ஜிஜுபாய் பதேக்காவின் “பகல் கனவு” -வெங்கி

அன்பின் ஜெ.
ஜிஜுபாய் பதேக்காவின் “பகல் கனவு” வாசித்தேன். கல்வியியல் சார்ந்த மிக நல்ல படைப்பு. 1910-களில் கல்வித் துறையில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் கனவும் செயல்முறைகளும கொண்டது. சுவாரஸ்யம் மிகுந்த, அருமையான சிறிய நூல். 1932-ல் குஜராத்தியில் வெளிவந்திருக்கிறது. சங்கரராஜுலு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இன்றைய ஆசிரியப் பணியில் இருக்கும் அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய அழகான நூல்.  என் பால்யத்தின் பள்ளிகளையும், மனதுக்கு நெருக்கமான அன்பான ஆசிரியர்களின் நினைவுகளையும் மனதுள் மலர்த்தியது.
நான் 77-ல் ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த, பள்ளி முதல் நாள் நினைவடுக்கில் இன்னும் மெலிதாய் ஞாபகம் இருக்கிறது. அப்பாதான் கூட்டிக்கொண்டு போனார். ஆரஞ்சு மிட்டாய்களுடனும், மஞ்சள் பையுடனும் போனேன். ஓடைப்பட்டிக்கும், மேலப்பட்டிக்கும் சேர்த்து ஐந்தாம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மேலப்பட்டி கிராம எல்லையில் ஜீவா வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பழைய ஓடு வேய்ந்த ஒற்றைக் கட்டிடத்தில் நடந்து வந்தது (ஜீவா என் வகுப்புதான். பின்னால் எட்டாம் வகுப்பு வரை உடன் படித்தார்). பெரியப்பாதான் அதன் தலைமையாசிரியர். என் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது பெரியப்பாதான். அப்போது வாரம் இரண்டோ/மூன்றோ நீதிபோதனை வகுப்பிருக்கும். பாடநூல்கள் தவிர, மாணவர்கள் வாசிப்பிற்கான, பல்வகை நூல்களை ஒரு பெரிய டிரங்குப் பெட்டியில் அழகாக அடுக்கி வைத்திருப்பார் பெரியப்பா. நான்காம்/ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நீதிபோதனை வகுப்புகளில் பலமுறை புத்தகங்கள் படித்துவிட்டு வகுப்பிற்கு முன்சென்று கதைகள் சொல்லும்படி சொல்லியிருக்கிறார். மாமா பெண்கள் ஹேமலதாவும், விஜயராணியும் என் வகுப்பில் பின்னர் நண்பர்களானார்கள்.
6,7,8 பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். ஹேமா, ஜீவா, ராணி, இன்னும் சில நண்பர்கள் ஓடைப்பட்டியிலிருந்து தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுவந்தோம். அதன் தலைமையாசிரியர் டேவிட் சுந்தர் சிங். அவரும், அறிவியல் ஆசிரியரும், கைத்தறி ஆசிரியரும் தினமும் திருமங்கலத்திலிருந்து வந்து போய்க்கொண்டிருந்தனர். டேவிட் சார் என் புத்தக வாசிப்பார்வத்தை வெகுவாகத் தூண்டிவிட்டவர். அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், காமிக்ஸ்கள் என்று அனைத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். திடீர் திடீரென்று அன்று ஆசிரியர்கள் வருகை இல்லாத வகுப்புகளுக்கு வந்து, மாணவர்களை வைத்து உடனடி நாடகங்கள் போடுவார். பள்ளியின் கலைநிகழ்ச்சிகளில் அவரின் பல நாடகங்களில் நாங்கள் நடித்திருக்கிறோம் (கள்ளிக்குடியில் ஒரு விழாவில் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில் நான் அலாவுதீன் கில்ஜியாக நடித்தது இன்னும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது!). கணக்காசிரியர் சென்னம்பட்டியில்தான் தங்கியிருந்தார். விடுமுறை நாட்களில் அவருடன் சேர்ந்து நாங்கள் மொத்த வகுப்பும் அருகிலிருக்கும் தோப்புகளுக்கும், காடுகளுக்கும்  செல்வோம். மதிய உணவு எங்களுடன் எடுத்துச் செல்வோம். பாட்டும், கூத்தும், விளையாட்டுகளுமாய் மாலை வரை நேரம் போவதே தெரியாது. சட்டென்று நாடகப் போட்டிகளும்/நடிப்புப் போட்டிகளும் நடக்கும். ஒருமுறை முதல் ரேங்கிற்கு என்னுடன் போட்டிபோடும் சத்யமூர்த்தி, பிட்டுக்கு மண்சுமந்த கதையை நடித்தான். நான் ஒரு துப்பறியும் கதையில் நாயாக நடித்தேன். ஆசிரியருடன் சேர்ந்து தோப்பில் வெடிதேங்காயும் போட்டிருக்கிறோம்.
ஒன்பதிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தது திருமங்கலம் பி.கே.என்-னில். அங்கும் வகுப்பாசிரியரும், ஆங்கில ஆசிரியரும் (வரதராஜன்), தமிழாசிரியரும் அற்புதமாய் அமைந்தார்கள். வகுப்பாசிரியர் போட்டிகளில் பரிசுகளாக புத்தகங்கள்தான் கொடுப்பார். சாண்டில்யனும், ராஜேஷ்குமாரும், பி.கே.பி-யும், சுபாவும், சுஜாதாவும் அப்போது மிக விருப்பம். விடுதி வார்டன் ராதாகிருஷ்ணன் சார் ஆங்கிலத்தில் own creative writing-ஐ கற்றுக்கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
“பகல் கனவு” நூலில் கிருஷ்ணகுமாரின் முன்னுரையிலிருந்து… – சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேய அரசாங்கம் இளம் சிறார்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களை சோம்பலான, சக்தியற்ற கல்விமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அந்தச் சூழலிலேயே நமது ஆசிரியர்கள் தொடர வேண்டியதாயிற்று. இதற்கிடையே கல்வி முறையின் விரிவாக்கம் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கல்வியைக் கொண்டுசென்றது. ஆசிரியர்களின் அக்கறையின்மையை லட்சக்கணக்கான குழந்தைகள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆயிரக்கணக்கான விஷயங்களை – மண்ணில் இருக்கும் பூச்சி புழுக்களிலிருந்து வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் வரை – வகுப்பறைக் கல்விக்கு ஏற்றதல்ல என்றே நம் நாட்டில் நிலவிய கல்விமுறை கருதி வந்தது. தனக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்தேதான் கற்பிக்க வேண்டும், குழந்தைகளைப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யவேண்டும் என்ற நோக்கிலேயே சராசரி ஆசிரியர் எவரும் வேலை செய்கிறார். குழந்தையின் அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்கு தீனிபோட்டு வளர்க்கவேண்டும் என்பது தனது கடமை என்று எந்த ஆசிரியரும் கருதவில்லை. அப்படி எண்ணினாலும் அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்குரிய சூழ்நிலையை பள்ளிகள் கொண்டிருக்கவில்லை.
இச்சூழலில்தான் குஜராத் மாநிலத்தின் சிறந்த ஆசிரியரும், கல்வியாளருமான ஜிஜுபாய் பதேக்கா (1885-1939), “குருட்டு மனப்பாடக் கல்வி”-யிலிருந்து விலகிய, குழந்தைகள் தற்சார்பும், நம்பிக்கையும், தெளிவும் கொண்டு உற்சாகத்துடன் பயிலும் ஒரு நடைமுறைக் கல்விச் செயல்திட்டத்தை கனவு காண்கிறார். 1916-ம் ஆண்டு குஜராத்தின் பவநகரில் செயல்பட்ட தக்ஷிணாமூர்த்தி பாலமந்திரின் நான்காம் வகுப்பில் தன் கனவின் கல்விப் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்.
***
கோவை வேளாண் பல்கலையில் இளமறிவியல் தோட்டக்கலை என்னுடன் படித்த நண்பன் ராஜ் இன்று பெங்களூரு ஐ.டி.சி நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உயர் அதிகாரியாக இருக்கிறான். படிக்கும் காலத்திலேயே தனித்துவமான, வித்தியாசமான, ப்ராக்டிகலான கோட்பாடுகள் கொண்டவன். காதல் திருமணம் செய்துகொண்டான். சௌமி, கவின் என்று அழகான இரு குழந்தைகள். இருவரையும் ஆரம்பத்திலிருந்தே போட்டிக் கல்வி முறையில் சேர்க்கவில்லை அவன். “ஓபன் சிலபஸ்”-ல்தான் படித்தார்கள். பன்முகத் திறன் கொண்டவர்களாய் வளர்ந்தார்கள். சௌமி +2 முடித்து இன்று வி.ஐ.டி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். அசாத்திய துணிச்சலும், தெளிவும் கொண்ட ராஜுவின் மேல் எனக்கு எப்போதும் ஆச்சர்யம் உண்டு.
ஜிஜுபாய் பதேக்காவின் கனவு, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்தபின்னும், இன்றும் உயிர்ப்பின் பசுமையுள்ளது. அதன் ஆன்மா இக்காலகட்டத்திலும் அவசியம் உணரப்பட வேண்டியதும், முக்கியத்துவமானதும் ஆகும்.
வெங்கி
“பகல் கனவு” – ஜிஜுபாய் பதேக்கா
குஜராத்தி மூலம்: Divaswapna 1932
தமிழில்: சங்கரராஜுலு
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
முந்தைய கட்டுரைஇந்து மரபு – இருநூல்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைசுக்கிரி, கடிதம்