அன்னையும் மாயையும்

பிரயாகை செம்பதிப்பு வாங்க

எனது இருபதாவது வயதில் வீட்டைவிட்டுக்கிளம்பி அரைத்துறவியென அலைந்த நாட்களில் ஒரு துறவியர் குழுவுடன் இமயமலை ஏறிச்சென்று முதல் முறையாக பிரயாகையை பார்த்தேன். அதைப்போன்று ஐந்து பிரயாகைகள் உண்டு என்றனர். பஞ்சப்பிரயாகையையுமே அந்த ஒரு பயணத்தில் பார்த்தது இத்தனை நாட்கள் கழித்தும் அகக்காட்சியென என்முன் விரிகிறது. அந்த அகவைக்குப்பின் பார்த்திருந்தால் அத்தகைய துல்லியம் கைகூடியிருக்காது.

அன்று நினைப்பொழிந்து செயல்மறந்து பார்த்தபடி நின்றது நினைவிலிருக்கிறது. இரண்டு ஆறுகள் ஒன்றையொன்று தழுவிக்கொள்வது இரண்டு பாம்புகள் தழுவிக்கொள்வது போல. இரண்டு உடல்கள் இணைவது போல. ஆனால் அதெல்லாம் முதற்கண எண்ணங்கள். அதன்பிறகு இரு எண்ணங்கள் போல அவை தழுவிக்கொள்கின்றன என்று தோன்றியது.  பின்னர் இரு பெருக்குகள் தழுவிக்கொள்கின்றன. எண்ணப்பெருக்கு. அல்லது, தெய்வத்தின் கையிலிருந்து நழுவி இறங்கிய வேறேதோ பெருக்கு.

பிரயாகை என இந்நாவலுக்கு தலைப்பிடுகையில் அவ்வெண்ணமே எனக்குள் எழுந்தது. அப்போது இந்நாவலைப்பற்றிய எந்தத்திட்டமும் இருக்கவில்லை. ஆனால் திரௌபதி விண்ணிலிருந்து மண்ணுக்கிறங்கிய ஒரு பெருக்கு என்ற உளப்பதிவு இருந்தது. பாரதத்தின் இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இத்தனை தீவிரமான நிகழ்வுப் பெருக்கை தோற்றுவித்த முதற்புள்ளி வேறொன்றில்லை. பாரத வரலாற்றில் கிருஷ்ணனை விட ஒரு படி மேலாகவே திரௌபதியின் செல்வாக்கு உண்டென்று தோன்றுகிறது.

திரௌபதி ஒரு ஆளுமையல்ல. ஒரு பெருநிகழ்வு. இங்கு இப்பலகோடி மக்களின் வாழ்க்கை இவ்வண்ணம் ஆகவேண்டும் தீர்மானித்த எதுவோ இங்கு அனுப்பிய எதுவோ ஒன்று. திரௌபதியின் ஐந்து கணவர்களும் அவ்வகையில் ஐந்து பிற பெருநிகழ்வுகள். பின்னர்  தேவிபாகவதம் பயிலுகையில் தேவி என்னும் ஆற்றல் இப்புவியின் ஐந்து பருப்பொருட்களையும் முயங்கி இங்குள்ள அனைத்துமென ஆகி மகாமாயையென தோற்றமளித்து அன்னையும் ஆட்கொள்ளும் தெய்வமும் என நின்றிருப்பதைக் கண்டேன்.

பிரயாகையென இந்நூலுக்கு தலைப்பிட்டதை இதை எழுதும்போது ஒவ்வொரு பகுதியிலும் மீண்டும் மீண்டும் எனக்கே உறுதிப்படுத்திக்கொண்டேன். இதை மீள மீள என்னுள் நிகழ்த்திக்கொண்டிருந்தேன். இந்நாவல் தொடங்குவது கங்கையில் கங்கோத்ரியில் ஒரு பசுவின் விழி என சிறுகுமிழி ஊற்றாகத் தோன்றும் அப்பேராறு மலையிறங்கி அலைகொண்டு ருத்ரப்ரயாகையில் ஆர்ப்பரித்து, கங்கையென ரிஷிகேஷில் பொழிந்து, காசியில் அனைத்து பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும் பேரன்னையென்றாகி, வங்கத்தில் ஆழம் மிகுந்த முதுமகளென உருக்கொண்டு கடலை அடைகிறது. இந்நாவலில் திரௌபதியின் தோற்றமும் அவ்வாறே. அவள் நிறைவு கொள்ளும் பயணமே எஞ்சிய நாவல்கள்

பிரயாகை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

நிலைபேறு என்பதே திரௌபதியின் இலக்கணம் என்று இதை எழுதியே அறிந்தேன். அலைகொள்பவளாக நம் உள்ளத்தில் திரௌபதி கூத்துகளாலும் நாடகங்களாலும் பதியவைக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் திரௌபதியின் இயல்பில் ஆழம் என்பது அசைவிலாதிருக்கிறது. சீற்றம் கொண்டு அவள் அறைகூவுவதும் சரி, அனைத்தையும் மன்னித்து அடங்குவதும் சரி, ஒருவகை மேல்தள அலைகளே. ஆழத்தில் தெய்வங்களின் அசைவின்மையுடன் காலமின்மையுடன் அவள் அமர்ந்திருக்கிறாள். ஆகவே இந்நாவல் என்னை அறியாமலேயே துருவனில் தொடங்கியது.

அருந்ததியில் அல்லவா தொடங்கியிருக்கவேண்டும் என்று அதை எழுதியபோது மூத்த மகாபாரத அறிஞர்கள் சிலர் கேட்டனர். ஆம் ஆனால் எவ்வண்ணமோ  அது துருவனில் தொடங்கியது. அவ்வாறே இருக்கட்டும் என்று நான் அதற்கு பதிலிறுத்தேன். நாவல் முடியும்போது அத்தலைப்பு முற்றிலும் நியாயப்படுத்தியிருப்பதை அவர்களே  எனக்கு எழுதினார்கள். மண்ணுக்கு திசைகளை வகுத்தளிக்கும் புள்ளியென விண்ணில் நின்றிருக்கும் துருவனைப்போல பாரதத்தின் கோடானுகோடிகளுக்கு அறம் அறமீறல் ஆகியவற்றை வகுத்தளிக்கும் புள்ளியென அவள் நிலைகொள்கிறாள்.

திரௌபதியை கேரளத்தில் பிறந்த ஒருவராலேயே சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. பகவதியின் மண். பெண் மலையாளம். என் மூதன்னையரில் இருந்து நான் திரௌபதியை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். அணைக்குள் அடங்கிய நதிபோல் குடும்பத்தில் சிறைப்பட்ட தமிழகப்பெண்டிரல்ல அவர்கள். தன் திசையைத் தானே முடிவெடுத்து பெருகிச்செல்லும் ஆற்றல் கொண்ட பேராறுகள். கணவன்களை குழந்தைகளை தன்மேல் ஓடங்கள் என்றும் நாவாய்கள் என்றும் ஏந்திச்செல்பவர்கள். ஆழம் விசை அனைத்தும் கொண்டவர்கள். இந்நாவலில் என் அன்னையர் அனைவருக்கும் ஒரு வணக்கத்தை நிகழ்த்தியிருப்பதாகவே இப்போது தோன்றுகிறது.

இந்நாவல் முழுக்க திரௌபதி இருநிலையுடன் வந்துகொண்டிருக்கிறாள். அதைப்பற்றி நாவல் வெளிவந்ததுமே வினாக்கள் இருந்தன. வெண்முரசு முடிந்தபோது அவ்வினாக்களுக்கு முழுவிளக்கம் கிடைத்து நிறைவுற்றனர். கேரளத்தில் மட்டுமே தெய்வங்களை மாயை என்று வணங்குவார்கள். கொடுங்கல்லூரிலும் சோற்றானிக்கரையிலும் அம்மே நாராயணீ, அம்மே மகாமாயே என்ற கூக்குரல்கள் எழுவதைக் காணலாம். தெய்வமென்பது மகாமாயையே. இங்கனைத்திலும் நிறைந்திருக்கும்  பெரும் மாயத்தோற்றம். அவள் சீற்றம் மாயமெனில் கருணையும் மாயமே. சீற்றத்திற்கும் கருணைக்கும் அப்பால் உள்ள நிலைபேறே அவள்.

வெண்முரசின் திரௌபதி துர்க்கையின் வடிவம், எனில் மாயை அவள் பெருந்தோழி. கேரளத்தில் அத்தனை ஆலயங்களிலும் பெருந்தோழிக்கும் சிற்றாலங்கள் உண்டு. சில ஆலயங்களில் அன்னையை தன் கைகளில் ஏந்தியிருப்பதே மாயை எனும் பெருந்தோழியே. அன்னை மாமாயை மாமங்கலையும் கூட.

இந்நாவலில் வரும் அன்னை மாயை இதன் பக்கங்களினூடாக ஊறித்திரண்டு எழுகிறாள். இந்நாவல் தொடரின் முடிவில் அவள் தன் இருநிலை அகற்றி ஒன்றென தன் மூலத்துடன் இணைகிறாள். இந்நாவல் தொடரில் திரௌபதிக்கும் கண்ணனுக்கும் மட்டுமே அத்தகைய இருநிலைகள் அளிக்கப்பட்டுள்ளன. த்வைதமும் த்வைதாத்வைதமும் அத்வைதமும் ஆகி நின்றிருக்கும் இருவர்.

இந்நாவலை எழுதுகையில் இதற்கு பிழை நோக்கி செப்பனிட்டு உதவிய ஸ்ரீனிவாசன், சுதா ஸ்ரீனிவாசன் தம்பதியருக்கும் இதை நூல் வடிவு பெறுகையில் பிழை நோக்கி உதவிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், ஹரன் பிரசன்னாவுக்கும் இப்பதிப்பிற்கு பிழை நோக்கி உதவிய மீனாம்பிகை, செந்தில்குமார் ஆகியோருக்கும் எனது நன்றி.

இதை வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்திரிக்கும் இப்பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் எனது நன்றி.

இந்நாவல் மறுபதிப்பாகிறது. சில இல்லங்களில் இத்தகைய வெண்முரசு நாவல்கள் நூலக அடுக்கையே நிறைத்து அமைந்திருப்பதை பார்க்கையில் எனக்கே திகைப்பாக இருக்கிறது. அவற்றை படிக்கலாம் என்ற எண்ணம் ஒரு வாசகனாக எனக்கு இன்று எழுமா என்பதே ஐயமாக உள்ளது. ஆயினும் இதற்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்து அமைந்துகொண்டே இருக்கிறார்கள். மறுபதிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இதை எனது எழுத்து திறனுக்கான சான்றாக அன்றி என்றுமுள வியாசனின் சொல்லுக்கான சான்றாகவே கொள்கிறேன். இதை எழுதுவதற்கு தருணம் அமைத்த முன்னோருக்கு ஆசிரியர்களுக்கு தெய்வங்களுக்கு வணக்கம்.

ஜெ

14.11.2022

வெண்முரசு நாவல் வரிசை 5 பிரயாகை வாங்க 

முந்தைய கட்டுரைமேனகா
அடுத்த கட்டுரைDraupadi Swayamvaram – A Few Thoughts