திருப்பூர் கட்டண உரை, பொதுவில்…

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்..

தாங்கள் பெங்களூரில் ஆற்றிய உரையை காண பல நண்பர்கள் அழைத்த வண்ணம் உள்ளனர்.

கட்டண உரைகள் 60 நாட்கள் கழித்து தான் கட்டண பார்வைக்கு (சேனல் membership ல் கட்டணம் கட்டி) தான் பார்க்க முடியும்.6 மாதங்கள் கழித்து தான் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும்..

தற்போது 10/04/22 அன்று தாங்கள் திருப்பூரில் ஆற்றிய கட்டண உரைபொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. (சுட்டி இணைப்பு) இதனை பார்வையிட membership தேவையில்லை.

ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்இணைந்து நடத்திய நிகழ்வில்
ஜெயமோகன் உரை

நன்றி,
கபிலன்.
ஆசிரியர்.
shruti.tv

அன்புள்ள கபிலன்

நன்றி

இந்தக் கட்டண உரைகளை உருவாக்கும்போது தோன்றிய எண்ணமே அவை பற்றிய கவலையே இல்லாமல், எவருக்கும் புரியவைக்க முயலாமல், எனக்குத் தோன்றியதை பேசவேண்டும் என்றுதான். என் சிந்தனைகள் எந்த திசையில் செல்கின்றன என்று நானே பார்க்கவேண்டும். இது ஒருவகையான கூட்டுச்சிந்தனை. எனக்கிணையாக வரும் ஒரு சிறு குழு உடனிருக்கவேண்டும். கட்டணம் அதற்காகவே.

அந்த கூட்டுச்சிந்தனை பயன் தந்தது. பல புதிய எண்ணங்கள் தோன்றின. பல திசைகளில் வழிதவறுதலும் நிகழ்ந்தது. ஆனால் இவை பேருரைகள் அல்ல. இவை பொதுமக்களுக்கானவை அல்ல. என்னை அணுக்கமாகத் தொடர்பவர்களுக்குரியவை.

பொதுவாக நம் சூழலில் அரசியலால் அல்லது சினிமாவால் உருவாக்கப்படும் உரையாடற்களம் (discourse) மட்டுமே உள்ளது. சினிமாவால் அது எப்படி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என அறிவேன். ஆகவே அதிகார அரசியல் அதை எப்படி கட்டமைக்குமென்றும் ஊகிக்க முடிகிறது. அதற்குள் சென்று உரையாடுவதில் எனக்கு ஆர்வமில்லை. அதில் புதியதாக எதுவும் பேசிவிட முடியாது. எந்த பயணமும் சாத்தியமில்லை. அரசியல்வாதிகள் அவர்களே இரண்டு தரப்பை எடுப்பார்கள். இரண்டிலொன்றை எடுத்து அவர்கள் முன்வைக்கும் தர்க்கங்களின்படி பேசிக்கொண்டிருக்கவேண்டும். அவர்கள் அளிக்கும் முத்திரைகள், அவர்கள் அளிக்கும் வசைகளை கையாளவேண்டும். அது சிந்தனைக்கே எதிரான ஓர் அடிமைத்தனம்.

ஆனால் அதில் ஈடுபடுபவர்கள் ஏதோ கருத்துப்போரில் ஈடுபட்டிருப்பதாக ஒரு பாவனையை அடைவார்கள். தங்கள் எதிரிகளை தாங்கள் கண்டடையவில்லை, அரசியலாளர்கள் அவர்களை சுட்டிக்காட்டி சண்டைக்கு அனுப்புகிறார்கள் என்றுகூடத் தெரியாத அப்பாவிகள் அவர்கள்.

இந்த உரைகளை பொதுவில் வெளியிடும் போது கீழே வரும் ’கமெண்ட்’களை சிலசமயம் பார்ப்பேன். ஒரே வகையான வசைகள், ஒரே வகையான உணர்வுநிலைகள். ஒன்றோ இரண்டோ அரசியல்தரப்புகள். அவ்வளவுதான். அதைக்கடந்து வந்தவர்களுக்கு உரியவை இவை. அவர்கள் இந்த உரைகள் வழியாக சொந்த சிந்தனையில் முன்னகர்வார்கள் என நம்புகிறேன்.

ஆனால் ஆச்சரியம் ஒன்றுண்டு, நாமக்கல், திருப்பூர், பெங்களூர் உரைகளுக்குப் பின் பொதுவாக வாசிப்புப்பழக்கம் இல்லாத பெண்கள் பலர் அவ்வுரைகளை கூர்ந்து அறிந்திருப்பதை, உடன் நுட்பமாக பயணம் செய்திருப்பதை, கண்டேன். அவர்கள் அதை உணர்ச்சிகரமாக முன்வைத்தனர். அப்போது தெரிந்தது, இத்தகைய தத்துவ -அழகியல் உரைகளைக் கேட்பதற்கு பலருக்கு இருக்கும் பெருந்தடை என்பது இங்கே பொதுவெளியில் உலவும் சராசரிப் பொதுக்கருத்துக்களும் உணர்வுகளும் அவர்களின் மண்டைக்குள் நிறைந்திருப்பதுதான் என. எதையுமே அவர்களால் புதியதாக அறிந்துகொள்ள முடியாது. எதையும் ஏற்கனவே அறிந்தவையாக மாற்றி அந்தந்த சிற்றறைகளுக்குள் போட்டு மூடவே முடியும். பெண்கள் பெரும்பாலும் இந்த அரசியல்சார்ந்த மனச்சிக்கல்கள் இல்லாதவர்கள். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அது எனக்கு அளித்த தன்னம்பிக்கை மிக அதிகம்.

நன்று. பொதுவெளியில் உரை வரும்போது சில புதிய செவிகள் எனக்குக் கிடைக்கும். பல பழைய நாக்குகள் சூழச் சுழன்றாலும் கிடைப்பவை எனக்கு லாபம்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைஆரவல்லி சூரவல்லி
அடுத்த கட்டுரைஈரோடு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட அலுவலகம்