பேரரசன் அசோகன் : தொலைந்த நிலையும், மீட்ட கதையும்-கடலூர் சீனு

கடந்த பல வருடங்களாக நான் கண்டு கொண்டு இருக்கும் நிலை ஒன்றுண்டு. ஒரு ஆறு ஏழு வருட இடைவெளியில் இந்திய செக்யூலகூலரிசம் மீது அதி தீவிர காதலுடன் இந்தியப் பண்பாடு குறித்து ஏதேனும் அபுனைவுகள் வெளியாகும். வலதுசாரி சாதீய மதவாத பாசிசத்தால் (எல்லாவற்றுக்கும் காரணம் பிராமணீயம் என்பதே இவை உரத்து சொல்லாத சப் டெக்ஸ்ட்)  சிதைவுற்றுக் கொண்டிருக்கும் இந்திய பன்மைத்துவம் காப்பாற்றப்பட வேண்டிய நிலை குறித்த கரிசனம் அத்தியாயம் தோறும் பொங்கும். இறுதி அத்தியாயங்களில் ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்று நிறுவப்பட்ட அண்மைய சான்றுகளை எடுத்து இயம்பும்.

அடுத்த ஐந்து வருடத்தில் இதே போல மற்றொரு நூல் வரும். தவறாமல் முந்திய நூலை மேற்கோள் காட்டும். கூடவே  ஆரியர்கள் வந்தேறிகளின்தான் என்று உறுதி செய்த அந்த முந்தய நூலில் உள்ள சான்றை கடந்து, இப்போதுதான் சுட சுட கிடைத்தாக சொல்லி சில புதிய சான்றுகளை அளிக்கும்.

அப்படி சில வருடங்கள் முன்பு நான் வாசித்த நூல். டோனி ஜோசப் எழுதிய ஆதி இந்தியர்கள் எனும் நூல். ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்று மரபணு ஆய்வுகள் நிறுவிவிட்டன என்று சொல்லி இதுதான் ஆரிய மரபணு எண் என்று ஒரு எண்ணையும் அந்த நூல் வழங்கியது.

இப்போது நான் வாசிக்க நேர்ந்த நூல் நமித் ஆரோரா எழுதிய இந்திய நாகரீகம் எனும் நூல். தவறாமல் முந்திய ஆதி இந்தியர்கள் நூலை மேற்கொள் காட்டி,  (சென்ற வாரம் திங்கள் கிழமை இந்திய நேரப்படி காலை 7.37 கு) மீண்டும்  உறுதியான ஆரியர்கள் வந்தேறிகள்தான் எனும் ஆய்வுகளை எடுத்து கூறி, இந்திய பன்மைத்துவம் குறித்த கரிசனத்தோடு முடிந்தது அந்த நூல்.

ஆரிய வந்தேறிகள் எனும் கருத்து தொட்டு, சைவம் இந்து மதத்தை சேர்ந்தது இல்லை என்பது வரை பல்வேறு விஷ விதைகள் இங்கே தொடர்ந்து விதைக்கப்படும் காரணம் நேரடியானது.  கொண்ட ஒவ்வொரு அலகையும் டிஸ்மாண்டில் செய்வதன் வழியே பிரம்மாண்ட தேர் ஒன்றை, அப்படி ஒன்று அங்கே இருந்த தடயமே இல்லாமல் ஆக்கிவிட முடியும். அதே உத்திதான் இந்தியப் பண்பாட்டின் மீதும் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது.

அதிலும் இந்த நமித் ஆரோரா இருக்கிறாரே, நாளந்ததா அழிவுக்கு (அதை பக்தியார் கில்ஜி மட்டுமேயாக செய்யவில்லை எனும் உண்மையை இந்த நூல் தரும் தரவுகள் வழியே அறிய நேரும் வாசகன், பக்தியார் கில்ஜியை இத்தனை நாள் பிழையாக எண்ணிவிட்டதை நினைத்து விக்கித்துப் போவான்)  அவர் தரும் சான்றுகள் கண் கலங்க வைப்பன. நாளந்தா வை எரியூட்டியது பௌத்தர்கள் மேல் காழ்ப்பு கொண்ட பிராமணர்கள் என்று ஒரு திபெத்திய பௌத்த நூல் சொல்கிறது. அது உண்மையாகவும் இருக்கலாம் என்கிறார் அந்த நூல் எது ஆசிரியர் யார் எனும் சான்றெல்லாம் இந்த  எழுதிய ஆரோராவுக்கே தெரியவில்லை. இவை போக அன்று எரிந்த நாளந்தா சிதைவுகளை, அது எரிந்த தடங்களை இன்று நேரில் ஆய்வு செய்து, சுவரில் படிந்த அது, அங்கே வசித்த பல்லாயிரம் பேருக்கு சமையல் செய்த அடுப்பு வெளியிட்டு படிந்த கரி அல்லது, வேறு ஏதோ தீ  விபத்தாக கூட இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

இத்தகு அசட்டு நூல்கள் ஒவ்வொரு முறையும் ஐந்து வருடத்துக்கு ஒன்றென புதிது புதிதாக வெளியாகும். பாரதத்தின் செப்பு மொழி பதினெட்டிலும் அது வாசிக்க கிடைக்கும். மாறாக எது இந்தியப் பண்பாட்டின் அசைவுகளை பேசும் முக்கிய நூலோ அது எவர் கைக்குமே வாசிக்க கிடைக்காது.

இந்த விஷ விதை என்பது, 17 ஆம் நூற்றாண்டு துவங்கி இங்கே வந்து ஆய்வுகள் புரிந்து, இதுதான் நீங்கள் என்று இந்தியர்களுக்கு இந்தியாவின் வரலாற்றை பண்பாட்டை எழுதி அளித்த வெளிநாட்டு இந்தியவியலாளர்கள் விதைத்தது. இது அவர்கள் அறிந்து செய்தது அல்ல. அன்று அவர்கள் தரவுகளை தொகுத்துக்கொள்ள கைக்கொண்ட, (வெளியே இருந்து வந்த ஒன்றே உள்ளூரில் தேங்கி நின்ற கலாச்சாரத்தை ஒழித்து மேலான பண்பாட்டை அளிக்கிறது என்ற) அன்றைய கால பொது சிந்தனை வழியே கொண்ட ஹைபோதீசிஸ் அது. குறிப்பாக அந்த ஹைப்போ தீஸிஸ் வழியே சிந்தித்த இந்தியவியலாளர் ஒரியண்டல் வில்லியம் ஜோன்ஸ் பணிகள் வழியே உருவாகி நிலைபெற்றது அது.

உண்மையில்  நவீன இந்தியாவின் வரலாற்றியலை உருவாக்க தனது வாழ்நாளெல்லாம் செலவிட்ட பல பத்து இந்தியவியலாளர்களின் பண்பாட்டு முக்கியத்துவத்தை முற்றிலும் மறந்து விட்டு, டோனி ஜோசப் நமித் அரோரா போன்றவர்களால் அப்டேட் செய்து காட்டப்படும் இத்தகு விஷ சித்தரிப்புகள் வழியாக இத்தகு எதிர்நிலை விஷயங்களின் விதையாக மட்டுமே அந்த முன்னோடிகளை நமது பொது நினைவில் பதிய வைத்துக் கொள்கிறோம்.

இத்தகு அசட்டு நூல்களுக்கு வெளியே நின்று உண்மையில் இந்தியவியலாளர்கள் ஆற்றிய பணிகள் எது என முழுமையாக அறிந்து அப்பணிகள் கிளர்த்திய நேர்நிலைக் கூறுகள் மீது வாசக கவனம் குவிய, அதற்கு துணை நிற்க தமிழில் நூல்களே இல்லை என்பதே நிதர்சனம்.  இந்த நிலவரத்தின் பின்னணி கொண்டே சார்லஸ் ஆலன் எழுதி, தருமி மொழியாக்கம் செய்து,எதிர் வெளியீடு பதிக்கம் வெளியிட்ட _பேரரசன் அசோகன்: மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு_ நூல் முக்கியத்துவம் கொண்டதாகிறது.

https://www.theguardian.com/books/2020/aug/21/charles-allen-obituary

சார்லஸ் ஆலனின் பரம்பரை இந்திய வாழ்க்கை பின்புலம்  காரணமாக தனது வரலாற்று நூல்களில் பிரிட்டிஷ் இந்தியா கால ஆங்கிலேயர்  மாண்பை குறைத்தே காண்பிக்கிறார் என்று ஆங்கிலேய விமர்சகர்களாலும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் எவ்வளவு மனிதார்த்தம் கொண்டவர்கள் என்று சித்தரிக்க, எல்லா படையெடுப்பாளர்களையும் போல முகமதிய ஆட்சியாளர்களும் செய்ததை  ஊதி பெருக்கி காண்பிக்கிறார் என்று இந்திய சிறுபான்மை சார்பு வரலாற்று ஆய்வு ஆதரவாளர்களாலும், இந்தியாவில் முகமதிய அரசர்கள் நிகழ்த்திய அழிவுகளை சித்தரிக்கிறார் என்று ஆலனை நம்பிவிட வேண்டாம் அதே அளவு அழிவுகளை செய்த அங்கிலேய ஆட்சியாளர்கள் குறித்து அவரது நூலில் பெரிதாக பேசியதில்லை காரணம் அவர் உள்ளே உள்ள ஆங்கிலேய இன மேட்டிமைவாதம், சரஸ்வதி நதி நாகரீக ஆதரவாளர், தன்னை ஒரு பௌத்தர் என்று கூறிக்கொண்டாலும் இவரும் ஆரிய படையெடுப்பு கோட்பாடு ஆதரவாளர்தான் பிராமண துவேஷிதான் என்று இந்துத்துவர்களாலும், என இப்படி சகல தரப்பினராலும் விமர்சிக்கப்படும் நிலை கொண்டே, சார்லஸ் ஆலன் அவர்களின் வரலாற்று நூல்கள் அளித்த தாக்கத்தை வாசகர் உணரலாம்.

கீழைத்தேயவியல் என்பது மிகப்பெரிய கடல். 15 ஆம் நூற்றாண்டு துவங்கி வேகம் பெற்ற அறிவியல் நோக்கு, மத அடிப்படைவாதத்துக்கு அரசு அதிகாரத்துக்கு எதிரான ஜனநாயக போக்கு, தத்துவத்தால் அடித்தளம் அசைக்கப்பெற்ற மத நம்பிக்கைகள், இத்தகு பல விஷயங்கள் கூடி மேலை மரபின் அறிவார்ந்த மனங்களை கீழைத்தேயம் நோக்கி திரும்பின. புதிய உடைப்பை நோக்கி அம்மனங்கள் தேட்டம் கொண்டிருந்தன. அந்த ஓட்டத்தில் அவர்கள் கண்டடைந்த மீட்டுருவாக்கம் செய்த பல விஷயங்களில் ஒன்றே இன்று இந்தியாவில் நாம் காணும் நவீன நிலவியல் மானுடவியல் வரலாற்றியல்  முதலான பல விஷயங்கள். இந்தியாவுக்கு ஐரோப்பியர் வரவு துவங்கி, இந்திய குடிமகன் என்றாகி பௌத்தராகவே மாறிவிட்ட வெரியர் எல்வின், இந்திய குடிமகனாகவே மாறிவிட்ட ரோமுலஸ் விட்டேகர், மிஷெல் தானினோ, அஸ்கோ பார்ப்பலோ,  தாமஸ் ஹிடோதோஷி ப்ரூக்ஸ்மா என நீளும் நெடிய மரபைக் கொண்டது இந்தியவியல்.

இதில் 1650 முதல் 1950 வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. மேலை அறிவு மரபுக்கு உரையாட இங்கிருந்து வேதங்கள் உபநிஷத்துகள் பகவத்கீதை மகாபாரதம் போன்றவை சென்றன. மேலை ஆய்வாளர்கள் இன்று இப்போது நாம் காணும் வகையிலான பௌத்தத்தை மீட்டு மறுவடிவமைப்பு செய்து அளித்தனர். (இந்த பௌத்த மறுமலர்ச்சி குறித்த அடிப்படைகளை  ராஜ் கெளதமன் எழுதிய அயோத்திதாசர் ஆய்வுகள் நூல் வழி அறியலாம்)  இணையாக நவீன இந்திய வரலாற்றியலும் முகிழ்ந்தது.

இந்த பின்புலத்தில் வைத்து நூற்றாண்டுகள் மறதியில் புதைந்து கிடந்த முதல் இந்தியப் பெருமன்னன் அசோகன் எவ்விதம் எவ்வெவரால் என்னென்ன முயற்சிகள் வழியே கண்டடையப்பட்டு மீட்டளிக்கப்பட்டார் என்பதன் சுருக்கமான செறிவான பொது வரலாற்று அறிமுகமே சார்லஸ் ஆலனின் இந்த நூல்.

முதன் முதலாக நாளந்ததா சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட நாள் துவங்கி, சில வருடங்கள் முன்பு நாளந்தாவில் புதிய பல்கலை கழகம் தொடங்க இந்திய அரசு எடுத்த முன்னெடுப்பில் முடியும் இந்த நூலின் துவக்க அத்தியாயங்கள் நவீன வரலாற்றியலுக்கான துவக்க களமாக எவ்விதம் இந்தியா இருந்தது என்பதை சித்தரிக்கிறது.

முகமது கஜினி, தைமூர் என பற்பல அன்னியப் படையெடுப்புகள் வழியே, ஒளரங்கஜெப் வரை எவ்விதம் அவர்களுக்கு முன்பான பௌத்த மற்றும் பல வரலாற்று தடங்களை கொண்ட இந்தியக் களம் துவம்சம் செய்யப்பட்டது. டில்லி எத்தனை முறை புதிது புதிதாக கட்டப்பட்டது. தேசம் நெடுக எவையெல்லாம் எவ்விதம் அழிக்கவோ மாற்றி அமைக்கவோ பட்டது, அதன் கீழே  எஞ்சிய பண்டைய இந்தியா எவ்விதம் புதைந்து விட்டது என்பதை விவரிக்கும் ஆலன், இத்தகு போக்குகளின் உச்சமாக நாளந்ததா அழிவுடன் பௌத்தம் எவ்விதம் முற்றிலும் இந்தியாவில் வழக்கொழிந்தது எனும் மெல்லிய கோட்டு சித்திரம் ஒன்றை அளிக்கிறார்.

1670 இல் இந்தியா வந்து பீகாரில் பணியாற்றிவிட்டு சென்ற ஜான் மார்ஷல் குறிப்புகள் வழியாகவே, இங்கே இந்தியாவில் வேதம் பகவத் கீதை போன்றவை உள்ளது அவை சமஸ்க்ருதம் எனும் மொழியில் உள்ளது போன்ற தகவல்கள் எல்லாம் மேலைத்தேய உரையாடலில் பரவி, ஆவல் கொண்ட முக்கிய ஆளுமைகள் பலரும் இந்தியாவுக்கு வந்து இறங்குகிறார்கள். அவர்களில் பலரது முக்கியப் பணிகள் குறித்து அறியத் தரும் இந்த நூலின் முதன்மை நாயகர்கள் என, என் நோக்கில் இருவரை சொல்வேன்.  முதல்வர் இந்தியா வந்த பணி செய்த வருடத்தில் 1784 இல் வங்காள ஆசிய கழகம் துவங்கி, 1794 இல் இயற்கை எய்துவது வரை அதை மையமாக கொண்டு பல்வேறு பணிகள் செய்த, ஓரியண்டல் எனும் சிறப்பு விகுதி பெற்ற வில்லியம் ஜோன்ஸ்.

இரண்டாமவர் 1833 இல் தனது 19 ஆவது வயதில் கல்கத்தா வந்து இறங்கி, 71 வயதில் இறக்கும் வரை இந்திய தொல்லியல் களங்களில் பாடுபட்ட, இந்திய ஆர்க்கியாலஜியின் தந்தை எறே அழைக்கப்படத்தக்க அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம்.

பௌத்தம் எனும் விரிவான களம், பஞ்சாப்புக்கு மேலே காந்தகார் வரை ஒரு விதமான பண்பாட்டு தனித்துவம் கொண்டது. அவ்விதமே தனித்துவம் கொண்டது திபெத்திய பௌத்தமும், இலங்கை பௌத்தமும். இது அத்தனையும் முளைத்த நிலம் இந்தியா என்பதும், அதை நாற்திசையும் பரப்பியயவர் அசோகர் என்பதும் இந்த ஆசிய கழகமும், இந்திய தொல்லியல் கழகமும் நிகழ்த்திய 100 வருட தொடர் உரையாடல் வழியே எவ்விதம் துலங்கி வந்தது என்பதையும், மேற்சொன்ன இரண்டு ஆளுமைகளுடன், ஹென்றி கோல் ப்ருச், ஹரேஸ் ஹேமன் வில்சன், பிரான்சிஸ் ஃபுக்கான், காலின் மேக்கன்சி, ப்ரைன் ஹாட்ஜசன், பிரின்செப் போன்ற பலப்பல ஆளுமைகள் எவ்விதம் இணைந்தும் இந்த இருவரின் காலத்துக்கு பிறகு தொடர்ந்து பணியாற்றியும் இவற்றை முழுமை செய்தனர் என்பதையும் விவரிக்கிறது இந்நூல்.

ஓரியண்டல் வில்லியம் ஜோன்ஸ் எத்தகு ஆளுமை என இந்நூல் அளிக்கும் சித்திரம் மலைக்க வைப்பது. பற்பல வேலைகளை செய்திருக்கிறார். முதல் இந்திய வரைபடம் உருவாக்கப் பணிகளில் இந்திய நதிகளை அதில் பொருத்தும் பணிகளை செய்திருக்கிறார். வங்காள அச்சு எழுத்துகளை உருவாக்கி இருக்கிறார். பிரிட்டிஷ் இந்திய நீதி இயலுக்கு முகமதிய சட்டங்கள், இந்து சட்டங்களை வரையறை செய்திருக்கிறார். ( இதன் வழியாகவே மனு ஸ்ம்ருதி இங்கே மீண்டும் அதிகாரம் பெறுகிறது)  இந்திய தாவரவியல், மானிடவியல், ஜோதிடம் வழியிலான வானியல், இதில் தேர்ந்த அத்தனை பேருடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். உலக மொழிகளில் 20 மொழிகளை இலக்கண சுத்தமாக கற்றிருக்கிறார். உலக மொழிகள் ஒப்பியல் ஆய்வு நிகழ்த்தி இருக்கிறார். ( இதன் வழியாகவே மொழி குடும்பம் ஆரிய வந்தேறிகள், யூத பிராமண தொடர்பு போன்ற கோணல்கள் உண்மை போலவே இங்கே புழங்க துவங்கின)  இங்கே வந்த பிறகு சமஸ்க்ருதம் கற்றிருக்கிறார். இங்குள்ள பெரும்பாலான சமஸ்க்ருத நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த வரிசையில் தான் ராஜ தரங்கினி போன்ற நூல்களை அடைகிறார். முகமதிய ஆட்சிக்கு முன்பான இந்திய வரலாறு என்று கிடைக்கும் அத்தனை புராண கதைகளையும் தொகுத்து, பைபிள் மற்றும் பண்டைய கிரேக்க கதைகளுடன் ஒப்பு நோக்கி ஆராய்கிறார். இந்த வரிசையில் கிரேக்க இந்திய தொடர்பு கதைகள் வழியே அலெக்ஸ்சாண்டரின் தளபதி செல்யுகஸ் நிகேட்டாரை தோற்கடித்து இந்தியாவில் கிரேக்க ஆதிக்கத்தை முடித்து வைத்த சன்றகோட்டா மன்னனை வந்து அடைகிறார். (இதற்கு அரை நூற்றாண்டுக்கு பிறகே விதிஷாவின் ஹலியோடோரஸ் தூண் கண்டுபிடிக்கப்படுகிறது)

சிலோனை மையமாக கொண்டு இயங்கும் விரிவான ஆய்வு தரப்புகள் வழியே மகா வம்சம் உரையாடலுக்கு வருகிறது. அதன் தொடர் உரையாடல்கள் வழியே சந்திர குப்தர் வெளியே வருகிறார். அந்த சந்திர குப்தர்தான் இந்த சன்றகோட்டா என்று கண்டு பிடிக்கப்பட்டு சந்திர குப்தர் துவங்கி ப்ருகத்ரத மௌரியன் வரையிலான மௌரிய வம்சத்தின் வரிசையும் காலமும், அது ஆண்ட மகத நாடும் வெளிச்சத்துக்கு வருகிறது அவருக்கு

பின்னர் மெல்ல மெல்ல ஃப்ரெஞ்சில் இருந்து வெளியான பாகியான், யுவான் சுவாங் பயண குறிப்புகள், இந்தியாவில் பௌத்தம் பரவி நின்ற நிலையை உரையாடலுக்கு கொண்டு வருகிறது.

பின்னர் ஹாரிஸ் ஹேமன் வில்சன் ஒரு 15 வருடம் வேலை செய்து ஆங்கிலம் சமஸ்கிருதம் சார்ந்த தொடர்புக்கு இலக்கண நூல்கள் அகராதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்கிறார்.  (இந்த அடித்தளத்தில் இருந்தே மாக்ஸ் முல்லர் தனது பணியை துவங்குகிறார்) .லார்ட் வெல்லசி அதிகார தஷ்பிரயோகம் வழியே கல்கத்தா வில்லியம் கோட்டை கல்லூரியை துவங்குகிறார். ( ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர் நின்ற பலர், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட வங்காள மறுமலர்ச்சி க்கு வித்திட்ட பலர் உருவாக இந்த கல்லூரியே அடிப்படை). அங்கே இலங்கையில் இருந்தும் திபெத்தில் இருந்தும் வந்த பௌத்த நூல்கள் பல முதல் முயற்சிகள் வழியே மொழியாக்கம் கண்டு அவை குறித்த உரையாடல்கள் நிகழ்கின்றன. பௌத்தம், மௌரிய வம்சம் இரண்டுமே இந்தியாவை பூர்வீகம் கொண்டது என்பது இந்த நெடிய உரையாடல்கள் வழியே உறுதி கொள்கிறது.( அதுவரை இங்கே உள்ள பல்வேறு பௌத்தத்தின் தோற்றுணரான புத்தர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ஊகித்து அங்கே தேடிக்கொண்டிருக்கிறார் ஜோன்ஸ்)

இந்த கலாச்சாரக் கதைகள் மேல் படியும் தொல்லியல் உண்மைகள், அதன் சலியாத தொடர் தேடல்கள் பேரொஸ் ஷா கழற்றி எடுத்து சென்ற அசோகர் தூண் ஒன்றிலிருந்து துவங்குகிறது. தொடர் தேடல் வழியே ஒவ்வொரு தூணாக கிடைக்கிறது.அசோகரின் புகழ்பெற்ற மலை கல்வெட்டுகள் ஒவ்வொன்றாக கிடைக்கிறது. சாஞ்சி, சாரநாத், கயா என்று நெடிய தேடுதல் வழியே ஒவ்வொன்றாக வெளிப்படுகிறது.  இதில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுக்கள் அதை எழுதியவர் ஒருவரேதான் என்று கண்டறியப்பட்டு, பின்னர். அந்த எழுத்துக்களின் மொழி யூகித்து பின்னர் சரியாக கண்டறியப்படுகிறது. மெல்ல மெல்ல அந்த எழுத்துக்களின் மர்மம் நீக்கப் படுகிறது.

முழுக்க முழுக்க பிரிட்டிஷ் தனமான இரும்புத்தனம் கொண்ட  இந்த நூலை வாசித்துக்கொண்டே வருகையில், தே வ ர் க ளு க் கு பி ரி ய மா ன வ ன் எனும் எழுத்துக்கள் கூடி முதன் முறையாக சொற்றொடராக வாசிக்கப்படுகையில் உளம் பொங்கி அந்த வரிகளின் மேல் கண்ணீர் சிந்திவிட்டது.

மரபார்ந்த ஆய்வாளர்கள் மட்டுமல்ல எவரேவரோ இத்தகு கல்வெட்டுகளை முடிந்த வரையில் பிரதி செய்து இந்த கழகங்களில் சேர்ப்பித்து இருக்கிறார்கள். டெலோ தோம்பா எனும் நாடு கடத்தப்பட்ட பாதிரியார் தனது இந்திய அகதி வாழ்வில் இத்தகு கல்வெட்டுகளை படி செய்து உரிய இடத்தில் சேர்த்திருக்கிறார்.

ஆலம் ஷா எனும் சிற்றரசன் வசம் ராணுவ தளபதி வேலை பார்த்த ஸ்விஸ் நாட்டை சேர்ந்த அந்தோய்ன் பொலியர் தனது போர்க்கள பணிகள் இடையே இதையும் செய்திருக்கிறார். காசுக்கு அளித்த உழைப்பே எனினும் வில்லியம் ஜோன்ஸ் உடன் கேமிரா இல்லாத காலத்தில் ஒவ்வொரு தொல்லியல் களத்தையும் ஓவியம் வரைந்த அந்தர் தேவிஸ், அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம் உடன் பணி செய்த ஓவியர் தமிழ் நிலத்தின் முருகேச முதலியார். என பலர் இந்த பணியில் முக்கியமானவர்கள்.

மார்க்கம் கிட்டோ ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்து தௌலி கல்வெட்டை படியெடுத்திருக்கிறார். அப்போது அது காடு. ஒரு முறை இம்முயற்சியில் குட்டியை காப்பாற்றும் அம்மா கரடி வசம் சிக்கி கொள்கிறார். கரடியை கொன்று இவர் உயிர் பிழைக்கிறார். மற்றொரு முறை இப்படி அகப்பட்டு தப்பி ஓடி வருகையில் விழுந்து காலை உடைத்துக் கொள்கிறார்.

புலி குகை என்று ஊரே பயப்படும் குகைக்குள் நுழைந்து ஒருவர் அஜந்தா ஓவியங்களை கண்டு அதிர்ந்து அதை வெளியே கொண்டு வருகிறார். இப்படி பல்வேறு ஆளுமைகள் வழியே விரிகிறது இந்த தொல்லியல் தேடல் வெளி.

தொல்லியல் பேசும் பியாதசி, இலக்கியம் பேசும் அசோகன், இருவரின் வழியே இந்திய பௌத்த தொல்லியல் களம் மெல்ல மெல்ல துலங்கி வரும் சூழலில், இலங்கையில் இருந்து ஒரு முக்கிய தடயம் வழியே, பியாதசியும் அசோகனும் ஒன்றே எனும் உண்மை வெளிப்படுகிறது.

இதன் பின்னர்தான் தூண் எழுத்துக்கள், மலை கல்வெட்டுகள், நாணய சான்றுகள், தொல்லியல் கள சான்றுகள், சிற்பவியல் சான்றுகள் இலக்கிய சான்றுகள் அனைத்தும் ஒன்றன் மேல் ஒன்று பொருந்தி அமைய, அசோகன் எனும் மன்னனும் அவன் வழியே உலகம் முழுதும் பரவிய பௌத்தத்தின் தாயகமும், அவனது ஆட்சிக்காலத்தின் நீளமும், அவன் ஆட்சி செய்த எல்லையின் விரிவும் சீரான வரலாற்றுக் கதையாக முழுமை பெறுகின்றன.

இவை யாவும் நிகழ்ந்த, 1650 துவங்கி 1950 வரையிலான கால சூழலின் பின்புலத்தில் இவற்றை பொறுத்திப் பார்த்தால், இந்த பண்பாட்டு அசைவின் வீரியம் புரியும். பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் ஆதிக்க வெறி மொத்த உலகையே தனது காலனி என்றாக்கி காலடியில் போட்டுக்கொள்ள வீறுகொண்டு செயலாற்றிக்கொண்டிருந்த காலம். இந்தியாவிலோ காலனி ஆதிக்க நாடுகள், சமஸ்தானங்கள், எஞ்சிய மன்னர்கள் என ஓயாத உள்நாட்டுப் போர். பிரிட்டன் அரசுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்குமான ஈகோ அதிகார சண்டைகள் முட்டல் மோதல்கள், 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை காவு வாங்கிய செயற்கை பஞ்சங்கள். சிப்பாய் கலகம். அதிகார மாற்றத்தில் நிகழ்ந்த தடைகள், இரண்டு உலக போர்கள். இன வெறியோடு இந்தியாவை உதாசீனம் செய்து, தன்னால் முடிந்த வரையில் புதிய அழிவுகளை தேடி தேடி செய்த உயரதிகாரிகள், கடுமையான நிதி நெருக்கடிகள், கீழை ஆய்வுகள் சார்ந்த மேலை மனதின் உதாசீனம், வந்த மேலை நாட்டினரால் தொடர் பணி செய்ய இயலாது போகும் வகையிலான சமாளிக்க இயலா இந்திய பருவ சூழல். இத்தனைக்கும் நடுவில்தான் மேற்கண்ட பணிகள் நிகழ்ந்திருக்கின்றன. இப்படித்தான் நமக்கு நவீன வரலாற்றியல் துவங்கி இருக்கிறது. அதன் வழியாகத்தான் குப்தர் காலம் முதல் பேரரசன் ராஜ ராஜ சோழன் வரை கண்டுபிடிக்கப்பட்டு நமக்கு கிடைத்திருக்கிறது.

குறைந்த பட்சம் 20 முக்கிய ஆளுமைகள் அவர்களின் பணிகள் வழியே விரியும் இந்த நூல் பக்கங்கள் தோறும் பற்பல சுவாரஸ்யங்களை கொண்டிருக்கிறது உதாரணமாக ஆய்வாளர் பாபு பூர்ண சந்திர முகர்ஜி குறித்த சித்திரம். சக ஆய்வாளர் மீது  பொறாமை கொண்டவர், புகழ் விரும்பி அதே நேரம் ஆய்வில் தீவிரம் கொண்டவர். இவர் குணத்துக்கு இயைந்த இரண்டு விஷயங்கள் இவரால் கண்டுபிடிக்க பட்டிருக்கிறது. ஒன்று அசோகரின் நரகம் என்றழைக்க படும் அவரது வதை முகாம். மற்றது இப்போது பாட்னா வில் உள்ள  மிக அழகிய சாமரம் வீசும் பெண் சிற்பம். இவர்கள் போலவே இணையாக இந்த மேலை ஆய்வாளர்களுக்கு மொழிப் பயிற்சி உள்ளிட்ட பலவற்றிலும் துணை நின்ற பல்வேறு இந்திய ஆளுமைகளும் இந்நூல் நெடுக இடம் பெறுகிறார்கள்.

மனம் கசக்க செய்யும் தருணங்கள் பலவும் நூலில் உண்டு. பல முக்கிய ஆய்வுகள் வெற்றுத் தன் முனைப்பு மோதலால் நிரந்தர இருளில் சென்று விழுந்திருக்கின்றன. பல திட்டமிட்ட அழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக மூன்று. ஜவ்கடா கல்வெட்டை எலியட் எனும் அதிகாரி வன்மம் கொண்டு உடைக்கும் சித்திரம். இரண்டாவது ப்ரும்மாண்ட ஸ்தூபி ஒன்று கேப்டன் ஜான்சன் என்பவரால் இரண்டாக பிளக்கப்படும் சித்திரம். மூன்றாவது அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம் கண்டெடுத்து குறித்து வைத்த டன் கணக்கான சாரநாத் தொல்லியல் பொருட்கள் மாஜிஸ்திரேட் டேவிட்சன் முன்நின்று அள்ளி எடுத்து வரணா நதிக் கரை கட்டுமான பணிகளுக்கு எடுத்து சென்று அழிக்கும் சித்திரம். இவை போக வீடு கட்ட, புதையல் தேடி என பல்வேறு காரணங்கள் வழியே அழியும் தொல்லியல் களங்களின் சித்திரம்.

நூலின் இறுதியில் வரும் அசோகர் கதையில் அக் கதையின் பின்புலம் கொண்ட சிற்பவியல் சார்ந்த ஆய்வுகளில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. அசோகர் எல்லா சிற்பங்களிலும் மிக சாதாரணமாகவே சித்தரிக்க பட்டிருக்கிறார். குறிப்பாக ஒரு சிற்பத்தில் போதி மரத்தின் முன் பரவசம் கொண்ட அசோகன் நிற்க இயலாமல் ராணிகள் மேல் சாய்ந்து கொண்டிருக்கிறான். இப்படி பல. அந்த அசோகரின் கதையில் அசோகர் இறுதியாக மணம் புரிந்து கொண்ட ராணிக்கு யார் மீது என்ன கோபமோ, இந்த போதி மரத்துக்கு விஷமிட்டு விடுகிறார். கன்னிங்ஹாம்  கயாவில் முதன் முதலாக அழிந்த நிலையில் இந்த பொதியை கண்டு, புதிய போதி ஒன்றை அங்கே நடும் பணியையும் செய்கிறார். தொல்லியல் தரவுகள் வழியே உறுதி கொண்ட முழுமையான கதையில் வரும் அசோகரின் கலிங்கப் போருக்குப் பிறகான குற்ற உணர்ச்சி சார்ந்த மன மாற்றம் அவரது மீட்சிக்கு அதற்கு காரணமான பௌத்தம் எனும் வரிசை மேலை ஆய்வாளர்களை வசீகரித்தில் எந்த வியப்பும் இல்லை. தன்னையோ ஏன் புத்தரயோ கூட முன்வைக்காமல், தர்மம் என்பதை முன்வைத்து அனைத்தையும் தொகுத்திருக்கிறான். அவனது காலத்தில் இருந்த பல் வேறு பௌத்த போக்குகளையும் இந்த தர்ம சக்கரம்  என்ற ஒன்றை கொண்டு இணைத்திருக்கிறான். அவன் பௌத்த அறத்தின்படி உருவாக்கிய பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபடுபவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருந்திருக்கிரார்கள். படையெடுத்து அண்டை நாடுகளை வெல்லாமல், கலாச்சார தூது வழியே, பௌத்த தர்மத்தின் சேதியை சொல்லி கருத்தியல் ரீதியாக அவர்களை வெல்ல முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறான். எல்லாமே 2200 ஆண்டுகளுக்கு முன்.

ஐநூறு பக்கங்களிலான இந்த இறுக்கமான செறிவான நூல் வழியே, அசோகன் மெல்ல மெல்ல மீண்டு முழுமை கொள்ளும் சித்திரத்தின் இறுதியாக, அசோகர் ஆணைகளின் மொழியாக்கம் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் வழியிலான பயணத்துக்கு பிறகு இங்கே வரும் வாசகன் இந்த கல்வெட்டு வாசகங்களை உளம் பொங்காமல் வாசிக்க இயலாது. கேரளாந்தகன் எனும் மெய்க்கீர்த்திக்கும் தேவர்களுக்கு பிரியமானவன் எனும் மெய்க்கீர்த்திக்கும், அவனது கல்வெட்டு செய்திகளுக்கும் கலிங்கத்து பயணிக்கும் இடையே உள்ள தூரம் இருக்கிறதே அதுவே இந்நிலத்துக்கு பௌத்தம் அளித்த கொடை.

ஆசீவகர்கள் எனும் சொல் இருக்க, ஆலன் பயன்படுத்திய அஜீவிக்காஸ் போன்ற சொற்களையே பயன்படுத்தும் தருமி அவர்களின் மொழியாக்கத்தில், இதற்கு சிற்சில இடர்களை விட்டு விட்டால் வாசிக்க எந்த விதத்திலும் இடர் செய்யாத, வாசகர் மன வாசிப்பு மொழிக்கு இயைந்த மொழியாக்கம் கொண்ட நூல் இது.

நமது கடந்த காலம் வழியே இந்த முன்னோடிகள் வழியே நாம் பெற்றது அனைத்தும் நல்லதும் கேட்டதும் என கலந்த ஒன்றாகவே இருக்க, அந்த நல்லதை விடுத்து கெட்டதை மட்டுமே பேசி பேசி வளர்த்துக் கொண்டிருக்கும் நமது குறுகிய புத்திக்கு வெளியே சென்று, அந்த நல்லவைகள் மேல் சற்றேனும் கவனம் குவிய வேண்டிய காலம் இது. வெறும் 40 வருடமே வாழ்ந்து அதில் 20 வருடத்தை இந்தியவியலில் செலவு செய்து, பிணமாக அவர் உடல் மட்டும் சொந்த தேசம் போகிறது. இப்படி எத்தனையோ பேர் இங்கே இதன் பொருட்டு வாழ்ந்து செத்திருக்கிறார்கள். இத்தகு ஆளுமைகளின் எதிர்நிலைப்பங்களிப்புகள் மட்டுமே இங்கே வளர்த்தெடுக்க படும் சூழலில், அவர்கள் இயற்றிய நேர்நிலை பங்களிப்பு குறித்து பேச இங்கே நூல்களே இல்லை. இந்த முன்னோடிகள் வழியே நிகழ்ந்த எதிர்நிலைகளை தீஸிஸ் என கொண்டால், நேர் நிலைகளை ஆன்டி தீஸிஸ் என்று கொண்டே இந்த இரண்டின் ஊடாக மதிப்பிட்டே நமது முன்னோடிகளை வரையறை செய்ய வேண்டும். இங்கு இருப்பதெல்லாம் தீஸிஸ் மட்டுமே. ஆன்டி தீஸிஸ் என எதுவுமே இல்லை.   இந்த நிலை மாற  தமிழில் கிடைக்கும் மிக சில நூல்களில் ஒன்றான இந்த நூல், ஒட்டு மொத்தமாக பிரிட்டிஷ் தனமான கட்டுமானத்தில், நிறைந்து வழியும் தரவுகளின் பின்புலம் வழியே, அரிய ஓவியங்கள் புகைப்படங்கள் வழியே,நவீன இந்திய வரலாற்றியலை உருவாக்கிய ஆளுமைகளின் பணிகளின் முக்கிய தருணங்களை, டான் ப்ரௌன் எழுதிய லாங்டன் துப்பறியும் மர்ம நாவல் ஒன்றினை வாசிப்பது போன்ற வாசிப்பு இன்பத்தின் வழியே வாசகனுக்கு அளிக்கிறது.

பின்னிணைப்பு ஒன்று:

பொதுவாக எங்கேனும் என்னை சந்திக்கும் புதிய வாசகர்கள் என்னைக் கேட்கும் முதல் கேள்வி, நான் எப்படி இத்தகு நூல்களை தேடி செல்கிறேன் என்பது. விடை மிக எளிது நீங்கள் உங்கள் வாசிப்பு வழியே யார் யாரை பின் தொடர்கிறீர்களோ அவர்களின் வழியே அடுத்தடுத்த வாசல் திறக்கும். நான் எப்போதும் பின்தொடரும் சிலரில் தியோடர் பாஸ்கரன் அவர்களும் ஒருவர். இந்த சர்லஸ் ஆலன் எழுதிய பேரரசன் அசோகன் நூல் குறித்து இதன் ஆங்கில வடிவம் குறித்து, இப்படி ஒரு முக்கியமான நூல் உள்ளது என்று 2014 உயிர்மை இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். 2012 இல் வெளியான அந்த நூல் எதிர் வெளியீட்டில் தமிழிலும் உண்டு என்று தேடி அறிந்தேன். தியோடர் பாஸ்கரன் அவர்களின் அந்த நூல் குறித்த குறிப்பை அடிப்படையாக கொண்ட கட்டுரை அவரது கல் மேல் நடந்த காலம் நூலில் உண்டு. அப்படித்தான் இந்த இந்த நூலை வந்தடைந்தேன். இந்த 10 வருடத்தில் இப்படி ஒரு நூல் வந்திருக்கிறது, அது வாசகர் ஒருவரால் வாசிக்கப்பட்டிருக்கிறது என்பதை தமிழில் எழுத்து வடிவில் அறிவதற்கு இருக்கும் ஒரே ஒரு குறிப்பு தியோடர் பாஸ்கரன் எழுதிய அந்த குறிப்பு மட்டுமே. இரண்டாவதாக ஒன்று இருக்கும் என்றால் இதோ இப்போது எழுதப்பட்டு கொண்டிருக்கும் இதுவாக இருக்கும். பத்து வருடம் முன்னர் என்னிடம் இருந்து வாசிக்க எடுத்து செல்லப்பட்ட நூல், வாசிக்காமலேயே கிடந்த இடத்திலிருந்து கண்டெடுத்த பின் மீண்டும் வாசித்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தியோடர் பாஸ்கரன் அந்த நூல் குறித்த குறிப்புடன் எழுதிய கட்டுரையின் சுட்டி கீழே

http://santhavasalbuddhavihar.blogspot.com/2015/11/blog-post.html?m=1

பின்னிணைப்பு இரண்டு:

இந்த சார்லஸ் ஆலனின் பேரரசன் அசோகன் நூலை விரித்துப் பொருள்கொள்ள, இத்துடன் ராஜ் கெளதமன் எழுதிய அயோத்திதாசர் ஆய்வுகள் நூலை இணைத்து வாசிக்க வேண்டும், குறிப்பாக அதன் பௌத்தம் குறித்த முதல் இரண்டு அத்தியாயங்கள் முக்கியமானது. தமிழ் இணைய நூலகத்தில் உள்ள அந்த நூலின் சுட்டி கீழே.

க.அயோத்திதாசர் ராஜ்கௌதமன்

பின்னிணைப்பு மூன்று.

எழுத்தாளர் சார்லஸ் ஆலன். தனது நூல் குறித்து பேசிய அறிமுக காணொளி கீழே

https://youtu.be/mrpw5_Lckh8

பின்னிணைப்பு நான்கு.

தருமி அவர்கள் அவரது தளத்தில் இந்த நூலின் மொழியாக பணி சார்ந்து எழுதியதன் சுட்டி கீழே

http://dharumi.blogspot.com/2013/12/700.html?m=1

முந்தைய கட்டுரைஇணையமும் இலக்கியமும்
அடுத்த கட்டுரை2.0 ஓர் ஆய்வு