தஞ்சையில் டால்ஸ்டாய்- எம்.கோபாலகிருஷ்ணன்

அண்மையில் ‘துருவம்’ இலக்கிய அமைப்பினர் ‘தீர்த்த யாத்திரை’ நாவல் குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்வதற்காக தஞ்சை சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஒரு புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தஞ்சை புறநகரில் அழகிய ஓர் வளாகத்தில் இருந்தது அந்தப் புத்தகக் கடை. உடனடியாக கவனம் ஈர்க்கும் பெயர், ‘டால்ஸ்டாய் புக் ஸ்டோர்’.

சிறிய கடைக்குள் எளிமையான அலமாரிகளில், ஒழுங்குடன் வகை பிரிக்கப்பட்டு நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் தொடக்க நிலை வாசகனுக்கான எல்லாப் புத்தகங்களையும் பார்க்க முடிந்தது. அத்துடன் செவ்விலக்கிய வரிசையிலும் முக்கியமான நூல்கள் அனைத்துமிருந்தன. இதுவரை அச்சில் நான் பார்த்திராத எலினா ஃபெரான்டேவின் ‘தி டேஸ் ஆஃப் அபன்டன்மென்ட்’ நாவல் அங்கிருந்தது வியப்பில் ஆழ்த்தியது.

நூல் நிலையத்தை நடத்தும் அச்சுதன் பொறியியல் பட்டதாரி. சில காலம் வேலை பார்த்திருக்கிறார். பெருந்தொற்று காலத்துக்குப் பின் இந்த புத்தகக் கடையைத் தொடங்கி நடத்துகிறார். வாடகைக்கும் இதர செலவுகளுக்குமாய் நாளொன்றுக்கு அவர் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டும். தஞ்சையில் இது சாத்தியமா? விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையுடன் இலக்கிய வாசகர்கள் உள்ள ஒரு ஊரில் இப்படியொரு முயற்சி தேவையா? இப்படியெல்லாம் கேள்விகள் என்னிடமிருந்தன. ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரியாதா என்பதுபோல மிக அமைதியாக புன்முறுவலுடன் ஆனால் தன் லட்சியம் சார்ந்த உறுதியுடன் அடக்கமாகப் பேசுகிறார் அச்சுதன்.

மாதத்தின் முதல் வாரத்தில் ஆங்கில நூல்களைக் குறித்து உரையாடும் ‘English Readers Club’ நிகழ்ச்சி. இறுதி வாரத்தில் ‘துருவம்’ அமைப்பினர் ஏற்பாடு செய்யும் கலந்துரையாடல் நிகழ்ச்சி. அதிகபட்சம் இருபது பேர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுகள் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் நடத்தப் படுகின்றன.

நூல் நிலையத்தின் வெளிப்பக்கம் ஒரு தகவல் பலகை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரின் பரிந்துரைப் பட்டியல் அழகாக அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் நாளிதழ்களில் வெளியான இலக்கியம் சார்ந்த செய்திகள், நேர்காணல்கள் அழகாக வெட்டப்பட்டு இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்கேனும் ஓர் அதிசய மனிதர் இப்படித்தான் இலக்கியச் சுடரை பேணிப் பாதுகாக்கிறார்கள். பலாபலன்களைக் குறித்தோ லாப நட்டங்களைப் பற்றியோ கவலைப்படாத அவர்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அவ்வாறானவர்களின் தன்னலமற்ற காரியங்கள்தான் எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மேலும் நம்பிக்கைகொள்ளச் செய்கின்றன.

தஞ்சை செல்லும் நண்பர்கள் தவற விடக்கூடாத இடம் புதுக்கோட்டை சாலை, பிஷப் சுந்தரம் வளாகத்தில் அமைந்துள்ள ‘டால்ஸ்டாய் புக் ஸ்டோர்’.

எம்.கோபாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமிளகு – வாசிப்பு-ஷங்கர் ப்ரதாப்
அடுத்த கட்டுரைஆரவல்லி சூரவல்லி