அழகில் கொதிக்கும் அழல்

கவிஞர் இசை. தமிழ் விக்கி

அழகில் கொதிக்கும் அழல் வாங்க

அழகில் கொதிக்கும் அழல் மின்னூல் வாங்க

கவிதையைப் பற்றிப் பேசப்பேச கவிதை பெருகும். ஆனால் எவ்வளவு பேசுவது , எப்படிப் பேசுவதென்பது ஒரு கயிற்றுநடை. கவிதையில் ‘ஆய்வு’ப்பார்வையை நான் கருத்தில்கொள்வதில்லை. அதில் அரசியல், சமூகவியல் இன்னபிற அவியல்களை கண்டடைவது எனக்கு ஒவ்வாமையை அளிப்பது. கவிதைபற்றி ரசனை மட்டுமே எழுதப்படவேண்டும் என்பது என் எண்ணம். மேலதிகமாக கவிதையின் வரலாற்றுப்புலம் பற்றி எழுதலாம், அவ்வளவுதான்.

ரசனை பற்றி எழுதும்போதே அதன் எல்லைகளை உணர்ந்திருப்பது அவசியம். கவிதையை மிகையாக விரித்துரைத்து, அதிலிருந்து வாசகன் பறந்தெழும் தருணத்தை இல்லாமலாக்கிவிடலாகாது. கவிதையின் மீதான ரசனை என்பது இன்னொருவகை கவிதைவெளிப்பாடாகவே அமையவேண்டும். எங்கு நின்றுவிடவேண்டுமோ அதற்கு நாலடி முன்னரே நின்றுவிடவேண்டும்.

கவிதைரசனையின் மூன்று வழிமுறைகள். ஒன்று, அதை வாழ்வுடன் பிணைத்தல். இரண்டு அதன் சொல்லழகை ரசித்தல். மூன்று அதை கவிதையெனும் பெரும்பரப்பில் வைத்து அறிதல். வாழ்வுடன் பிணைத்தல் என்பது கவிதையை வைத்து வாழ்க்கையை விரித்துரைப்பதாக ஆகிவிடலாகாது. கவிதையை வாழ்வின் கூர்முனை எங்கு தொடுகிறதோ அங்கு தொட்டு நிறுத்திவிடவேண்டும். சொல்லின்பத்தை அடிக்கோடிட்டு நின்றுவிடவேண்டும். கவிதைகளை ஒப்பிடுகையில் பொதுவான அந்த புள்ளியை தொட்டுமட்டும் காட்டவேண்டும்.

அத்தகைய எழுத்துக்கள் தமிழில் அரிது. பெரும்பாலும் அவற்றை கவிஞர்களே எழுதியுள்ளனர். இசை அத்தகைய கவிதைரசனை நூல்களை எழுதியுள்ளார். நுண்ரசனையும் சரளமான நடையும் இயல்பான உற்சாகமனநிலையும் கொண்ட அவருடைய நூல்கள் கவிதைவாசகனின் பிரியத்திற்குரியவை.

நவீனக் கவிதை ரசனையை ஒட்டுமொத்தமாக கவிதைரசனை என விரித்துக் கொள்வது இன்னமும் சவாலானது. ஏனென்றால் நவீனக் கவிதை மரபுக்கவிதையிலுள்ள இரண்டு அம்சங்களை தவிர்ப்பது. ஒன்று, விழுமியங்களையோ உணர்வுகளையோ நேரடியாக முன்வைக்கும் முறை. இரண்டு, அணிகள் அல்லது அலங்காரங்கள். அவ்வகையில் இரு கவிதைமரபுகளும் எதிரெதிரானவை.

இதனால் பல நவீனக்கவிதை வாசகர்களால் மரபுக்கவிதைகளை ரசிக்கமுடியாது.அவர்களுக்கு அவை வலியுறுத்தும் தன்மை கொண்டவையாக தோன்றும். மிகையான வெளிப்பாடு கொண்டவையாகத் தோன்றும். நானறிந்த பல முதல்தலைமுறை நவீனக் கவிஞர்கள் மரபுமேல் விலக்கம் கொண்டவர்கள்.

ஆனால் அவை கவிதையென ஒரு களத்தில் ஒன்றாக நிலைகொள்கின்றன. அதைக் கண்டடைந்து ரசிப்பதே கவிதைரசனையின் உச்சநிலை. இன்றைய கவிஞர்களில் இசையிடம் வெளிப்படும் அந்த ரசனை மகிழ்வூட்டும் ஓர் அனுபவம். அழகில் கொதிக்கும் அழல் என்னும் சிறு தொகுதி அத்தகைய ரசனைகொண்ட ஆக்கம். நாட்படுதேறல் என்ற பெயரில் அகழ் இதழில் வெளிவந்த தொடர் இப்பெயரில் நூலாகியிருக்கிறது.

இக்கட்டுரைகளில் இசை திருவள்ளுவரில் இருந்தோ, பலபட்டடை சொக்கநாதப் புலவரில் இருந்தோ ஒரு கவிதைத்தருணம், அல்லது சொல்லாட்சியை தொட்டெடுக்கிறார். அதை வாழ்க்கைவழியாக விரித்தெடுக்கிறார். ஆதவன் கதையோ, அ.முத்துலிங்கம் கதையோ வந்துசேர்கிறது. ஆத்மாநாம், யூமா வாசுகி என பல கவிஞர்களின் கவிதைகளை அது கண்டடைந்து இணைத்துக்கொள்கிறது. தனக்கேயான ஒரு அகநிகழ்வை உருவாக்கி அமைகிறது.

ஒருவகை கவிதைமாலைகள் இவை.இசை தொடுத்துக் கொள்ளும் கவிதைகளின் ஊடாக ஓடும் நார்ச்சரடு அக்கவிதைகள் ஒவ்வொன்றையும் ஒளிரச்செய்கிறது. உழத்தொறூஉம் காதற்று உயிர் என்னும் சொல்லிணைவின் வழியாக அவர் செல்லும் தொலைவு ஓர் உதாரணம். கவிதைரசனை என்பதே இதுதான். ஒரு சொல்லிணைவு பித்துப்பிடித்ததுபோல் அதை நாம் சொல்ல வைக்கிறது. நம்மை நெடுந்தொலைவுக்கு கொண்டுசெல்கிறது.

மரபுக்கவிதைகளின் பேசுபொருட்களான ஊழ்வினை போன்றவற்றை முற்றிலும் புதிய முறையில் புரிந்துகொள்வதிலும், மரபுக்கவிதைகளின் மிகையின் அழகை உட்சென்று அந்த உளநிலையுடன் இணைத்து உள்வாங்கிக் கொள்வதிலும் இசை இனியதொரு விரிவை இக்கட்டுரைகளில் வெளிப்படுத்துகிறார். ஒரு நவீனக் கவிஞன் வள்ளுவரில் கண்டடையும் கவிதைக்கணங்கள் இன்றைய உள்ளத்தின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல, நம் கவிமரபின் அழியாச்சாரத்தின் வெளிப்பாடுகளும்கூட

காஸர்கோடு கடற்கரையில் தன்னந்தனியாக இரவில் அமர்ந்திருக்கும் நாட்களில் கலங்கரைவிளக்கத்தின் நீளும் ஒளி கொந்தளிக்கும் கடல்வெளியை சலிக்காமல் துழாவிக்கொண்டே இருப்பதை நான் பார்ப்பேன். அன்றைய என் உளப்பிறழ்வு நிலையை அது எப்படியோ ஆட்கொண்டிருந்தது. சட்டென்று ஏதோ ஒன்று கடலில் மின்னி அணைகையில் என் உடல் துள்ளி அடங்கும்.அதை இன்று எண்ணிக்கொள்கிறேன்

முந்தைய கட்டுரைசோலை சுந்தரப்பெருமாள்
அடுத்த கட்டுரைகுளச்சல் மு.யூசுப் கடிதம்