வல்லினம், ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா சிறப்பிதழ்
அன்புள்ள ஜெவுக்கு வணக்கம்
ஜார்ஜ் டவுன் இலக்கியத்திருவிழாவுக்கு வந்திருந்தேன். உங்களைச் சந்திப்பதில் உள்ளூர பரவசமும் சற்றே தயக்கமும் இருந்தது. பார்த்து பெயர் சொன்னவுடன் அணைத்துக் கொண்டு தமிழ்விக்கி பணியைப் பற்றி குறிப்பிட்டீர்கள். உண்மையிலே நெகிழ்வாக இருந்தது. அடுத்த சில மணி நேரங்களுக்கு அதையே எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் விக்கி பணிக்காக அளிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தைப் பெறும் போதும் கைகள் நடுங்க பெற்றேன். ரெண்டு கையால புடிங்க என வலக்கையைப் பிடித்து கண்ணாடி நினைவுச்சின்னத்தின் கீழே பற்றக் கொடுத்தீர்கள். தமிழ் விக்கி பணி நிச்சயமாக நிறைவளித்த பணிகளில் ஒன்றுதான்.தேடல் சோம்பல் ஒட்டிக் கொள்ளும் போது மட்டுமே கொஞ்சம் சுணக்கம் இருந்தது.
சரவாக் மாநிலத்தின் பழங்குடிகளைப் பற்றி எழுதும் போது, அவர்களில் சில இனத்தவர்களைப் பற்றி அண்மைக்காலத்தில் யாரும் எழுதாதது வியப்பாக இருந்தது. இந்த நாட்டில் அரசியல், பொருளியல் வலிமை பெற்ற சமூகங்களுக்கிடையிலான குறித்தே அதிகமும் பேசப்படுகின்றன. மலேசியத்தேசிய அருங்காட்சியகத்தின் வெளியே நீண்ட மரத்தால் அழகிய பூவேலைப்பாடுகளும் விலங்குகளும் கொண்டு செதுக்கப்பட்ட கெலிரியாங் எனப்படும் தூண் ஒன்றிருக்கிறது. சரவாக் மாநிலத்தின் காஜாங் பேரினப் பழங்குடிக் குழுவின் குலத்தலைவர்கள் இறந்து போனதும் அவர்களின் உடல் கிடத்தி வைக்கப்படும் பெருந்தூண்தான் கெலிரியாங். அந்தத் தூணுடன் இறந்த குடித்தலைவர்களுக்குத் துணையாக ஏவலர்களும் தூணில் பிணைக்கப்பட்டு உணவின்றி நீரின்றி பலியிடப்படுவார்கள். அந்தக் குடியினர் பெரும்பான்மையோர் கிருஸ்துவத்தைத் தழுவியப் பின்னர் அந்தத் தூணை அரசு கையகப்படுத்தி அருங்காட்சியில் வைத்திருக்கிறது
தமிழ்விக்கி பணிக்காக சரவாக் பழங்குடிகளை எழுதும் போதே இத்தகவல் கிடைத்தது. மானுடவியலின் பெருஞ்செல்வம் மெல்ல மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மண்ணில் இந்தப் பதிவு கொஞ்சமெனும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். ஒவ்வொரு விக்கிப் பதிவும் கெலிரியாங் தூண்களாகவே தெரிகின்றன.
மூன்று நாட்கள் மூன்று உரைகள். ஒவ்வொரு நாளும் தளத்துக்குச் சென்று வாசிப்பது இல்லாமல் நேர்ச்சொல்லை பெறுவது நல்லனுபவமாக இருந்தது. தமிழ் அறிவுச்சூழலில் இருக்கும் அரசியல் தரப்புகளால் எவ்வாறு அறிவுப்பணி ஒற்றைப்படையாக அணுகப்படுகிறது என்றும் மக்களால் திரட்டித் தொகுக்கப்படும் அறிவுப்பணி எவ்வாறு சரியானதாக அமைகின்றது என்பதைப் பற்றியும் குறிப்பீட்டீர்கள். அத்துடன், மலேசியாவுக்கு 1950களில் வந்த கே.ஏ.நீலகண்ட சாஸ்த்திரி பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தைப் பயிற்றுமொழியாகப் பரிந்துரை செய்தார் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கும் உரையில் பதில் தரப்பட்டது. தொல் மலாயாவில் இருந்த இந்திய பண்பாட்டின் தாக்கத்தை அறிந்து கொள்ள சமஸ்கிருதம் உதவிகரமானதாக இருந்தது என்பதனாலே அம்மொழி பரிந்துரைக்கப்பட்டது என்பது புதிய தகவலாக இருந்தது. இரண்டாம் நாள், சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர் பி.கிருஷ்ணன் அவர்களின் படைப்புலகக் கருத்தரங்கில் கட்டுரை படைத்தேன். உலக மொழிகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்ற வானொலி நாடகங்களாக மாற்றி எழுதிய சருகுகள் தொகுப்பைப் பற்றிய கட்டுரை. நாடகங்களாக மாற்றப்பட்டிருப்பதால் அவை அடைந்திருக்கும் மிகையுணர்ச்சித் தருணங்கள், நுண்ணுணர்வு, உயிர்ப்பான உரையாடல்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டேன்.
மூன்றாம் நாள், நிகழ்ந்த எழுத்தாளர் நவீன் ஒருங்கிணைத்த கேள்வி பதில் நிகழ்ந்கது. ஒவ்வொரு பதிலும் முன்னர் ஏதோ உரையில், கட்டுரையில், நூலில் சொன்னதைப் போலவே இருந்தாலும் புதியதாக ஏதோ ஒன்றைப் பெற்றதாகவும் நேர்சொல்லாகக் கேட்கையிலும் சிறப்பானதாக அமைந்திருந்தது. ஆமை கடற்கரையில் முட்டையிடுவதை மட்டுமே செய்கின்றன. கடல் முன் நீந்தி உயிர்வாழ்தல் என்பது குஞ்சுகளின் உயிர் ஊக்கத்தில் இருக்கின்றன எனப் படைப்பூக்கத்துக்கும் விமர்சனத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளித்தீர்கள். அதைப் போல, நண்டு பொறித்த அரியணையை வடிவமைக்க தச்சனை சீன மன்னர் அழைக்கின்றார். அதனைப் பொறிக்க ஐந்தாண்டுகள் தேவைபடுவதாகவும் உணவும் வேண்டுமென தச்சன் சொல்கின்றான். ஐந்தாண்டுகளும் தியானம் செய்து உண்டு நண்டு பொறிக்காமல் வெறுமனே தச்சன் இருக்கின்றான். தன்னை ஏமாற்றுகின்றான் என மன்னர் உணர்ந்து ஐந்தாண்டு நிறைவடைய இருக்கும் கடைசி அந்திப் பொழுதில் பணி முடியவில்லையெனில் கொன்றுவிடுங்கள் என ஏவலர்களுக்குக் கட்டளையிடுகிறான். இன்னும் ஒரு நாழிகை எஞ்சியிருக்கும் போது தச்சன் கடற்கரை மணலில் வரைந்த நண்டு ஒடியத் தடத்தைச் சுட்டி இதுதான் நண்டு எனச் சொல்கிறான். அதனை எடுத்துக் கொண்டு மன்னர் அவைக்கு வருகிறார்கள். மன்னர் உட்பட அனைவருக்கும் அது நண்டு படமில்லை எனத் தெரிகிறது. மன்னரின் ஒரு வயது மகள் அவைக்கு வந்து அந்தப் படத்தைப் பார்த்து அதனை நண்டெனச் சொல்கின்றாள் என்ற கதையைக் குறிப்பீட்டிர்கள். வெண்முரசுக்குப் பிறகு எழுதப்பட்ட கதைத்திருவிழா கதைகள் விளையாட்டாக எழுதப்பட்டவையா என்ற கேள்விக்கு அவை அளிக்கும் நேர்நிலை உணர்வும் அதனுள் இருக்கும் நுண்ணுணர்வுத் தடத்துக்குமாக இந்தக் கதையைக் குறிப்பீட்டிர்கள்.
இந்த மூன்று நாட்கள் முடிவில், உரைகளும் கேள்விப்பதில்களுமாக நேர்சொல்லாக எனக்கான சொற்களைச் சேமித்துக் கொண்டேன் என்ற நிறைவு இருக்கிறது. ஆசிரியருக்கு என்னுடைய வணக்கங்கள்.
அரவின் குமார்