லட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்- விஷால்ராஜா

அன்புள்ள ஜெ,

உங்களுடைய சமீபத்திய உரையை கேட்டேன்.

அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பற்றி பேசுவதில்,  உள்ளுக்குள் வகுத்திருக்கும் சுய எல்லைகள் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள். நேர்ப் பேச்சிலும் சொல்லியிருக்கிறீர்கள். சில நேரங்களில் அது எனக்கு ஏமாற்றமாகக் கூட இருந்திருக்கிறது. அரிய பாதையை கதவடைத்து மூடிவிட்டது போல. அத்தகைய தருணங்களில், மேற்கொண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்றும் தோன்றும். ஆனால்  தீர்மாணமான உங்கள் முகபாவத்தை கண்டு அமைதியாகிவிடுவேன்.

இந்த உரையும் அக்குறிப்புடனே துவங்குவதால், தொடர்ந்து நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்று மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தேன். அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அத்தனையையும் சொல்லிவிட்டீர்கள். கறாரான விமர்சனங்கள். சிந்தனையை விரட்டும் கருத்துக்கள். எழுத்து பற்றிய நுட்பமான அறிவுறுத்தல்கள். ஒரு மாணவனாய் அவற்றை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெங்களூர் இலக்கிய விழாவில் சந்தித்தபோது,  காட்சி ஊடகத்தின் எதிர்மறை தாக்கம் பற்றி உங்களிடம் கேட்டேன். திரைக்கதைகளின் பாதிப்பால் சமகால புனைவெழுத்தில், கதை எழுதுவதைக் காட்டிலும் கதை சுருக்கத்தை எழுதும் போக்கும் அதிகரித்திருக்கிறது என்று சொன்னீர்கள். அதுவே இந்த உரையில் இன்னும் நேர்த்தியாக விரித்தெடுக்கப்பட்டிருந்தது. ஒரு கவித்துவ கண்டடைதலாக முன்வைக்கப்படுகிறது. புனைவெழுத்து என்பது காலத்தை நீட்டிக்கும் செயல் என்று நீங்கள் சொன்னது அவ்வளவு துல்லியமான வரையறையாக இருந்தது.

கலை பற்றிய எந்த வரையறையும், கடைசியில், இந்த இடத்துக்கே வந்து சேரும் போல. சினிமா,காலத்தில் செதுக்குவது என்பது ஆந்த்ரே தர்க்காவ்ஸ்கியின் புகழ்பெற்ற சொற்றொடர். ஆனால், நீங்கள் அதை சொன்ன விதம் பரவசமாய் இருந்தது. எழுதும் முறையில் உள்ள சிக்கலை சுட்டிக்காட்டி அதை இயல்பாக ஒரு தத்துவமாக விரித்துவிட்டீர்கள். இலக்கியத்துக்கும் நிஜ வாழ்க்கைக்குமான வேறுபாடு – ஓர் அனுபவத்தில் பங்கெடுக்கும்போதே அதை விலகி நின்று அறிவதற்கான இடைவெளியே. இலக்கிய எழுத்தாளன் மறுமுனையில் காலத்தை நீட்டித்து வைத்திருப்பதாலேயே அது நடக்கிறது என நம்புகிறேன்.

இலக்கிய படைப்புகள் மேல் சில வாசகர்கள் விசித்திரமான ஒரு விமர்சனத்தை முன்வைப்பார்கள்.  “ஒன்றுமே நடப்பதில்லை” என்பது அவர்களுடைய குற்றச்சாட்டாக இருக்கும். உண்மையில் இலக்கியப் படைப்பில், காலம் நீண்டுக் கொண்டேச் செல்கிறது. சுற்றியிருப்பவற்றை பார்ப்பதற்கான, தியானிப்பதற்கான அவகாசம் கிடைக்கிறது. உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடிகிறது. மெல்ல துலங்கி வரும் உண்மையை உற்று கவனிக்க முடிகிறது. அவ்வகையில், உங்கள் உரை முக்கியமான தெளிவை அளித்தது. அல்லது கேடயம் போல ஒரு பாதுகாப்பினை.

ஒவ்வொரு புனைவுத் தருணத்திலும் எழுத்தாளன் தரித்து நிற்க வேண்டியிருக்கிறது. எழுத்தாளன் வெளிப்படுவது, “கதை” என்று நம்பப்படுகிற சம்பவங்களின் கோர்வையில் மட்டுமல்ல; விவரனை, எண்ணவோட்டம், படிமம் என்று புனைவில் அவன் தரித்து நிற்கும் இடங்களிலேயே தன்னை மீறி வெளிப்படுகிறான். அதாவது, காலத்தை விரித்தெடுக்கும்போது.

உங்கள் உரையின் கடைசி பகுதி அதே கருத்தை மேலும் ஆழமாக பேசியது. புனைவில் எழுத்தாளன் வெளிப்படும் இடமே, கலை மதிப்பு மிக்கது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டீர்கள். இதை நான் சொந்த அனுபவமாகவும் அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு கதையும் தன் பாதையை தேர்ந்தெடுக்கும் விதம் தீராத புதிரே. எல்லா எழுத்தாளர்களுமே வெவ்வேறு வார்த்தைகளில் இதை சொல்லியிருக்கிறார்கள். சார்லஸ் சிமிக் தன் கவிதைகள் பற்றி ஆச்சர்யத்தோடு சொல்கிறார். “கடவுளே, இது எப்படி என் தலைக்குள் நுழைந்தது? இது எப்படி இந்த பக்கத்தில் வந்தது?”. மொழியின் நனவிலியும் எழுத்தாளனின் நனவிலியும் சந்திக்கும் இடத்தில்தான் ஒரு புதிய திறப்பு நடக்கிறது. மொழியில் கண் விழிக்கும் புதியதோர் பிரக்ஞை. அதனாலேயே எழுத்தாளன் தன் நனவிலியை தடுக்கும் எந்த தர்க்க கட்டுபாட்டையும் -அரசியல் சார்பு முதல் கோட்பாட்டுச் சார்புவரை- விலக்க வேண்டியிருக்கிறது.

உங்கள் உரையின் அடுக்குமுறையும் முக்கியமானது. வாசகர்கள் பற்றி முதலில் பேசி, பிறகு எழுத்தாளன் நோக்கி சென்று, இலக்கியம் ஓர் உரையாடல்  என்பதை நிறுவுகிறீர்கள்.  இலக்கியம் அந்தரங்கமான ஓர் உரையாடலாக இருப்பதனாலேயே, புனைவில் இயல்பான மலர்ச்சி நிகழும்போது, அதை வாசகன் உடனடியாக அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறான். போலவே அத்தகைய மலர்ச்சி நடக்காதபோதும் அவனால் உடனே இனங்காண முடிகிறது. “ஒரு கதை சமைக்கப்பட்டது” என்று வாசகன் சொல்லும்போது அது ஆதாரமில்லாத நிரூபிக்கமுடியாத கருத்து போல தோன்றும். ஆனால் நேர்மையான ஒரு வாசகனால் அதை சரியாகவே கணித்துவிட முடியும்.

ஒரு கதை தன்னில் வளராமல் – முடிவற்ற பெருக்காய் மாறாமல்- ஓர் எல்லைக்குள் சுருங்கும்போது அக்கதை நிகழவில்லை; சமைக்கப்பட்டிருக்கிறது என்று வாசகன் உணர்கிறான்.  சமைக்கப்பட்ட எழுத்து என்று நாம் சொல்வது, எழுத்து நிகழாமல், எழுத்தாளன் தன் திட்டத்தில் துளி பிசிறில்லாமல் எழுதுவது. அல்லது தன்னை முன்வைப்பது. நல்ல வாசகர்களையும் சமயங்களில் திட்டமிட்ட எழுத்து ஏமாற்றிவிடும். அதைவிட பெரிய துரதிருஷ்டம் எழுதிய எழுத்தாளர்களையும் ஏமாற்றிவிடும் என்பதுதான். அதனாலேயே “எச்சரிக்கை தேவை” என்று மந்திரம் போல தனக்குள்ளேயே சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றது விதி வழி!

இந்த மாலைப் பொழுது உங்கள் பேச்சால் அழகாய் மாறியிருக்கிறது. தன்னம்பிக்கையும் பணிவும் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன. கலை நம்மை மீறி நிகழ்வது என்பது மிக மிக எளியவனாக உணர வைப்பதோடு நிறைவையும் கொடுக்கிறது.

நன்றிகள்!

“காலமும் ஐந்து குழந்தைகளும்” கதையில் அசோகமித்திரன்,

நான் ரெயிலைப் பிடிக்க வேண்டும். அல்லது அது என்னை விட்டுப் போய்விட வேண்டும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக்கணக்காகச் சிந்தனைகள்? எத்தனை சிந்தனைகள், எவ்வளவு எண்ணங்கள்! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக்கூடக் கொண்டு வந்துவிட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?
எனக்குத் தெரியாது. எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுதத்து என்று ஏற்படும்போதுதான் காலம்

அன்புடன்,
விஷால் ராஜா

முந்தைய கட்டுரைகொல்வேல் அரசி, கடிதம்
அடுத்த கட்டுரைஇளையோர் சந்திப்புகள்