பெங்களூர் உரை, அ.முத்துலிங்கம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

 

வணக்கம்.

இரண்டு சம்பவங்களை சொல்லலாம் என நினைக்கிறேன். ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோவில் நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகிய டேவிட் செடாரிஸ்  பேசுவதாக அறிவிப்பு. கட்டணம் 10 டொலர். மாலை நடந்த கூட்டத்துக்கு நானும் சென்றேன். அரங்கம் நிறைந்து வழிந்த அதிசயத்தை கண்டேன். 2000 பேர் இருக்கலாம். எழுத்தாளர் தான் எழுதிய புத்தகத்தில் இருந்து சில பக்கங்களை வாசித்தார். பின்னர் தான் எழுதப் போகும் புத்தகத்தில் இருந்து சில பக்கங்கள். அவ்வளவுதான், பேசவே இல்லை, ஒரு மணி நேரத்தில் கூட்டம் முடிந்தது.

பின்னர் வாசகர்கள் வரிசையாக நின்று புத்தகங்களில் கையொப்பம் பெற்றுக்கொண்டார்கள். எழுத்தாளர் நின்றபடியே நடு நிசி தாண்டி அத்தனை வாசகர்களின் புத்தகங்களிலும் கையொப்பம் இட்டார் என்று அடுத்தநாள்  காலை அறிந்தேன். எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. இதே மாதிரி ஒரு நிகழ்வு தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு  எப்போவாவது கிட்டுமா என யோசித்தேன். அப்படி நடக்காது என்றே தோன்றியது. அதை அப்போதே எழுத்தில் பதிவு செய்திருந்தேன்.

அடுத்த சம்பவம். இதேமாதிரி ஒரு நிகழ்வு. இயல் விருது பெற கனடா வந்திருந்த எழுத்தாளர் ஒருவரை அழைத்துக்கொண்டு நாங்கள் நால்வர் அந்த நிகழ்வுக்கு சென்றோம். எங்களுக்கு கட்டுபடியாகாத தொகையை கட்டணமாகக் கட்டியிருந்தோம். வாகன நெரிசலில் இரண்டு நிமிடம் தாமதமாகச் சென்றுவிட்டோம். எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எவ்வளவோ கெஞ்சியும் காரியம் ஆகவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

உங்களுடைய பெங்களூர் கட்டண உரை முக்கியமானது. காலை ஆறரை மணிக்கே அரங்கம் ஏறக்குறைய நிறைந்துவிட்டது என்று அறிகிறேன். உரை கேட்க வந்திருந்த அத்தனை பேருமே தமிழிலும், தத்துவத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். ஆழமான உரை என்பதால் கூர்ந்த கவனம் முக்கியம். நேரம் பிந்தி வந்த எழுபேர்  அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தமிழில் இப்படியொரு நிகழ்வு  நடக்க முடியாது என்றே இதுவரை  நினைத்திருந்தேன். அது நடந்துவிட்டது. காசு கொடுத்து புத்தகம் வாங்குவதுபோல ஆராய்ந்து வழங்கும் கட்டண உரைகளை கலையாத கவனத்துடன் கேட்பதுதான் முறை. இலவசமாகவே அனைத்தும் கிடைத்து மக்கள் பழகிவிட்டார்கள்.

இது ஒரு சரித்திர நிகழ்வு.  இதை நடத்திக்காட்டிய உங்களுக்கு நன்றி. என் வாழ்நாளில்  இப்படியொன்று  நடக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது. இன்னும் பல உரைகள் இதுமாதிரி நிகழும் என நம்புகிறேன். வாழ்த்துகள்

அன்புடன்

அ.முத்துலிங்கம்

முந்தைய கட்டுரைசந்தித்தல், கடிதம்
அடுத்த கட்டுரைஉருமாறுபவர்கள். நோயல் நடேசன்