மணி கவுல், கடிதங்கள்.

 

அன்புடன் திரு ஜெயமோஹனுக்கு,

சமீபத்தில் காலமடைந்த திரு மணி கவுள் அவர்களின் படைப்புகளைப்  பார்திருகிரீர்களா? அவைகளைப் பற்றிய தங்களின் மதிப்பீடுகளை அறிய ஆவலாக உள்ளேன் .  திரு மணி கவுள் ஒரு பரிட்சார்த்த  (experimental ) திரைப்பட இயக்குனர். உங்கள் வாசகர்களை எப்படி ஓர் உயர்தர இலக்கிய ரசனைக்கு மேம்படுத்த உங்கள் ஆக்கங்களையும், விமர்சனங்களையும் படைக்கிறீர்களோ , அந்த ஒரு முயற்சியை திரு கவுள் அவர்கள் தன் படைப்புக்கள்  மூலம் திரைப்படத் துறையில்  மேற்கொண்டார் என்று கருதுகிறேன்.

சங்கரநாராயணன்

 

அன்புள்ள சங்கர்

நான் 1983’ காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் மணி கௌலின்  உஸ்கி ரொட்டி படத்தை பார்த்தேன். படம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. பரிசோதனை முயற்சிகள் மேல் எனக்கு எப்போதுமே ஈடுபாடில்லை. எனக்கு கலை வடிவம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது. அதனாலேயே கொதார்த், லூயி புனுவல் போன்றவர்களையும் என்னால் ரசிக்க முடியவில்லை. இது என் தனிப்பட்ட ரசனையைச் சார்ந்தது. இவர்களை நவீனத்துவம் முற்றி, அது வெறும் வடிவச்சோதனையாக ஆகி, அடுத்த கட்டம்நோக்கி நகரமுடியாமல் திணறிய காலகட்டத்தின் கலைஞர்கள் என்று வகுத்துவைத்திருக்கிறேன்

ஜெ

 

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம் .
சில மாதங்களுக்கு முன் உங்களிடம் ஒரு விண்ணப்பம் செய்து இருந்தேன் .
உங்களின் எந்த நாவலை முதலில் படிப்பது என்று .
அரசு நூலகங்கள் ,தனியார் நூலகங்கள் ,வார வாடகை புத்தகங்கள் தருபவர்கள் எல்லோரிடமும் தங்கள் நாவல்களை கேட்டால் இல்லை என்றே பதில் வந்தது . ஏன் இப்படி ஒரு சாபம் என தெரியவில்லை .
ஆனால் என் சொந்த ஊரில் (திண்டுகல்லில் ) நிறைய நட்பில் தங்களை வாசிப்பவர்கள் நண்பர்கள் .

வெகு நாளைக்கு அப்புறம் நூலகத்தில் எடுத்து வாடகை புத்தகம் தருபவர் மூலம் ‘ரப்பர்’ நாவல் கிடைத்தது .நல்லவேளை தங்களின்  முதல் படைப்பை பெரும் அதிருஷ்டம்தான் என்னை இவ்வளவு நாள் காத்திருக்க வைத்தது போலும் .அடுத்து ஏழாவது உலகம் படிக்க கிடைக்க காத்திருக்கிறேன் .
சுஜாதா ,பாலகுமாரன் என்று நின்று போகாமல் தொடர்ந்து தேடுபவர்கள் தங்களின் எழுத்தை நேசிப்பார்கள் என்னை போல .
நன்றி .
என்றென்றும் அன்புடன் ,
கிருஷ்ணமூர்த்தி .
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி
ஆரம்ப வாசகர்களுக்கு கன்யாகுமரி, ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசை சரியானதாக இருக்குமென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்
ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

 

யானை டாக்டர் கதையை அச்சிட்டு படித்ததில் ஒரு மனநிறைவு. (சொந்த பதிப்பு)  

டாக்டர் கே அவர்களுக்கு கிடைத்த உயரிய மரியாதை யானைகள் அவர் மீது வைத்த நம்பிக்கையும் பாசமும் மட்டுமே. இதன்முன் உலகின் எள்வளவு பெரிய விருதும் தேவை இல்லை.

அந்த குட்டியானை அவரை தேடி வந்தது என்று நீங்கள் பதிவு செய்திருப்பது அவர் வாழ்வின் சாதனையை சொல்கிறது.

மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான்.மிருகங்களுக்கு ஆத்மா கெடயாது பகுத்தறிவு கெடயாது என்ற வரிகள் முற்றும் உண்மை. அதனால் தான் காட்டில் கண்ணாடி சில்லுகளும், காட்டியே அழிக்கும் காட்டுமிராண்டித் தனமும்.

என்னால் முடிந்தவரை யானை டாக்டரை என் நண்பர்களுக்கு படிக்க கொடுக்கிறேன். எல்லா குடிமகனும் படிக்க வேண்டும்

 

என்றும் அன்புடன்,

சி.கார்த்திக்

 

அன்புள்ள கார்த்திக்

நன்றி

அந்த விஷயம் பற்றி குறைந்தது  பத்து ஆவேசமான கட்டுரைகள் எழுதியிருப்பேன். ஒரு கதை அதை கொண்டுசென்ற அளவுக்கு கட்டுரைகள் செய்யவில்லை.  அது புனைவின் வல்லமையைக் காட்டுகிறது

 

ஜெ

யானை டாக்டர் http://www.jeyamohan.in/?p=17056

முந்தைய கட்டுரைஅசடன், யானைடாக்டர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி