அன்பின் ஜெ,
வணக்கம்.
குப்ரினின் “செம்மணி வளையல்” தொகுப்பில் “ஒலேஸ்யா” குறுநாவலை வாசித்தேன். இக்குறுநாவலிலும் குப்ரினின் எழுத்து மயக்குகிறது. வாசிப்பு, பனி வெளிகளிலும், காடுகளிலும், மழைச் சாலைகளிலும் காதலியின் அருகே பேசிக்கொண்டே நடை செல்லும் பரவசத்தை மனதிற்களித்து நினைவுகளில் மூழ்க வைக்கிறது. குப்ரின் எழுத்தாளுமையின் அவதானிப்புகள் அங்கங்கு பளிச்சிடத் தவறுவதேயில்லை. ஒலேஸ்யாவுடனும், அவள் பாட்டியுடனும் அவர்கள் வீட்டில் முதன்முதலாக இரவுணவு சாப்பிடும்போது, ஒலேஸ்யா உணவுண்ணும் அழகையே பார்த்துக் கொண்டிருக்கிறான் இவான். அவன் மனம் நினைக்கிறது…”சாப்பிடுகிற போதுதான் வேறு எந்த நேரத்தைக் காட்டிலும் மனிதர்கள் தங்களுடைய குணத்தை தெளிவாகக் காட்டுவார்கள் என்பதை எப்போதுமே நான் நம்பி வந்திருக்கிறேன்; அது உண்மைதான் போலும்.“
1897-ல், மத்திய கிழக்கு ஐரோப்பாவில், போலந்திற்கும், உக்ரைனுக்கும், பெலாரஸிற்கும் மத்தியிலிருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வோலினியா மாகாணத்திற்கு முதல்முதலாக எஸ்டேட் மேலாளர் வேலைக்குச் செல்கிறார் குப்ரின். பின்பு அங்கிருந்து தெற்கு பெலாரஸின் இயற்கை எழில் சூழந்த, சதுப்பு நிலக் காடுகள் கொண்ட பொலேசியே-விற்கு பணி மாறுகிறார். அடுத்த வருட குளிர்காலத்தில், மத்திய ருஷ்யாவின் ஆற்றங்கரை நகரான ரியாஜனுக்கு சென்றபின் அங்குதான் “ஒலேஸ்யா”-வை எழுதுகிறார். “ஒலேஸ்யா”-வும், “தி ரிவர் ஆஃப் லைஃப்”-ம் குப்ரினுக்கு மிகவும் பிடித்தமான படைப்புகள்.
வோலினியா மாகாணத்தில், பொலேசியேவிற்கு அருகில் பிரெபிரோ கிராமத்தில் அலுவல் காரணமாக சில மாதங்கள் வசிப்பதற்கு வந்திருக்கிறான் இவான். இவானிற்கு எழுதுவதில் விருப்பம் உண்டு. உட்கோடியில் அமைந்த அக்கிராமத்து மக்களின் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், அவர்களின் வாழ்வியல், அப்பகுதியின் பழமையான நாட்டுப்புறக் கதைகள் அனைத்தையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் அவனுக்கு.
இவான் தங்கியிருக்கும் வீட்டில் அவனுக்கு உதவியாக இருக்கும் பணியாள் யர்மோலா எழுதப் படிக்கத் தெரியாதவன். இவான் நகரத்திலிருந்து தன்னுடன் எடுத்து வந்த புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டான். உள்ளொடுங்கிய அக்கிராமத்தில், அருகிலிருக்கும் இரீனாவோ காட்டில் முயல் வேட்டையாடுவதைத் தவிர அவனுக்கு வேறு பொழுதுபோக்கு எதுவும் கிடையாது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் யர்மோலாவையும், நாய் ரியாப்சிக்கையும் கூட்டிக்கொண்டு பனிக்காட்டில் முயல் வேட்டைக்குச் செல்வது அவனது வழக்கம். யர்மோலா, கால் தடத்தை வைத்து முயல் எங்கு ஒளிந்திருக்கிறதென்று கண்டுபிடிப்பதில் கில்லாடி.
அந்த ஜனவரி இறுதியில் குளிர் காற்றும், பனிப்பொழிவும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. முயல் வேட்டைக்குக் கூட வெளியில் செல்ல முடியவில்லை. பொழுது போகாமல், ஏதாவது விபரங்கள் சேகரிக்கலாம் என்று நினைத்து, கணப்படுப்பை மூட்டிக்கொண்டிருக்கும் யர்மோலாவிடம் பேச்சுக் கொடுக்கிறான் இவான். யர்மோலா இவானுக்கு பிரெபிரோவின் மந்திரவாதக் கிழவி மனூய்லிகாவின் கதையைச் சொல்கிறான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது…
மனூய்லிகா வாய்த் துடுக்குக்காரக் கிழவி. அவளுக்கு மந்திர வித்தைகள் தெரியும். அவளுக்கு அல்யோனா என்று ஒரு பேத்தி இருக்கிறாள். பதின்ம வயது. மனூய்லிகாவிற்கு கிராமத்தில் அனைவருடனும் சண்டை. ஒருமுறை ஒரு இளம் மனைவியுடன் காசுக்காக சண்டை வர “நீ நாசமாப் போவ…” என்று சபிக்கிறாள். அவள் வாக்கு பலிக்கிறது. அந்த இளம்பெண்ணின் குழந்தை நோய்வாய்ப்பட்டு இறக்கிறது. கிராமத்திலிருக்கும் இளைஞர்கள் கோபமடைந்து மனூய்லிகாவிற்கு “சூனியக்காரி” என்ற பட்டம் கொடுத்து அவளையும், அவள் பேத்தியையும் ஊரைவிட்டு செர்ரி தோட்டங்களுக்கு அப்பால் சதுப்பு நிலப் பகுதிக்கு துரத்துகிறார்கள்.
ஒருநாள் யர்மோலாவுடன் முயல் வேட்டைக்குச் சென்றிருக்கையில், இரீனாவோ காட்டில் இவானுக்கு வழிதவறுகிறது. யர்மோலாவையும் நாயையும் காணவில்லை. சாலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தடுமாறி நடந்து நடந்து சதுப்பு நிலத்தில் தனியாக இருக்கும் ஒரு குடிசையைக் கண்டு அங்கு செல்கிறான். அது மந்திரக் கிழவி மனூய்லிகாவின் குடிசை.
கிழவியின் பேத்தி அல்யோனாவிற்கு இப்போது வயது இருபது. அவளுக்கு இன்னொரு பெயர் உண்டு – “ஒலேஸ்யா”. ஒலேஸ்யாவின் அசரடிக்கும் அழகும், பேச்சும், வெகுளித்தனமும், குழந்தைமையும் இவானை மிகவும் வசீகரிக்கின்றன. இவான் ஒலேஸ்யாவின் மேல் காதல் கொள்கிறான்.
காதலின் இசைக்கவிதை அங்கு தொடகுகிறது…
*
“ஒலேஸ்யா” – இளவேனிற்கால பௌர்ணமி; வெண்பனிக் காட்டின் வசந்தகால யட்சி; நீலி.
வெங்கி
“ஒலேஸ்யா” – அலெக்சாந்தர் குப்ரின் (ருஷ்ய குறுநாவல்) 1898
தமிழில்: நா. முகம்மது செரீபு
ராதுகா பதிப்பகம், மாஸ்கோ/போதி