எமிலி,மோகனரங்கன் – தேவி.க

அன்புள்ள ஆசிரியர்க்கு,

இந்த உலகம் அழகாலும் இனிமையாலும் நிறைந்துள்ளது. காய்ந்து உதிர்ந்து கிழே விழுந்துகிடக்கும் இலைச்சருகு மேல் வெயில் படரும் போது அது கொள்ளும் அழகு அத்தனை தனித்துவமானது. எவ்வளவு குழப்பங்களுடனும் சோர்வுடனும் மனம் இருந்தாலும் சாலையின் ஓரத்தில் பூத்திருக்கும் சிறிய மஞ்சள் நிற பூக்கள் கவனத்தை ஈர்த்து விடுகின்றன நொடியில் ஒரு மலர்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்து விடுகிறது.

ஒருமுறை ஊரில் கோவில் விழாவில் உற்சவர் ஆலயத்தை சுற்றி வரும் போது எல்லோருமே பக்திப்பெருக்கில் திருநாமங்களை கூவிக்கொண்டு இருந்த போது மேற்கே சூரியன் அஸ்தமித்த வண்ணம் இருந்தது மேகங்கள் அற்ற வானில் அடர்சிவப்பில் வெய்யோன் காட்சி அளித்தார் நான் பார்த்த மிகச்சிறந்த அஸ்தமனம் அது. மெல்ல கூட்டத்தில் இருந்து விலகி வந்து தனியே நின்ற என்னை வசைபாடி அழைத்து சென்றார்கள். நம் மரபு அழகையும் இனிமையையும் விலக்கவில்லை மாறாக அதன் வழியே சென்று எய்த வேண்டியதை எய்தலாம் என்கிறது.

இமைக்கணத்தில் திரெளபதி கிருஷ்ணிடம் “யாதவனே, எனக்கு நீ விழிநிறைக்கும் அழகும் உளம் நிறையும் இனிமையும் மட்டுமே. பீலியும் குழலும் அன்றி வேறல்ல.” என்கிறாள். நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போ எனக்கு ஒன்றுமில்லை எனக்கு நீ என் கண் நிறைக்கும் அழகு மட்டுமே என்கிறாள்.  அழகு அன்றி எதையுமே தன்னால் நினைக்க கூடவில்லை இனிமையை விலக்கியதும் இல்லை என்கிறாள் அவ்வழியே செல்லும் தனக்கு அருள வேண்டுகிறாள். கிருஷ்ணனும் ஒரு அழகையும் ஒருத்துளி இனிமையையும் விலக்க வேண்டியதில்லை அனைத்து அழகுகளையும் அத்தனை இனிமைகளையும் சூடுக என்கிறார்.  அனைத்து பாதைகளும் அங்கே சென்று சேரும் எல்லோருக்குமான பொதுபாதை ஒன்றில்லை ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய வழி உண்டு. அழகும் இனிமையும் உண்மையும் ஞானமும் சென்று சேரும் இடம் ஒன்றே என்கிறார்.

எமிலி டிக்கின்சன் கவிதை ஒன்று

க. மோகனரங்கன் அவர்கள் மொழிப்பெயர்த்தது..

அழகிற்காக வேண்டி நான் மரித்தேன்

கல்லறைத் தோட்டத்திலோ பற்றாக்குறை.

உண்மையின் பொருட்டு இறந்த ஒருவர் அடுத்திருந்த இடத்தில் கிடத்தப்பட்டார்.

அவர் மெல்ல வினவினார்

எதனால் நான் மூச்சிழந்தேன்?

அழகிற்காக வேண்டிபதிலளித்தேன்

நான் உண்மையின் பொருட்டு இரண்டும் ஒன்றே:

நாம் சோதரர்கள்அவர் சொன்னார்

ஆக ஒரிரவில் சந்திக்க வாய்த்த உற்றார் போலும்

நாங்கள் படுக்கைகளுக்கிடையே பேசிக்கொண்டோம்

பாசி எம் உதடுகளை மேவும் வரையிலும்

படர்ந்து எமது பெயர்களை மூடும் மட்டும்.”

எமிலி டிக்கின்சன் கவிதைகளில் தொடர்ந்து கடவுளும் மரணமும் மரணமின்மையும் தனிமையும் பேசப்படுகின்றன. டிசம்பர் 10 1830 ல் மாசசூசெட்ஸ் நகரில் பிறந்த ஒரு அமெரிக்க பெண் கவிஞரான அவர் தான் வாழ்ந்த காலத்தில் அறியபடாதவராகவே இருந்தார். அவரைப் பற்றிய தகவல்கள் பல ஆச்சரியம் அளிப்பவை கூடவே துயரத்தையும். எமிலி வாழ்வின் பெரும் பகுதியை தனிமையில் கழித்தார் குறிப்பிட்ட காலத்திற்கு பின் வீட்டை விட்டு எங்கும் சென்றதில்லை எப்போதும் வெள்ளைநிற ஆடைகளையே அணியும் வழக்கமுள்ளவராக இருந்துள்ளார் அவர் இருந்த வரை பத்திற்கும் குறைவான கவிதைகளே வெளியாகியுள்ளன. 1886 மே 15ல் அவர் மறைந்தார். அதன் பிறகு அவரின் அறையில் இருந்த ஒரு பெட்டியில் இருந்து எமிலியின் தங்கை லவினியா கவிதைளை கண்டெடுத்தார் ஏறத்தாழ 1800 கவிதைகள்.  எமிலி டிக்கின்சன் முதல் கவிதைத் தொகுப்பு 1890 ல் வெளியிடப்பட்டது ஆனால் அவை பலமுறை திருத்தப்பட்டே வெளிவந்தன காரணம் கவிதைகளின் பேசுப்பொருள் அக்காலத்திற்கு மீறியதாக இருந்ததாக எண்ணியது தான். அதன் பிறகு 1955 ல் அறிஞர் தாமஸ் எச். ஜான்சன் “The poems of Emily Dickinson” என்ற முழுத்தொகுப்பை வெளியிட்டார்.

எமிலியின் கவிதைகளிலும் கடிதங்களிலும் திரும்ப திரும்ப ஒரு பெயரை நீக்கம் செய்துள்ளதாக The New York times 1998 ல் அறிக்கை வெளியிட்டது, “சூசன்” என்பதே அப்பெயர். சூசன் ஹண்டிங்டன் கில்பர்ட் டிக்கின்சன் எமிலியின் தோழியும் அவரது அண்ணனின் மனைவியும் ஆவார். எமிலி தன்னுடைய எண்ணங்களையும் கனவுகளையும் அலைபாய்தல்களையும் அதிக அளவில் சூசனிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார் மேலும் அவருடைய கவிதைகளை வாசித்த ஒரே நபராக சூசன் இருந்துள்ளார் சில கவிதைகள் அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே இருந்த உறவின் தீவிரத்தை பற்றிய கருத்துக்கள் இருவேறாக இருக்கலாம். எவ்வண்ணம் இருப்பினும் கவிஞர்கள் கவிஞனாகவே நீடிக்கிறார்கள்.

பொறாமையுடைய கடவுள்

 

கடவுள் மெய்யாகவே பொறாமைபிடித்தவர் ,

அவரோடில்லாமல் நாம்

ஒருவரோடொருவர் விளையாடிக் கொள்வதை

காணப் பொறுக்காது அவருக்கு .

 

(க. மோகனரங்கன். )

எவ்வளவு சத்தியம் எமிலியின்  இந்த வரிகள். கடவுளை விட பொறாமை பிடித்தவர்கள் யாராவது இருக்க முடியுமா?  எத்தனை சீக்கிரத்தில் ஆட்டத்தையே மாற்றிவிடுகிறார். இதோ இந்த உறவு இப்படியே தான் தொடரப்போகிறது நானும் நீயும் கண்ணில் நீர் வர சிரித்து ஆடுகிறோம் இது முடிய போவதில்லை என்னும் கணத்தில் எல்லாம் கலைந்து விடுகிறது ஏன் என்று சமயங்களில் தெரியாமல் கூட போய்விடும். இப்போது தெரிகிறது எல்லாம் பொறாமை பிடித்த கடவுளின் காரியம்.

வேலிக்கு அப்பால்

 

வேலிக்கு அப்பால்

ஸ்ட்ராபெர்ரிகள் விளையும்

நான் முயன்றால் வேலியைத்

தாண்டிக் குதித்துவிட

என்னால் முடியும்.

நான் அறிவேன்

பெர்ரிகள் சுவையானவை

ஆனால் என்ன செய்வது?

எனது மேலங்கியை நான் அழுக்காக்கிக் கொண்டால்

கடவுள் நிச்சயமாகக் கோபிப்பார்

அன்பே நான் யூகிக்கிறேன்

அவர் ஒரு சிறுவனாக இருந்தால்

அவரும் எட்டிக் குதிக்கவே செய்திருப்பார்.

( க. மோகனரங்கன்)

வேலியை தாண்ட முயலாதவர் எவர்? அந்த பக்கம் இருப்பது எப்போதுமே சுவையாகவும் இனிமையாகவுமே இருக்கிறது நம்மை இழுத்த வண்ணமே உள்ளது அது. தாண்டினால் எல்லாமே அழுக்காகி விடும் அதனால் அது கடவுளின் பெயரால் மறுக்கப்படுகிறது அச்சுறுத்தப்படுகிறது. உள்ளம் வேலியை தாண்டுவதையே எண்ணுகிறது சமயங்களில் தாண்டிவிடுகிறது ஆனாலும் அங்கியாகிய உடல் அழுக்காகிவிடும் என்றும் பதறுகிறது. சிறுவர்களுக்கு கள்ளமில்லை ஏனெனில் அங்கிகளை பற்றி அறியமாட்டார்கள் அவர்கள் தாண்டலாம். கடவுளுக்கும் வாய்ப்பு குறைவுதான் ஒருவேளை அவர் சிறுவனாக மாற முடிந்தால் தாண்டி குதிக்கலாம்.

க. மோகனரங்கன் அவர்களுக்கு நன்றி.

மிக்க அன்புடன்

தேவி. க

ஆவடி.

முந்தைய கட்டுரைபுத்தகக் காட்சியில்…கடிதம்
அடுத்த கட்டுரைஅழகியநாயகி அம்மாள்