சிதையும் குடும்பம் – வெங்கி

ஒரு குடும்பம் சிதைகிறது – இணைய நூலகம்

ஒரு குடும்பம் சிதைகிறது – வாங்க


கண்ணீரைப் பின்தொடர்தல் மின்னூல் வாங்க 

கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க 

அன்பின் ஜெ,

வணக்கங்களும் அன்பும்.

சமீபத்தில் பைரப்பாவின் “ஒரு குடும்பம் சிதைகிறது” வாசித்தேன். “வாழ்வின் பொருள் என்ன?” என்ற கேள்வி மறுபடியும் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது.

வழக்கம் போல் பெரிய செவ்வியல் தன்மை கொண்ட நாவல்களைப் படித்து முடித்ததும் மனதில் உண்டாகும் ஆழ்ந்த இனம்புரியாத கனத்துடன்தான் “ஒரு குடும்பம் சிதைகிறது” நாவலை வாசித்து முடித்த பின்னும், அதன் முன் மௌனித்து அமைதியாக அமர்ந்திருந்தேன். இம்முறை மனது சற்று அதிகமாகவே அலைபாய்ந்தது. அந்த வாழ்க்கை…, அந்த மனிதர்கள்…, நஞ்சம்மா… மனம் ஏகத்துக்கும் விக்கித்துதான் போயிருந்தது. நாவல் அதீத சிந்தனைப் பின்னல்களையும், மன ஆழ விசாரங்களையும், தத்துவத் தேடல்களையும் கொண்டிராவிட்டாலும், அவை அத்தனையையும் வாசிக்கும் மனதிற்குள் உண்டாக்குவதுதான் அவ்வெழுத்தின் ஆச்சர்யம். நிகழ்வுகள், நிகழ்வுகள்…மேலும் மேலும் வாழ்வின் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் பைரப்பா. இயல்பான அதுவே வாசிக்கும் மனத்தை ஈர்த்து கிஞ்சித்தும் விலகவிடாமல் செய்கிறது.

எச்.வி. சுப்ரமணியம் தமிழில் மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். முக்குணங்களில் “தமஸ்”-ஐப் பற்றி அதிகம் படித்திருக்கிறேன்; பெரியவர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக தமஸே முழு மனித வடிவம் கொண்ட பாத்திரமாக “சென்னிகராய”ரை இந்நாவலில்தான் சந்தித்தேன். உணவிலும், உறக்கத்திலும் மட்டுமே பெரு விருப்பு கொண்ட ஒரு சுயநல ஜென்மம். அம்மா, தம்பி, மனைவி, மகன்/மகள் யாருமே அவருக்கு அடுத்த பட்சம்தான். “நாவலில் சென்னிகராயரின் உணவுகள்” என்ற தலைப்பிலேயே ஒரு நீள்கட்டுரை எழுதலாம்.

நாவல் தலைப்பின் தன்மை/பிரதிபலிப்புகள், முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகத்திலேயே துவங்கி விடுகிறது. வசைகளும், சாபங்களும் பல கதாபாத்திரங்களின் வாயிலாக நாவல் முழுவதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. எதிர்மறைகளின் பெரும்பான்மையில், நேர்மறை மூச்சுத் திணறுகிறது. வாழ்க்கைச் சக்கரத்தில், கதாபாத்திரங்களின் மரணங்கள் கூட வெகு இயல்பாக, சாதாரணமாக நாவலில் வந்து செல்கின்றன. பூ உதிர்கிறது; பிஞ்சு உதிர்கிறது; காய் உதிர்கிறது; கனி உதிர்கிறது. நல்லனவும், நேர்மையும் இப்பூமியில் கஷ்ட ஜீவிதத்தில் குறை ஆயுளோடு அல்லலுற, தகிடுதத்தங்களும், ஏமாற்றும் தன்மையும், எதிரும் நீண்ட ஆயுளுடன் சிரிப்போடு பிழைக்கின்றன. காலம் தன் போக்கில் சுழன்று கொண்டிருக்கிறது.

1920/30-களின் காலகட்டம். மைசூர் சமஸ்தானம், தும்கூர் ஜில்லா, திப்டூர் தாலுகா, கம்பனகெரே பிர்க்காவில் ராமஸந்திர கிராமத்தின் கணக்குப்பிள்ளை ராமண்ணாவிற்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு வருகிறாள் பதின் வயது கங்கம்மா. ஊரில் ஒரு சிவன் கோயிலும், ஆஞ்சநேயர் கோயிலும், இரு அம்மன் தேவதைகளும் (கிராம தேவதை காளம்மன், ப்ளேக் தேவதை சுங்கலம்மா) உண்டு. இரண்டு/மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊர் ப்ளேக் நோய் பரவலால் அவதிப்படும்; பிளேக் நோய் அறிகுறிகள் தென்பட்டதும் ஊர் மொத்த ஜனமும் ஊரைக் காலிசெய்து ஊருக்கு வெளியே கொட்டகை போட்டு தங்கிவிட்டு, பிளேக் முடிந்ததும் ஊருக்குள் வருவார்கள்.

ராமண்ணாவிற்கும் கங்கம்மாவிற்கும் முப்பது/முப்பத்தைந்து வயது வித்தியாசம். அவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவன் சென்னிகராயன்; இளையவன் அப்பண்ணய்யா. கங்கம்மாவின் இருபத்து ஐந்தாவது வயதில் ராமண்ணா இறக்கும்போது சென்னிகராயனுக்கு 9 வயது; அப்பண்ணய்யாவிற்கு 7 வயது. சட்டப்படி கிராமத்தின் கணக்குப்பிள்ளை வேலை, தந்தை இறப்புக்குப் பின் மூத்த மகனுக்கு வரவேண்டும். சென்னிகராயனுக்கு அப்போது 18 வயது ஆகவில்லையென்பதால் தற்காலிகமாக மணியக்காரர் மைத்துனன் சிவே கவுடன் அந்த வேலையைப் பார்த்து வருகிறான். பையன்கள் இருவருக்கும் படிப்பில் நாட்டமில்லை. கங்கம்மா மூர்க்க குணம் படைத்தவள். எப்போதும் வசைகளும், சாபங்களும், கெட்ட வார்த்தைகளுமே அவள் நாவில் நடமாடும். அவளின் வளர்ப்பு இரண்டு மகன்களிடமும் பிரதிபலிக்கிறது. படிக்க பள்ளிக்கூடம் செல்லச் சொல்லும் அம்மாவின் மீது கோபம் கொண்டு சொந்த வீட்டின் ஓட்டுக் கூரையையே இரவில் உலக்கையால் சேதப்படுத்துகிறார்கள். சென்னிகராயன் சோம்பேறி; சுயநலமி; போஜனப் பிரியன். அப்பண்ணய்யா அவனளவிற்கு இல்லையென்றாலும் அவனும் மூடன்தான்.

அக்காலத்தில் பெண்கள் வயதுக்கு வருமுன்னே திருமணம் செய்கிறார்கள் (மகள்கள் பெரியவளாகும் வரை திருமணம் நடக்கவில்லையென்றால் அம்மாக்கள் கவலைப்படுகிறார்கள்); பின்னர் மணப்பெண் பெரியவளானதும் சீர்வரிசையோடு புக்ககம் வருவது வழக்கம். நாகலாபுரம் கிராமத்தின் புரோகிதர் கண்டி ஜோசியரின் மகள் பனிரெண்டு வயது நஞ்சம்மாவிற்கும், பதினெட்டு வயது சென்னிகராயருக்கும் திருமணம் நடக்கிறது. கிராமத்தின் கணக்குப் பிள்ளை வேலையை திருப்பித் தர மறுக்கும் சிவலிங்கனிடமிருந்து, அவனை மிரட்டி அந்த வேலையை சென்னிகராயனுக்கு வாங்கித் தருகிறார் கண்டி ஜோசியர்.

வருடங்கள் உருண்டோடுகின்றன. சென்னிகராயனுக்கு கணக்குப் பிள்ளை வேலையை சரியாகச் செய்யத் தெரியவில்லை. நஞ்சம்மாதான் பார்த்துக் கொள்கிறாள். மாமியாரின் குணத்தினாலும், கணவனின் விட்டேற்றித் தனத்தினாலும் நஞ்சம்மா புகுந்த வீட்டில் சிரமங்களை அனுபவிக்கிறாள். அவ்வீட்டை கட்டிக் காக்கும் பொறுப்பு அவள் தலை மேல் விழுகிறது. தாய் மகன்களின் நடவடிக்கைகளால் அவ்வீட்டின் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் கைவிட்டுப் போவதை நஞ்சம்மா எவ்வளவு முயன்றும் தடுக்க முடிவதில்லை. நஞ்சம்மாவின் வீடெதிரில் இருக்கும் கோயிலில் வசிக்கும் பிரம்மச்சாரி பெரியவர் மாதேவய்யாவும், குருபரஹள்ளி குண்டே கவுடரும் அவர் மனைவி லக்கம்மாவும் நஞ்சம்மாவிற்கு ஆதரவாய் உதவிகள் செய்கிறார்கள்.

கடூர் வட்டம் நுக்கிகெரே கிராமத்தின் சியாம பட்டரின் மகள் சாதம்மாவை மணக்கிறான் இளையவன் அப்பண்ணய்யா. நஞ்சம்மாவின் பிறந்த வீட்டில் அவள் பாட்டி அக்கம்மாவும் (கண்டி ஜோசியரின் அம்மா), அண்ணன் கான்ஸ்டபிள் கல்லேசனும் வசிக்கிறார்கள். கல்லேசனுக்கு, கண்டி ஜோசியர் ஹாசனைச் சேர்ந்த கமலாவைத் திருமணம் செய்து வைக்கிறார். கமலாவிற்கு கல்லேசனையும், நாகலாபுரம் கிராமத்தையும் பிடிப்பதில்லை.

கால ஓட்டத்தில் நஞ்சம்மாவிற்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் பார்வதி, அடுத்தது ராமண்ணா (படிப்பிலும், சாமர்த்தியத்திலும் கெட்டி), மூன்றாவது விஸ்வநாதன் (விசுவன்). சாதம்மாவிற்கு இரண்டு குழந்தைகள்; மூத்தவள் ஜெயலட்சுமி, அடுத்து ராமகிருஷ்ணன். கிராமத்தில் இன்னும் பல கதாபாத்திரங்கள்; வீட்டுத் திண்ணையில் கடை வைத்து நடத்தும் சென்ன செட்டி, அவர் மகன் கிரியன், கிரியனின் மனைவி நரசம்மா (மூவருக்குமான ஒரு அட்டகாசமான பஞ்சாயத்துக் காட்சி நாவலில் வருகிறது!). ஊருக்குள் பகட்டாகத் திரியும், கடன் வாங்கிச் சூதாடும் ரேவண்ண செட்டி, அவன் மனைவி சர்வக்கா.

குடும்பத்தை நிலைநிறுத்த, குழந்தைகளை வைத்துக்கொண்டு நஞ்சம்மா எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறாள். பட்டினி கிடக்கிறாள்; கணவனின் கணக்குப்பிள்ளை வேலைகளைச் செய்கிறாள்; அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, எப்படி காலம் தள்ளுவது என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறாள். புரச இலை தைத்து விற்கிறாள்; பஞ்சகாலத்தில் ஏரிப் படுகையில் தாமரைக் கிழங்கு தோண்டி உணவுக்குப் பயன்படுத்துகிறாள். அவள் சிரமப்பட்டு எழுந்து நிற்க முயலும் ஒவ்வொரு முறையும் விதி அவளைக் கீழே தள்ளுகிறது.

நாவலில் எனக்கு மிகப் பிடித்த பகுதி, நஞ்சம்மா மகன் விஸ்வனுடன் மேற்கொள்ளும் சிருங்கேரிப் பயணம். மனம் நெகிழ்ந்து கண் நிறைந்த காட்சி, தினமும் பத்து மைல்கள் நடந்து பள்ளிக்குச் சென்று வரும் ராமண்ணா, ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் இருட்டக் காத்திருந்து வீட்டில் பசியோடிருக்கும் எல்லோருக்கும் சேர்த்து பலாக்காய் திருடிக் கொண்டு வரும் காட்சி. மனதைக் கலங்கடித்த பகுதி அம்மா பிளேக்கினால் இறந்து பல மாதங்களான பின்னும், இன்னும் அதை நம்ப முடியாமல், மாதேவய்யாவுடன் ஊர் விட்டுக் கிளம்பும் கடைசிக் காட்சியில், தன் வீட்டிற்குள் போய் எல்லா இடங்களிலும் “அம்மா…அம்மா” என்று விஸ்வன் அழைக்கும் காட்சி.

திருமணம் முடிந்து முதலிரவு கூட நடக்காத குழந்தை பார்வதியை பிளேக்கிற்குப் பறிகொடுத்து, அவளை மயானத்தில் எரித்து விட்டு வருவதற்குள் மகன் ராமண்ணாவும் பிளேக் காய்ச்சலினால் இறக்க மனம் நிலைகுலையும் நஞ்சம்மா அன்றிரவில் தற்கொலை செய்துகொள்ள ஊர்க் கிணற்றின் விளிம்புச் சுவற்றின் மேல் ஏறி நிற்கிறாள்…அவள் மனம் அக்கிராமத்திற்கு அவள் மணம் முடித்து வந்த நாளிலிருந்து இப்போது வரையிலான அவளின் துயரங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறது…

“கண்ணீரைப் பின் தொடர்தல்” நூலுக்குத்தான் எத்தனை பொருத்தமான, அபாரமான தலைப்பு என்று வேலூர் லிங்கம் சார் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். நான் “கண்ணீரைப் பின் தொடர்தல்” நூல் வாங்கியது பல வருடங்களுக்கு முன் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் விஜயா பதிப்பகக் கடையில். அம்முவின் (மல்லிகா) அம்மா, விமலா அத்தைக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அம்முவை உதவிக்கு மருத்துவமனையில் விட்டுவிட்டு மும்பைக்கு தனியாக திரும்ப வேண்டும். மருத்துவமனையை விட்டு, படுக்கையில் படுத்திருந்த விமலா அத்தையிடம் ஆசி வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, என் கைகளைப் பிடித்துக்கொண்டு அத்தை கண்ணீருடன் “மல்லிகானு சூசுகபா” (“மல்லிகாவப் பார்த்துக்கப்பா”) என்றார். என் கண்களும் நிறைந்தது. நான் மனதுள் கேவினேன். நான் பின்தொடர்ந்த இரண்டாவது கண்ணீர் விமலா அத்தையினுடையது. முதல் கண்ணீர் அம்மாவுடையது.

வெங்கி

“ஒரு குடும்பம் சிதைகிறது” – எஸ். எல். பைரப்பா

கன்னட மூலம் – “Griha Bhanga”

தமிழில்: எச். வி. சுப்ரமணியம்

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வனும் கோதாவரியும்
அடுத்த கட்டுரைஎழுகதிர்நிலம், கடிதம்