மேடையுரை, கடிதம்

 அன்புநிறை ஜெவிற்கு

ஜனவரி 20,21,22 நாட்களில் நடந்த மேடையுரை பயிற்சி முகாமில் பங்குகொண்டது பேருவகை நிறைந்த தித்திப்பை அளித்தது. அது இக்கணம்வரை இருக்கிறது, பெருகிக்கொண்டு. அறிவு செயல்பாட்டில் திளைக்கும் மனங்கள் மோகித்து நிற்பதை காண வாய்த்தது அங்கு. பனித்திரை சூழ்ந்த மலைவெளியில், முகாமிற்கு வந்த அனைவரும் ஒருவருக்காக ஏங்கி நின்றதை முதல் நாள் காலையில் கண்டேன். அவரை கண்டபின்னர், ஒரு கணமும் அருகிருந்து நீங்கலாகாது என்ற பாவனையும் தோன்றியது.

ஒவ்வொரு முகமும் அவரை சூழ்கையில் பிரேமை நிறைத்து நின்றன. அங்கிருந்து புறப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் உவகை மேல்லெழுகிறது. ஜோதி நிறைந்த கண்கள் ஒரு திசை நோக்கியிருந்தன. விவேகியாக, சிந்தனையாளராக, கலைஞனாக, ஆசிரியராக, களி நிறைப்பவராக, அத்வைதியாக அவ்விடத்தை ஆட்கொண்டது அவ்வுருவம்.

புகைப்படம் ஆகச்சிறந்த தருணங்களை அங்கேயே நிறுத்த முயல்கிறது. தன்னை தான் மறந்து ரசிக்கும் தருணம் அதில் ஒன்று. கடந்த 10 நாட்களாக இப்புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கையில், மிக மென்மையாக மனம் கொந்தளித்து அடங்கும். மீண்டும் எப்போது அருகிருப்பது? மீண்டும் அத்தனை பிரேமை நிறைந்த முகங்களை எங்கு காண்பது? என்ற கொந்தளிக்கும் கேள்விகள்.

ஒரு வகை பரவச நிலையில் நடமாடிய கால்களை கண்டேன். பூவிடைபடுதல் என்று சங்க இலக்கியம் சுட்டுவதை அங்கு உணர்ந்தேன். பாறையில் அமர்ந்து மொழிகையில் ஒரு சருகு அவர்மேல் உதிர்ந்தது. ஒரு சில வினாடி பேச்சை நிறுத்தி, பின் தொடர்ந்தார். அந்த கணங்களில் மனம் அச்சருகிடம் கோபம் கொண்டது. சுற்றி பார்க்கையில் அதே போன்ற கோபத்தை மற்ற முகங்களிலும் காண முடிந்தது.

பின்மதிய உறக்கத்திலும், இரவு உறக்க நேரத்தில் மட்டும் அவரது குரல் ஓய்ந்திருந்தன. குழந்தைமொழி கேட்க முந்தும் தந்தையர்யென ஒவ்வொருவரும் முன்வந்து நிற்க முனைந்தனர். நடக்கையில், அமர்கையில், நிர்க்கையில் அங்கிருந்து எழுந்த சொற்கள் புவியீர்ப்பென ஒருகனமும் அறுபடாத தாக்கத்தை மற்றவர்களில் செலுத்தியது. மேடைவுரைக்கான பயிற்சிதான் ஆயினும் அனைவரிடமும் இரவு பகலாக நீண்டது காதல் தான்.

**

ஜனவரி 20 காலையில் ஆர்தர் கோஸ்ட்லரின் ‘தி ஆக்ட் ஆப் கிரேஷன்’ புத்தகத்தில் கூறப்பட்ட மூன்று கலைகளின்(மேஜிக் , ஸ்டாண்ட் அப் காமெடி, சிறுகதை) வரலாற்றிலிருந்து மேடையுரைக்கான பயிற்சி தொடங்கியது. 7 நிமிட உரைக்கான கச்சிதமான தொடக்கம், முடிவு, உள்ளடக்கம் எவ்வாறு அமைதல்  வேண்டும் என்று விளக்கப்பட்டது. அங்கு தொடங்கி பேச்சை எவைகளை கொண்டு ஆரம்பிக்கலாம், பேச்சின் உடல் கட்டமைப்பில் (Body of speech) செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என நீண்டு அவை நாகரிகம் சொல்லி நிறைவுபெற்றது காலை வகுப்பு.

மாலை நண்பர்கள் 7 நிமிட உரைகளை ஆற்றத் தொடங்கினர்.  ஒவ்வொருவரும் பேசியவை அவர்களின் தனித்த சிந்தனையை முன்வைத்தது. முதல் உரை தடுமாற்றத்துடன்தான் பெரும்பாலானவர்களுக்கு அமைந்தது. ஆனால் அந்த சிந்தனையில் ஒரு தனித்தன்மை இருந்தது. அவ்வாறுதான் அமையவும் முடியும் என்பது ஆசிரியரின் வாசகர்களை கண்டால் தெரியும்.

பல மேடைகளை கண்டவர், உலக மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவர், அசல் சிந்தனையாளர் என்ற ஆளுமை ஒவ்வொருவரின் பேச்சிலும் மேன்படுத்த வேண்டியவை, தவிர்க்கவேண்டிய பிழைகள் என சிலவற்றை சுட்டிக்காட்டினார். அங்கு நிற்காமல், இதை இவ்வாறு சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமென பேசியவரின் கருப்பொருளை செறிவுடன் விரித்து பேச்சை முன்வைத்தார். உலகம் கொண்டாடும் வேறு கலைஞர்கள் யாராவது  முதல்முயற்சி மேடையுரைகளை அமர்ந்து கேட்டிருப்பார்கள் என்பதே சந்தேகம்.

இரண்டாவதாக ஆற்றப்பெற்ற உரைகள் மேலும் செறிவுடையதாக அமைந்தது. அனைவரிலும், முதல் உரையிலிருந்து இரண்டாவது உரைக்கான பெரிய முன்தாவளை அறியமுடிந்தது.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

என்ற குறளுக்கு ஏற்ப சொல் திறம் கொண்ட எழுத்தாளர் பயிற்சி அளித்தார் என்பது எங்களை கர்வம் கொள்ளச் செய்தது.

**

வரலாற்றின் மிக முக்கியமான இலக்கிய, அறிவியல் உரைகள் என  நீங்கள் கருதும் சிலவற்றை குறிப்பிட கோருகிறேன்.

பிரேமையுடன்
பரமகுரு

முந்தைய கட்டுரைலக்ஷ்மி சரவணக்குமார் படிக விழாவில் கலந்துகொள்கிறேன்
அடுத்த கட்டுரைபுதுச்சேரி இலக்கிய முகாம், கடிதம்