அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். கடந்த ஜனவரி 26 அன்று பெங்களூரில் கட்டண உரையின் பொது உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக கட்டண உரையில் கலந்து கொண்டேன். மிகவும் நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு, நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட படி சரியான நேரத்தில் அனைத்தும் நடந்தது.
உங்கள் உரையில் என்னை மிகவும் பாதித்தது இருத்தலியல் துன்பம் பற்றி நீங்கள் குறிப்பிட்டது. கடந்த சில நாட்களாக நானும் இதே சிந்தனையில் இருந்தேன். தன்னுடைய சுதர்மம் அறிந்து அதில் சோர்வில்லாமல் ஈடுபடுபவரைத்தவிர பிறர் தங்கள் சுதர்மம் அறியும் வரை கண்டிப்பாக இந்த மனநிலையை அடைந்து அதை தாண்டித்தான் வரவேண்டும் என நினைக்கிறேன். மேலும் நீங்கள் குறிப்பிட்டதில் மிகவும் கடினமான விஷயம், பிறரிடம் பழகும் போது நம் பிற அறிதல் / மேதமை வெளிப்படாமல் அவர்களின் மனவோட்டத்தில் பழகுவது. அறிவில் நிறைநிலை அடைந்தவர்களே அவ்வாறு இருக்க முடியும் என கருதுகிறேன்.
உங்களை நேரில் பார்க்கும் வரை ஏதாவது பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தேன். உங்கள் பக்கத்தில் வந்ததும் தயக்கத்தாலும் , ஏதாவது தப்பாக பேசிவிடுவோமோ என்ற சிந்தையாலும் ஒன்றும் பேசாமல் வந்து விட்டேன். உங்களை நேரில் பார்த்ததே போதுமானதாகவும், நிறைவாகவும் இருந்தது.
மேலும் ஒரு விஷயம், கடந்த வாரம் எங்கள் உறவினர் புலவர் முனுசாமி என்பவர் மறைந்தார். அவரின் அகவை 90 க்கு மேல் இருக்கும். 1990 வரை ஹோலி பண்டிகையின் போது காமன் கூத்து நடைபெறும், அவரும் அதில் கலந்து கொண்டு பாடுவார். கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இல்லை. அவர் மறைவின் போது 1960 களில் அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நடந்த காமன் கூத்து நிகழ்ச்சி பகிரப்பட்டது.
உங்கள் பார்வைக்கு அந்த சுட்டி :
அன்புடன்
அருண்