சந்தித்தல், கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

ஜனவரி 17ஆம் தேதி புத்தகக் கண்காட்சியில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. நீங்கள் கையெழுத்திட்ட புத்தகங்கள் கிடைக்கப் பெற்றது எனக்கும் என் அம்மாவிற்கும் மிகப்பெரிய சந்தோஷம். நன்றி

சில நிமிடங்கள் சில வார்த்தைகள் மட்டுமே சாத்தியம் என்பதால் பதட்டத்திலேயே அதில் பாதி போய்விட்டது. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் எனக் கோரிய உடன் நீங்கள் என்னை ஆரத் தழுவிக்கொண்டது என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக இருக்கும்.

இது என்னுடைய இரண்டாவது கடிதம். புனைவுக் களியாட்டின் பொழுது முதலில் எழுதினேன். மீண்டும் எழுத, மீண்டும் சந்திக்க, உங்களுடன் உரையாட வாய்ப்பு கிடைக்கும்  என்ற நம்பிக்கையுடன்

நன்றி

மதன் ஜெகநாதன்

***

அன்புள்ள மதன்,

மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். மீண்டும் மீண்டும் சந்திப்பதன் வழியாகவே ஒரு தொடர்பு உருவாகிறது.

என்னைப்பற்றி ஒரு பிம்பம் உண்டு, நான் மனிதர்களை நினைவில் வைத்துள்ளேன் என. அது உண்மை அல்ல, நான் கருத்துக்களையே நினைவில் வைத்திருக்கிறேன். ஒருவர் தன்னை ஒரு கருத்தாக, ஓர் ஆளுமையாக வெளிப்படுத்திக் கொண்டால் அதுவே என் நினைவில் நீடிக்கிறது.

ஆகவே ஒவ்வொருவரும் அவ்வண்ணம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறேன். அது மட்டுமே நான் செய்வது.

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியத் தோட்ட விருதுகள்
அடுத்த கட்டுரைபெங்களூர் உரை, அ.முத்துலிங்கம் கடிதம்