லட்சுமி சரவணக்குமார் உரை – விவாதம்

லட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்- விஷால்ராஜா

லட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம் – வெங்கட ரமணன்

அன்புள்ள ஜெ,

என்னுடய சமீபத்திய கடிதத்துக்கு வந்த பதில் கடிதத்தை வாசித்தேன். என் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கலாம் என்று தோன்றியது. [என் வாழ்க்கையின் பெரும் பகுதியை மறுப்பிலும் விளக்கத்திலுமே கழிக்கப் போவதாக உள்ளுணர்வு சொல்கிறது. விதி என்மேல் கருணையோடிருக்கட்டும்!]

முதலில், நான் “கதை” அம்சத்தை முழுமையாக மறுக்கவோ நிராகரிக்கவோ இல்லை. அப்படி புரிந்துகொள்வது பிழை. எழுத்தாளன் வெளிப்படுவது “கதை” என்று நம்பப்படுகிற சம்பவங்களின் கோர்வையில் மட்டும் அல்ல – இதுவே நான் சொன்னது. இவ்விடத்தில் “மட்டும்” எனும் சொல்லை, எந்த பரிகாசமும் இல்லாமல், இரட்டை மேற்கோள்களுக்குள் சுட்டிக் காட்டுகிறேன்.

கதை எனும் புனைவுக் கட்டுமானம் (narrative plot) பேரில் எனக்கு எந்த விமர்சனமும் கிடையாது. சொல்லப்போனால், கதையம்சத்திற்காகவே நான் விக்டோரிய காலத்து பேய்க் கதைகளை தேடி தேடி படிப்பதுண்டு. தமிழில் நான் “எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று நினைப்பது இரண்டு ஆசிரியர்களை. ஒன்று புதுமைப்பித்தன். இன்னொன்று ஜெயமோகன். இரண்டு பேருமே கதைக் கட்டுமானங்களின் பேரில் பெரும் ஈடுபாடு கொண்டவர்கள். விதவிதமாக கதை எழுதியவர்கள். எனவே “கதை” மேல் எனக்கு எந்த விலக்கமும் இல்லை என்பதை ஐயம் தெளிய தெரிவித்துக் கொள்கிறேன். “கதை நீக்கம்” பற்றி பேசுகிற சிந்தனைப் பள்ளியில் நானில்லை. செவ்வியல் நூல்களின் வாசகனாக கதையம்சம் மேல் எனக்கு தீராத பிரமையே உண்டு. (இதுவரை என் கதைகள் அப்படி அமையவில்லை என்பது வேறு விஷயம்). எனவே வெங்கட்ரமணன் மட்டுமில்லாமல், வேறு யாரும் தவறான முன்முடிவை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஜெவுடைய உரையின் தொடர்ச்சியாகவே என் கருத்து அமைந்திருக்கிறது. அந்த சட்டகத்தை கழற்றிவிட்டு தன் வசதிக்கு பேசினால், சீன முனுமுனுப்பு விளையாடிய கதையாகிவிடும். ஜெ தன் உரையில் மேற்கோள் காட்டுவது புதுமைபித்தனை அல்ல; மௌனியையே என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். மௌனியின் கதைகளில் எந்த புறக் கட்டுமானமும் கிடையாது. அவை வெறும் நிழலாட்டங்கள்தாம். போலவே, ஜெ அந்த உரையில் மேற்கோள் காட்டுகிற அசோகமித்திரன் கதைகளும் கூட கதைக் கட்டு கொண்டவை அல்ல. வெறுமனே வேடிக்கை பார்க்கும் மனதின் வெளிப்பாடுகள். இந்த அழகியலை முன்வைத்துதான் நான் அக்கருத்தை கூறினேனேத் தவிர, இது முழுமுற்றான உண்மை என்று எங்கும் சொல்லவில்லை.

கதையும், கதையின்மையும் என்று எதிரீட்டினை உருவாக்குவது என் கடிதத்தின் நோக்கமல்ல. அப்படியொரு இருமையை வெங்கட்ரமணன் தான் கட்டமைக்கிறார். “கோர்வையற்ற” எனும் சொல்லே என் கடிதத்தில் இல்லாதபோது தன் கற்பனை மோதலுக்காய் அவர் திரும்ப திரும்ப அதை பயன்படுத்துகிறார். ஒரு பரபரப்பான திரைப்படமாக எடுக்கும் அளவுக்கு, அழுத்தமான கதைக்கட்டு கொண்டு நாவல் “வெள்ளை யானை”. அதே சமயம் அந்நூலில் விவரனை, எண்ணவோட்டம், படிமம் இவை எல்லாமும் இருக்கின்றன. இப்படி, ஒன்றுக்கொன்று வலு சேர்க்கிற புனைவுக் கூறுகளை எதிரீடுகளாக எண்ண வேண்டியதில்லை.

வெங்கட்ரமணனின் பதிலில் மொத்தமாக ஒரு தொனி இருக்கிறது. நான் ரொம்ப பிடிவாதமாக சில கருத்துக்களை முன்வைப்பதாய் அவர் கருதுவதாக தெரிகிறது. அவருக்கு அந்த கவலையே வேண்டாம். எனக்கு அப்படி எந்த பிடிவாதமும் கிடையாது. லஷ்மி மணிவண்ணன் கவிதையில் சொல்வது போல, இடத்துக்கு தக்கனதுதான் என்னுடைய இருப்பும். ஆனால் வேறொரு விஷயத்தை நான் தொடர்ந்து கவனிக்கிறேன். பொதுவாக இன்றைய சூழலில் தீவிரமாக கருத்துக்களை முன்வைப்பது குறைந்துவிட்டதால், “தீவிரம்” என்பது “ஒற்றைப்படைத் தன்மை” என்றும் “பிடிவாதம்” என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அப்படி தவறாக புரிந்துகொள்பவர்கள் பெரும்பாலும் மதம் மாற்றும் மனப் பாங்கு கொண்டிருக்கிறார்கள் என்பது என் ஆச்சர்யமான அவதானிப்பு. அதாவது தங்களுடைய பிடிவாதத்தை பகிர்ந்துகொள்ளவே அவர்கள் மற்றவர்களை அழைக்கிறார்கள்.

வெங்கட்ரமணின் பதிலில் இன்னொரு குழப்பமும் இருக்கிறது. எழுத்து சார்ந்த திட்டமிடல், எழுத்தாளன் வெளிப்படும் இடம், அர்த்த ஒருமை – இவற்றையெல்லாம் அவர் மானாவாரியாக கையாள்கிறார். எந்த எழுத்தாளனுக்கும் புனைவு சார்ந்த ஒரு திட்டமிடல் இருக்கும். யாரும் எந்த யோசனையும் இல்லாமல் எழுத உட்காருவதில்லை. அந்த திட்டமிடலை நான் மறுக்கவில்லை. தஸ்தயேவ்ஸ்கி “அசடன்” நாவல் எழுதுவதற்கு முன்னால் “கிறிஸ்து போல், ஓர் அழகிய ஆன்மாவை உருவாக்கப் போகிறேன்” என்று குறிப்பு எழுதுகிறார். பூமியில் மேன்மையை நிலைநிறுத்த அவர் விரும்புகிறார். இதை தோராயமாக திட்டம் என்று சொல்லலாம். ஆனால் அசடன் நாவலில் மிஷ்கின் கடைசியில் பைத்தியக்கார விடுதிக்கு போகிறான். இது எழுத்தாளன் தன் திட்டத்தை தானே மீறும் இடம். இதனால்தான் கரமசோவ் எழுதும்போது தன் கதாபாத்திரங்கள் பேசும் விதத்தை கண்டு அவரே ஆச்சர்யப்பட்டுவிட்டதாக தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிடுகிறார். வடிவத் திட்டமிடல்களுக்கும் இந்த நியதி பொருந்தும்.

வரிசையாக நிறைய உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். படைப்புச் செயல் பற்றி W.H.ஆடனின் கருத்து புகழ்பெற்றது. “உருவாக்குதல், அறிதல், மதிப்பிடுதல்” (Making, Knowing and Judging) என்று ஓர் அடுக்குமுறையை அவர் சொல்கிறார். அதாவது உருவாக்கத்திற்கு பின்புதான் எழுத்தாளனாலேயே அது என்ன என்று அறிய முடியும். வெவ்வேறு எழுத்தாளர்கள் இப்படி வெவ்வேறு விதமாக இக்கருத்தை சொல்லியிருக்கிறார்கள். வெள்ளைத் தாளில் முன்னேறு என்கிறார் நிக்கனோர் பர்ரா. யார் என்ன சொன்னாலும், தன் வாழ்வில் சொந்த அனுபவமாக அறியாத ஒருவரிடம், இதை சொல்லி புரியவைத்திட முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இது இலக்கியம் பற்றி என்னுடைய எந்த கருத்துக்கும் பொருந்தும்.

வெங்கட்ரமணனுடடைய பதிலில் அபாயகரமான ஓர் இடம் உண்டு. இலக்கியம் சார்ந்த உரையாடலில் “விமர்சன அதிகாரம்” எனும் பிரயோகத்தை கொண்டு வருவதன் வழியே, நம் சூழலை நச்சுப் புகையாய் மூடியிருக்கும் ஆபத்திற்கு அவரும் தெரிந்தோ தெரியாமலோ துணை போகிறார். மார்க்சியத்தில் ஆரம்பித்து கோட்பாட்டு விமர்சகர்களால் சுவீகரிக்கப்பட்டு இப்போது முகநூல் வம்புச் சூழலில் நிலைபெற்றிருக்கும் இக்கருத்தை எந்த அழகியல் விமர்சகனும் தன் முழு ஆற்றலாலும் மறுக்க வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றையும் அதிகாரத்துக்கான முனைப்பாக பார்ப்பது ஒருவகையான குறுக்கல்வாதம். அதிகாரத்தின்மேல் மோகம் கொண்டவர்களுக்கு எல்லாமே அதிகாரப் போட்டியாகவே தெரியும். இலக்கிய உரையாடலில் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. அழகியல்வாதிகள் தம் வசதிக்காக இதை பயன்படுத்தினால் அதன் கூர்முனை, நாளை அவர்கள் கழுத்துக்கே திரும்பும். “விமர்சன அதிகாரம்” எனும் சொற்றொடரை வைத்து எதிரேயிருப்பவரை நாசூக்காக முத்திரைக் குத்திவிட முடியும். நீ மேட்டிமைவாதி. நீ இடதுசாரி. நீ இந்துத்துவவாதி. நீ அப்படி. நீ இப்படி. அடிப்படை நல்லெண்ணம் இல்லாத இடத்திலோ இலக்கிய உரையாடல் நிகழ முடியாது.

இந்த “சமைக்கப்பட்டது” எனும் விமர்சனம் பற்றியும் என் கருத்தை கூற விரும்புகிறேன். இதுவும் ஜெவுடைய உரையின் தொடர்ச்சிதான். ஒரு வாசகனால் எழுத்தாளன் வெளிப்படும் இடத்தை கண்டுபிடிக்க முடியும் என்றால், அப்படி நடக்காத இடத்தையும் கண்டுபிடிக்க முடியும் தானே? இந்த எளிய உண்மையை எதிர்கொள்வதில் ஏன் இவ்வளவு பதற்றம்? எழுத்தாளன், ஏதோவோர் தருணத்தில், தான் புத்திசாலியாக இருந்து வாசகனை ஏமாற்றிவிட முடியும் என நினைத்தால் அது அபத்தமானது. இதையே நான் சுட்ட விரும்பினேன். எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் மந்திரமாக. மற்றபடி அதை ஓர் இலக்கிய அளவுகோலாக நான் முன்வைக்கவில்லை.

என் இலக்கிய அளவுகோலை தெரிந்துகொள்ள என் கட்டுரைகளை படிக்கலாம். வெங்கட்ரமணன் என் இலக்கிய கட்டுரைகளை படித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி படித்திருக்கும்பட்சத்தில் இலக்கிய விமர்சனத்தில் நான் புறவய வரையறைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதும், தனிமனித ரசனையை எப்படி என் அளவுகோலாக கொண்டிருக்கிறேன் என்பதும் அவருக்கு தெரிய வந்திருக்கும். “பூடமாக்குதல்”, “தர்க்க ஆராய்ச்சி” இவை பற்றியெல்லாம் இங்கே பேசவே வேண்டியதில்லை என்பதை அறிந்திருப்பார்.

இந்த பேச்சில், கடைசியில், எஞ்சியிருக்கும் ஒரே கேள்வி – நேர்மையான வாசகன் என்பவன் யார் என்பதுதான். இதற்கு உறுதியாக பதிலே சொல்ல முடியாது. அந்த வாசகன் இன்று இருக்கலாம். நாளை வரலாம். எழுத்தாளன் பார்க்கலாம். பார்க்காமல் போகலாம். ஆனால் அப்படி ஒரு நபரை எழுத்தாளன் நிச்சயம் உருவகிக்க வேண்டியுள்ளது.

ஒருவரோடு உரையாடும்போது அவர் சொல்வதை பொறுமையாகக் கேட்டு புரிந்துகொள்ள முயற்சிப்பது ஒரு நல்ல பழக்கம். முக்கியமாக ஒருவரை மறுக்க முற்படும்போது அவர் சொற்களுக்கு முழுமையாக காதுகொடுப்பது அவசியம். எல்லோராலும் பின்பற்றக்கூடிய பழக்கம் அல்ல இது. ஆனால் நல்ல பழக்கம். போலவே, எதிர் தரப்பினர் மேல் முத்திரைக் குத்தாமல் இருப்பதும், தந்திரமான சொற்களால் பயமுறுத்த நினைக்காமல் இருப்பதும் நல்ல பழக்கங்கள். வெங்கட்ரமணன் இவற்றை கருத்தில் கொள்வார் என நம்புகிறேன்.

அன்புடன்,
விஷால் ராஜா.

***

முந்தைய கட்டுரைதையல் சொல்- ஏ.வி.மணிகண்டன்
அடுத்த கட்டுரைகி.சரஸ்வதி அம்மாள்