ருத்ரபிரயாகையில் மேலே நின்று கீழே அளகந்தா, மந்தாகினி என்னும் இரு ஆறுகள் இணையும் முனையை பார்த்திருக்கையில் ஓர் ஆழ்ந்த மௌனம் அகத்தே குடியேறியது. ஒழுகும் ஆறு அவ்வாறு ஓர் அமைதியை உருவாக்குவதுண்டு எனக்கு. நீரோட்டத்தை விட்டு கண்களை எடுக்க முடிவதில்லை. நீர் விரையும் ஒழுக்கு உள்ளத்தின் ஒழுக்காகிறது. பின்னர் நீர் இருக்க உள்ளம் மறைந்துவிடுகிறது.
தன்னுணர்வடைந்தபோது அளகநந்தா என்னும் பெயர் என் நினைவடுக்குகளில் வெவ்வேறு நுண்புள்ளிகளை தொட்டு எழுப்ப ஒருவகை நடுக்கத்திற்காளானேன். அளகநந்தா என்றசொல்லை இனியகூந்தல் என்று என மொழியாக்கம் செய்யலாம். அழகிய கூந்தல், குளிர்ந்து இருண்டு மின்னி ஒழுகிச்செல்வது. வந்திணைவது மந்தாகினி, மெல்லச்செல்பவள்.
அந்த இரு நதிகளின் நீர்களுக்கும் வேறுவேறு நிறம். அவை இணைந்து பின்னிமுயங்கி நெளிந்து செல்வது கூந்தல்கற்றைகள் இரண்டு சேர்த்து முடையப்படுவதுபோலவே தோன்றியது. மந்தாகினியின் நீர் சற்று அடர்த்தியான நிறம். அளகநந்தாவின் மென்மையான வண்ணம்கொண்ட நீர்ப்பரப்பிற்குள் அந்த ஆழ்நீல நிறம் புகைபோல ஊடுருவியது. அவ்விரு நதிகளும் இணையும் விளிம்பில் ஓர் அலை நிகழ்வதுபோல விழிமாயம்.
நினைவுகள் எத்தனை வாழ்வடுக்குகளை நொடியில் ஊடுருவிச் செல்கின்றன. எங்களூர் ஆற்றில் மழைக்காலத்தில் சிற்றாறுகளில் இருந்து அடர்த்தியான சேற்றுநீர் வந்து கலக்கும். மலைவெள்ளம் சற்று தெளிந்திருக்கும். வெள்ளம் வந்ததுமே ஆடைகளை அவிழ்த்துவீசி நீரில் பாய்ந்து பகலெல்லாம் கும்மாளமிடுவோம். நீரில் மூழ்கிச்செல்கையில் செம்புகைச் சுருளலைகள் எழுவதுபோல சேற்றுநீர் தெளிநீரில் உந்திவந்து கரைந்துக் கலப்பதைக் காணமுடியும்.
கேரளத்திலும், பழைய கேரளமாகிய குமரிமாவட்டத்திலும் பெண்களின் கூந்தல் மிக நீளமானது. உப்பு இல்லாத நீர், கைதோநி இலை அரைத்து காய்ச்சிய தேங்காயெண்ணை தேய்த்து நாள்தோறும் தலைக்குக் குளிக்கும் வழக்கம், மரபணுத் தொடர்ச்சி என பல காரணங்கள். ஆனால் எங்களூரில் ஆண்களின் காமமே பெண்களின் கூந்தலில்தான். எந்த வகை பெண் தேவை என ஆண்கள் பேசிக்கொண்டால் முதல் வரியே ‘நல்ல கூந்தல் இருக்கவேண்டும் என்பதே’
’காய்ச்செண்ண தேய்ச்ச நின் கார்கூந்தளத்தின்றே காற்றேற்றால் போலும் எனிக்கு உன்மாதம்’ (காய்ச்சிய எண்ணை தேய்த்த உன் கரியகூந்தலின் காற்று பட்டாலே நான் பித்தன்) என்பது வயலாரின் புகழ்பெற்ற பாடலின் ஒரு வரி. அன்றெல்லாம் யாரோ ஒரு அண்ணன் யாரோ ஒரு அக்காவைப் பார்த்து அதை பாடுவதை அடிக்கடி கேட்பதுண்டு.
மதியப்பொழுதில்தான் பெரும்பாலும் பெண்கள் நீராடவருவார்கள். துணிதுவைத்து முறுக்கிப்பிழிந்து கமுகுப்பாளைமேல் அடுக்கி வைத்தபின் மார்பில் வேட்டியை கட்டிக்கொண்டு நீரில் இறங்கும்போது கொண்டையை அவிழ்த்து கூந்தலை விரித்து விரல்களால் நீவிக்கொண்டிருப்பார்கள். நீரில் மூழ்கும்போது வெண்ணிற வேட்டி காற்றில் உப்பி மேலேறும். எப்போதும் நீரோட்டத்திற்கு எதிர்முகம் காட்டியே அமர்வார்கள்.
அவர்கள் கழுத்துவரை அமிழ்ந்தால் நீரொழுக்கில் கூந்தல் இழுபட்டு அலைபாயத் தொடங்கும். அவர்களுக்குப்பின்னால் நீர் பிளந்து கூடி சுழித்தோடுவதில் கூந்தலின் கருமையின் அலைவு. அது ஒரு சிறு நதி.
அவர்களுடன் சேர்ந்து நீராடுவதற்கான வாய்ப்பெல்லாம் பையன்களுக்கு அதிகபட்சம் ஐந்து வயதுவரைத்தான். ஆனால் ஆணின் கண்கள் அதற்கும் முன்பெப்போதோ உருவாகிவிடுகின்றன. என் நினைவில் எத்தனை நீரலைக்கூந்தல்கள். மூழ்கி எழும்போது மெல்லிய நீர்ப்பாசிச்சரடுகள் போல என்மேல் வந்து படிந்தவை. மூழ்கி நோக்கும்போது நீருக்குள் ஒரு நீரலை என நெளிந்தவை. அந்த அக்காக்களும் அத்தைகளும் சித்திகளும் இன்று மறைந்துவிட்டிருப்பார்கள். எஞ்சியோர் முதுமையெய்தியிருப்பார்கள். நினைவில் அவர்களின் கார்கூந்தல்கள் அலைபாய்கின்றன இன்றும்.
காவேரி ஒழுகும் தஞ்சையில் கம்பன் அந்தக் கூந்தல் அலைவை கண்டிருக்கிறான். அவனும் ஐந்து வயதுக்குள் கண்டிருக்கலாம்
மங்கை வார் குழல் கற்றை மழைக்குலம்
தங்கு நீரிடை தாழ்ந்து குழைப்பன
கங்கை ஆற்றுடன் ஆடும் கரியவள்
பொங்கு நீர்ச்சுழி போவன போன்றவே
(கங்கைப்படலம், அயோத்தியா காண்டம்)
மங்கையின் நீண்டகுழல் கற்றையெனும் குளிர்ந்த தோகை ஒழுகும் நீரில் தாழ்ந்து குழைந்தாடுவது கங்கை ஆற்றுடன் கரியநீர்ப்பெருக்குடைய யமுனை பொங்கிக் கலந்து சுழித்தாடுவதுபோலிருந்தது.