நேத்து (9/01/2023) உங்கள சென்னை புத்தகக்கண்காட்சில சந்திச்சேன். என்னை உங்க வாசகன்னு சொல்லி அறிமுகபடுத்திக்கிட்டேன். நீங்க எழுதின இரண்டு புத்தகத்துல உங்ககிட்ட கையெழுத்து வாங்கினேன்.
மறுபடியும் உங்ககிட்ட பேசணும்னு ஆசப்பட்டு இன்னொரு Book வாங்கி மறுபடியும் உங்க கிட்ட கையெழுத்து வாங்க நீட்டினேன். நீங்க என்ன பாத்து ஒரு நொடி சிரிச்சுட்டு அந்த Bookல கையெழுத்து போட்டு கீழ உங்க Mobile Number எழுதி “Call பண்ணிட்டு ஒரு நாள் என்ன நேர்ல வந்து பாருங்க” னு சொன்னீங்க. எனக்கு சந்தோஷம் தங்கல.
அதான் உங்களுக்கு Call பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா எங்க நீங்க Busyஆ இருப்பிங்களோ, உங்கள Disturb பண்ணிடுவோமோனு தயக்கமா இருக்கு. அதே சமயம் உங்ககிட்ட பேசணும் உங்கள நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு
பாலமுருகன்
***
அன்புள்ள பாலமுருகன்,
பொதுவாக இளைய தலைமுறையினரைச் சந்திக்க ஆர்வம் கொண்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் சந்தித்தவர்களில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தவர்களை மீண்டும் சந்திக்க விரும்பினேன். சந்திப்போம்.
இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்ற கொரோனா காலகட்டத்திற்குப் பின் என்னை அறிமுகம் செய்துகொண்ட மிகக்குறைவான வயது கொண்ட பல இளைஞர்களைச் சந்தித்தேன். பலர் பொன்னியின் செல்வன் வழியாக என் பெயரை அறிந்தவர்கள். அவர்களில் பலர் என் ஓரிரு நூல்களையாவது படித்துமிருந்தனர். அந்த விசை எனக்கு மிக நிறைவளித்த ஒன்று.
அவர்கள் என்னிடம் கண்டது, நேர்நிலையான செயல்வேகம். வாழ்க்கையை நுட்பமாகவும் முழுமையாகவும் பார்க்கும் பார்வை. அரசியல் சார்ந்து அல்லது வேறேதேனும் தரப்புகள் சார்ந்து எளிமைப்படுத்தாமலிருக்கும் தீவிரம். அவர்களிடம் நான் கண்டது இன்றைய பொதுச்சூழலில் இருக்கும் கூச்சல்களை கண்டு கண்டு உருவான சலிப்பு. எதையாவது செய்யவேண்டும் என்னும் ஆர்வம்.
அந்த ஆர்வமே அவர்களை நோக்கி ஈர்க்கிறது
ஜெ