குமரித்துறைவி வாங்க
குமரித்துறைவி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
நண்பர் ஒருவருக்கு குமரித்துறைவி நாவலை அன்பளிப்பாக அளித்திருந்தேன். அவர் அவ்வளவாக படிக்கும் வழக்கம் இல்லாதவர். முன்பு அத்தகைய நண்பர்களுக்கு நான் அறம் பரிசாக அளிப்பதுண்டு. அதற்கு முன் நான் அளித்த இரு நூல்கள் சங்க சித்திரங்கள், பொன்னிறப்பாதை.
இந்த நூல்களெல்லாமே பாஸிட்டிவான மனநிலையை உருவாக்குபவை. வாசிப்பவர்களை அலைக்கழிப்பதில்லை. நவீன இலக்கியம் ஒருவகை அலைக்கழிப்பை அளிக்கிறது. விளைவாக தொழிலில் இருப்பவர்கள் அதை விரும்புவதில்லை. ஏற்கனவே ஏகப்பட்ட அலைக்கழிப்பு. ஆனால் இந்நூல்கள் மேலோட்டமானவையும் அல்ல. வாசித்தவர்கள் வாழ்க்கையை பற்றிய ஆழமான புரிதலை அடைவார்கள். வாழ்க்கைமுழுக்க ஞாபகமும் வைத்திருப்பார்கள்.
குமரித்துறைவியை அந்நண்பர் பலமாதகாலம் வாசிக்கவில்லை. அண்மையில் அவர் மனைவி வாசித்தார். உடனே மதுரைபோய் மீனாட்சியை தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. நண்பருக்கு இரண்டு மகன்கள். இரண்டுபேருமே அமெரிக்காவில். அவர் மனைவி புத்தகமெல்லாம் படிக்காதவர். ஆனால் குமரித்துறைவி வாசித்து அழுதுகொண்டே இருந்தாராம்.போகும் வழியில் இவர் வாசித்தார். இவரும் நெகிழ்ந்துவிட்டார்.
மதுரை அம்மன் முன் நின்ற அனுபவத்தை ஃபோனில் சொன்னார். அதுவரை தெய்வமாக தெரிந்த மீனாட்சி மகளாக தெரிய ஆரம்பித்தார். அங்கேயே அழுதுவிட்டார். அவர் மனைவி காரில் திரும்பும்போது அதையே சொன்னார். மகளையே பார்த்ததாக. அப்படி பார்க்கலாமா என்று ஒரு பெரியவரிடம் கேட்டாராம். பார்க்கலாம். எல்லாம் பக்தியின் பாவனைகள். அது பித்ருஃபாவம் என்றாராம. கடவுளுக்கே தந்தையாக பாவனை அடைவது அது.
நண்பர் தன் வாழ்க்கையில் திருப்புமுனை உருவாக்கிய நூல் அது என்று சொன்னார். எஞ்சியவாழ்நாளை அழகாக ஆக்கிவிட்டது என்றார். இனிமேல் மாதம்தோறும் மதுரை செல்லப்போவதாகச் சொன்னார். (ஆனால் அதற்குள் ஒருமாத காலத்தில் இரண்டுமுறை போய்விட்டார்) உங்களுக்கு எழுதவேண்டுமென தோன்றியது.
எம்.பழனிக்குமார்
நாளொன்றும் தவறாமல் தினம் எங்கள் வீட்டுக்கு எதாவது ஓர் ஆலயத்திலிருந்து பிரசாதம் வரும். ஜோதிட ஆலோசனை வழியே பரிகாரம் செய்ய ஆலயம் செல்பவர்கள் வழியே கிடைக்கும் பேறு. குரியர் கம்பெனி பையன்கள் அனைவரும் மிகவும் பழக்கமாகிவிட்டனர்
இன்று ஆலயம் தொடர்பான பிரசாதம் போலவே பரிசு கிடைத்தது. நண்பர் யோகேஸ்வரன் நான்கு நாட்கள் முன்பு whatsapp chat ல் வந்து என் புது இல்ல முகவரி வினவினார். என்ன காரணம் என்று கேட்டேன். மங்கலமான புத்தகம் ஒன்றை அனுப்ப விரும்புவதாகச் சொன்னார். முகவரி கொடுத்திருந்தேன் இன்று குரியரில் அந்தப் புத்தகம் வந்தது.. ஜெயமோகன் படைப்பு குமரித்துறைவி
ஒரு பெரிய விஷயம் என்னை கேள்வி வடிவத்தில் உறுத்திக் கொண்டிருந்தது குமரித்துறைவியின் முன்னுரையில்
மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாட முடியாதா என்ன? இரு விளையாட்டுகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒன்றை ஒன்று ஆடிபோல பிரதிபலித்து பெருக்கிக் கொள்கின்றன. அலகிலா ஆடலுடைய தெய்வம் தன்னை வைத்து ஆடும்படியும் மானுடனை ஆட்டி வைக்கிறது
என்னை உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. ஜெயமோகன் வரிகளிலேயே பதிவு செய்வது எனில் உடல் கரைந்து பறப்பது போன்ற உணர்வினை உருவாக்கியது
சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்