மழை பாடலாகும்போது… ரம்யா மனோகரன்

மழைப்பாடல் – செம்பதிப்பு வாங்க

மழைப்பாடல் மின்னூலகம்

நேற்றுவரை வாழ்ந்திருந்த மழைப்பாடல் வாழ்க்கைப் பகுதியின், குறிப்பு தொகுப்பாய் இப்பதிவு அமையட்டும் என்று மனம் விழைந்தாலும்,இதில் ஆசிரியர் சொல்வது போல், “கைக்குக் கிடைத்த வண்ணத்தை அள்ளி திரையில் வீசியபின் அதன் இயல்பான வழிதல்களைக்கொண்டே ஓவியத்தை அமைக்கும் ஒரு முறை உண்டு”, அதைப்போல் நானும் இந்த நொடிக்கு என்னை தந்துவிட்டு அது கொடுக்கும் வார்த்தைகளை கோர்த்து கொண்டு செல்ல போகிறேன்.

முதல் பகுதி படித்தப்பொழுதே எனக்குள் எழுந்த அந்த உணர்வினை எழுத முடியாமல் தவித்தேன். இதில் அவர் முடியும் தருவாயில் சொல்லியிருப்பதை போல் , என்னால் அந்த உணர்வினை முழுதாய் தீண்டி தெரிந்து இங்கு வார்த்தையில் வடித்துவிட முடியுமா என்ற பிரம்மாண்ட மலைப்பு எழுந்தது. ஆம் , இது சரியான வார்த்தை என்று தோன்றுகிறது.

இவர் எழுத்துக்களில் மூழ்கி இந்த அண்ட பெருவெளியில் நான் தனியாய் சுற்றிக்கொண்டிருந்தேன் . ஆயினும், நான் அஞ்சவில்லை .அது தனிமையுமில்லை. ஒரு வகையில் அது ஒரு விடுதலையாகவே உணர்கிறேன்.

அலகிலா நடனம் மட்டுமே இருந்தது என்று அவர் ஆரம்பித்திருக்கும் ஆட்டத்தை, பெருங்களியாட்டமாய் ஆடி தீர்த்திருக்கிறார் என்றே சொல்ல தோன்றுகிறது.

“வெல்லா வீழா பெருவிளையாடல் “- வெல்லவியலா சொல்லாடல் . இங்கு ஆடிய சொற்பகடையாட்டத்தில், அவரே சகுனி. அவர் தெளித்த உவமைகளும், ஒப்புமைகளும் ஒப்பற்றவை. அதை மட்டுமே தனியாய் தொகுத்து வைத்துக்கொள்ள ஆசை. அதில், ஓரு சோற்றுப்பதம் எனக்காக :

“காலை இளவெயில் முற்றத்தின் சிவந்த மண்பரப்பில் பரவியிருக்க அதில்கிடந்த சிறுகற்களின் நிழல்கள் மேற்குநோக்கி நீண்டு கறைகள்போலத் தெரிந்தன”.

அம்மா செய்யும் பூரி கிழங்குடன், சிறு வயதில் சன் டிவியில் காலை 10 மணிக்கு  ‘இது மஹாபாரதக் கதை ‘ என்று ஆரம்பிப்பதே ஞாயிற்றுக்கிழமைகள். இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் அது ஞாயிற்றுக்கிழமையாய் இராது. அதில் வந்த பீஷ்மரும், சகுனியும் இன்னும் என் நினைவில் உள்ளனர். இருப்பினும் எனக்கு மஹாபாரதம் முழுமையாக தெரியாது. அதுவே நான் இப்படைப்பை இன்னும் ரசிப்பதற்கு  பெரும் வாய்ப்பாய் அமைந்தனவோ என்று எண்ணிக்கொள்கிறேன்.

ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் ஒரு தேன்துளி – நாவால் தொட்டு இனிப்புக்கொள்ளவோ, அல்லது தீத்துளி- தீண்டப்பட்டு உயிர் துடிக்கவோ.

சில இடங்களில் , தேன் குளத்தில் திளைத்திருந்தேன்.சில இடங்களில், தீத்துளிகளால் திகைத்து சிலைத்திருந்தேன்.தெளிந்த நீரோடையாய் அவர் எண்ணத்திசை நோக்கி கைக்கோர்த்து சென்ற‌ அனுபவங்கள், பல இடங்களில்.

பீஷ்மர், திருதிராஷ்டிரருக்கு கற்பிக்கும் முதல் பாடம், நான் ரசித்த பலவற்றுள் முந்தியடித்து இதோ இங்கு வந்து விழுகிறது.

கைகளைக் கீழே போடு . கையை நீட்டி நீ நடந்தால் உன் எதிரி தன்னம்பிக்கையை அடைவான் . பிறரைப்போலவே இரு . அதுதான் தொடக்கம்

மனித உடலும் மனமும் எத்தனை ஆற்றல்கொண்டதானாலும் மிகமிக நொய்மையான சில இடங்கள் அவற்றில் உண்டு . நொய்ந்த இடங்களை வல்லமைமிக்க இடங்களைக் கொண்டு காத்துக்கொள்பவனே உடலையும் மனதையும் வெல்லமுடியும்

திருதிராஷ்டிரர் என்று என்னை மரியாதையுடன் அழைக்க வைத்தது இவர் அந்த கதாப்’பாத்திரத்தை’ வனைத்த விதமே.

நான் அறிந்த திருதிராஷ்டிரன், தான் பார்வையற்றவன் என்பதை பெருங்குறையாய் பார்த்தவன். அந்த முகத்தில் எப்பவும் ஒரு சோகம் இழைந்தோடிய நினைவு எனக்குள்.

ஜெ.மோ‍வின், திருதிராஷ்டிரரோ வளர்ந்த இளகிய மரம் போன்றவர். பாசத்தால், இசையால் கணிந்து உடைபவர். வீரத்தால், மூர்க்கத்தால் தடைகளை உடைத்து எண்ணியதை அடைபவர். அவர் காந்தார வசுமதியை அடைந்த விதம் , அடைந்து அமர்ந்து அமைத விதம், காந்தாரி அவர் அமைத கோலத்தில், தன் மன கோலத்தை தொடங்கிய விதம், நான் சுவைத்த‌ தேந்துளிகளுள் ஒன்று.

பாலை நிலத்தையும் , அங்கு சுழன்ற‌ காற்றையும் அவர் விதர்த்த விதம் , நான் வியர்த்த‌ கணம்.

அவர் சகுனியை அறிமுகப்படுத்திய தருணத்தில், ஒரு மாபெரும் யுத்தத்திற்கான வியூகன் என்று சிறு வயதில் கேள்வியுற்றதோ, நம் அன்றாட‌ பேச்சு வழக்கில், சகுனியை புழக்கத்தில் வைத்திருந்ததாலோ என்னவோ, எனக்குள் ஒரு சின்ன அதிர்வு. மேலும், இதுவரை சகுனியின், சகுனித்தனம் என்று நாம் சொல்லி வந்த கட்டத்தை ஆசிரியர் இந்த பாகத்தில் தொடவில்லை. ஆனால், இதுவரை பகைமையின் மொத்த உருவாய் மட்டுமே நான் கண்ட சகுனியின் சகோதரத்துவ பக்கத்தை எனக்கு காட்டிய விதம் பிடித்திருந்தது.

மேலும் சகுனி, அமைச்சரவையில் கையாளும் முறை வாயிலாய், நமக்கு தலைமைத்துவ குணங்களை அழகாய் எடுத்து கூறியுள்ள விதம் – ரசிக்கத்தக்கது, பின்பற்றத்தக்கது.

அதே வகையில் குந்தி, காந்தார அரசிகளை கையாண்ட விதமும் உற்று நோக்க வேண்டியவை.

இதுவரை இரண்டு நாவல்களை வாசித்த பல தருணங்களில், நான் ‘ச்சே என்னமா எழுதியிருக்கிறார்’ என்றும், அம்மாதிரி நான் சிலிர்த்த நொடிகளில்,  ஜெ.மோ எவ்வாறு அதை எழுதியிருப்பார்? அதை எழுதும்போது, எவ்வகையான உணர்வுக்கு ஆளாகியிருப்பார்? அவர், தூங்கியிருப்பாரா? இந்த அனுபவ கட்டுரையை நான் எழுதி முடிப்பதற்குள்ளயே, என்னால் பிறவற்றை யோசிக்க முடியாமல், இதிலேயே லயித்து இருக்கிறேன். இது மட்டுமல்ல, நான் ஒரு சிறு கவிதை எழுதுவதாய் இருந்தாலும் அப்படித்தான். இவர் எப்படி அந்த 7 வருடங்களில் தூங்கினார்? மற்ற இயல்பு செயல்களையெல்லாம் செய்தார்? இதற்கிடையில் திரைக்கதைகள் வேறு எழுதிக்கொண்டிருந்தார் என கேள்வியுற்று பிரமித்திருக்கிறேன்.

அம்மாதிரி நான் பிரமித்த‌ நொடிகளை மட்டுமே இங்கு தொகுத்தாலே, மேலும் ஒரு 500 வார்த்தைகளை, இக்கட்டுரை சர்வ சாதாரணமாய் தொட்டுவிடும். இருத்தாலும், ஆரம்பத்தில் கூறியதை போலே, அவர் குலைத்த வண்ணங்களுக்குள் என் கைககளை வளைத்து விரிந்து செல்கிறேன். இதோ அது அடுத்து தொடுகிற‌ வண்ணம் _ செல்வத்திற்கான விளக்கம், காந்தாரி_சத்யவிரதை உரையாடலில்:

“சத்யவிரதை புன்னகைசெய்து “ நாம் எவற்றைப் பயன்படுத்துகிறோமோ அவையல்ல , எவற்றை வைத்திருக்கிறோமோ அவையே நம் செல்வம் ” என்றாள் . காந்தாரி சிரித்தபடி “ இல்லை சத்யை , நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமைகொண்டிருக்கிறோமோ அவையே நம் செல்வம் . மற்றவை நம்முடையவையே அல்ல ” என்றாள். _ தேந்துளியில் லயித்த மற்றுமொரு தருணம்.

மேலும், காந்தாரத்திற்கு மணமுடிக்க செல்லும்போதும், அத்தருணம் நெருங்கும்போதும், தன் விதுர மூடனிடம், திருதர் கொள்ளும் உரையாடல்கள் அனைத்தும் முத்துக்கள். (.ம். இது இனிய அனுபவமாக இருக்கிறது . நெஞ்சுக்குள் உறையடுப்பின் கனல்மூட்டம் இருப்பதைப்போல இருக்கிறதுஎன்றான் . “ ஆம் , இனிய உணர்வுதான்என்றான் விதுரன் . திருதராஷ்டிரன்நீ அதை அறியவே போவதில்லை மூடா . நீ கற்ற நூல்கள் அனைத்தும் குறுக்கே வந்து நிற்கும் . இந்த உணர்ச்சிகளை எல்லாம் சொற்களாக மாற்றிக்கொண்டு உன் அகத்தின் வினாக்களத்தில் சோழிகளாகப் பரப்பிக்கொள்வாய்என்றான்)

தொலைக்காட்சியில் வந்த எல்லா மஹாபாரத கதைமாந்தர்களும் சிவப்பு நிறங்கொண்டவரே. ஆனால், ஜெ.மோ.வின் கதைமாந்தர்கள் பெரும்பாலும் கருமை நிறங்கொண்டவர். மேலும், நான் பார்த்த எல்லா பெண்டீரும், மெல்லிய இடை, நல்ல உயரம், சிவப்பு நிறம். ஆனால், இதில் எல்லா வகையான உருவ அடையாளங்களுடன் பெண்களை படைத்திருந்தார். அது என்னை உற்று நோக்க செய்தது.

பீஷ்மரை முதலில் துவந்த யுத்தத்திற்கு அழைத்து மற்போரிடும் இடத்தில் ‘பன்றியை போல் அவர் மார்பில் பாய்ந்தான்’ என்ற வரிக்கண்ணாடியில், சிகண்டியின் பிம்பத்தை காட்டிய வினாடியை நான் தவறவிடவில்லை.

குந்தி – இதுவரை இவள் என்னை இவ்வளவு கம்பீரமாய் அணுகியதில்லை. அந்த கம்பீரத்தின் தொடர்ச்சி, பிள்ளை பருவத்தில் கால் பதியாமல், தாண்டிச் சென்று, தலைவனாய் உருவெடுத்து நின்ற  பாண்டவ‌ தலைமகன் தருமனிடம் கண்டது, அவன் அன்னையுடன் சேர்த்து என்னையும் கர்வப்படுத்தியது.

அரச குடும்பங்களில், ஆண்களை விட பெண்களே அதிகார வேட்கை உடையவராய் இருந்திருக்கின்றனர். அரசியல் வாரிசுகளை உருவாக்குவதயே பிரதானமாய் கொண்டிருந்திருப்பது, பிள்ளையை பெறுபவள் எப்படி போனாலும் பரவாயில்லை, பிள்ளையை பெற்று எடுப்பதே முக்கியம் என்று வழிவழியாய் எண்ணியது, அதுவும் பெண்களே அவ்வாறு எண்ணியது சற்று பதற்றத்தை உருவாக்கியது. அக்கால பெண்களின் வாழ்க்கை முறையில் 1 சதவிகித உண்மையையாவது இதிகாசம் காட்டியிருக்கும் என்பதுதான் அந்த பதற்றத்திற்கு காரணமோ என்று தோன்றுகிறது.

இக்கதையில் விதுரனை ஈன்ற அவன் தாய், அவனை ஈன்றுத்தரும் கருவியாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டதும், ஈன்றவள் மீது பெரிய ஈடுபாடு காட்டாதவனாய் அவன் இருந்ததும், எல்லாவற்றிற்கும் மேல், அவள் தன் மகனின் மஞ்சத்தின் வாசலில் வந்து ஓலமிட்டதும் என்னை வருத்தியது. அந்த ஓலத்திற்கு இதுதான் காரணம் என்று தெரியாதது இன்னும் உலைச்சலே. ஆசிரியரிடம் எனக்கிருக்கும் கேள்வி இது. எதனால் அவளை கதற வைத்தீர்கள்? எனக்குள் பல காரணங்கள் வந்து மோதினாலும், அவள் மஞ்சத்தின் அறையை மோதி முட்டி மண்டியிட்டு துடித்த காரணம் தெரிந்துக் கொள்ள மனம் விரைகிறது.

90களின் குழந்தைகள் என்ற வகையில், எனக்கு படத்திலேயே கதாநாயகி நாயகன் சேர வேண்டும். இல்லையென்றால் அதன் தாக்கம் ஒரு நாளாவது என் மனதில் தங்கும்.

அப்படியிருக்க, குந்தியை, பாண்டு கடைசி வரையிலும் நெருங்காமல் வைத்திருந்தது, குந்தியின் அணுக்க தோழியாய், (ஆசிரியரே, நீங்கள் காட்டிய உவமை போல) என் மனதில் ஒரு வலி மின்னல் வெட்டி விலகுவதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை. குந்தி அதை எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறமுடியாது. இரு இடத்தில் அவள் தவிப்பை வேறு விதத்தில் வெளிக்காட்டியிருப்பாள். ஒரு பெண்ணாகாவும், உங்கள் வரிகள் மூலமாகவும் அதனை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.

இப்போது நினைக்கையில், தன் பிறந்த நாட்டிற்கு வலிமை சேர்ப்பதற்காய், வலிமையற்ற பாண்டுவை திருமணம் செய்துக்கொண்டதே, அவனை அவளிடமிருந்து விலக்கி வைத்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.

அவன் தன்னை பயன்படுத்திக் கொண்டதாய் நினைத்திருந்தாலும், அவளை ஒரு தாயாய் எண்ண தொடங்கியதாய் வரிகளுண்டு. அன்றிரவு மட்டுமே எனக்கு தெரிந்து அவன் அவளுடன் சற்று நேரம் பேசியிருந்ததாய் நினைவு. பேசிய பொழுதை சரியாக பயன்படுத்தி பாண்டுவின் பாண்டவர்கள் பிறப்பிற்கான கருவை வைத்தது, நான் ரசித்த மற்றுமொரு தேந்துளி.

கர்ணனின் பிறப்பை பாண்டுவிடம் அனகையை விட்டு ஆசிரியர் சொன்ன விதம் மற்றும் விடயங்கள் – நான் பிரமித்தவை.

அதன்பின், தன்னாட்டு படை பலத்தை கொண்டு தாய் நாட்டை காத்தவாறு, அவன் அவளைக்கொண்டு தன் சந்ததியை விருத்தி செய்ய நினைத்து மற்றும் அவன் அளித்த அனுமதி, எனக்கு வியாசரின் காலத்தை நினைவுக் கொள்ள செய்தது.

அவர் இந்நூலை எழுதிய காலத்தில், உடன்கட்டை ஏறுதல் இருந்திருக்கலாம். அதற்கு எதிர்வினையாய் இப்படி ஒரு விடயம் வைத்திருப்பாரோ என்று எண்ணிப்பார்த்தேன்.

கர்ணனின் கருவேற்று நின்ற‌ குந்தியின் அம்சங்களும், அமைந்த நிமித்தங்களும் அற்புதமான கற்பனைகள்.

எனக்கு இங்கு ஒரு பெரிய கேள்வி முளைத்தது. அது ஏன் குந்தி பெற்ற பிள்ளைகள் அனைத்தும் நன்னிமித்தங்களுடனும், காந்தாரியின் தலைப்புதல்வன் ஒருவனுக்கு கொடுத்த நிமித்தங்களே பயங்கரமானவையுமாக இருந்தன?

கருவிலேயே காலத்தின் கோலங்களை கோள்களுடன் இணைக்கப்பார்க்கிறாரோ ஆசிரியர் என்று தோன்றியது. இதை நினைத்த மாத்திரத்தில் ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்ற வரி நினைவில் மோதி சென்றது. பின் ‘அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்ற வரி முளைத்த நொடியில், ஆசிரியரின் வரிகளான, ‘மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடுகிறது . அதன்முன் சரணடையும் பாவனையால் ஆண்மை ஆடுகிறது’ என்பது என் நினைவடுக்கிலிருந்து இங்கு நழுவி விழுகிறது.

மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடிய ஆட்டம் முடிந்த நொடிதானோ அம்பிகை அம்பாலிகையை நோக்கி சென்றதும், சத்யவதி அந்த‌ முடிவை எடுத்ததும்? அவர்கள் ஆட்டம் முடிந்தது, ஆனால் அவர்கள் போட்ட விதை?

(“கனி மண்ணை நோக்கி விழும் முடிவை எப்போது எடுக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு . அதற்குத்தெரிகிறது அவ்வளவுதான் ” என்றாள்).

இதே மடமை என்னும் வார்த்தையை நினைக்கும்போது, மாத்ரியின் நினைவலை என் மன ஆழியில் எழும்புகிறது. ‘அவர் காமத்தை நிறைவு செய்யவில்லை, நான் அவருடன் செல்ல வேண்டும். அவருடன் ஏறி விட்டால், உடல் எங்களின் தடைகளாய் இராது’ என்று அவள் கூறுகிறாள். அப்படி உடல் தடையில்லையென்றால், மனதால் அனுதினமும் ஆயிரமுறை புணர்ந்திருப்பாரே? இங்கு எதை காமம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்? எதற்காக மாத்ரி அம்முடிவு எடுத்தாள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் ஆசிரியரிடம். அவள் எடுத்து, இயல்பாய் கடந்து சென்ற அந்நொடியை என்னால் கடக்கமுடியவில்லை சில மணி நேரங்களுக்கு.

இங்கு நான் கண்டிப்பாக ஒன்று குறிப்பிட வேண்டும். மணக்கோலம் பூண்டு அவள் வந்த காட்சியில், மனம் அவள் எப்படி இருப்பாள் என்று புரட்டிக்கொண்டிருக்க‌, அடுத்த வரியில், அவளது உருவ அடையாளங்களை மறுபடி குறிப்பிட்டிருந்தார்.

அதே போல், அம்பாலிகை காதோரம் நரை தழுவி, செய்தி கேட்டு உட்கார்ந்திருந்த தருணம், அவள் முதன்முதலில் அரண்மனைக்கு வந்த நொடியை மனம் அசைப்போட்டதை, ஆசிரியர் தெரிந்துக்கொண்டு, அடுத்த வரிகளில் வைத்திருந்ததை கண்டு வாய் பொத்தி விழி விரிந்தேன்.

அம்பாலிகையை பற்றி நினைக்கும்போது,அவள் மகன் பாண்டுவால் இந்த பிறவியில் காமத்தை உய்த்துணர முடியாது என்பதை கேள்விப்பட்டதும், அவள் ஏன் உள்ளூர குதூகளித்தாள்? ஒரு வேளை அதுதான் பாண்டு எடுத்த எல்லா முடிவுகளுக்கும், முடிவுக்கும் காரணமோ?

அந்த முடிவால், பாதிப்புக்குள்ளான ஆன்மாவையும், அந்த நொடிகளையும் ஆசிரியர் விவரித்த விதங்கள் நான் தீத்துளிகளில் துடிதுடித்த தருணங்கள். அதை தானே உணர்ந்திருந்தாலொழிய அவ்வாறு எழுதுதல் சாத்தியமில்லை என்ற எண்ணம் ஆணித்தரமாக இருக்கிறது.

குந்தி சொல்வதாய் ஒரு வரி, இந்தத் தருணத்துக்கு அப்பால் இனி என்ன நிகழும் என்று எண்ணாமலிருப்பதே இதைக் கையாள்வதற்கான சிறந்த வழி” – சரியாக இதே வகையில் 2 வருடத்திற்கு முன் நான் கையாள முயற்சித்திருக்கிறேன்.

இறப்பின் கணத்தில் உருவாகும் எண்ண ஓட்டங்கள் எல்லாமே இறப்பை எளிதாக்கிக் கொள்வதற்காகத்தான் . பெரிய உணவை சிறு துண்டுகளாக ஆக்கிக்கொள்வதுபோல அந்தப்பேரனுபவத்தை கூறு போட்டுக்கொள்வதற்காகத்தான்.

அங்கிருக்கும் அனைவரிலும் பாண்டு ஒரு பழைய நினைவாக மட்டுமே எஞ்சுவான் . அவளுக்குள்ளும் அப்படித்தான் . வரலாற்றில் அவனுடைய இடமே அதுதான் . தருமனுக்கு மட்டும்தான் அவன் ஒவ்வொருநாளும் துணையிருக்கும் உணர்வு .

பாண்டு தேரிலேறி இரண்டாமுறையாய் தலையை வெளியில் திருப்பி, அரண்மனையை நோக்கினான். அப்போது சத்யவதி ‘ இவனை இனி நான் பார்க்கப்போவதில்லை’ என்று கூறுகையில் கூட அதன் பொருளை நான் சரியாக உணரவில்லை.

எது எப்படியானாலும்,

மண் மீண்டும் புதியதாகப் பிறந்தெழட்டும் . உயிர்கள் மீண்டும் புதுநம்பிக்கை கொள்ளட்டும் . ஏனென்றால் இங்கு உயிர்கள் வாழ்ந்தாக வேண்டும்

என்ற ஆசிரியரின் வரிகளை வழிமொழிந்து விடைப்பெறுவது,

 

-‍ரம்யா மனோகரன்

முந்தைய கட்டுரைலக்ஷ்மி சரவணக்குமார் விழா – உரை
அடுத்த கட்டுரைஆசிரியன் எனும் நிலை, கடிதம்