பனியில் தெரிபவை

பனிமனிதன் மின்னூல் வாங்க

பனிமனிதன் வாங்க

இந்த நவம்பர் 19, 20 ஆம்தேதிகளில் ஃபின்லாந்தில் ஆர்ட்டிக் வட்டத்தில் உள்ள ரோவநாமி என்னும் சுற்றுலாக் கிராமத்திற்குச் சென்றுவந்தேன். உறைபனியால் சூழப்பட்ட ஊர். உறைநிலைக்கு கீழே 11 பாகை வரை வெப்பநிலை இறங்கியிருந்தது. பனியால் போடப்பட்டவை போல சாலைகள் தெரிந்தன. காடுகளில் மரங்கள் பனியால் செய்யப்பட்டவை போல் இருந்தன. புல்வெளிகள் பனிமூடி அலையலையாக தெரிந்தன. ஒவ்வொரு புல்லிலும் பனி படிந்திருந்தது. பனியாலேயே புல்லை செய்து பரப்பியிருப்பதுபோல் இருந்தது. வெண்ணிறம் மட்டும்தான் எங்கும். நாம் அப்படி நிறங்கள் இல்லாத உலகை பார்த்திருக்கவே மாட்டோம். பொட்டல் காட்டில் நிலவொளியில் நின்றால் நிறங்கள் இல்லாமல் தெரியுமே, அதுபோல. ஆனால் வெண்பனி ஒளிவிடுவது. ஆகவே கண்கள் கூசிக்கொண்டும் இருந்தன. கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

நான் அதற்கு முன்பு நாலைந்து முறை உறைபனியைப் பார்த்திருக்கிறேன். முதல்முறையாக 1982-ல் என் இருபதாவது வயதில் பார்த்தேன். நான் துறவியாக அலையும் காலம் அது. இமையமலைக்குச் சென்றிருந்தேன். பிப்ரவரியில் கேதார்நாத் செல்லும் வழி. நான் சாமியார் கூட்டத்துடன் சென்றேன். பனி மிகுதியாக இருந்தமையால் திரும்பி விட்டேன். அன்று அந்த பனியின் குளிர் அளித்த துன்பம் மட்டும்தான் தெரிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் ஒருமுறை ஆங்கில நாளிதழில் இமைய மலையில் மீண்டும் பனிமனிதனின் காலடித்தடம் தெரிந்தது என்ற செய்தியை வாசித்தேன். நான் கண்ட பனிவெளி நினைவில் எழுந்தது. மனம் ஆழமான பரவசத்தை அடைந்தது. அந்த பனிமனிதனின் காலடிகளையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

அறிவியல் அறிஞர்கள் அந்த காலடித்தடங்கள் உண்மையில் என்ன என்று கண்டடைந்துள்ளனர். இரண்டு வகையில் அவை நிகழ்கின்றன. ஒன்று உண்மையாகவே மனிதர்கள் நடந்து சென்ற காலடித்தடங்கள் அவை. பனி உருகி விரிவடையும்போது அவை மிகப்பெரியதாக அகலம் அடைகின்றன. பின்னர் பனி மீண்டும் இறுகும்போது அவை பெரிய காலடித்தடங்களாகத் தெரிகின்றன.

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இமையமலையில் பனி அலையலையாக மேலிருந்து இறங்கி படிந்துகொண்டிருக்கிறது. ஆகவே பனிப்பரப்பு பனிப்பாளங்களால் ஆனது. சமவெளியில் உள்ளது போல ஒரே பரப்பு அல்ல அது. அந்தப் பனிப்பாளங்களுக்கு நடுவே உள்ள இடைவெளி ஒரு விரிசல் போன்றது. அந்த விரிசலில் காற்று உள்ளது. மேலும் மேலும் பனி விழும்போது விரிசல்கள் மூடிவிடுகின்றன. உள்ளே உள்ள காற்று பனிப்பாளத்திற்கு அடியில் மாட்டிக்கொள்கிறது. சிறு சிறு குமிழிகளாக பனித்தரைக்கு அடியில் அந்தக் காற்று உள்ளது. பனி கூடுதலாகி குளிர் அதிகரிக்கும்போது உள்ளே அந்த காற்று சுருங்குகிறது. அப்போது மேலே படிந்த மென்மையான பனிப்பரப்பை அது உள்ளிழுக்கிறது. அந்த இடங்களில் மெல்லிய பள்ளங்கள் உருவாகின்றன. அந்தப் பள்ளங்கள் கீழே உள்ள விரிசலின் நேர்மேலே வரிசையாக விழுகின்றன. அவை காலடித்தடங்கள் போல தெரிகின்றன.

ஆனால் பனிமனிதன் பற்றிய கற்பனைகள் இமையமலைப் பகுதி மக்களிடம் உள்ளன. அவர்கள் அவனை யெதி (Yeti) என்று சொல்கிறார்கள். இந்திய கதைகளில் அந்த பனிமனிதன் யதி என சொல்லப்படுகிறான். இந்திய மொழிகளில் யதி என்றால் துறவி, ஆன்மிக ஞானி என்று பொருள். என் குருநாதரின் பெயர் நித்ய சைதன்ய யதி. இந்த உலகத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு வாழ்பவர்களின் பெயர் அது. இங்கிருந்து கூட இமையமலை மக்களுக்கு அந்தச் சொல் சென்று சேர்ந்திருக்கலாம்.

நான் இந்நாவலில் பனிமனிதர்களின் ஓர் உலகை உருவாக்கினேன். இங்கே நாம் உருவாக்கி வைத்திருக்கும் மனித நாகரீகத்திற்கு முற்றிலும் அப்பாலுள்ள ஓர் உலகம் அது. மனித நாகரீகத்திற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகள் வயது ஆகிறது. கற்காலத்தில் இருந்து நாம் இப்படி உருவாகி வந்துள்ளோம். வேறுவகையில் நாம் சென்றிருந்தால் என்ன ஆகியிருப்போம்? நம் பண்பாடு என்னவாக இருக்கும்? அதுதான் இந்தக் கதை. இந்தக்கதையில் நம்முடைய மனிதப் பண்பாடு செல்லும் வழி சரியா என்ற கேள்வி உள்ளது. அதைப்பற்றி நாம் சிந்திக்கவேண்டும்.

இந்நாவல் 1998ல் தினமணி நிறுவனத்தின் சிறுவர்மணி இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. அதில் பணியாற்றிய மனோஜ் இதை எழுத என்னை ஊக்குவித்தார். இந்நாவல் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவதார் படம் வந்தது. அது ஏறத்தாழ இதேபோன்ற கதை. இதிலுள்ள பலகாட்சிகள் அவதார் படத்திலும் உள்ளன. அது மனித உள்ளங்கள் எப்படி ஒன்றுபோலவே சிந்திக்கின்றன என்பதையே காட்டுகிறது.

இந்நாவலை முதலில் வெளியிட்ட கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், பின்னர் வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஆகியவற்றுக்கு நன்றி.

ஜெ

(விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள பனிமனிதன் நாவலுக்கான முன்னுரை)

—————————————————————————————

அகச்சாகசம்…. பனிமனிதன்

பனிமனிதன் – கடிதம்

பனிமனிதன் வாசிப்பு

பனிமனிதன் வாசிப்பு

பனிமனிதன் மதிப்புரை- மகிழ்நிலா

பனிமனிதன் – வாசிப்புரியா ரோஷன்

பனிமனிதன், கடிதம்

பனிமனிதன் சிறுமியின் விமர்சனம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் – கடிதம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்

பனிமனிதன்

பனிமனிதன்

முந்தைய கட்டுரைகல்பற்றா நாராயணன்
அடுத்த கட்டுரைA Conversation with Suchithra