இடித்துரைப்போர்

அன்புள்ள ஜெ,

தங்களின் அறம் தொகுப்பு, ஊமைச்செந்நாய் சிறுகதை தொகுப்பு படித்திருக்கிறேன். இரவு, வான் நெசவு, குமரித்துறைவி, காடு வாங்கி வைத்திருக்கிறேன். வெண்முரசு முதற்கனல் வாசிப்பு முடியும் தருவாயில் உள்ளது. என் வாசிப்பு விரிவடைந்தவரை நாஞ்சில் நாடன், வண்ணதாசன், லஷ்மி மணிவண்ணன், யூமா வாசுகி,திருச்செந்தாழை ஆகியோரின் படைப்புகள் என்னை செறிவூட்டுவதாய் நம்புகிறேன். தங்களின் தெளிவான இயங்குதளம் வியப்பு என்று ஒற்றை சொல்லில் கடக்க இயலாது. ஆளுமைத்திறன் கண்டு நான் வியந்தவர்களில் தாங்களும் , ஜக்கிவாசுதேவும் அடக்கம்.

என்னுடைய கேள்வி :  அறிவுசார் இயக்கம் ஒன்றை வழிநடத்திச் செல்லும் தங்களுக்கு / தங்களை போன்றோருக்கு உங்களை சுற்றி உள்ளவர்களில் ‘கடிந்து அறிவுரை சொல்பவர்’  எவரேனும் உள்ளனரா? இல்லை சொல்வன யாவற்றையும் தொழுது பின்செல்பவர்களா யாவரும். ஏனெனில் எவ்வளவு அறிவுசார்ந்த இயக்கம் என்றாலும் அதில் துதிபாடும் மனிதர்கள் இருப்பார்கள். இசைபட வாழ யாருக்கும் தயக்கம் இருக்காது. தாங்களும் அறிவீர்கள் ‘ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்….திருக்குறளை. அப்படி கடிந்து அறிவுரை சொல்பவர்’    எவரும் இல்லாத அல்லது இருந்தும் சொல்லாத நிகழ்வுகளில் ஒருவர் தான் சொல்வது யாவும் சரி என எண்ணத் தோன்றும் அல்லவா. அம்மாதிரியான தருணங்களில் தங்களின் எண்ணங்களை அகத்தணிக்கை எவ்வாறு செய்கிறீர்கள்?

அன்புடன்

ம.பார்த்திபன்

காரைக்கால்

***

அன்புள்ள பார்த்திபன்,

நான் ஓர் அறிவியக்கத்தை தொடங்கி இன்று அது விரியத்தொடங்கியுள்ளது என்பது உண்மை. ஆனால் அதன் ‘தலைவன்’ அல்ல நான். அதில் என்னுடன் இருப்பவர்கள் என் தொண்டர்களும் அல்ல. மிக வயது குறைந்தவர்கள்கூட நண்பர்கள்தான்.

இந்த அறிவியக்கம் ஓர் இயக்கமே ஒழிய, அமைப்பு அல்ல. அமைப்புசார்ந்த பொறுப்புகள், பதவிகள் இங்கில்லை. எல்லாரும் இணையானவர்களே. எவருக்கும் தனியான இடமோ , எந்தவகையான மேல் கீழ் அடுக்கோ இல்லை.

ஆகவே தலைமைவழிபாடு, அடிபணிதல் என்பதெல்லாம் இல்லை. ஒரு முறை விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்த எவரும் அதை உணர்ந்துவிடமுடியும். இங்கே நான் பிறருடன் ஒருவனாகவே இருக்கிறேன்.

ஆகவே ‘இடித்துரைப்பதை’ ஏறத்தாழ எல்லாருமே எப்போதுமே செய்துவருகிறார்கள். இடித்துரைப்பதையே முழுநேர வேலையாகச் செய்துவருபவர் நண்பர் கிருஷ்ணன் – எல்லாரையும். அதைக்கண்டு சிதறி ஓடியபலர் உண்டு. எங்கள் வட்டத்திற்கு வெளியே உள்ள எழுத்தாளர்கள் உட்பட. அதையே மென்மையாகச் சிரித்தபடி செய்யும் ராஜகோபாலன் ஜானகிராமன் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். குவிஸ் செந்தில், ராம்குமார், வழக்கறிஞர் செந்தில், அரங்கசாமி,ஆஸ்டின் சௌந்தர் ஆகியவர்கள் எப்போதுமே அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்குபவர்கள்.

ஆனால் இந்த இயக்கத்தின் செயல்முறைகள் என்னால் முன்னெடுக்கப்படுவன அல்ல. நான் எதையுமே செய்வதில்லை என்பதே உண்மை. ஒவ்வொருவரும் அவரவர் களத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும் வழிகாட்டிக்கொண்டும் செயல்படுகிறார்கள். ஆகவே எனக்கு ‘ஆலோசனை’ சொல்லவேண்டிய தேவை பெரும்பாலும் எழுவதில்லை. நான் எழுதுவதுடன் சரி. அதிலும் எப்போதும் ஸ்ரீனிவாசன்- சுதா இணையரின் வழிகாட்டுதல் உண்டு. தனிப்பட்ட முறையில் யோகா குரு சௌந்தரின் வழிகாட்டுதல் உண்டு. பொருளியல் ஆலோசனைகள் உட்பட.

பலருடைய ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் இடித்துரைகள் வழியாகவே இது செயல்படுகிறது என்பதற்கு முதன்மைச் சான்று பதினைந்தாண்டுகளாக மேலும் மேலும் தீவிரம்கொண்டபடியே இந்த அமைப்பு வளர்கிறது என்பதுதான். தமிழ்ச்சூழலில் அப்படி எத்தனை கலாச்சார அமைப்புகள் வளர்ச்சியடைந்துள்ளன என்பதை கணக்கிட்டுப்பாருங்கள். பிளவுகள், கசப்புகள் இல்லாத அமைப்புகள் அனேகமாக இல்லை என்பதைக் காண்பீர்கள்.

ஏனென்றால் அதிகாரப்படிநிலை இல்லை. எல்லாருமே நண்பர்கள்தான். எந்தச் சந்திப்பும் சிரிப்புக் கொண்டாட்டமாக மட்டுமே அமையவேண்டும், நல்ல நினைவுகள் மட்டுமே எஞ்சவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடித்துரைப்பதென்பது ஒருபோதும் உளக்கசப்பு, ஆணவப்பூசலுக்கு இட்டுச்செல்லலாகாது என்பதில் மேலும் உறுதிகொண்டிருக்கிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைஇராம. சுப்பையா
அடுத்த கட்டுரைதும்பி நிதியுதவி