கீதை, நூல்கள் – கடிதம்

அன்புள்ள எழுத்தாளருக்கு,

வணக்கம். உங்கள் யானை டாக்டர் கதை வழியாகவே உங்கள் இணைய தளம் எனக்கு அறிமுகம். பின்பு அறம் சிறுகதை தொகுப்பின் கீழ் உள்ள மற்ற எல்லா கதைகளையும் இணையம் வழி வாசித்தேன். அதன் பின்னர் புத்தகமாக வாங்கி மறுபடியும் மறுபடியும் வாசித்தேன். பிள்ளையார் சுழி யானை டாக்டர் கதைதான். பின்பு விஷ்ணுபுரம், ரப்பர், அனல் காற்று, இரவு, பின் தொடரும் நிழலின் குரல், வெண் முரசு, பனி மனிதன், காடு, வெள்ளை யானை என்று வாசிப்பு தொடர்கிறது.

உங்கள் எழுத்தின் உச்சமாக நான் நினைப்பது காடு நாவல். எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் முதல் இடம். காடு நாவல் வாசித்து பித்து பிடித்து கிடந்த நாட்கள் பல. குட்டப்பன் மிகவும் அனுக்கமான நண்பனாக மாறி விட்டான். எல்லா கதாபாத்திரங்களும் மனதிற்கு மிக நெருக்கமாக மாறி விட்டது.

இரண்டாவதாக பின் தொடரும் நிழலின் குரல். தோழர் அருணாவுக்கு ஏற்பட்டது போல் எனக்கும் பைத்திய நிலை வந்து விடுமோ என்று பீதி ஏற்பட்டு நாவலை தனியாக எடுத்து வைத்து விட்டேன். பின்பு படிக்காமலும் இருக்க முடியவில்லை. சிறிது காலம் கழித்து வாசித்து முடித்தேன்.

இவ்வளவு அனுபவங்களை தந்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பகவத் கீதை பற்றி எழுதிய கட்டுரைகளை வாசித்துள்ளேன். இன்னும் ஆழமாக பகவத் கீதை பற்றி தனி ஒரு நூலாக உங்கள் நடையில் எழுத வேண்டுிறேன். இது எனது சுயநலமான கோரிக்கை. வெண் முரசு வாசித்தபோது பகவத் கீதை பற்றி தனி நாவல் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சொல்வளர் காடு நாவலில் பகவத் கீதையின் சாரம் உள்ளது என்று ஒரு கட்டுரையில் பின்னர் குறிப்பிட்டிருந்தீர்கள். மிக ஏமாற்றமாக இருந்தது.

உங்களை நேரில் மதுரை புத்தக கண்காட்சியில் பார்த்துள்ளேன் . ஏழாம் உலகம் புத்தகத்தில் உங்கள் கையெழுத்து வாங்கினேன். எனக்கு தெரிந்த ஒரு சகோதரிக்கு பரிசளிக்க. மேடையை விட்டிறங்கி வேகமாக எங்கோ கிளம்பி சென்று கொண்டு இருந்தீர்கள். அதனால் எதும் பேச முடியவில்லை. சந்திப்போம் என்று நம்புகிறேன்.

இன்னும் நான் சொல்வதற்கு,  உங்களுக்கு எழுதுவதற்கு அதிகம் உள்ளது. ஒரு வாசகனாகவும் நான் எழுதிய முதல் கடிதம் இதுதான். தயக்கம் காரணமாக இத்தனை நாளும் எழுதவில்லை.  நீங்கள் என் தந்தையின் வயதில் உள்ளீர்கள். நான் கேட்பதற்கும் அதிக கேள்விகள் உள்ளது. இனி வரும் நாட்களில் எழுதுகிறேன்.

அன்புடன்

நாகராஜன்

***

அன்புள்ள நாகராஜன்

பகவத்கீதை பற்றி எழுதவேண்டும் என்னும் எண்ணம் உண்டு. இப்போது கிட்டத்தட்ட பெரிய அலைபாய்தலுடன் பலவேலைகளில் இருக்கிறேன். சற்று விலக்கம் அதற்கு தேவை. அதன்பின் எழுதும் எண்ணம் உண்டு

ஜெ

***

முந்தைய கட்டுரைஇந்துமதமும் தாராளவாதமும்
அடுத்த கட்டுரைஆற்றின் கதைகள்