அன்பெனும் பிடி, கடலூர் சீனு

இனிய ஜெயம்

பொதுவாக, மழை குளிர் காரணம் கொண்டு ஜன்னல்கள் அடைக்கப்பட்ட பேருந்தில் இரவுப் பயணங்களில், வேடிக்கை பார்க்க ஏதும் அற்று மொபைலில் ஏதேனும் இயற்கை சார்ந்த ஆவணப்படம் பார்த்தபடி செல்வேன். அப்படி இந்தப் பயணத்தில் நான் பார்க்க கிடைத்தது கார்த்திகி கொன்சல்வாஸ் இயக்கிய இந்த முக்கால் மணி நேர அற்புதம். ஆம் அற்புதம் என்று மட்டுமே சொல்வேன்.

கணவரை புலி கொன்றுவிட்ட மலைகுடிப் பெண். அவளை மணக்கக் காத்திருக்கும் மற்றொரு மலைக்குடிக் காதலன். மத்திய வயதில் இருக்கும் இருவருக்கும் தொழில் யானை பாகனாக இருப்பது. அவர்கள் வசம் வளர்க்க சொல்லி வனத்துறை இரண்டு அனாதை யானைக் குட்டிகளை கொண்டு வந்து சேர்க்கிறது. இந்த நால்வர் குடும்பத்தில் சில நாட்கள் வாழ்ந்து மீளும் அனுபவத்தை நல்கும் ஆவணம்.

மயங்க வைக்கும் சூழல் பின்னணியை அவ்வாறே கொண்டு வந்து நிறுத்தும், திறந்து விட்ட ஒரு பிரம்மாண்ட கேலரி ஒன்றில் நின்று அதன் வழியே இந்த காட்சிகளை பார்க்கிறோம் என்று உணர வைக்கும் வகையிலான ஒளிப்பதிவு. வருடும் நீரோடை போன்ற பின்னணி இசை. நாம் கண்களை இமைப்பது எப்படி நமது போதத்திலேயே இருக்காதோ, அப்படி ஒரு எடிட்டிங்.

மெல்ல மெல்ல ரகு இருராலும் வளர்த்து எடுக்கப்படும் சித்திரம். பின்னர் அம்மு வந்து சேர்ந்ததும் ரகுவுக்கும் அம்முவுக்கும் இடையே நடக்கும் உரசல், அம்மா அப்பாவின் கைகள் வழியே ஊட்டும் உணவுக் கவளத்தை இருவரும் முதலில் யார் வாங்குவது எனும் போட்டியில் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு முண்டி அடிப்பது, குளிப்பது, உண்பது, விளையாடுவது, கண்வளர்வது, எழுந்ததும் அம்மாவை தேடுவது என அந்த இரண்டு குழந்தைகளும் கூடி பார்ப்பவர் அனைவரையும் பிள்ளைப்பாசப் பித்தில் கரைய வைத்து விடுகிறார்கள்.  எத்தனை எத்தனை துளித் துளிச் சித்திரங்கள் வழியே இந்த யானைக் குட்டிகள் எனும் அற்புதம் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்க வியப்பு மேலிடுகிறது.

அந்த குழந்தைகள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இரண்டு யானைகளில் ஒன்றை மீண்டும் வனத்துக்குள் சென்று விட வேண்டிய சூழல்.

குமரித்துறைவிக்குப் பிறகு இப்படி ஒரு உணர்வெழுச்சி அளிக்கக்கூடிய பிரிதொன்றை இனி நான் காணவே போவதில்லை என்று எண்ணி இருந்தேன். இந்த ஆவணம் அந்த எண்ணத்தை முறியடித்து விட்டது. இங்கு இரண்டு குட்டிகளும் அலங்காரம் பூணும் தருணம், இரண்டில் ஒரு குட்டி அந்த வீடு விட்டு மீண்டும் காடு புகும் தருணம், அந்த தருணத்தில் அம்மா அப்பா அம்மு என்று குடும்பமே தவிக்கும் சித்திரம்,  எல்லாவற்றுக்கும் மேலே இந்த ஆவணம் நெடுக திகழும் மங்கலமும், ஆவணம் நிறைகையில் உள்ளே எழும் சந்துஷ்டியும் என எல்லா நிலையிலும் குமரித்துறைவி நாவல் அளிக்கும் உணர்வு நிலைக்கு நிகர் நிற்கும் படைப்பு இது. உங்கள் குடும்பத்துடன் மொத்தமாக அமர்ந்து இந்த ஆவணத்தை நீங்கள் காணவேண்டும் என்று விரும்புகிறேன்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதன்னை விலக்கி அறியும் கலை
அடுத்த கட்டுரைமிளகு – வாசிப்பு-ஷங்கர் ப்ரதாப்