்கியநிலைக்கு அதுவே போதும் என்றார். ஆகவே நான் முதல்நாள் ஒன்றும் சொல்லவில்லை. தெம்பாங் கிராமத்தில் அவர் மழைக்கோட்டு அணிந்திருந்தார். பணிந்து கூனி குறுகி நடுநடுங்கி வேறொருவராக இருந்தார். ஆனாலும் அவரே கேட்பது வரை எந்த ஆடையையும் அளிக்கவேண்டாம் என இருந்தேன்.

டிராங் கிருஷ்ணனை வீழ்த்தியது. நான் அவருக்கு என்னிடமிருந்த குளிர்ச்சட்டையை அளித்துவிட்டு, என்னிடமிருந்த இன்னொரு குளிர்ச்சட்டையை அணிந்துகொண்டேன். அது நான் அண்மையில் ஸ்வீடன் சென்றபோது வாங்கியது. எடைமிக்கது. குளிரை அற்புதமாக தாங்கியது, அதாவது குளிர் நடுநடுங்கியபடி தாங்கிக்கொள்ளும்படி இருந்தது.

இருபத்தைந்து கிமீ தொலைவில் உள்ள மண்டா-லா (மண்டலா) என்று அழைக்கப்படும் இடம் எங்கள் இலக்கிடங்களில் ஒன்றாக இருந்தது. நாங்களே இணையத்தில் தேடிக்கண்டடைந்தது. அது ஓர் மலைக்கணவாய். நெடுங்காலம் அதை மேய்ச்சல்மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். சுற்றுலாப்பயணிகள் அங்கே செல்வது அனேகமாக இல்லை. அண்மையில் அங்கே மண்டலா என்னும் பௌத்தமையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னமும் பணி முடியவில்லை.

மண்டலா மணிமுடிக்கு நாங்கள் இரண்டு உள்ளூர் கார்களில் மேலேறிச் சென்றோம். எங்கள் ஓட்டுநர் ஸைலோ காரை உள்ளூரில் பழுது நீக்கக் கொண்டுசெல்வதாகச் சொன்னார்.

மேலேறிச் செல்லுந்தோறும் குளிர் கூடிக்கூடி வந்தது. சாலையோரம்  புல் கடும்கோடையில் என கருகியிருந்தது. பின்னர் புல்மேல் வெண்பனிப்பூச்சை காணத்தொடங்கினோம். புல்நுனிகள் தீட்டப்பட்டு சவரத்தகட்டின் கூர்கொண்டுவிட்டதைப் போல. பின்னர் புல்லே பனியாலனாதாக் ஆகியது. பனிப்புல்சிற்பங்கள். பனிமரச்சிற்பங்க்கள். பனிமரச்சிற்பங்கலான காடு.

மண்டலாவில் ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. பல கடைகள் பூட்டியிருந்தன. ‘சீசன்’ காலகட்டத்தில் அந்த இடம் மிகப்பரபரப்பாக இருக்கும் போலிருக்கிறது. டீக்கடையில் கரடிகள்போல இமாலயநாய்கள். அடர்ந்த முடிகொண்டவை, லாப்ரடார் என தோன்றியது.  சந்திரசேகர் ‘ஆ, நாக்போ’ என்று கூவினார். (வெள்ளிநிலம்) ஆனால் நாக்போ போல இவை லாப்ரடார் அல்ல, முன்பு வெள்ளையர் இங்கே கொண்டுவந்த ரெட்ரீவர் வகை நாய்களின் வழித்தோன்றல்கள். பனியிலேயே யாக் போல இவையும் மந்தமாக படுத்துக் கிடந்தன. டீக்கடையில் கணப்புதான் அடுப்பு. அதைச்சுற்றி அமர்ந்து வெம்மையை உணர்ந்தபடி டீ குடிக்கலாம்.

மண்டலா என்பது நூற்றெட்டு சிறு கோபுரங்களால் ஆன ஒரு பெரிய வட்டம். ஒவ்வொன்றிலும் கெலுக் திபெத்திய பௌத்தத்தின் மங்கலச் சின்னங்களும், மதச்சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. ஓம் மணிபத்மே ஹம் என்னும் வஜ்ராயன பௌத்தத்தின் மந்திரம் அவற்றில் திபெத்திய எழுத்துக்களால் அமைந்திருந்தது. ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த வட்டங்களின் நடுவே மையத்தூபம். அது இன்னும் முடிவடையவில்லை.

மண்டலாவை பௌத்த மந்திரம் சொன்னபடிச் சுற்றிவந்தோம். அங்கே ஆக்ஸிஜன் மிகக்குறைவு. மூச்சுவாங்க நின்றபோது மத தத்துவம் பற்றிய பேச்சு வந்தது. அப்படியே வெவ்வேறு கருத்துக்கள் கனவுகள் என பேச்சு நீண்டது. அங்கே ஓர் உறுதிமொழி எடுத்தோம். ஒரு பெரும் செயல்திட்டம். ஐந்தாண்டுகளில் அதை முடித்து மீண்டும் அங்கே செல்வதென முடிவுசெய்தோம். அது என்ன திட்டம் என இப்போது சொல்லப்போவதில்லை.

மண்டலா அருகே ஒரு மேடையும் திறந்தவெளி அரங்கும் இருந்தன. அண்மையில் அங்கே விழா ஏதோ நடைபெற்றிருந்தது. தோரணங்கள் பனியில் உறைந்திருந்தன. அவற்றின் விளிம்பில் வெண்பனி மொட்டுக்கள் பளிங்கு மணிகள் போல தொங்கின. பனியே தோரணத்தை வெள்ளிச் சரிகைபோல விளிம்பு கட்டியிருந்தது. ஒரு அருணாச்சல் பிரதேசக் குடும்பம்  பிக்னிக் வந்திருந்தது. சமைத்த உணவுகளை கொண்டுவந்து திறந்தவெளியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். குளிர் பூஜ்யத்திற்கு ஒரு பாகை கீழே.

பனியில் அங்கே சுற்றிவந்தோம். அருணச்சலில் நாங்கள் பார்க்கும் முதல் பனிப்பொழிவு அது. மெல்லிய துகள்களாக பனி கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் பொருக்குகளாக படிந்து, உடனே உருகி, மீண்டும் பனியாகியது. நாய்களின் மயிர் முனைகளில் பனிப்பொருக்குகள். கையுறைக்குள் விரல்கள் சொடுக்கிக்கொள்ளும் அளவுக்கு குளிர்.

சாங்டி (Sangti) மடாலயத்திற்குச் சென்றோம். சாங்டி ஆற்றங்கரையில் இருப்பதனால் அப்பெயர். இது முன்னரே இருந்த சிறிய வழிபாட்டிடம். 1959ல் தலாய் லாமா இங்கே தப்பி வந்தபின்னர் விரிவாக்கிக் கட்டப்பட்டது. திபெத்திய மடாலயங்களுக்குரிய ஆழ்சிவப்பு முகப்பு. மஞ்சள் கொடிகள். கோபுரமற்ற கட்டிட அமைப்பு. 

உள்ளே மையமாக அமிதாப புத்தர்.  அருகே யோகினியுடன் அமர்ந்த வஜ்ராயுத புத்தர். இன்னொரு பக்கம் புத்த மைத்ரேயர். பொன்பூசப்பட்ட சிலைகள். அவற்றின் நிமிர்வும் தியானமும். ஆழ்ந்த குளிர் கொண்ட அமைதி. அங்கே குரலெழுப்பிப் பேசவே தோன்றுவதில்லை. ஆனால் அது எல்லாருக்குமல்ல. அங்கு வந்தும் சளசளவென பேசித்தள்ளும் பெண்களை, கேலியும் கிண்டலுமாக கூச்சலிடும் இளைஞர்களை பார்த்திருக்கிறேன். குறியீடுகள் கலை வழியாக தொடர்புகொள்பவை. கலை அவற்றை காண மறுப்பவர்கள் முன் ஊமையாகிவிடுவது.

சாங்டி மடாலயத்தை சுற்றி வந்தோம். அங்கே மாணவர்கள் சிலர் படிக்கிறார்கள் என தெரிந்தது. பின்பக்கம் உள்ளாடைகள் காய்ந்துகொண்டிருந்தன. அந்திப்பிரார்த்தனைக்காக நூல்கள், இசைக்கருவிகள், முரசுகள், கம்பிளி விரிக்கப்பட்ட இருக்கைகள் காத்திருந்தன. அதே வண்ணத்தில் அதே போன்ற ஒரு பிரார்த்தனை அறையை எனக்காக அமைக்கவேண்டும் என்னும் கனவும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. அந்த ஆழ்சிவப்பு மெத்தைகள், கம்பிளிகள். ஆனால் அந்த குளிரை தனியாக உருவாக்கவேண்டும். ஊட்டியில் சாத்தியமாகலாம்.

இமையமலைப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் பௌத்தம் நம் ஆழுள்ளத்தில் நாம் கொண்டிருக்கும் ஒரு கனவு. ஒரு நனவிலி நினைவு. அதற்கு இந்தியப் பண்பாட்டில் இன்று மிக முக்கியமான பங்குண்டு. திபெத்தின் தலைவராயினும் தலாய் லாமா நாம் பெருமைகொள்ளவேண்டிய இந்தியர். காந்திக்கு பின் உலகை நோக்கி நமக்காகப் பேசுபவர் அவரே. 

யோகஊழ்கப்பயிற்சியை பொறுத்தவரை இந்தியாவின் பிற அமைப்புகள் எல்லாமே பொமு 7 ஆம் நூற்றாண்டு முதல் நலிவுறலாயின. அப்போதுதான் பக்தி இயக்கம் தொடங்கியது. உணர்ச்சிகரமான வழிபாடும் சரணாகதியுமே மீட்பின் வழி என அவை முன்வைத்தன. யோகமும் ஊழ்கமும் பொதுவாக புறக்கணிக்கப்பட்டன, சில மரபுகளால் தடுக்கவும்பட்டன.  அவை சித்தர்மரபாக ஒடுங்கி, தலைமறைவாக நிகழ நேர்ந்தது

பின்னர் 12 ஆம் நூற்றாண்டின் படையெடுப்பு, போர்ச்சூழலில் பக்தி இயக்கம் தாக்கப்பட்டது. ஆலயங்கள் அழிந்தபோது பஜனை முறை வட இந்தியாவில் ஓங்கி அதுவே மைய வழிபாட்டு முறையாக ஆகியது. தென்னகத்தில் எஞ்சியிருந்த யோகஊழ்கப் பயிற்சிகள் கூட வடக்கே இல்லாமலாயின. ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் கூட யோகஊழ்க பயிற்சிகளை பிராமணிகள் போன்ற ரகசிய வழிபாட்டுமுறைகள் கொண்ட அலைந்து திரியும் சாக்தமத சாதகர்களிடமிருந்து கற்கவேண்டியிருந்தது. சமண மரபின் அடிப்படையே யோகம்தான், யோகத்திலமர்ந்தவர்கள் அவர்களின் தீர்த்தங்காரர்கள். ஆனால் அவர்களிடம் யோகமுறையே இல்லை.

ஆனால் திபெத்திற்கும் இமையமலையடுக்குகளுக்கும் அந்தச் சிக்கலே இல்லை. அங்கே பக்தி மரபு ஊடுருவவே இல்லை, அயல்படையெடுப்பும் இல்லை. ஆகவே யோகமும் ஊழ்கமும் அங்கே நவீன காலகட்டம் வரை அப்படியே நீடித்தன. அவற்றுக்கான முறையான கல்வியமைப்புகள், ஆசிரிய மரபுகள், பயிற்சி முறைகள் இருக்கின்றன. இந்தியாவின் யோகப்பயிற்சிகள் திபெத்திய மரபில் இருந்துதான் மீண்டும் இந்து மரபு நோக்கி வந்து தொடர்ச்சியை அடைந்தன என்றுகூட ஆய்வாளர்கள் சொல்வதுண்டு.

உலக அளவிலேயே கூட திபெத் பௌத்தமும், ஜென் பௌத்தமும்தான் உச்சகட்ட யோகஊழ்கப் பயிற்சியை அறுபடாமல் தக்கவைத்துக்கொண்ட மரபுகள். இரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை. ஆழ்ந்த குறியீடுகள் மற்றும் கடும் நோன்புகள் வழியாக திபெத்திய பௌத்தம் யோகத்தை முன்வைக்கிறது. குறியீடுகளே இல்லாத, நோன்புகளே இல்லாத வெற்றிருத்தல் வழியாக யோகத்தை ஜென் கற்பிக்கிறது.

யோகம்ஊழ்கம் ஆகியவற்றைப் பயில்வதற்கு நமக்கு தடையாக இருப்பவை வரலாற்றுப் பரிணாமத்தில் நம்மை வந்தடைந்த ஆசாரவாதமும் பக்தி இயக்கத்தின் மனநிலைகளுமே. ஆசாரவாதம் புறவய வாழ்க்கைநெறிகள் மட்டுமே ஆன்மிகமென நம்புகிறது. பக்தி இயக்கம் மிகையான உணர்வுநிலைகளை நோக்கி கொண்டுசெல்கிறது. இரண்டுமே யோகத்திற்கு எதிரானவை. யோகம் அகவயப்பயிற்சியையே முதன்மைப்படுத்தும். எதையும் உள்ளது உள்ளபடி காண முயலும். 

பக்தி இயக்கத்தில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட மிகையுணர்ச்சியால் யோகத்தை அணுகும்போதுதான் நம்மிடையே இன்று பரவலாக உள்ள யோகம் பற்றிய பலவகையான கற்பனைகள் தோன்றுகின்றன. நான்குநாட்கள் யோகம் பயின்றபின்அதிர்வு’ ‘ஒளிஎன்றெல்லாம் பேச ஆரம்பிக்கிறோம். ஆசாரவாதம் இன்னொரு எல்லை. அதில் இருப்பவர்கள் திபெத்திய பௌத்தம் அல்லது ஜென் பௌத்தத்தைஎன்ன இருந்தாலும் அவங்கள்லாம் மாமிசம் சாப்பிடுறவங்கஎன்று ஒதுக்கிவிட்டு ஆசாரமாகச் சாப்பிடுவதே  மீட்பின் ஒரே வழி என பேச ஆரம்பிப்பார்கள்.

நாங்கள் மாலையில் தங்கவேண்டிய இடம் சாங்டி ஆற்றின் கரையில் இருந்தது. முன்னரே பதிவுசெய்த இடமல்ல, அங்கே சென்றபின் தொலைபேசியில் பதிவுசெய்தோம். பெரும்பாலான சுற்றுலா தங்குமிடங்கள் காலியாகத்தான் இருந்தன. ஆகவே இடமிருந்தது. ஆனால் இடத்தைக் கண்டுபிடிக்க கொஞ்சம் சுற்றிவந்தோம்.

நோர்புவின் விடுதி சாங்டி ஆற்றங்கரையில் இருந்தது. அருகே ஓடும் நதியை நாற்காலி போட்டு அமர்ந்து பார்க்கலாம். தெள்ளத்தெளிந்த நீர். இமையமலையின் பனிக்காலத்தில் பேரழகு என்பது இந்த பனியுருகிய தெள்நீர்தான். பிரம்மனின் விழிநீர் என அதை கவிஞர்கள் பாடுகிறார்கள். நோர்பு சூடான தேநீர் தயாரித்துத் தந்தார்.

நோர்புவின் ஆறுவயதான மகள் ஓர் உற்சாகமான பெண். அயலவர் விருந்தினராக வருவதையே வாழ்வெனக் கொண்டவள். அத்துடன் பெண்களுக்கே உரிய துடிப்பு. பையன்கள் இந்த வயதில் சொங்கி போல் இருப்பார்கள். நாம் இந்த வயதுக்குப்பின் பெண்களை ஒடுக்க ஆரம்பிக்கிறோம். அருணாச்சலில் அது நிகழ்வதில்லை. எல்லா பெண்களும் உயர்மின்னழுத்தக் கருவி போல் உயிர்த்துடிப்புடன் இருந்தனர்.

நோர்புவின் விடுதிக்கு கொஞ்சம் முன்னரே வந்துவிட்டோம். ஆகவே நதிக்கரையில் ஒரு மாலை எங்களுக்கு அமைந்தது. மாலை என்று ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன், அது பின்மதியம் மூன்று மணி. ஆனால் மலையடுக்குகள் மஞ்சள் ஒளியில் மயங்கிக்கொண்டிருந்தன. குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. வானில் முகில்கள் இல்லை, ஆனால் ஒளி மங்கி அது எண்ணைக்காகிதம்போல் பரவியிருந்தது. 

மாலையில் ஆற்றங்கரையோரமாக ஒரு நடை சென்று வந்தோம். ஆற்றில் இறங்கி அதில் போடப்பட்டிருந்த மரப்பாலம் வழியாக மறுகரை சென்றோம். குளிப்பதற்கு அரங்கசாமி துடிதுடித்தார். அவரை அடக்கினோம், நீரின் வெப்பநிலை மூன்று பாகைதான் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. “தெளிஞ்ச தண்ணி தமிழனுக்கு விதிக்கப்படலையே சார்…” என அரங்கசாமி வருந்தினார்.

சாங்டி ஆற்றங்கரையில் ஓர் ஓட்டப்போட்டி நடத்தினோம். அரங்கசாமி முதலில் தனியாக ஓடினார். அதன்பின் எனக்கும் ஆனந்துக்கும் ஒரு போட்டி, எவர் முதலில் களைப்படைவது என பார்க்கவேண்டும். நாலைந்து சுற்றுக்குப்பின் ஆனந்த் நின்றுவிட்டார். எனக்கு இன்னும் கொஞ்சம் கடந்தே மூச்சடைக்க ஆரம்பித்தது.  ஆனந்த் என்னைவிட பதினைந்து வயது இளையவர்.

என் உடலின் எடை சற்று கூடியிருந்தாலும் தொடர்ச்சியான நடை, பழங்களை உண்பது, நீண்ட தூக்கம் ஆகியவை என்னை ஆற்றல்மிக்கவனாகவே வைத்திருக்கின்றன. அதை இப்படி அவ்வப்போது சோதனை செய்து நிறுவிக்கொள்வது வழக்கம். கம்போடியா பயணத்தில் எனக்கும் என்னைவிட இருபதாண்டு இளையவரான லண்டன் முத்துக்கிருஷ்ணனுக்கும் நீச்சல்போட்டி. வென்றவர் எவர் என சொல்லவேண்டியதில்லை.

பிளாக் நெக் கிரேன் என்னும் பறவை அந்த ஆற்றங்கரையில் வலசை வரும் என்றும், அது வரத்தொடங்கிவிட்டது என்றும் நோர்பு சொன்னார். ஆகா பறவைகள் என கிருஷ்ணன் துடித்து கிளம்பியதும்இரண்டே பறவைகள்தான் வந்துள்ளன. தேடினால் கிடைக்கும்என்றார் நோர்பு. கிருஷ்ணன் சோர்ந்து அமர்ந்துவிட்டார்

ஆனால் அன்று மாலை நதிக்கரையில் அமர்ந்திருக்கையில் இரண்டு சாம்பல்கழுத்து நாரைள் ஜோடியாகச் செல்வதை கண்டோம்சார், அதேதான் ….அதே ஜோடிதான்என்று கிருஷ்ணன் கூச்சலிட்டார். எங்களுக்குஷோகாட்டுவதற்காகவே இரண்டு முறை சுற்றிவந்து பறந்து சென்றன. 

இரவு தீமூட்டி அதைச்சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அன்றைய மாலை முதல் நடைபெற்ற எல்லா உரையாடல்களும் வழக்கமான வேடிக்கைகள்தான். ஆகவே அன்று மாலை சற்று தீவிரமான தத்துவ உரையாடல். ஆனந்த், பாலாஜி, சந்திரசேகர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். அவர்களுக்கு நல்ல அசைவ உணவு நோர்புவின் மனைவியால் சமைத்து வழங்கப்பட்டது.

குளிர் வலுக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்திற்குப் பின் குளிர் என்பது ஓர் இறுக்கம், ஓர் எடை, ஒரு வலி. நான் அறைக்குள் சென்றதுமே சப்பட்டையாக கட்டிலில் படிந்து என்மேல் கிடைத்த அத்தனை மெத்தைப்போர்வைகளையும் எடுத்து போர்த்திக்கொண்டேன். போர்வைக்குவியல்களுக்குள் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. அதிகாலையில் உள்ளே நாமே உருவாக்கிய நமது சூடு நிறைந்திருக்கும். அது நாம் நம் அன்னையிடமிருந்து அவள் கருப்பைக்குள் வாழும்போது பெற்றுக்கொண்ட குருதிவெம்மை.

எனக்கு கொஞ்சம் ‘செர்விக்ஸ்’ பிரச்சினை உண்டு. தீவிரமாகவே இருந்தது. குருஜி சௌந்தரின் ஆலோசனைப்படி எளிய யோகப்பயிற்சிகள் (மகராசனம்) வழியாகச் சரிசெய்துகொண்டேன். அது கொஞ்சம் வெளிப்படுவது நீண்ட தொலைவு காரில் செல்லும்போது மட்டும். அதுவும் கழுத்துக்கு தாங்கு இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும்போது.  இந்தப்பயணம் ஒரு சுழல்படி வழியாக சென்றுகொண்டே இருப்பது. அல்லது ஒரு மாபெரும் இசைத்தட்டில் ஊசியாகச் சுழல்வது. ஆகவே படுக்கையில் படுத்து என் முகுளத்தின் சமநிலையை மீட்டெடுக்கவேண்டியிருந்தது. படுத்தால் கட்டிலும் சேர்த்தே சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால் கருப்பைக்குள் சுருள்வதுபோன்ற அந்த அமைதி அழகானது. நல்ல தூக்கம், பன்னிரண்டு மணிநேரம்.

என்னுடைய பசி மிகவும் மந்தித்துவிட்டது. குளிரில் நன்றாகப் பசிக்கும் என்பார்கள். நேர்மாறாக இந்தச் சுழற்பயணத்தால் எனக்கு ஒரு மெல்லிய குமட்டல் இருந்துகொண்டிருந்தது. ஆகவே பசியே இல்லை. காலையில் கொஞ்சம் பசிக்கும். ஒரு சோளரொட்டி அல்லது ஒரு சாண்ட்விச். அதன்பின் இரவில் பழங்கள். நடுவே தேநீர், அதுவும் சர்க்கரை இல்லாமல், பால் இல்லாமல். யாக்கின் பால் கடினமானது, ஆனால் கொஞ்சம் சுவை குறைவானது.

அதுவும் நல்லதுதான் என்று தோன்றியது. இந்த மலைகளின் பாதைகளில் ஏறுவதற்கு எந்த அளவுக்கு செரிமானப்பணி குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உடல் தன்னை தயாரித்துக் கொள்கிறது. இவர்களின் உணவில் எண்ணை அனேகமாக இல்லை. எல்லா வகை எண்ணை வித்துக்களும் கீழிருந்து வரவேண்டியவை. கீழுலகுடன் இவர்களுக்கு தொடர்பே இல்லை. இவர்களின் உணவில் கொழுப்பு என்பது பன்றி, யாக் ஊனில் இருந்து வருவது. அந்த ஊனையும் பொரிப்பதில்லை, சூப்பில் அல்லது நூடில்ஸில் போடுவதுடன் சரி. ஆனால் இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக எல்லாவகை பொரித்தல்களையும் செய்கிறார்கள். தாங்களும் உண்கிறார்கள்.

நோர்புவின் இல்லத்தில் இருந்து காலையில் கிளம்பினோம். நாங்கள் சென்றடையவேண்டிய இடமான தவாங் சமவெளியே இனிமேல்தான். சமவெளி என அதைச் சொல்லக்கூடாது. மலைமேல் ஒரு சமவெளி. பீடபூமி என்று சொல்லவேண்டும். திபெத்தை உலகின் கூரை என்பார்கள். தவாங், ஸ்பிடி இரண்டு இடங்களையும் இந்தியாவின் கூரைகள் எனலாம். ஒரே கூரையின் இருபுறச் சரிவுகள்

(மேலும்)

முந்தைய கட்டுரைகலைச்செல்வி
அடுத்த கட்டுரைநூலக அடுக்கிலே…