மொழியாக்கம்:கடிதங்கள்

ஜயமோகன் அவர்களே
 
‘குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது. சுசீலாவின் பக்கத்திலிருந்து இந்த மொழி பெயர்பு ரஷ்ய மூலத்திலிருந்து செய்யப் பட்டதா அல்லது ஆங்கில புத்தகங்களிலிருந்து செய்யப் பட்டதா என தெரிய வில்லை.
 
மொழிபெயர்ப்பு விருது கொடுப்பவர்கள் மூல மொழியிலிருந்து செய்யப் பட்ட பெயர்புகளை கருதினால்தான் நல்லது. இல்லாவிட்டால் அதன் மதிப்பு குறைந்து விடுகிரது. இந்தியாவிக்கும் ரஷ்யாவிக்க்கும் 80 வருடங்களாக பல தளத்தில் உறவுகள் உள்ளன.அதனால் நல்ல ரஷ்ய மொழி தெரிந்த தமிழர்கள் இருப்பார்கள். அதனால் பரிசு வாங்கிய புத்தகம் மூல மொழியிருந்து செய்யப் பட்டது என எதிர்ப் பார்க்கிரேன்.
 

வ.விஜயராகவன் 


அன்புள்ள விஜயராகவன்

அம்மொழியாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குச் செய்யப்பட்டது. இந்தியாவில் நேரடியாக ஐரோப்பிய — ஆசிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்பவர்கள் மிக மிகச் சிலரே. மலையாளத்தில் சிலர் ·பிரெஞ்சிலிருந்து மொழியாக்கம் செய்கிறார்கள். கோவாவில் சில போர்ச்சுகல் மொழியிலிருந்து. மற்றபடி நட்சத்திர ஓட்டல் வழிகாட்டித் தரத்துக்கு அம்மொழிகளை அறிந்தவர்களே நம்மிடம் உள்ளனர்.

சோவியத் ருஷ்யா இருந்தபோது இங்கிருந்து சிலரை அங்கே கொண்டுசென்று தங்கவைத்து மொழியாக்கம்செய்ய வைத்தார்கள். ராதுகா மற்றும் முன்னேற்றப் பதிப்பக வெளியீடாக வந்த இந்நூல்கள் நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து மொழியாக்கம்செய்யபப்ட்டன என்று சொல்லப்பட்டது. ரா கிருஷ்ணையா, பூ சோமசுந்தரம், நா.தர்மராஜன் போன்றவர்கள் நாடறிந்தவர்கள். ஆனால் சமீபத்தில் அங்கிருந்த மூத்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரிடம் பேசியபோது பெரும்பாலும் ஆங்கிலத்தை நம்பியே அந்த மொழியாக்கங்கள் செய்யப்பட்டன என்றார். அதை அந்த மொழியாக்கங்களிலும் ஊகிக்கலாம்.  அவை ருஷ்யமொழிக்கு ருஷ்யாவின் பிராந்திய மொழிகளில் இருந்து மொழியாக்கம்செய்யப்பட்டவை என்பதை நாம் நினைவுகூரவேண்டும். அதாவது ஆங்கில மொழியாக்கமேகூட இரண்டாம்நிலை மொழியாக்கம்தான்..

நேரடி மொழியாக்கம் என்பது இந்திய மொழிகளில் இருந்துகூட தமிழுக்குச் செய்யப்படுவதில்லை.  கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வதற்க்குக் கூட  ஆங்கில மொழியே பயன்படுத்தப்படுகிறது. குஜராத்தி, மராட்டி, அஸ்ஸாமி, காஷ்மீரி, ஸிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகளில் இருந்து மொழியாக்கங்கள் இந்தி வழியாகச் செய்யப்படுகின்றன. ஆனால் மலையாளத்தில் நேரடி மொழியாக்கங்கள் செய்யப்படுகின்றன. எல்லா இடத்துக்கும் பிழைப்புக்குச் செல்லும் மலையாளிகள் மொழிகளைக் கற்று மொழியாக்கம் செய்கிறார்கள். அவர்களில் ராணுவ வீரர்களும் உண்டு. மணிப்பூரி மொழியிலிருந்தும் மொழியாக்கங்கள் நேரடியாக அங்கே வந்தன.

தமிழில் மொழியாக்கத்துக்கு நிபுணர்கள் கிடையாது. துளசி ஜெயராமன் , எஸ்.கிருஷ்ணமூர்த்தி போன்ற சிலர் தனிப்பட்ட திருப்திக்காக பலவருடங்கள் தொடர்ந்து மொழியாக்கங்கள் செய்தார்கள்.  மொழியாக்கம் மூலம் ஒருவர் ஒரு தொழிலைக் கண்டடைய முடியுமென்றால் மட்டுமே அது நிகழும். அதைவிட , தமிழர்கள் பிற மொழிகளைக் கற்பது மிகமிகக் குறைவு. கற்றாலும் இலக்கிய அறிமுகம் கொள்வது அதைவிடக் குறைவு– அதாவது முற்றாகவே கிடையாது. இதுதான் இந்நிலைக்குக் காரணம்.

அதற்கும் மூலக்காரணம் ஒன்றுதான், நாம் கடைசியாக எப்போது ஒரு மொழியாக்க நூலை வாங்கிப்படித்தோம் என்று பார்த்தால் அது புரியும்.

ஆகவே மொழியாக்கம் என்றாலே அது 99 சதவீதம் ஆங்கிலம் வழியாக என்று எடுத்துக்கொள்ளுங்கள்

ஜெ   

அன்புள்ள ஜெ

தமிழில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களைப்பற்றி நீங்கள் தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளீர்கள். தமிழில் ஆசிய இலக்கியங்கள் — ஜப்பானிய, கொரிய மொழிகள்– மொழியாக்கம்செய்யப்படுகின்றனவா? வாசிக்கக் கிடைக்குமா?

சிவம்

அன்புள்ள சிவம்,

மொழியாக்கங்கள் எந்த மொழியிலும் பல புறக்காரணிகளால் தீர்மானிக்கபப்டுகின்றன. தமிழில் அதி மாகா மொழியாக்கங்கள் வந்துள்ளது ருஷ்ய மொழியில் இருந்துதான். அதற்குக் காரணம் சோவியத் அரசு பெரும் பணச்செலவில் அந்நூல்களை இங்கே கொண்டுவந்தது. அதன் பின் அமெரிக்க இலக்கியங்கள். பேர்ல் பதிப்பகம் போன்ற சில நிதியுதவிபெற்ற அமைப்புகல் அமெரிக்க எழுத்துக்களை நமக்குக் கொண்டு வந்தன.

அதன்பின் ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாகும் அலைகள். ஐம்பதுகலில் க.நா.சு ஐரோப்பிய நாவல்கள் மேல் ஒரு சுவையை உருவாக்கினார். எண்பதுகளில் லத்தீனமேரிக்க இலக்கியம் சிற்றிதழாளர்களைக் கவர்ந்தது. ஆகவே சில மொழியாக்கங்கள் வந்தன. பொதுவாக இன்று ஐரோப்பிய நாடுகளில் எது பேசப்படுகிறதோ அதுவே தமிழ் சிற்றிதழிலும் பேசப்படும். அது சார்ந்தே மொழியாக்கங்கள் நிகழும்.

அதேபோல ஐம்பதுகளில் வங்க இலக்கியம் மீது பெரும் ஆர்வம் இருந்தது. ஆகவே நிறைய மொழியாக்கங்கள் செய்யப்பட்டன. பிற மொழிகளில் இருந்து மத்திய அரசு அமைப்புகள் மொழியாக்கங்கள் செய்தால்தான் உண்டு.

தனிப்பட்ட தேர்வுகளினால் சில மொழியாக்கங்கள் நிகழக்கூடும். இப்போது சில மலையாள, கன்னட ஆக்கங்கள் அவ்வாறு வெளிவருகின்றன. பாவண்ணன் நஞ்சுண்டன்  தி.சு.சதாசிவம் போன்றவர்கள் கன்னடத்திலிருந்தும் குறிஞ்சிவேலன் மலையாளத்தில் இருந்தும் செய்வதைச் சொல்லலாம்

பொதுவாக மொழியாக்கங்கள் நிறுவன ஆர்வமற்ற நிலையில் தனிப்பட்ட முயற்சிகளாக அங்கிங்காகவே நிகழ்கின்றன. ஆகவே கீழைநாட்டு மொழியாக்கங்கள் அனேகமாக இங்கே வருவதில்லை. சீன இலக்கியமே நமக்கு அறிமுகம் இல்லை என்பதுதான் உண்மை. ஜப்பானிய இலக்கியத்தில் ஜென் கவிதைகள், யசுநாரி கவாபத்தா போன்ற சில முக்கியமான படைபபளிகள் மட்டுமே இங்கு வந்திருக்கின்றன.– ஆங்கிலம் வழியாக. எம் யுவனின் ஜென்கவிதைகள் மொழியாக்கம் [ உயிர்மை வெளியீடு] லதா ராமகிருஷ்ணனின் யசுநாரி கவபத்தாவின் கதைகள் [ஸ்நேகா பிரசுரம்] குறிப்பிடத்தக்கவை. இப்போது ஜெயந்தி சங்கர் சில சீனக்கதைகளை மொழியாக்கம்செய்துவருகிறார்

ஜெ

குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது

முந்தைய கட்டுரைசுஜாதா அறிவியல்புனைகதை பரிசு
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 5