மைத்ரி – வாசு முருகவேல்

இந்த நாவலின் முதல் பலம் சரளமான மொழி நடை. எத்தகைய கதைக்களமாக இருந்தாலும் சரளமான மொழி நடைதான் கதையை உள்வாங்குவதற்கான முதல் தேவையாக  இருக்கிறது.  எழுத்தாளர் அஜிதனுக்கு இது முதல் நாவல் என்பதை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
இந்த நாவலை வாசித்து முடித்தவர்கள் “இது ஒரு காதல் கதை” என்று மேலோட்டமாக கூறிவிடக்கூடும். ஆனால் ஒரு படைப்பாக அதைத் தாண்டிய பேசுவதற்கான நுண்ணுணர்கள் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றது. ஒரு நாவல் என்பது ஒரு வாழ்கையை, ஒரு மனிதனின் சுய வரலாற்றை பதிவு செய்வது மட்டுமே என்றல்லாமல், அதன் ஊடாட்டம் என்பது மனித உணர்வுகளால் பின்னப்பட்டிருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. நானும் அதை ஏற்கின்றேன். இந்த நாவலின் இரண்டாவது பலமாக ஹரன் என்ற மையப்பாத்திரத்தின் ஊடாட்டத்தன்மையை குறிப்பிட்டு கூறலாம். மைத்ரியை தனித்து அணுகுதல் என்பது வாசிப்பின் தேவைக்கானது தான். புத்திசாலித்தனமும் ஞானமும் ஒன்றல்ல!. இந்த நாவலின் கதை இதுதான் என்று பிடிபட்ட பிறகும் ஆழ்ந்து ஒரு பயணியைப்போல தொடர்ந்து போனதற்கு காரணம் ஹரன் பாத்திரத்தின் ஊடாட்டத்தன்மைதான். மூன்றாவது பலம் எனக்கு முற்றிலும் அந்நியமான நிலப்பரப்பை விரிவாகவும்ஆழமாக என்னுள் கடத்தியமை!.
மைதிரி போன்ற நாவல்களை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்க முடியும். தமிழில் இவ்வாறான களங்களை கொண்ட நாவல்கள் உண்டு என்றாலும் கூட, மிகவும் குறைவாகவே மீள்வாசிப்பை அவை கோருகின்றன. மீள்வாசிப்பின் ஊடாக நீங்கள் இன்னும் ஆழமான நுண்ணுர்வின் புள்ளிகளை கண்டடைவது கூட சாத்தியமாகலாம். இந்த நாவலின் தனித்துவத்திற்கும் அதுவே சான்றாக இருக்கும்!.
– வாசு முருகவேல்
முந்தைய கட்டுரைமரபு, குறள் – கடிதம்
அடுத்த கட்டுரைதியானம், கடிதம்