புத்தகக் காட்சியில்…கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

நான் தங்களையும் அஜிதனையும் 10.01.23 அன்று புத்தக கண்காட்சியில் சந்தித்த தருணம் என் வாழ்நாளில் மற்றுமொரு இனிய மறக்கவியலாத நன்னாள். இனிய முகத்துடன் இருவரும் உரையாடியது மனதை நெகிழவைத்தது. முதல் சந்திப்பென்பதால் சிறிது தயக்கமும் கூச்சமும்.

நான் தமிழ்நாடு அரசின் துணைச்செயலாளர் பணியிலிருந்து 2010 செப்டம்பர்மாதம் ஓய்வு பெற்றேன். எனது துணைவியார் BSNL ல் பணிபுரிந்து  விருப்ப ஓய்வு(2013) பெற்றவர்.எனது தாத்தா 6-7 வயதினிலேயே தினமணி நாளிதழைஎன்னை வாசிக்கச்சொல்வார்கள். இது   வாசிப்பார்வத்தை தூண்டும் காரணியாக அமைந்தது எனலாம்.

காடு நாவல் தவிர்த்து மற்றவை அனைத்தும் வாசித்ததாக நினைவு. தங்கள் வலைத்தளத்தினை தினமும் பார்த்து வருகிறேன்.வட்டார எழுத்தாளர் முதல் அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகளை  பணியிலுள்ளபோதும் பணிநிறைவடைந்தபின்னரும்(திரு.பொன்னீலன் அவர்களின் தாயார் எழுதிய வாழக்கைகுறிப்புகள் உட்பட)வாசிக்கும் பேறுபெற்றேன். சொல்வனம் ,வல்லினம், பேராசிரியை லோகமாதேவி வலைத்தளங்கள்அறிமுகமாகின.

தங்கள் பயணக்கட்டுரைகளை வாசிக்கும் தருணம் நானும் தங்களுடனேயே பயணிக்கும் உணர்வு.வல்லினம் தொடர்வாசிப்பின் காரணமாக திரு.நவீன் அவர்களின் சிகண்டி,பேய்ச்சி  நாவல்களை புத்தக கண்காட்சியில் வாங்கியுள்ளேன்.கவ்வாலி இசை பற்றி தெரிந்துகொண்டது உங்கள் மூலமாகத்தான்.பிறமொழி எழுத்தாளர்கள் பற்றியும் அவ்வாறே.
வெண்முரசு எந்த மோனநிலையில் தாங்கள் எழுதினீர்களோ அதே நிலையில்தான் நானும் வாசித்தேன். குருசேத்திர போர் வர்ணனையை தாங்கள் எனக்குமட்டும் விவரிப்பதாக இருந்தது.

முனைவர் மதுரை சரவணன் உள்ளிட்ட இதர  ஆர்வலர்கள் வெண்முரசு வாசிப்பனுபவம் குறித்த பதிவுகளுடன்  வெண்முரசினை மீள்வாசிப்பு செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். இறையருள் வேண்டும். தங்கள் பதிவொன்றி்ல் வாசகர்கள் இலக்கியவாதியாகவோ  விமர்சகராகவோ இருத்தல் அவசியமில்லை அவரவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.அதன்படி எனக்குத்தேவையானவற்றினை எடுத்துக்கொள்கிறேன். என்னை ஈர்த்த கூற்றுக்கள் தந்தையர் மைந்தரிடத்து நீர்க்கடன் தவிர்த்து பிறிதொன்றும் எதிர்பாரக்கலாகாது -திருதராஷ்ரன் மரணம்அவரவர் இடத்திலேயே நிகழவேண்டும்

தங்கள் அடுத்த நாவல்(அசோக வனம்) எப்போது?நிறைவாக தமிழ் விக்கி -தமிழுலகில் தங்கள் பெயர் என்றும் நிலைத்திருக்கும்

அஜிதனின் புன்னகை என் நினைவில் மறையாது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகள்

சோ.மரகதம்
சென்னை 91

***

அன்புள்ள மரகதம் அவர்களுக்கு,

இலக்கியவாசகர் இலக்கியவிமர்சனப் பார்வை கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை. எழுத்தாளர் வாழ்க்கையை இலக்கியமாக்குகிறார். வாசகர் இலக்கியத்தை திரும்ப வாழ்க்கையாக ஆக்கிக்கொள்கிறார். வாழ்க்கை சார்ந்த ஒரு புரிதலை வாசகர் அடைந்தால் அதுவே நல்ல வாசிப்பு. அது அந்த ஆசிரியர் அளிக்கும் அறவுரை அல்ல. அந்த வாசகர் தானே கற்பனையில் ஒருவாழ்க்கையை வாழ்ந்து அடைவது மட்டுமே

சந்தித்ததில் மகிழ்ச்சி

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசில் எஞ்சுவது….
அடுத்த கட்டுரைஎமிலி,மோகனரங்கன் – தேவி.க