அன்பின் ஜெ,
சமீப கால மன அழுத்தங்களின் எடை தாங்காமல், சில நாட்களுக்கு முன் பின்னிரவில் துயில் கலைந்து எழுந்து அமர்ந்து, அருகில் துயிலும் மனைவியையும், மகன், மகளையும் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
என்ன செய்வதென அறியாமல், எழுந்து வெளியில் சென்று உலாத்தி விட்டு வந்தால் துயில் வர வாய்ப்பிருக்கும் எனக் கருதி, நகருலா சென்றேன். பழகிய கால்களைப் போல், நல்லதொரு கருப்புத்தேநீர் போட்டுத்தரும் கடையை அடைந்து தேநீர் அருந்தி, அங்கேயே மொபைலில் தடவிக்கொண்டிருந்தேன்.
எதையோ தேடப்போய் வெண்முரசின் பக்கங்களுக்குள் சிக்கி, சரி மீள் வாசிப்போமென முதல் பகுதியிலிருந்தே ஆரம்பித்தேன்.
வெண்முரசின் ஆரம்பத்திலிருந்தே நாள் விடாமல் வாசித்த கர்வம் மிக்கவனாக இருந்தேன்.
ஆனால், மீள்வாசிப்பில் அறிந்தது, என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.
புதிதாக படிப்பது போல் இருந்தது.
முதற்கனலின் முடிவில், பீஷ்மர் சிகண்டிக்கு குருவாக பாடம் நடத்த ஆரம்பித்த பாலைவனக் காட்சிகள், புத்தம்புதிதாக வாசிப்பது போல் எண்ணம் வந்தது.
இப்போது 04/ஃபிப்ரவரி/2023 வாசித்துக்கொண்டிருக்கும் மழைப்பாடலின், திருதராஷ்டிரனின் அறிமுகக் காட்சியில், மேகராகம் கேட்டு/உணர்ந்து/பார்த்து கொண்டிருக்கும் காட்சியில் அயர்ந்து நின்று விட்டேன்.
மனதில் மொத்த வெண்முரசு, வாசித்தலையும் திரும்ப பார்க்க முயன்றேன்.
இளைய யாதவன், சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர வேறு எதுவும் முழுக்க நினைவுக்கு வரவில்லை.
எதனால் என்று புரியவில்லை.
அன்புடன்,
சிவக்குமரன் இராமலிங்கம்
அன்புள்ள சிவக்குமரன்,
திரும்ப வாசிக்கும்போது ஏன் அத்தனை அன்னியமாக தெரிகிறதென்றால் முந்தைய வாசிப்பில் நீங்கள் இளைய யாதவனைச் சார்ந்து ஒரு குவிப்பை உங்கள் வாசிப்பில் இயல்பாக உருவாக்கிக் கொண்டீர்கள் என்பதனால்தான். நாவல் வாசிப்பில் அது இயல்பாக நிகழ்வதுதான். அந்தக்குவிப்பால் நீங்கள் இளைய யாதவரை கூர்ந்து அறிந்திருப்பீர்கள். கூடவே பிறரை இளைய யாதவர் மறைத்துமிருப்பார். முக்கியமான நாவல்களை மீண்டும் வாசிக்கவேண்டும் என்பது இதனால்தான். ம்
அப்படியென்றால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனியாக வாசிக்கவேண்டுமா? தேவையில்லை. முதல் வாசிப்பில் மட்டுமே அந்தக்குவிதல் நிகழும். அடுத்த வாசிப்பு எப்போதுமே நுண்செய்திகளை நோக்கியதாக, விரிந்து பரவுவதாகவே இருக்கும். அது இயல்பான , அனைவருமே உணரக்கூடிய ஒன்றே .
அன்புடன்
ஜெ