ஜமீலா – வெங்கி

ஜமீலா வாங்க 

அன்பின் ஜெ,

அன்பும் வணக்கங்களும்.

குப்ரினின் “செம்மணி வளையலையும், சிங்கிஸின் ஜமீலாவையும் தவறவிடாமல் வாசிக்கும்படி வேலூர் லிங்கம் சார் அவருடனான வாட்ஸப் உரையாடல்களில் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். முதலில் ஜமீலா-வை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.

“ஜமீலா” அழகான குறுநாவல். காதல் கதைதான் என்றாலும் காதல் தாண்டிய மேல் சுட்டும் ஓர் இழை மனதில் பட்டுக்கொண்டேயிருந்தது. கிம் கி-டுக்கின் “3 Iron” மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிமையான படமாகத் தெரிந்தாலும் ஆழ்ந்தால் குறியீடுகள் விரவிக் கிடக்கும் ஆன்மீகத் தளம் ஒன்று உயிர்பெறும். “ஜமீலா”-வின் எழுத்து உயிரோட்டமான வழுக்கிச் செல்லும் நதி போன்றிருந்தது. சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்பு சரளமாக மனதிற்கு இசைவாக இருந்தது.

***

சையது ஒரு ஓவியன். அவனுக்குப் பிடித்த அவனின் முதல் ஓவியம்தான் அவனுக்கு உற்ற தோழனும் வழிகாட்டியும். மனக்கிலேசம் எழும் நேரங்களிலெல்லாம் மானசீகமாக அவன் உரையாடுவது அந்த ஓவியத்துடன்தான். அதனைப் பார்ப்பதும், அதன் முன் அமைதியாக நின்றிருப்பதுமே அவனுக்கு ஆறுதலும், நிம்மதியும், ஆசுவாசமும் தரும். அவ்வோவியம் அவனை ஆசீர்வதிப்பதாக உணர்வான். மஞ்சுகள் நிறைந்த வானும், மழையில் நனைந்த புல்வெளியும், ஈரப் பாதையில் அடிவானம் நோக்கி  நடந்து செல்லும் அழகான அவன் அண்ணி (ஜேனே) ஜமீலாவும், அவளின் காதலனும் அந்த ஓவியத்தில் இருக்கிறார்கள். சையது அக்காலத்தை நினைத்துப் பார்க்கிறான்.

இங்கிருந்து சையதின் பதின்பருவத்தின் கிராமத்தின் ஃப்ளாஷ்ஃபேக் துவங்குகிறது (இந்த இடத்தில் இருபக்க பசும்புல்வெளி இடைப் பாதையில் புழுதி பறக்க இரட்டைக் குதிரை வண்டியை ஓட்டி வரும் அழகான உற்சாகமான பதின்வயது ஜமீலாவிற்கு உயிரோட்டமான ஒரு “Intro” காட்சி திரையில் வைத்தால் எப்படி இருக்கும் என்று மனதில் எண்ணி புன்னகைத்துக் கொண்டேன்).

ஸ்தெப்பி வெளிகள் சூழ்ந்த ஆற்றோரக் கிராமம் குர்க்குரேவு. இரண்டாம் உலகப்போர் துவங்கி மூன்றாண்டுகள் ஆகியிருந்த காலம். சையதின் அப்பா ஒரு தச்சர். சையதின் மணமாகாத இரு அண்ணன்கள் ராணுவத்தில் போர்முனைக்குச் சென்றிருந்தனர். ஊரில் கூட்டுப்பண்ணை விவசாயம். பதினைந்து வயதாகும் சையதிற்கு ஒரு தங்கை உண்டு. முன்பு பக்கத்து வீட்டு சின்னம்மாவின் கணவர் இறந்துவிட்டதால் அவர்களின் இன வழக்கப்படி அவரை சையதின் அப்பாவிற்கு  இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வைத்துவிட்டனர். சின்னம்மாவிற்கும் இரண்டு பையன்கள். அவர்களும் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்கள். மூத்த பையன் சாதிக்கின் மனைவிதான் ஜமீலா. பக்கயிர் எனும் மலைக் கிராமத்தின் குதிரைப் பண்ணைக்காரர் ஒருவரின் மகள். திருமணமாகி நான்கு மாதங்களிலேயே ராணுவத்திற்கு சென்றுவிட்டான் சாதிக். சின்னம்மா இனிமையானவர். அவருக்கேற்ற மருமகள்தான் ஜமீலா. இரண்டு குடும்பங்களின் நிர்வாகத்தையும் சையதின் அம்மாதான் பார்த்துக்கொண்டார்.

சையதிற்கு தன் அண்ணி ஜமீலாவை மிகப் பிடிக்கும். ஜமீலாவும் அவன்மேல் மிகுந்த அன்பாயிருந்தாள். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. வீட்டின் முன் முற்றத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டே துரத்திப் பிடித்து விளையாடுவார்கள். சையதிற்கு ஜமீலா அண்ணியின் ஆளுமையும், அழகும் எப்போதும் பெரும் வியப்பு. ஜமீலா குழந்தை போல குதியும் கும்மாளமுமாய் இருப்பவள். வேலையிலிருந்து திரும்பும் போது நிதானமாக நடக்க மாட்டாள். பாசன வாய்க்காலை எகிறித் தாண்டுவாள். பாடுவதில் ஜமீலாவிற்குப் பிரியம். குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவள் ஜமீலா. இரட்டைக் குதிரை வண்டியை அவள் அநாயசமாக ஓட்டும் அழகும், அவளின் கூர்மையான, அழுத்தமான சுபாவமும், உற்சாகமும் சையதை எப்போதும் ஆச்சர்யப்படுத்தும். சையதிற்கு ஜமீலாவைவிட மேலானவர்கள் உலகிலே எவருமில்லை என்று நினைப்பு.

சையதின் அம்மாவிற்கும் ஜமீலாவின் வெளிப்படையான ஒளிவு மறைவற்ற பேச்சும், மற்ற பெண்களைப்போல் புறம் பேசாத இயல்பும், நியாயமான போக்கும் மிகப் பிடிக்கும். ஊரில் உள்ள இளைஞர்களுக்கெல்லாம் ஜமீலாவின் மேல் ஒரு கண். அவர்களிடமிருந்து ஜமீலாவைக் காப்பது தன் கடமையென மனதில் எண்ணிக் கொள்வான் சையது.

போரில் காலில் அடிபட்டு சமீபத்தில்தான் குர்க்குரேவு கிராமத்திற்குத் திரும்பியிருந்தான் அநாதை இளைஞன் தனிமை விரும்பி தானியார். அவனுக்கென்று யாருமில்லை. இரவுகளை நதிக்கரையில் கழிப்பான். அவனும் கூட்டுப் பண்னையில் வேலை செய்தான். போர் நடைபெறுவதால் படை வீரர்களின் உணவிற்காக, எல்லாக் கிராமங்களிலிலிருந்தும் தானியக் கொள்முதல் செய்யப்பட்டு ரயில் மூலமாக போர் முனைகளுக்கு அனுப்பப்படுகிறது. குர்க்குரேவிலிருந்து ரயில் நிலையத்திற்கு இருபதுகிலோமீட்டகள் ஸ்தெப்பி வெளியைத் தாண்டி பாறைச் செறிவைக் கடக்கவேண்டும். தினமும் ரயில் நிலையத்திற்கு மூன்று தனித்தனி குதிரை வண்டிகளில் தானிய மூட்டைகள் எடுத்துச் செல்வது ஜமீலா, சையது, தானியார் மூவரின் பொறுப்பு.

அப்போதுதான் ஓர் ஆகஸ்ட் மாத முன்னிரவில் ரயில் நிலையத்திலிருந்து கிராமத்திற்குத் திரும்பும்போது தானியாரின் மேல் ஜமீலாவிற்கு காதல் உணர்வு உண்டாகிறது.

***

“ஜமீலா”…ஸ்தெப்பி புல்வெளியில், முன்னிரவின் அமைதியில் காற்றில் மிதந்து வரும் ஓர் இசைப்பாடல்.

வெங்கி

“ஜமீலா” (ருஷ்ய குறுநாவல்) – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

தமிழில்: பூ. சோமசுந்தரம்

முதல் தமிழ் பதிப்பு: அயல் மொழிப் பதிப்பகம், மாஸ்கோ

பின்பதிப்புகள்: அன்னம் – அகரம்/பாரதி புத்தகாலயம்

முந்தைய கட்டுரைவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்- க.மோகனரங்கன்
அடுத்த கட்டுரைசுகுமாரன்