வணக்கம்,
இந்த விமர்சனத்தை நீங்கள் படிக்க போகிறீர்களா என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் உங்களுக்கு எழுதுகிறேன் என்பதே எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது.
மிகவும் சமீபத்தில் தான் உங்கள் சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தேன். எனது கணவர் உங்கள் “நூறு நாற்காலிகள்” கதையை படிக்கச் சொல்லி பரிந்துரைத்தார். படித்த பின் என்னுள் எழுந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நூறு நாற்காலிகள்
மனித மனங்களில் இருக்கும் இருண்ட பகுதியை கண்கூசாத வெளிச்சத்தோடு பிரதிபலிக்கும் ஆளுமை தான் “ஜெயமோகன்”.
இந்தக் கதை இருண்ட சமூகத்தின் இருட்டிலிருந்து தப்பித்தவன், வெளிச்சத்திற்கு வந்து சந்திக்கும் இன்னல்களை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உருக்கமாக வெளிப்படுத்துகிறது.
“உலகம் அழகானது, வாழ்க்கை இனிமையானது” என்று சொல்ல எத்தனையோ கதைகள் இருக்கிறது. ஆனால் இந்த வாழ்க்கை எத்தனை வரமானது என்று உணரவைக்க ஒரு சில கதைகளால் மட்டுமே முடியும். அப்படி ஒரு கதை தான் இது.
அரியணை ஏற வேண்டும் என்று ஆசைப்பட எல்லாருக்கும் உரிமை உண்டு . ஆனால் சில அரியணைகள் ஆளுவதற்காக உருவாக்கப்பட்டதில்லை என்பதே நிதர்சனம். உபயோகிக்க முடியாத அதிகாரம் போல் சுமை தருவதும் ஏதுமில்லை.
அழுக்கிலும் அசுத்தத்திலும் உலாவுவது பரிசுத்தமான அன்பாக இருந்தாலும், அதைப் புறக்கணித்து தான் இந்த சமூகத்தில் பிழைக்க முடியும் என்ற எதார்த்தத்தை நெற்றி பொட்டு போல் வெளிப்படையாக சொல்கிறது இந்த கதை.
மகாலட்சுமி சந்திரசேகரன்
***
அன்புள்ள மகாலட்சுமி,
அந்தக்கதை என் பார்வையில் ‘இன்னல்களை’ மட்டும் சொல்வது அல்ல. அந்த இன்னல்களின் இருட்டில் அவருக்கு பல்வேறு கைகள் உதவிக்கு வருகின்றன. அதைப்பற்றிக்கொண்டு இன்னும் மேலேறவேண்டும் என்னும் வேகம் அவரில் எழுமிடத்தில் அக்கதை உச்சம்கொள்கிறது.
ஜெ
அன்பு ஜெ
நலம் விழைகிறேன்.
6 ஆண்டுக்கு முன் அறம் தொகுப்பு படித்த பின் தான் உங்களின் தொடர் வாசகனானேன். அதன்பின் உங்கள் தளமும் வெண்முரசும் என் தினசரி ஆகிபோனது. இன்றும் அறம் கதைகளை பற்றி சிலாகிக்கும் வாசகர்களை உங்கள் தளத்தில் காணமுடிகிறது. இன்று மட்டுமல்ல என்றும் அறம் என்ற சொல்லுக்கு மிகசிறந்த விளக்கமாக இக்கதைகள் இருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் ஏன் இக்கதைகள் எல்லோரையும் சிலிர்க்க வைக்கிறது என்று என்னால் விலங்கி கொள்ள முடியவில்லை. கதைகள் படித்து முடித்த பின் என்னுள் சொல்லிலடங்கா உணர்வெழுச்சி. ஒரு நல்ல கதையை படித்து விட்ட மகிழ்ச்சி மட்டுமல்ல அது, எளிதில் கிடைக்காத சாமானியனின் அற தரிசனம் காரணமாக இருக்கலாம். ஏண் ஒரு இலக்கியம் இவ்வளவு மக்களை தன்னெழுச்சி கொள்ள செய்கிறது என நீங்கள் எண்ணி பார்த்ததுண்டா.
முத்து
அன்புள்ள முத்து,
மனிதர்கள் இங்கே வாழ விரும்புகிறார்கள். வாழ்க்கை அறம், கருணை சார்ந்தே நிகழமுடியும். மானுடத்தீமையை நம்பி மானுடர் வாழமுடியாது. மனிதனின் இயல்பிலேயே எங்கோ அறமும் கருணையும் உள்ளது. ஆகவேதான் மானுடன் மானுடமாக திரண்டு இவ்வுலகைப் படைத்தான். இருளும் கீழ்மையும் அவனிடம் உள்ளன. அவற்றுடன் போரிட்டு அவன் தன்னை அறம் சார்ந்து நகர்த்திக்கொள்ளவே என்றும் முயல்கிறான். இருட்டின் வெளியில் ஒளிச்சுடர் கொள்ளும் புனிதம் அறத்திற்கு உள்ளது. அறத்தின் தரிசனம் நம்பகமாக முன்வைக்கப்படுகையில் மானுடர் கொள்ளும் உள எழுச்சி அதன்விளைவே
ஜெ