இனி நான் உறங்கட்டும், வெங்கி

இனி நான் உறங்கட்டும் வாங்க

அன்பின் ஜெ,

நலம்தானே?

நேற்று ஞாயிறு “இனி ஞான் உறங்கட்டே” வாசித்து முடித்தேன். சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும் மீண்டும் மனம் நிறைத்திருந்தார்கள்.

“மகாபாரதம்”, “ராமாயணம்”, “பாகவதம்” எனும் வார்த்தைகள் பார்வையிலும், காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும் முகங்கள் சில உண்டு. கிராமத்தில் பொட்டுத் தாத்தா, அம்மா வழித் தாத்தா சின்ன ராமசாமி (நாங்கள் “வண்டித் தாத்தா” என்று கூப்பிடுவோம்), பெரியப்பா வெங்கடாஜலபதி, பெருமாள் கோவில் அர்ச்சகர் ராஜர் (நம்பியின் அப்பா), சீனிவாசன் மாமா (தமிழாசிரியர்; மாமாவின் பெண் விஜயராணி என் வகுப்பு), திருமங்கலத்தில் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் நண்பன் நாராயண மூர்த்தி மூலம் அறிமுகமாகி அன்பின் நெருக்கமான சாமிப் பாட்டி. அனைவரும் அப்புராணக் கதைகளை என் மனதிற்கு அறிமுகப்படுத்தி ஆழ் மனத்தில் பதியச் செய்தவர்கள். பால்யத்தில் எத்தனை நூறு கதைகள் கேட்டிருப்பேன் அவர்களிடம்!

கிராமத்தில் வண்ணமயில் கடைக்கு முன்னாலிருக்கும் காளியம்மன் கோயிலில் முன்னிரவுகளில் சுற்றிலும் கிராமத்து ஜனங்கள் அமர்ந்திருக்க தமிழ் பண்டிட் சீனிவாசன் மாமா சத்தமாய் ராகமாய் சுந்தரகாண்டம் படிக்கும் காட்சி இன்னும் பசுமையாய் நினைவுகளில் இருக்கிறது. நம்பியின் வீடு வசந்தா அத்தையின் வீட்டிற்கு முன்னால். நம்பியின் அப்பா ராஜர் தினமும் பாரதம் தொடர்ந்து சொல்ல (பாரதக் கதை சொல்லத் தொடங்கிய நாளிலும், முடிக்கும் நாளிலும் பூஜை செய்து பிரசாதங்கள் தருவார்), நாங்கள் சிறுவர்களும், அத்தையும், பாட்டியும் (வசந்தா அத்தையின் அம்மா), இன்னும் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்போம். தேவி பாகவதத்தை எனக்கு நெருக்கமாக்கியது பொட்டுத் தாத்தாவும், திருமங்கலம் சாமிப்பாட்டியும். பாரதமும், பாகவதமும் என்றும் வற்றாத கதைகளின் ஊற்று. இன்றும் வியப்பளிக்கும் பிரம்மாண்டம்.

பி.கே – வின் “இனி ஞான் உறங்கட்டே” – கனவுகளில்/முன் வெளிகளில் உலாவச் செய்யும், மயக்கும், சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்தது. அபாரமான நாவல். ஆ. மாதவனின் அற்புதமான மொழிபெயர்ப்பு. மொழியின் இனிப்பிலும், அந்த எழுத்தின் வசீகரத்திலும் இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறேன்!. ஆரம்பத்தில் விலகி நின்று புன்னைகத்த மொழியிடம் மனம் குவித்து வேண்டிக் கொண்டேன் “என்னை உடன் அழைத்துப் போ” என்று. அதன்பின் அது கைபிடித்துக் கொண்டது. பிரமாதமான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, மனம் நெகிழ்த்தும் பயணம்.

செவ்வியல் கிளாஸிக் நாவல்களுக்கு வாசிப்பனுபவம் எழுதுவது இடர் தருவது. என்ன எழுதினாலும், எத்தனை எழுதினாலும் மனம் திருப்தி அடையாது. மனம் அந்நாவலின் ஆழத்தில், ஆன்மாவில் திளைத்துக் கிடக்கும்; அது குறித்து எழுதுவதெல்லாம் மேலோட்டமாகவே அமைந்து/உணர்ந்து விசனப்பட வைக்கும். எழுதாமல் தப்பிக்கலாம் என்றாலும் விடாது. அந்த எழுத்திலிருந்து கிடைத்தவற்றை தொகுத்துக் கொள்ள, சுவையின் ஒரு துளியையாவது பற்றிக்கொள்ள மனம் பதிந்துவைக்க விழையும்.

“இனி ஞான் உறங்கட்டே” நாவலில் மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் பெரும்பாலானோர் வந்தாலும் முக்கியமாய் இது கர்ணனின் கதை. திரௌபதியின் கதையும் கூட. மனக் கொந்தளிப்புகளின் நாவல் என்று இந்நாவலைச் சொல்லலாமா?. மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளின் போது மனதில் உருவாகும் தவிர்க்க முடியாத கேள்விகளை நாவலுக்குள் எழுப்பி அதற்கான விடைகளை அதன் பாத்திரங்கள் வாயிலாகவே எழுத்தினூடே கண்டடையும் ஒரு கவித்துவ நவீன மனத்தின் படைப்பு “இனி ஞான் உறங்கட்டே”.

யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரையும் போர்க்களத்தில் கொல்லும் வாய்ப்புகள் கிடைத்தும், தாய்க்கு தான் தந்த வாக்குறுதியால் அவர்களைக் கொல்லாமல் விடுகிறான் கர்ணன். கர்ணனிடம் நால்வரும் தோற்று போரில் உயிர் பிச்சை பெற்று பின்வாங்கும் காட்சிகள் நாவலில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.

நாவலில் வரும் ஹஸ்தினாபுரத்தின் ஆயுத வித்தை அரங்குக் காட்சிகள், நாரதர்-யுதிஷ்டிரன் சந்திப்பு, குந்தி-கர்ணன் சந்திப்பு, கர்ணன்-கிருஷ்ணன் சந்திப்பு, இந்திரன்-கர்ணன் சந்திப்பு, சபையில் கிருஷ்ணையின் துகிலுறியப்படும் காட்சிகள், போர்க் களத்தில் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரை கர்ணன் சந்திக்கும் காட்சி,  பீமனின் துச்சாதன வதம், அர்ஜுனனின் கர்ண வதம்…அனைத்தும் மிக அபாரமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன!

போர்க்களக் காட்சிகள் ஒரு விஷூவல் ட்ரீட்.

நாவலில் எனக்குப் பிடித்த காட்சிகளைச் சொல்லவேண்டுமென்றால் பல பதிவுகள் எழுதவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு ஒன்று மட்டும்…

போர்க்களத்தில், போரின் நடுவில், அர்ஜுனனைப் பார்த்துவர யுதிஷ்டிரன் சொல்ல, பீமன் கௌரவர் சேனை நடுவே ரதத்தில் பாய்ந்து விரைகிறான். எதிரில் கர்ணன்…

உக்கிரமான போர் இருவரிடையிலும். வெற்றிக் களிப்பில் மனதை கட்டுப்பாட்டில் நிறுத்திய ராதேயன் கர்ணன் சின்னச்சின்ன சரங்களைத் தொடுத்துவிட்டு பீமனை வேடிக்கையாக கிச்சுக்கிச்சு மூட்டினான். தாயிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் நினைவில் வரப்பெற்றவனானான். வீமன் அருகே போய் வில்முனையால் தொப்பையில் கிசுகிசுப்பு மூட்டி வாய்விட்டு சிரித்தான். சகிக்கவொண்ணாத அவமானத்தால் சிலிர்த்த வீமன், அந்த வில்லினை பறித்தெடுத்து கர்ணனது உச்சிமேல் அடித்தான். விலகிக்கொண்ட கர்ணன் கேலியாக பின்னும் நகை செய்தான். “தொப்பை வயிற்றுக்காரனாகிய அடேய் கௌந்தேயா, விருந்து மண்டபம்தான் உனக்குத் தகுதியான இடம். நீ எதற்காக போர்க்களம் வரவேண்டும்…?. வில் வீரத்தில் அஞ்ஞானி நீ. மரத்தைப் பிடுங்கி அடித்துக் கொன்றிட இது, கிர்மீரனும், பகனுமல்லஇது கர்ணன் என்பதை நன்றாக நினைவில் வை. கானகத்தில் அலைந்து திரிந்து காய்கனிகளைத் தின்று வயிற்றை நிரப்புவதல்ல போர் என்பதை அறியவில்லை நீ. உனக்குப் போரிட ஆசையாயின் உனக்குத் தகுந்தவரிடம் போய் போரிடு. அல்லது கிருஷ்ணார்ஜுனர்களின் நிழலில் போய் மறைந்துகொள். அவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள். அல்லது வேகமாக வீட்டை நோக்கி ஓடிவிடு. அதுதான் உனக்கு நல்லது…”

மாஸ்டர் பி.கே-விற்கும், தமிழில் தந்த ஆ. மாதவனுக்கும் நன்றியையும், வணக்கங்களையும், என்றென்றும் அன்பையும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

வெங்கி

“இனி நான் உறங்கட்டும்” நாவல் – பி.கே.பாலகிருஷ்ணன்

மலையாள மூலம்: Ini Njan Urangatte…

தமிழில்: ஆ.மாதவன்

சாகித்ய அகாடமி வெளியீடு

முந்தைய கட்டுரைஎழுகதிர் நிலம் -2
அடுத்த கட்டுரைஆலயக்கலை வகுப்பு, கடிதம்