ஆவணம்,கலை -கடிதம்

அன்புள்ள ஜெ சார்

தமிழ் விக்கியில் தம்பிரான் வணக்கம் படித்தேன். ரோமன் கத்தோலிக்க மதத்தின் குழந்தைகளுக்கு செபங்களின் அறிமுகமாக ‘சின்னக் குறிப்பிடம்’ என்ற புத்தகம் கொடுக்கப்படும். முதலில் ‘பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே’ என்று நெற்றி, நெஞ்சில் தொட்டு சிலுவை வரையும் செபம் இருக்கும். ஆறுலட்சண மந்திரம் அடுத்ததாக இருக்கும். நாங்கள் பள்ளியில் ராகம் போட்டு வாய்ப்பாடு படிப்பதுபோல் சொல்வோம். ‘ஒண்ணாவது சர்வேசுரன் தாமாய் இருக்கிறார், இரண்டாவது துவக்கமும், முடிவும் இல்லாதிருக்கிறார்’ என்று போகும். அடுத்து விசுவாசப் பிரமாணம். முதலில் தம்பிரான் வணக்கத்தில் இருந்ததுபோல்தான் இருந்திருக்கும். நாங்கள் சொல்லும்போது கொஞ்சம் மாறி இருக்கும்.

‘பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.

அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இப்பொழுது தனித்தமிழில் சொல்ல வேண்டும் என்று எல்லா மந்திரங்களையும் மாற்றி இருக்கிறார்கள். விசுவாசப் பிரமாணம் என்று இல்லாமல் ‘நம்பிக்கை அறிக்கை’ என்று மாற்றப்பட்டுள்ளது.

‘விண்ணையும், மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்’. இது பாடம் படிப்பது போல் இருக்கும். எனக்கு இன்னும் இந்த புது அறிக்கை பழகவில்லை. எல்லோரும் வழிபாட்டில் சொல்லும்போது நான் மெதுவாக பழைய விசுவாசப் பிரமாணத்தை சொல்லிக்கொள்வேன். எப்படி எல்லாம் இந்த மந்திரங்கள் மாறிவந்திருக்கிறது என்று பார்க்க வியப்பாய் இருக்கிறது. இப்படியான வரலாறுகள் 100 வருடத்தைக் கொண்டாடும் எங்கள் குருத்துவக் கல்லூரியில் இல்லை. (எங்கள் கல்லூரியின் வரலாறே சரியாக இல்லை என்பது வேறு விஷயம்). நிறைய கிறிஸ்தவ பண்பாட்டின் காரியங்கள் தமிழ் விக்கியில் இருக்கிறது. வாழ்த்துக்கள் சார்.

டெய்ஸி பிரிஸ்பேன்

***

அன்புள்ள டெய்ஸி

இன்னும் பலநூறு பதிவுகள் கிறிஸ்தவ ஆன்மிகம், மதஞானிகள், பணியாளர்கள் பற்றி எழுதவேண்டியிருக்கிறது. மலைப்பூட்டும் பணி. பார்ப்போம்,

ஜெ

அன்பு நிறை ஜெ

வணக்கம் !

வெளியிலிருந்து ஏதோ ஒரு கருணை நம்மை சதா காத்துகொண்டிருக்கிறது!

உங்கள் வார்த்தைதான், நீங்கள் சொன்னது தான்! அது போலதான் எங்கோ இருக்கிறீர்கள், ஆனால் எங்கும் உடன் இருக்கிறீர்கள். இன்று தி ஜா வின் தமிழ் விக்கி வாசித்தேன். என் போன்றவர்களுக்கோ அல்லது எனக்கு மட்டுமோ! தெரியாது

எனக்கு மயில்கழுத்தில் உள்ள தி ஜா தான் தி ஜா.தி ஜா வின் எல்லா எழுத்துக்களையும் வாசித்திருக்கிறேன் கடைசியாக வாசித்தது உயிர்த்தேன்!

ஆனால் அதற்கும் சமீபத்தில் வாசித்தது “மயில் கழுத்து“ தமிழ் விக்கியில் மயில் கழுத்து பற்றி எதுவுமே இல்லாது வியப்பாக உள்ளது.

ரகுபதி

கத்தார் .

***

அன்புள்ள ரகுபதி,

மயில்கழுத்து போன்ற கதைகளில் உள்ளவை வாழ்க்கை ஆவணங்கள் அல்ல. அவை ஓர் ஆளுமையை ஒட்டி கலைஞன் புனைந்த சித்திரங்கள். அப்படி எழுத்தாளர்களை எழுத்தாளர்கள் புனைவது உலகம் முழுக்கவே உள்ளது. இன்று எழுத்தாளர்கள் எழுதிய கதைமாந்தர்களேகூட மீண்டும் புனையப்படுகிறார்கள். (ரோடின் வடித்த பால்ஸாக்கின் சிற்பம் வேறு மனிதர்களை மாதிரியுருக்களாகக் கொண்டு, பால்ஸாக்கின் உடலுடன் பெரிய தொடர்பில்லாமல், அவருடைய ஆளுமை பற்றிய ரோடினின் தரிசனத்தை முன்வைப்பதாக அமைந்தது. அத்தகைய கலைமுயற்சிகளுக்கு ஆவணமதிப்பு இல்லை.

ஜெ

***

முந்தைய கட்டுரைதத்துவத்தின் முன்னிலையில்
அடுத்த கட்டுரையோகம், கடிதம்