செம்மணி வளையல் – வெங்கடேஷ் சீனிவாசகம்

செம்மணி வளையல் வாங்க

அன்பின் ஜெ,

நலம்தானே?வணக்கங்களும் அன்பும்.

வேலூர் லிங்கம் சார் பரிந்துரையில் குப்ரினின் “The Garnet Bracelet”-ன் தமிழாக்கம் “செம்மணி வளையல்” வாசித்தேன். முகம்மது செரீஃபின் தமிழாக்கம் முதல் பாதியில் நெருடலாயிருந்தது. பின்பாதியில் குப்ரினின் மாயத்தால் ஒன்ற முடிந்தது. பின் பதிப்புகளில் வேறு யாரேனும் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இந்த சிறிய ருஷ்ய குறுநாவல் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 110 வருடங்களாகிறது என்பதை நம்பவே முடியவில்லை. சென்ற இருபதாம் நுற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நுற்றாண்டு கழிந்து இன்றும், இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் புத்தம் புதிதாய் பசுமையாய் இதயத்தை அசைத்துப் பார்க்கிறது. அதன் செவ்வியல் இசைத் தன்மையும், கீதமும் ஆன்மாவை மென்மையாய் வருடிச் செல்கின்றன. ஆழ்மனம் தொடும் எழுத்துகள் எப்போதும் காலாதீதத்தில் நின்று வாசக மனங்களை பேரன்பால் அணைத்துக் கொள்ளத் தவறுவதேயில்லை.

தந்தி அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்யும் ஜெல்த்கோ, “வேரா”வை பல வருடங்களாக ஒருதலையாக காதலிக்கிறான். ஒருவகை தூய ஆத்மார்த்தமான அன்பு அவள் மேல். அவள்தான் அவனின் உலகம், ஆன்மா, இறைவன் எல்லாம். அவன் யாரென்று கூட வேராவிற்குத் தெரியாது. அடிக்கடி அவன் எழுதும் காதல் கடிதங்கள் மட்டும் அவன் பெயரில்லாது வெறும் இனிஷியலுடன் அவளுக்கு வரும். அதை பெற்றோர்களிடமும், தன்னை மணக்கப் போகும் வாஸ்யாவிடமும் காண்பித்திருக்கிறாள் வேரா. அவ்விஷயத்தை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை அவர்கள்.

வேரா உயர்குடியில் பிறந்த இளவரசி. இளவரசர் வாஸ்யா ஷேயினோடு அவளுக்குத் திருமணமாகிறது. அதன்பின் அவளுக்கு வரும் காதல் கடிதங்கள் நின்றுபோகின்றன. ஆனால் ஈஸ்டர், புத்தாண்டு, பண்டிகை தினங்களிலும், அவள் பிறந்த நாளிலும் அவனிடமிருந்து வாழ்த்துக் கடிதங்கள் வரும். வேராவிற்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. சகோதரி ஆன்னாவின் இரு குழந்தைகள் மேல் அவளுக்கு மிகுந்த அன்பு. ஆன்னாவும், வேராவும் குணாம்சத்தில் நேரெதிர். வேரா அமைதியும், நிதானமும் ஆழமும் கொண்டவள். அழகி. ஆன்னா சகஜமாக எல்லோருடனும் பழகும் வெளிப்படையான பெண். ஆன்னாவிற்கு ஆண் நண்பர்கள் அதிகம்.  வேராவின் தம்பி, நிக்கலாய். கிழவர் ஜெனரல் அனோசவ் அவர்களுக்கு தாத்தா உறவு.

நகரத்து வீட்டில் பராமரிப்பு வேலைகள் நடப்பதால், கருங்கடல் பகுதியை ஒட்டியிருக்கும் ஒதுக்குப்புறமான தங்களின் மற்றுமொரு பங்களாவில் குடியிருக்கிறார்கள் வேராவும் அவள் கணவனும். அன்று செப்டம்பர் பதினேழு. வேராவின் பிறந்த நாள். மாலை, வீட்டில், நெருக்கமான நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து விருந்து வைக்கிறார்கள் இருவரும். பார்சல் ஒன்று வந்திருக்கிறது. பிரித்தால் வழக்கமாய் கடிதங்கள் எழுதும் அவன்தான். கூடவே வேராவின் பிறந்த நாளுக்காக ஒரு செம்மணி வளையல் பரிசாக அனுப்பியிருக்கிறான்.

விஷயம் எல்லை மீறுவதாக வேராவின் தம்பி நிக்கலாய் சினமுறுகிறான். போலீஸிடம் போகவேண்டாம் என்று அபிப்ராயப்படுகிறாள் வேரா. வளையலை திருப்பித்தரவும் அவனை எச்சரிக்கவும் நிக்கலாயும், ஷேயினும் ஜெல்த்கோவின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவனைச் சந்திக்கிறார்கள்.

ஜெல்த்கோவின் கடிதங்களில் குப்ரினின் எழுத்தை அணுக்கமாய் உணர முடிந்தது.

“மாண்புமிகு இளவரசி வேராவிற்கு, உங்களுடைய பிரகாசமான, மகிழ்ச்சி மிக்க பிறந்த நாளில் பணிவோடு வாழ்த்தி இந்தத் தாழ்மையான காணிக்கையை உங்களுக்கு அனுப்புகின்ற உரிமையை எடுத்துக் கொள்கிறேன். உங்களை அலங்கரிக்கின்ற அளவுக்கு இந்த உலகத்தில் ஒரு செல்வமும் கிடையாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இந்த வளையல் என் கொள்ளுப் பாட்டிக்குச் சொந்தமானது. என்னுடைய காலஞ்சென்ற தாய்தான் இதனை கடைசியாக அணிந்திருந்தாள். இச்சிற்றணியை உடனே நீங்கள் தூக்கி எறியக்கூடும். அல்லது வேறு யாருக்கேனும் அன்பளிப்பாகத் தரக்கூடும். ஆனால் உங்கள் கைகள் அதைத் தொட்டன என்பதே எனக்கு மகிழ்ச்சிதான். உங்கள் திருமணத்திற்கு முன்பு நான் உங்களுக்கு எழுதிய முட்டாள்தனமான கடிதங்களுக்காக வெட்கப்படுகிறேன். ஆனால் இன்றைக்கு உங்கள் பால் மிகுந்த மரியாதை கலந்த அச்சம், என் நிரந்தரமான ஆராதனைகள், ஓர் அடிமையினுடைய மிகப் பணிவான பக்தி இவற்றைத் தவிர என்னிடம் ஏதுமில்லை. நான் இப்போது செய்ய முடிந்ததெல்லாம் உங்களுக்கு நிரந்தர மகிழ்ச்சி கிடைக்க விரும்புவதும், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மகிழ்ச்சியடைவதுமே ஆகும். நீங்கள் உட்கார்ந்திருக்கக்கூடிய நாற்காலியை, நீங்கள் நடந்து போகின்ற தரையை, போகும் பாதையில் தொடும் மரங்களை, நீங்கள் பேசுகின்ற வேலைக்காரர்களை என் மனத்தில் ஆழ்ந்த உணர்வோடு வணங்குகின்றேன்…”

கதையின் இறுதியிலும் மனம் நெகிழ்த்தும் இன்னொரு கடிதம் இருக்கிறது. செம்மணி வளையல்” – கண்கள் நிறைக்கும் பீத்தோவனின் ஒரு செவ்வியல் இசைக்கோர்வை…

வெங்கி

“செம்மணி வளையல்” – அலெக்சாந்தர் குப்ரின்

ருஷ்ய குறுநாவல் – மூலம்: The Garnet Bracelet 1911

தமிழில்: நா. முகம்மது செரீபு

வெளியீடு: ராதுகா பதிப்பகம், மாஸ்கோ/போதி/புலம்

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு
அடுத்த கட்டுரைகவிதைகள் பிப்ரவரி இதழ்