ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்- கடிதங்கள்

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்

அன்பார்ந்த நண்பருக்கு நல்லாசிகள்.

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும் என்ற கட்டுரையை இன்று படித்தேன். முடிவுகளைப் பற்றிய என் கருத்து: சிம்லாவிற்கு வடகிழக்கில் கின்னரர்கள் என்ற மலை இனத்தவர்கள் பழய ராம்பூர் புஷேர் என்ற இடத்தில், சுமார் 30,000 பேர்கள் உள்ளனர். அவர்கள் மொழி “கின்னௌரி”. நான் முன்பு சுமார் 1-1/2 ஆண்டுகள் அவர்களிடம் தங்கி அந்த மொழிக்கு ஒரு இலக்கணம் எழுதினேன். அதற்கு குக்ஷேத்திரா பல்கலை கழகம் முனைவர் பட்டம் தந்தது. அந்த கின்னர குடும்பங்கள் தங்களை திரௌபதி வம்சம் என்கிறார்கள்.

அங்கே குடும்பத்தில் மூத்தவரே எல்லா குழ்தைகளுக்கும் தந்தை. மிக இளையவனைத்தவிர, மற்ற சகோதரர்கள் ஒரே பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார்கள். சிறிதே உள்ள விளை நிலத்தை பங்கு போட முடியாது. யாரேனும் ஒருவரைத்தவிர, மற்றவர்கள் ஆடு மேய்க்க, வியாபாரம் செய்ய என்று வெகுதூரம் செல்வார்கள். மலைப்பாதைகளை கடந்து உடனே வரமுடியாது. ஆகவே யாரவது ஒருவரே வீட்டில் இருப்பார்கள். வெவ்வேறு காலணி இருப்பதால், பெண்ணுடன் யார் இருக்கிறார் என்பது தெரியும். எந்தவித குடும்ப மோதலும் இல்லை.

நிற்க, தீ பற்றி அறியுமுன், களவு மணமே நடந்திருக்க முடியும். ஆனால் பகை நீக்க, பலம் பெற ஒரு பெண்ணை எதிரிக்கு மாலை மாற்று முறையில் (அநுமானமே) மணம் முடிப்பார்கள். அப்போது மனத்தளவில் ஒருவரை ஏற்றாலும், சமுதாயத்திற்காக இன்னொருவரை மணக்கலாம். அதையே ‘யன்மே மாதா…’ என தொடங்கும். இதன் பொருள் ‘என் தாய் (அறிந்தும் அறியாமலும்) எந்த ஆடவருடன் உறவு கொண்டிருந்தாலும்..’ வெளிப்படையாக ஒரு பெண் மனத்தளவில்தான் உறவு கொண்டேன் என்று சொல்லமாட்டாள். ஆகவே, பின்காலத்தில் விவரமாக இதை சொல்லி இருக்கமாட்டார்கள். மேலும்  ஆண் வாரிசு வழி முறையில் சொத்து பங்கு, பெண்களுக்கு இல்லாத கால முறையில், முழு சூழ்நிலை தெரியாத போது, இன்றைய கண்ணோட்டத்தில் பார்ப்பது பேதமை. தீப்பெட்டி இல்லாத கால, ஔபாசனம், தீ குடுவை இன்று இல்லை. ஆகவே தொல்காப்பியரின் “பழயன கழிதலும், புதியன புகுதலும்” இங்கே பொருந்தும்.

அன்பன்

முனைவர். நா ராமசுப்பிரமணியன், களக்காடு

முந்தைய கட்டுரைபகல்களுக்கு அப்பால்
அடுத்த கட்டுரைஇசைத்தமிழ் ஆவணம்