யோக முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ,

இந்த முகாமிற்கு பதிவு செய்தது முதல், அறிமுகமே இல்லாத நபர்கள் , ஏதுமே அறிந்திராத யோகாவுடன் மூன்று நாட்கள் எப்படி இருக்கப்போகிறது என்ற சிறு பதற்றத்துடனே இருந்தேன், ஆனால் இந்த மூன்று நாட்கள் சிறந்த அனுபவமாக இருந்தது.

குருஜி சௌந்தர் அவர்கள் இந்த பயிற்சி முகாமை பயிற்சிகளும், உரைகளுமாக வடிவமைத்தவிதம் மிக சிறப்பாக இருந்தது. வகுப்புகள் முடிந்த பிறகான இடைவேளைகளிலும், ஓய்வு நேரங்களிலும் கூட அவர் கற்பித்துக்கொண்டே இருந்தார். இந்த மூன்று நாட்களும் முழுநேரமும் உற்சாகமாகவும், முற்றிலும் நேர்மறையாகவுமே இருந்தார், உரைகளிலும், நேர்ப்பேச்சுகளிலும் அவரிடம் இருந்து ஒரு எதிர்மறை கருத்துகூட வரவில்லை, மாற்று மருத்துவமுறைகளின் போதாமைகளைக்கூட அவற்றின் எல்லைகளாகவே குறிப்பிட்டார்.

யோக மரபில் இப்பயிற்சிகளின் தேவை என்னவாக இருந்தது, யோகப்பயிற்சிகளின் பின்னுள்ள தத்துவ விளக்கங்கள் மற்றும் ஆயுர்வத்திற்கும் யோகாவிற்கு உள்ள பிணைப்பு என முழுமையான பின்னணி விளக்கம் அளித்தார். மரபார்ந்த யோகாவிற்கும் , மரபுசாரா பயிற்சிகளும் உள்ள வேறுபாடுகள், யோக பயிற்சிகளால் என்ன பலன்கள் கிடைக்கும் முக்கியமாக  என்னென்ன பலன்கள் கிடைக்காது என தெளிவுபடுத்தினார்.

இந்தமுகாமின் நோக்கம் பங்கேற்பாளர்களை யோக சாதகராக மாற்றுவது தான், இந்த பயிற்சிகள் எந்த பக்கவிளைவுகளும் இல்லாத, அனைவருக்கும் ஏற்றவை என தொடக்கத்திலேயே விளக்கியதோடு, இந்தியாவில் மரபான யோக கல்வி அளிக்கும் குருநிலைகளை அறிமுகபடுத்தியபின் அவரின் நெகிழ்ச்சியான நன்றியுரை மற்றும் குருபிரசாதத்துடன் விடைகொடுத்தார்.

அந்தியூர் மணி அவர்கள் ஒவ்வொரு வேளையும் சுவையான உணவு, தங்குமிடம் என சிறப்பான கவனிப்பு அளித்தார்.  முக்கியமாக ஓய்வு நேரங்களில் அவருடனான பேச்சில் சைவ சித்தாந்தம், மனு நீதி, அந்தியூர் பகுதி வரலாறு என வரலாற்று பூர்வமான தகவல்களை தெரிந்து கொண்டேன், அவர் இயல்பான, வரலாற்றுபார்வை கொண்ட பேச்சுக்கு ரசிகனாகிவிட்டேன்.

இரண்டாம் நாள் இரவில் அருண்மொழிநங்கை அவர்களின் இசை குறித்த சிற்றுரை சிறப்பாக இருந்தது.

புதிய அறிதல்கள், புதிய நண்பர்களின் அறிமுகம், ரம்மியமான சூழல், சுவையான உணவு என இந்த பயிற்சி முகாம் சிறப்பான அனுபவமாக இருந்தது.

அனைவருக்கும் நன்றி.

மணிகண்டன். கோவை

முந்தைய கட்டுரைபாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்
அடுத்த கட்டுரைதி.சதாசிவ ஐயர்